வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (11/05/2017)

கடைசி தொடர்பு:18:40 (11/05/2017)

கண்ணகிக்கு வழிகாட்டிய மக்களின் நிலை எப்படி இருக்கிறது தெரியுமா?பளியர்களும்... வைகை ஆறும் #SpotVisit #VikatanExclusive

கண்ணகி கோயில்

சுமைகளுடன் மலையேறுவது அவ்வளவு எளிதில்லைதானே...? ஆனால், நினைவில் ஓர் அரசையும்... அந்த அரசின் பிழையையும், அந்தப் பிழையின் விளைவுகளையும் சுமந்து ஆண்டுக்கு ஒருமுறை, ஒரு பெருங்கூட்டம் மலையேறுகிறது. எழுதும்போது, ‘மலையேறுகிறது’ என்று ஒரு சொல்லில்... அந்த 6.6 கி.மீட்டர் செங்குத்தான மலைப்பயணத்தைக் கடந்துவிடலாம்தான். ஆனால், நடக்கும்போது அந்தப் பயணம் அவ்வளவு எளிதாக இருப்பது இல்லை... கூர்மையான கற்கள், கொஞ்சம் பிசகினாலும் 100 அடி பள்ளம் என இன்னும் கொஞ்சமேனும் வாழ்ந்துவிட வேண்டும் என்று ஒரு பிடிப்பை உண்டாக்குகிறது.

 

 

ஹூம்... இன்னும் எந்த மலை... எது குறித்த பயணம் என்று சொல்லவில்லைதானே...? கண்ணகி புஷ்பக விமானத்தில் ஏறிக் கோவலனுடன் விண்ணுலகம் சென்றதாகச் சொல்லப்படும் மலையையும்... அந்த மலைக்கான பயணத்தையும்தான் சொல்கிறேன். சிலப்பதிகாரத்தின் வாயிலாகவும், பேராசிரியர் கரந்தை சி.கோவிந்தராசனார் ஆய்வின் வழியாகவும், நாம் அறிந்த கண்ணகியையும், அவர் சென்ற பாதையையும் குறித்து விரிவாகப் பேச, மலையில் அமைந்திருக்கும் கண்ணகி கோயிலுக்கு வருடாவருடா வரும் மக்களுக்கும், இந்த மலையின் பூர்வகுடி பளியர்களுக்கும் சொல்ல அவ்வளவு விஷயம் இருக்கிறதுதான். ஆனால், இப்போது நான் அதுகுறித்துப் பேசப்போவதில்லை. கண்ணகிக்கு வழிச் சொன்ன அந்தப் பழங்குடிகளின் நிலையையும்... கண்ணகி நடந்துவந்த வைகையாற்றின் நிலையையும் கொஞ்சம் உரையாடலாம்; வரலாற்றையும், சமகாலத்தையும் ஒரு புள்ளியில் நிறுத்தித் தீவிரமாக விசாரிக்கலாம்; எதைத் தொலைத்து எதைப் பெற்றோம் என்பது குறித்துக் கொஞ்சம் பேசலாம். 

 

“கண்ணகி இந்த வழியாகத்தான் சென்றார்!”

கண்ணகி கோயில் செல்பவர்

சிலப்பதிகாரத்தை ஆய்வுசெய்த பேராசிரியர் கோவிந்தராசனார், கண்ணகி மதுரையிலிருந்து சேரநாட்டுக்கு இந்த வழியாகத்தான் பயணித்தார் என ஒரு வழியைச் சுட்டுகிறார். அந்த வழி, ‘'வைகை ஆற்றின் கரையோடு மேற்கு நோக்கிச் செல்லும் வழி, நெடுவேள் குன்றத்தின் வழியாகக் குமுளியை ஒட்டி இருக்கும் மலைக்குச் செல்லும் வழி”. ஆய்வாளர்கள் மனதில் மட்டுமல்ல, இந்த மலைக்கு வரும் எளியவர்களுக்கும் இந்த வழி குறித்து தெரிந்திருக்கிறது. வருடாவருடம் கண்ணகி கோயிலுக்கு வரும் நல்லமுத்து சொல்கிறார், “வைகை ஆற்றின் கரை வழியாகப் பளியர்குடி வந்த கண்ணகி, இந்த அடர்வனத்தைக் கடந்து மலை ஏறினார். அவருக்கு அப்போது இந்தப் பழங்குடி மக்கள்தான் உதவி செய்திருக்கிறார்கள்” என்கிறார். 

 

ஆய்வாளர்களும், சாமான்யர்களும் கண்ணகி கோயில் குறித்துப் பேசும்போதெல்லாம், வைகை ஆற்றையும், பளியர் பழங்குடிகளையும் சேர்ந்தேதான் பேசுகிறார்கள். கண்ணகி கதையுடன் பின்னிப்பிணைந்தது, வைகை ஆறும்... பளியர் பழங்குடிகளும். அதனால்தான் என்னவோ, அப்போதைய அரசால், கண்ணகிக்கு என்ன நிலை ஏற்பட்டதோ... அதுபோல நிலைதான், இப்போதைய அரசுகளால், வைகைக்கும், அந்தப் பழங்குடி மக்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஆம், வாழ்வு அழிக்கப்பட்டிருக்கிறது. 

