வெளியிடப்பட்ட நேரம்: 19:26 (12/05/2017)

கடைசி தொடர்பு:19:26 (12/05/2017)

"2022-ம் ஆண்டுக்குள் அணு உலைகள் இருக்காது" - இது ஜெர்மனியின் இலக்கு

ஜெர்மனி சோலார் பிளாண்ட்

சரியாக 27 வருடங்களுக்கு முன்னர் ஜெர்மனி சரித்திரத்தில் இடம்பெற்ற நீங்காத சம்பவம் அது. ஜெர்மனி இரண்டாகப் பிரித்து கட்டப்பட்ட தடுப்புச் சுவற்றை தகர்த்து எறிந்து இரண்டாகப் பிரிந்து கிடந்த நாடு மீண்டும் இணைந்த நாள்தான் அந்த வரலாற்று நிகழ்வு. இரண்டு உலகப்போரிலும் முக்கியப் பங்காற்றிய ஜெர்மனி நாட்டை அனைத்து நாடுகளும் ஒரு ராட்சசனைப் போலவே பார்த்தன. ஆனால், இரண்டாவது உலகப்போரில் ஜெர்மனி தோல்வியைத் தழுவியது. இதனைப் பயன்படுத்திக்கொண்ட பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஜெர்மனியை கூறு போட்டன. இதில் சோவியத்தைத் தவிர்த்து மற்ற நாடுகள் மேற்கு ஜெர்மனியின் பகுதிகளைப் பிரித்து ஆட்சி செய்து வந்தன. சோவியத் யூனியன் கிழக்கு ஜெர்மனியினை பிரித்து ஆட்சி செய்தது. அதன் பின்னர் சோவியத் யூனியன் பலமிழக்க 1989-ம் ஆண்டு பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது. மீண்டும் ஒன்றான ஜெர்மனி அதே உத்வேகத்தில் வளரத் தொடங்கியது. அதன்பின்னர் நாட்டின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்திய ஜெர்மனி இன்று உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக மரபுசாரா எரிசக்தி துறையில் ஜெர்மனிக்குத் தேவையான 85% மின்சாரத்தைப் பூர்த்தி செய்து கொள்கிறது. இதில் வெறும் 15 சதவிகிதம் மட்டுமே அனல் மற்றும் அணுமின் நிலையங்கள் மூலமாக உற்பத்தி செய்து கொள்கிறது. உலகிலேயே புதுப்பிக்கக்கூடிய மரபுசாரா ஆற்றல் மூலங்களின் மூலம் 85% மின்சாரம் தயாரித்துக் கொள்ளும் முதல் நாடு என்ற உலக சாதனை படைத்துள்ளது, ஜெர்மனி.

வெடித்து சிதறிய சொர்னோபில் அணு உலை

2011-ம் ஆண்டு புகுஷிமா அணு உலை விபத்து ஏற்பட்டு முடிந்த நேரம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நேரம், 2022-ம் ஆண்டுக்குள் ஜெர்மனியில் உள்ள அனைத்து அணு உலைகளையும் மூடிவிடுவோம் என அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதற்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் மீதமுள்ள நிலையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களைக் கொண்டு 85% மின்சாரம் தயாரித்து முழு மூச்சாகத் தனது இலக்கை எட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது முற்றிலும் சோலார் எனப்படும் சூரிய மின் உற்பத்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி வழிகளைக் கையாள்கிறார்கள். இதனால் வெளியாகும் கார்பனின் அளவு குறைந்து மின்சாரத்தின் விலையும் குறையும் வாய்ப்புகளும் அதிகம். இதுதவிர, முழுவதும் புதுப்பிக்கத்தக்க மாசு இல்லாத மின்சாரம் 2050-ம் ஆண்டுக்குள் ஆரம்பிக்கப்படும். இந்த முறை பின்பற்றப்பட்டால் கார்பன் இல்லாமல் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். இத்திட்டத்துக்கு ஜெர்மனி வைத்திருக்கும் பெயர் 'எனர்ஜிவெய்ண்டே'. இத்திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யும்போது தேவைக்கு அதிகமாகவே எங்களால் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என ஜெர்மனி அறிவித்துள்ளது.

ஜெர்மனி காற்றாலை மின்உற்பத்தி

நிலையான ஆற்றலில் பெறக்கூடிய மின்சாரத்தின் மதிப்பின் முதலீடானது, வெற்றிகரமானதாக இருந்தது. ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அனைத்து மதிப்பின் முதலீடானது விழத்தொடங்கின. முழுவதும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளம் கொண்ட மின்சாரத்தை ஜெர்மனி முழுமையாக உற்பத்தி செய்ததுதான் இதற்குக் காரணம். இதுவே ஒரு கட்டத்தில் தேவைக்கு அதிகமான மின்சாரத்தைக் கொடுக்க ஆரம்பித்தது. இதில் நிலக்கரி பயன்பாடு வெகுவாகக் குறைந்து, நிலக்கரி மின் நிலையங்கள் 3 முதல் 4 மணிநேரம் மட்டுமே செயல்படத் தொடங்கின. 2022-ம் ஆண்டுக்குள் முழுவதுமாக அணு உலையை மூடிவிட்டு தனது இலக்கை நோக்கி ஜெர்மனி பயணிக்கத் துவங்கி விட்டது. இந்த நிலை தொடர்ந்தால் 2050-ம் ஆண்டில் அந்த நாடு முழுமையான தன்னிறைவை அடைந்துவிடும். சில மணிநேரங்களே சூரிய ஒளி கொண்ட நாடு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளத்தில் கவனம் செலுத்தத் துவங்கிவிட்டது. ஆனால், நம் நாடு கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்று மத்திய அரசு இன்னும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி நிச்சயமாகச் செய்ய முடியும். அணுசக்தி நிறுவனங்களினுடைய லாபத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டு அரசு செயல்படாமல், மக்களின் தேவை ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்