‘ஸ்டாலின் vs கனிமொழி!’ - ஜெயிக்கப்போவது யாரு?

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு வருகிற ஜூன் 3-ம் தேதி 94-வது பிறந்தநாள்! உடன்பிறப்புகளுக்குக் கடிதம், அரசியல் அறிக்கை, போராட்டம், பொதுக்கூட்டம்... என இந்திய அரசியலில் ஓய்வின்றி சுழன்றுவந்த கருணாநிதி கடந்த சில மாதங்களாகவே உடல்நலமின்றி முடங்கிப் போயுள்ளார். தொடர்ச்சியான சிகிச்சையின் பலனாக உடல்நலம் தேறிவரும் கருணாநிதியின் இந்த வருடப் பிறந்தநாளை பிரமாண்டமாகக் கொண்டாடும் உற்சாகத்தோடு செயலாற்றி வருகிறார்கள் ஸ்டாலின் உள்ளிட்ட அக்கட்சியின் முன்னணித் தலைவர்கள்.

ஸ்டாலின்

ஜூன் 3-ம் தேதி ‘என் உயிரினும் மேலான உடன்பிறப்புக்களே....’ என கரகர காந்தக் குரலில் தன் தலைவன் பேச்சைக் கேட்பதற்காக இப்போதிருந்தே ஏக்கத்தோடு காத்துக்கிடக்கிறார்கள் அக்கட்சியின் லட்சக்கணக்கானத் தொண்டர்கள். ஆனால், கருணாநிதியின் குடும்ப உறவுகளுக்குள்ளோ அதிகாரத்தைக்  கைப்பற்றுவதில், கடும் பனிப்போர் அரங்கேறிவருகிறது. கருணாநிதியின் உடல் சுகவீனத்துக்குப் பிறகு தி.மு.க-வின் செயல்தலைவராக நியமிக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் கட்சியை தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார். இதன் ஒரு பகுதியாக, கருணாநிதிக்கு நெருக்கமான கட்சியின் மூத்த தலைவர்களை கொஞ்சம் கொஞ்சமாக ஓரம்கட்டிவிட்டு, தனது ஆதரவாளர்களை பொறுப்பில் அமர்த்தும் பணியையும் அவர் சத்தமின்றி செய்து வருவதாகச் சொல்கிறார்கள் அக்கட்சியினர். அதற்கான உதாரணம் ஒன்றையும் அவர்களே எடுத்து வைக்கின்றனர்.

''முத்து நகரத்தின் முரட்டு பக்தரான அந்த மாவட்ட செயலாளர் தற்போது வயது முதிர்வு காரணமாக உடல் சுகவீனமின்றி மருத்துவமனை சிகிச்சையில் இருந்துவருகிறார். இதைக் காரணம் வைத்தே, தனது ஆதரவாளரான கோவில் நகர எம்.எல்.ஏ அல்லது பார்த்திபக் கனவில் இருக்கும் ஒன்றியச் செயலாளர் என இருவரில் ஒருவரை மா.செ-வாக நியமிக்கும் முடிவில் இருந்தார் ஸ்டாலின். ஆனால், விஷயம் அறிந்த அந்த முரட்டு பக்தரோ, மருத்துவமனைப் படுக்கையிலிருந்து பதறியடித்தபடி ஸ்டாலினை சந்திக்க அறிவாலயத்துக்கே ஓடோடி வந்துவிட்டார். கூடவே, தனது மகளையும் மகனையும் அழைத்துவந்தவர், 'என் நாக்கில் எண்ணெய் படர ஆரம்பித்துவிட்டது... நான் நன்றாக இருக்கும்போதே என் மகனுக்கு ஒரு நல்ல பொறுப்பைக் கொடுத்துவிடுங்கள்...' என்று சென்டிமென்ட்டாகப் பேச.... அவரது நிலையையும், பேச்சையும் உள்வாங்கிக் கொண்ட ஸ்டாலின் தற்போது தனது திட்டத்தை கொஞ்சம் தள்ளிவைத்திருக்கிறார்'' என்கிறார்கள் அவர்கள்.

கருணாநிதி

இதற்கிடையில், ''கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் அனைவருமே ஸ்டாலின் ஆதரவாளர்கள்தான். எனவே, இப்போதைக்கு கட்சியில் அவருக்கு எதிராகப் போட்டியிடவோ, அதிகாரத்தைக் கைப்பற்றவோ யாரும் இல்லை. இந்த விஷயம் தளபதிக்கும் தெளிவாகத் தெரிகிறது. ஆனாலும், குடும்ப உறவுகளிலிருந்து தனக்கு எதிரியாக யாரும் கிளம்பி வந்துவிடக்கூடாது என்பதில், கவனமாக இருக்கிறார் ஸ்டாலின்'' என்று பொடி வைத்துப் பேசுகிறார்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர். தொடர்ந்து இதுகுறித்து விரிவாகப் பேசுபவர்கள், ''கருணாநிதியினாலேயே தி.மு.க-வின் அடுத்த தலைவர் என அறிவிக்கப்பட்டவர் மு.க.ஸ்டாலின். ஆனால், இந்த முடிவை வெளிப்படையாகவே எதிர்த்தவர் மு.க.அழகிரி. தொடர்ந்து ஸ்டாலினுக்குத் தொல்லை கொடுக்கும்விதமாக அவர் செயல்பட்டு வந்ததாலேயே ஒருகட்டத்தில் தலைவரால் கட்சியிலிருந்து நீக்கமும் செய்யப்பட்டார். ஆனால், என்ன காரணத்தினாலோ அதன்பிறகு தனது எதிர்ப்பு நிலையை அடியோடு மாற்றிக்கொண்டு அமைதியாகிவிட்டார் அழகிரி. 