 

“வைகை - ஒரு நாகரிகத்தின் சாட்சி!”

கீழடி

கீழடி... தற்சார்புடன் வளமாக வாழ்ந்த தமிழர் நாகரிகத்தின் சாட்சி. அந்த நாகரிகம் உயிர்த்தது வைகை என்னும் ஒரு நதியால். ஆம், எங்கெங்கு நதி பாய்ந்ததோ, பாய்கிறதோ, அங்கெல்லாம் மண்ணைத் தாண்டி மக்களையும் செழுமையாக்கி இருக்கிறது. சிந்துவெளி முதல் கீழடிவரை நதியுடன்தான் இணைந்திருக்கிறது தமிழர் வாழ்வு. அந்த வாழ்வை... அந்த நாகரிகத்தை சிதைக்க வேண்டுமென்றால், நதியைச் சிதைத்தால் போதும். நம் அரசுகள் தாமிரபரணி முதல் காவிரிவரை தெரிந்தே, நதியைச் சிதைத்து நாகரிகத்தைச் சிதைத்துக்கொண்டிருக்கிறது. ஆம், இன்று வைகையில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் மாநகராட்சிக் கழிவுகள் கலப்பதாக அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது. இப்போது கண்ணகி, உயிர்த்தெழுந்தால் இந்த வழியாகவா நாம் பயணித்தோம்... என்று மூச்சடைத்து நிற்பார். ஓர் இலக்கியத்தின் சாட்சி மெள்ளச் செத்துக்கொண்டிருக்கிறது. இல்லை... இல்லை... செத்தேவிட்டது. 

 

கண்ணகிக்குத் தவறாகத் தீர்ப்பளித்த பாண்டிய அரசன், “பொன் செய் கொல்லன் தன்சொல் கேட்ட யானோ அரசன் யானே கள்வன்...” என்று தன்னைத்தானே மாய்த்துக்கொண்டான். ஆனால், நம் அரசுகள் எந்த வெட்கமும் இல்லாமல் ஒரு நாகரிகத்தின் தோற்றுவாயில் புற்றுவரக் காரணமாக இருந்துவிட்டு... வெறுமனே கண்ணகி பெருமையை மட்டும் பேசிக்கொண்டிருக்கின்றன. நாகரிகத்தில் கழிவுகளை கலக்கிறோம் என தரவுகளை நீட்டுகிறது. நதி இருந்தால் கம்பீரம் இருக்கும்... நதி இருந்தால் அதிகாரம் இருக்கும்... இன்று அந்த நதியைக் கொன்றதால்தான், அனைத்தையும் இழந்து நிற்கிறது நம் அரசு. 

 

“கண்ணகிக்கு வழிகாட்டிய மக்களின் நிலை!”

கண்ணகி சென்ற பாதைதான் தன் உயிரிப்பை இழந்து நிற்கிறது என்றால்... கண்ணகிக்கு மலையில் வழிகாட்டிய மக்களின் நிலையும் அப்படியாகத்தான் இருக்கிறது. கண்ணகி மலைப்பயணத்தில் சந்தித்த ஒரு பளியர் பழங்குடி சொல்கிறார், “இந்த மலையும்... காடும்... ஒரு காலத்தில் எங்களுக்கு எல்லாமுமாக இருந்தது. எங்கள் வாழ்க்கையை வளமாக்கியது. இந்தக் காடு எங்கள் உரிமை. ஆனால், இன்று அந்த உரிமை பறிக்கப்பட்டு, காட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுப் பரிதாபமாக நிற்கிறோம்.” 

 

ஆம், இந்தப் பழங்குடி மக்கள் காட்டிலிருந்து இறக்கப்பட்டுப் பளியர்குடி என்னும் சிறு குடியேற்றத்தில் வசிக்கிறார்கள். யாருக்குத் தெரியும்... இந்தப் பழங்குடியின் மூதாதையர்தான் கண்ணகி புஷ்பக விமானம் ஏறிய வேங்கைச் சோலைக்கு வழிகாட்டி இருக்கலாம்; அந்தச் சோலையின் நிழலில் கதை பேசி இருக்கலாம். இன்று, அந்த மக்கள் எல்லாம் தொலைத்து நிற்கிறார்கள். 

கண்ணகி கோயில் நம் உரிமைதான். கண்ணகியை நினைவுகூர அந்தக் கோயிலுக்குச் செல்ல வேண்டும்தான். ஆனால், கண்ணகியைக் கொண்டாட அதுமட்டும் போதாது. ஆம், கண்ணகியை நினைவுகூர்வென்பது, கண்ணகி பயணித்த வைகை ஆற்றை மீட்பது; கண்ணகிக்கு உதவிய அந்தப் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது. நியாயத்தின்பால் பெரும்பற்றுக்கொண்ட கண்ணகி அதைத்தான் விரும்புவார். ஆம், மற்ற எல்லாவற்றையும்விட அதைத்தான் மிகவும் விரும்புவார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்