வெளியிடப்பட்ட நேரம்: 21:21 (11/05/2017)

கடைசி தொடர்பு:11:27 (17/07/2017)

ரம்யாவுக்கு ராகுல் காந்தி பதவி கொடுத்தது ஏன்?

‘நடிகை ரம்யா’ தமிழ் சினிமாவுக்குப் பரிச்சயமானவர். ஆனால், ‘அரசியல்வாதி ரம்யா’ பற்றி அதிகம் அறிந்திருக்க மாட்டோம். சர்ச்சையான கருத்துகளைத் தைரியமாகச் சொல்லும் காங்கிரஸின் தவிர்க்க முடியாத சமூக வலைதளப் போராளி. காங்கிரஸ் தலைமை, இவருக்கு ‘சமூக வலைதளம் மற்றும் தகவல் தொடர்புத் துறை’ தலைவராகப் புதிய பொறுப்பைக் கொடுத்திருக்கிறது. சினிமாவில் தொடங்கி அரசியல் முகம் வரையிலும் கோலோச்சும் ‘ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா’ யார்? 

திவ்யா ஸ்பந்தனா

பெங்களூரில் பிறந்த திவ்யா ஸ்பந்தனா, படித்தது ஊட்டி; வளர்ந்தது சென்னை. இவரின் தாயார் ரஞ்சிதா, இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் என்பதால் அரசியல் ஆர்வம் ரம்யாவுக்கு எப்போதுமே உண்டு. சினிமாவுக்காக `ரம்யா' என்ற பெயரில் தோன்றினார். முதல் படமான `அபி’-யில் (2003-ம் ஆண்டில்) கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாருடன் நடிக்கும் வாய்ப்பு. இதுவே கன்னடம் மற்றும் தெலுங்கில் அவரை ஹிட் நாயகியாக்கியது. 2004-ம் ஆண்டு சிம்புவுடன் ‘குத்து’ படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். ‘கிரி’, ‘பொல்லாதவன்’, ‘வாரணம் ஆயிரம்’, ‘சிங்கம் புலி’ போன்ற படங்களில் நடித்தார். கன்னடத்தில் அதிகமான படங்களில் நடித்தார்.

2012-ம் ஆண்டில் இந்திய காங்கிரஸ் கட்சியில் இணைகிறார். அடுத்த வருடமே கர்நாடகாவின் மாண்டியா தொகுதியின் லோக்சபா உறுப்பினருக்கான இடைத்தேர்தல் வருகிறது. கட்சியில் சேர்ந்த ஒரே வருடத்தில் தேர்தலில் போட்டியிடுவதால், பல மூத்த காங்கிரஸ் தலைவர்களின் விமர்சனத்துக்கு ஆளாகிறார். அதையெல்லாம் தாண்டி  காங்கிரஸ் சார்பில் 2013-ம் ஆண்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மாண்டியா தொகுதியின் எம்.பி-ஆகிறார்  திவ்யா ஸ்பந்தனா.

பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும் எம்.பி-க்களில் திவ்யாவும் ஒருவர். மாநாடு முடிந்து திரும்பியவர், `பாகிஸ்தான் நரகம் அல்ல; மிகவும் நல்ல நாடு. அங்கு உள்ள மக்கள் அனைவருமே அன்பானவர்கள்' என்று கருத்து தெரிவித்தார். முன்னதாக பா.ஜ.க-வின் மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கரின் கருத்துக்குப் பதிலடியாகவே இவ்வாறு கூறியிருந்தார். உடனே பா.ஜ.க-வும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் ரம்யாவை `தேசத்துரோகி' என்று வசைபாடத் தொடங்கியது.

குடகு மாவட்டத்தில் உள்ள சோம்வார்பேட்டை நீதிமன்றத்தில் விட்டல் கவுடா என்கிற வழக்குரைஞர், இவர் மீது வழக்கு தொடர்ந்தார். இதில் திவ்யா இறுதிவரையில் தன் கருத்துக்கு மன்னிப்பு கேட்கவில்லை; நீதிமன்ற வழக்கையும் உடைத்தெறிந்தார். அப்போது அவர் கேட்ட கேள்வி அனைவரையும் மிரளவைத்தது. அந்தக் கேள்வி `‘பாகிஸ்தான், நமது சகோதர நாடு’ என்று மோடி கூறியிருக்கிறார். எனக்கு எதிராகப் போராடுபவர்கள், பாகிஸ்தானை `சகோதர நாடு' எனக் கூறியவருக்கு எதிராகப் போராடவும் தயாரா?' என்று கேட்டு அதிரடி கிளப்பினார்.