இப்போது, கருணாநிதியின் குடும்பத்திலேயே ஸ்டாலினுக்குப் போட்டியாக இருப்பவர் அவரது சகோதரி கனிமொழி மட்டும்தான். வெளியிலிருந்து வரும் போட்டிகளை விடவும், சொந்தக் குடும்பத்திலிருந்து வரும் ரத்த உறவுகளின் போட்டியைச் சமாளிப்பதுதான் சிரமமானது. இந்த விஷயத்தை ஆரம்பத்திலிருந்தே தெளிவாக உணர்ந்து வைத்திருப்பவர் ஸ்டாலின். அதனால்தான், அழகிரியை அடக்கிய கையோடு, கனிமொழியையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தொடர்ந்து பிரயத்தனப்படுகிறார்.

சமீபகாலங்களில் தி.மு.க-வுக்கு பெண்களின் ஆதரவு குறைந்துகொண்டே வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் கனிமொழியை முன்னிலைப்படுத்தி மகளிர் அணி செயல்பாடுகளை தீவிரப்படுத்தினால், தி.மு.க-வுக்கு பெண்களின் ஆதரவு கிட்டும் வாய்ப்பு உருவாகும். ஆனால், இதற்கு நேர்மாறாக கட்சிப் பணிகளில் கனிமொழிக்கு முக்கியத்துவம் தரக்கூடாது என ரகசிய வாய்மொழி உத்தரவே வெளியிட்டிருக்கிறார் ஸ்டாலின். பொதுக்கூட்டங்களில் கனிமொழி கலந்துகொள்ள வாய்ப்பு தரக்கூடாது என மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கனிமொழி

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரங்கேறிய சட்டசபை களேபரங்கள், விவசாயிகள் நலனுக்காக நடத்தப்பட்ட அனைத்துக்கட்சி போராட்டம்... எனக் குறிப்பிட்ட சமயங்களில் பிரதமர் மோடியை சந்திக்க விருப்பப்பட்டார் ஸ்டாலின். அதற்காக அனுமதி வாங்க திருச்சி சிவா மூலம் முயற்சிகளும் எடுக்கப்பட்டது. இப்படி 3 முறை முயற்சி செய்தும், பிரதமர் தரப்பிலிருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. ஸ்டாலினும்கூட, 'பிரதமரைச் சந்திக்கமுடியவில்லை' எனப் பேட்டியே கொடுத்தார். ஆனால், இதில் நடந்த உள்குத்து வேலைகள் வெளியில் யாருக்கும் தெரியாது. கட்சியின் தலைவர் ஒருவர் பிரதமரை சந்திக்க விரும்பினால், தனது கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவராக இருக்கும் நபர் மூலமாகத்தான் முயற்சி செய்யவேண்டும். அந்த வகையில், தி.மு.க-வின் பாராளுமன்றக் குழுத் தலைவராக இருக்கும் கனிமொழி மூலமாகத்தான் பிரதமரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கும் முயற்சியில் ஸ்டாலின் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால், கனிமொழிக்கு முக்கியத்துவம் தருவதை விரும்பாத ஸ்டாலின் வேண்டுமென்றே திருச்சி சிவா மூலமாக முயற்சி எடுத்தார்.'' என்று ரகசியம் உடைத்தனர்.

'தி.மு.க-வில் கனிமொழி கட்டம் கட்டப்படுகிறாரா?' என்ற கேள்வியோடு கனிமொழி ஆதரவாளர்களிடம் பேசினோம்...

''கட்சிக்குள் கலகம் விளைவிப்பதற்காக இதுபோன்ற பேச்சுகளைச் சிலர் திட்டமிட்டு கிளப்பிவருகிறார்கள். எப்போதும்போல், கனிமொழி தனது கட்சிப் பணிகளை சிறப்புறவே செய்துவருகிறார். அவருக்கு யாரும் எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை. சமீபத்தில், தி.மு.க நடத்திய பந்த் போராட்டத்தில்கூட கலந்துகொண்டு கைதானாரே...

2 ஜி வழக்கின் தீர்ப்பு ஜூலை 15-ல் வெளியாகவிருக்கிறது. இதற்காகத்தான் அமைதியாகக் காத்திருக்கிறார் கனிமொழி. தீர்ப்புக்குப் பிறகு நிரபராதியாக வெளிவந்து மக்களை நேரடியாக சந்தித்து ஆதரவு திரட்டி தனது பலத்தை நிரூபிப்பதுதான் அவரது திட்டம். இதற்காக 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிடவும் தயாராகி வருகிறார் கனிமொழி'' என்கிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!