இவரை `நடிகை' என்று மட்டுமே பிம்பப்படுத்தி பல விமர்சனங்கள் எழுந்ததால், 2014-ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் 4,000 ஒட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதன் பிறகு நடிப்பில் அதிகக் கவனம் செலுத்தாமல் சமூக வளைதளங்களில் தன்னை ஆக்ட்டிவ் மோடுக்கு மாற்றிக்கொண்டார்.  பா.ஜ.க-வின் ஆட்சியை விமர்சிப்பது, மோடிக்கு எதிராகப் பல கேள்விகளை ட்விட்டரில் கேட்பதுமாக எப்போதுமே திவ்யா ஸ்பந்த்னா ஆன்லைன் மோட்.

திவ்யா ஸ்பந்தனா ரம்யா

ராகுல் காந்திக்கு முன்னரே ட்விட்டரில் இணைந்தவர் திவ்யா. அதுமட்டுமின்றி, சுமார் ஐந்து லட்சம் பேர் இவரைப் பின்தொடர்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு நகர்வையும் கவனமாகத் தீர்மானித்துவருகிறார் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி. இணையம், மனிதர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான ஊடகமாகிவிட்டது. இணையத்தில் கருத்துகளை விளாசவும், இளைஞர்களோடு இளைஞராகப் பணியாற்றவும் ராகுல் காந்தியின் தேர்வு இப்போது திவ்யா ஸ்பந்தனா.

இந்திய காங்கிரஸின் தகவல்தொடர்பு மற்றும் சமூக வலைதளத்தின் பொறுப்பு திவ்யா ஸ்பந்தனாவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் ஓட்டு கேட்டு வீட்டுக்குச் செல்லும் வழக்கம் குறையும். சமூக வலைதளமே இந்திய அரசியலைத் தீர்மானிக்கலாம். எனவே,  காங்கிரஸின் டிஜிட்டல் வளர்ச்சி இனி திவ்யாவின் கையில். காங்கிரஸின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் மிகமுக்கியப் பொறுப்பு திவ்யாவுக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இன்னும் பல இணைய மேஜிக்குகளை திவ்யா ஸ்பந்தனா நிகழ்த்தியாக வேண்டும். பா.ஜ.க-வின் ஒவ்வொரு நகர்வையும் இணையத்தில் சுட்டிக்காட்ட வேண்டும். மீம் க்ரியேட்டர்களிடமிருந்தும் நெட்டிசன்களின் கருத்துகளிடமிருந்தும் தப்பிக்கும் வகையில் காங்கிரஸை இணையத்தில் பலப்படுத்த வேண்டும் எனப் பல சுமைகள் திவ்யாவுக்கு இருக்கின்றன. சிறிய வேண்டுகோள் என்னவென்றால், காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கும், பா.ஜ.க-வின் ஆட்சியைக் கேள்வி கேட்பதற்கும் மட்டும் நின்றுவிடாமல், மக்களின் பிரச்னைகளையும் பேசினால் இன்னும் சிறப்பு.

* காங்கிரஸின் மகளிர் அணி தேசிய செயலாளர் மற்றும் தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர், நடிகை நக்மா.

* காங்கிரஸின் செய்தித்தொடர்பாளர், நடிகை குஷ்பு.

*காங்கிரஸின் தகவல்தொடர்புத் துறைத் தலைவர், நடிகை ரம்யா என, திரைத்துறையிலிருந்து அரசியலில் கால் பதிக்கும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறது காங்கிரஸ். சினிமாவில் தொடங்கி இப்போது அரசியலில் மிக முக்கிய பொறுப்புக்கு நகர்ந்துவிட்ட ரம்யா, இனி எப்படிச் செயல்படுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்