வெளியிடப்பட்ட நேரம்: 20:24 (11/05/2017)

கடைசி தொடர்பு:20:23 (11/05/2017)

“பன்னீர்செல்வம் மண்பொம்மை... அமைச்சர்களுக்கு தொற்றுநோய்!'' நாஞ்சில் சம்பத்

நாஞ்சில் சம்பத்

.தி.மு.க இரு அணிகளையும் இணைக்கும் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்துகொண்டு இருந்தாலும்... மறுபுறம், தொண்டர்களைச் சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் கிளம்பிவிட்டார். இன்னொருபுறம், நாஞ்சில் சம்பத், பெங்களூரு புகழேந்தி ஆகியோர் டி.டி.வி.தினகரன் கைதைக் கண்டித்து ஊர் ஊராகச் சென்று மத்திய அரசைக் கண்டித்து கூட்டம் போட்டு வருகிறார்கள். மதுரையில் கண்டனக் கூட்டத்தில் பேசிவிட்டு வந்த நாஞ்சில் சம்பத்தைச் சென்னையில் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

''அ.தி.மு.க-வில் இரு அணிகளின் இணைப்புப் பற்றி விதவிதமான பேட்டிகள் வெளிவந்துகொண்டிருக்கிறதே?''

''இரு அணிகளை இணைக்க வேண்டிய தேவை இல்லை. இன்னொரு கட்சிக்காரனிடத்தில் முகம் பார்த்துச் சிரித்துப் பேசினாலே கட்சியைவிட்டு நீக்குகிற ஓர் அமைப்பு அ.தி.மு.க என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், அந்தக் கட்சிப் பிளவுக்கு மட்டுமல்ல; அது உடைந்துபோவதற்கும்; அதன் வெற்றிச் சின்னம் இரட்டை இலை முடக்கப்பட்டதற்கும்; அந்தக் கட்சியின் பெயரை உச்சரிக்க முடியாத நிலைமைக்கும் தள்ளியது ஓ.பி.எஸ். இப்படி, பட்டப்பகலில் ஒரு பச்சைத்துரோகத்தைச் செய்தவரைத் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு இந்தக் கட்சியை இனிமேல் நடத்த வேண்டுமா? அம்மாவின் அமரத்துவத்துக்குப் பிறகு இன்றைக்கு இந்தக் கட்சியைக் காட்டிக்கொடுத்து டெல்லி ஏகாதிபத்தியத்தின் காலில் விழுந்துகிடக்கிற அவரை நம்பி ஏன் இப்படி ஓர் இணைப்பு முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே, இணைக்க வேண்டிய தேவையே இல்லை. எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் எங்கள் பக்கம் இருக்கும்போது ஏன் இணைக்க வேண்டும்? இந்த இடைச்செறுகலை எடுத்து மீண்டும் ஏன் சொறுக வேண்டும்?''.

''டி.டி.வி.தினகரன் மீது நீங்கள் இப்படிப் பாசமழை பொழிவது ஏன்?'' 

''தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்களுடைய சமூகப் பொருளாதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்கிற ஒரு நல்ல தலைவனுக்காகத் தமிழகம் காத்திருக்கிறது. அந்த இடத்தை அலங்கரிப்பதற்கான எல்லாவிதமான தகுதிகளும் உள்ளவராக டி.டி.வி.தினகரன் என் கண்ணுக்குத் தெரிகிறார். அவருடைய அணுகுமுறை, அதிர்ந்து பேசாத தன்மை, எதற்கும் அதிர்ச்சி அடையாத அந்தப் பக்குவம், பளிச்சென்று பதில் சொல்கிற பாங்கு, எல்லோரையும் வாரி அணைக்கிற அந்த அன்பு, வள்ளல் குணம், இந்தக் கட்சியைக் காப்பாற்றி கரைசேர்க்க வேண்டும் என்கிற அவரின் கடமை உணர்வு, ஓர் இக்கட்டான காலகட்டத்தில் இந்தக் கட்சியினுடைய தலைமைப் பொறுப்பை ஏற்று வெகுவிரைவில் எல்லோருடைய இதயங்களையும் அவர் கவர்ந்து இருக்கிறார். ஆகவே, பழி சுமந்து நிற்கிற ஒரு பாத்திரமாகக் கண்ணுக்கு அவர் தெரிந்தாலும் தமிழ்நாடு இப்போது ஒரு நல்ல தலைவனை அடையாளம் கண்டிருக்கிறது. நான் இயல்பாகவே திராவிட இயக்க சித்தாந்தத்தின் மீது அழுத்தமான நம்பிக்கை உள்ளவன். அந்தத் திசையில் அ.தி.மு.க-வுக்கு இப்போது ஒரு நல்ல தலைமை கிடைத்திருக்கிறது. திரை உலகம் என்கிற ஒரு பிம்பம் இல்லாமல், ஒரு பெரிய ராஜ குடும்பம் என்ற தகுதி இல்லாமல், ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து எல்லோரிடத்திலும் உப்பைப்போலக் கரைந்துவிடுகிற எளிய தலைவர் டி.டி.வி.தினகரன் என்கிற வடிவத்தில் கிடைத்திருக்கிறார். அவரை ஆதரிக்க வேண்டியது என்பதைவிட டி.டி.வி.தினகரன் வரலாற்றுத் தேவை. வரலாற்றுக் கட்டாயம்''.

''நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம். அ.தி.மு.க தொண்டர்கள் டி.டி.வி.தினகரனை ஏற்றுக்கொள்வார்களா... கட்சியை வழிநடத்தும் ஆற்றல் அவரிடம் உள்ளதா?''

''கட்சியை வழிநடத்தும் தகுதி இருக்கிறதா என்ற கேள்வியே முதலில் தவறு. டெல்லி போலீஸ் சென்னை வரும்வரை, அவர் தினமும் பள்ளிக்கூடத்துக்குச் செல்கிற பொறுப்புள்ள மாணவனைப்போலத் தலைமைக் கழகத்துக்குத் தினசரி வந்தார். பகல் உணவு சாப்பிடுவதற்கு வீட்டில் இருந்தே அவர் எடுத்துவந்தார்; சந்திக்க வருகிற நிர்வாகிகள் அனைவரையும் பார்த்தார்; மனம் திறந்து பேசினார்; எல்லோருடைய மனுக்களையும் வாங்கினார். யாரிடத்திலாவது அதைக் கொடுத்து அதற்குத் தீர்வு எட்டமுடியுமா என்று எங்களைப்போன்ற தலைமைக் கழக நிர்வாகிகளிடம் தந்தார். அதையும் தாண்டி தலைமைக் கழகத்தில் உட்கார்ந்தே நிர்வாகிகளுடன் சாப்பிட்டார். அ.தி.மு.க-வில் இதெல்லாம் அபூர்வமான காட்சிகள். அதனால், ஒரு ஜனநாயகத் தன்மை இன்று அ.தி.மு.க-வில் இருக்கிறது. காற்றும் வெளிச்சமும் உள்ள இடத்துக்கு இந்தக் கட்சியை அவர் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார். இது நல்ல தலைமை. தொண்டர்கள் எழுச்சியோடு அவரை ஏற்றுக்கொண்டு மகிழ்கிறார்கள்''.

நாஞ்சில் சம்பத்

''அவர் குற்றவாளி என்று டெல்லி போலீஸார் அவரைத் திகார் சிறையில் அடைத்துவிட்டார்களே?''

''இது திட்டமிட்டு ஜோடிக்கப்பட்ட வழக்கு. இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி ஆகிவிட்டது. இப்போது இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்பது அவர்களுடைய அடுத்த திட்டம். ஆனால், அதற்கு இடையூறாக டி.டி.வி.தினகரன் இருப்பார் என்று கருதுகிறார்கள். வடக்கு இடக்கு செய்யத்தான் செய்யும். அதனால்தான், 'வடக்கிலே தலைவைத்துப் படுக்காதே' என்று அண்ணா சொன்னார். அதை பி.ஜே.பி கட்சி செய்கிறது. இது அவர்களுக்குப் பிள்ளை விளையாட்டு. ஆகவே, இந்தியா முழுவதையும் காவிமயமாக்கி, இந்திமயமாக்கி ஓர் இந்துஸ்தானைக் காண விரும்புகிற அவர்களுடைய முயற்சிக்குத் தமிழகம் எப்போதும் அனுசரித்துச் சென்றது இல்லை. பி.ஜே.பி-யைத் தடுக்கிற மிகப்பெரிய மலையாக டி.டி.வி.தினகரன் இருக்கிறார். ஆகவே, அவரை ஒடுக்க வேண்டும் என்று டெல்லி முடிவெடுத்துத்தான் இந்தக் காரியத்தைச் செய்கிறது''.

''டி.டி.வி.தினகரன் கைதைக் கண்டித்து நீங்களும் பெங்களூரு புகழேந்தியும் கண்டனக் கூட்டங்கள் நடத்தி வருகிறீர்களே? கட்சித் தலைமை அனுமதி கொடுத்து இருக்கிறதா?''

''கட்சித் தலைமையின் அனுமதியோடுதான் பொதுக்கூட்டங்களை நடத்துகிறேன்; பேசுகிறேன். கட்சியின் பொதுச்செயலாளர் சின்னம்மா. சிறைக்குள் சென்றாலும் கட்சியை வழிநடத்தும் பொறுப்பைத் தன்னுடைய தோளில் சுமந்துகொண்டு இருப்பவர் டி.டி.வி.தினகரன். கட்சிக்கொரு இக்கட்டான காலகட்டம். அதை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அந்தப் பொறுப்பைத் துணிந்து செய்வதற்கு நானும் புகழேந்தியும் இன்று சமவெளிக்கு வந்திருக்கிறோம். இந்தத் தமிழ் இனத்தை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்றுவதற்கு ஒரு தலைவர் கிடைத்திருக்கிறார் என்று இளைஞர்கள் அவரை நம்புகிறார்கள்''.

'' 'ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதால் சி.பி.ஐ விசாரணை வேண்டும்' என்று தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வருகிறாரே?''

''அந்தக் குற்றச்சாட்டு அபத்தமானது என்பதைவிட, வக்கிரமமானது. மருத்துவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார். மருத்துவ உலகத்தின் மீது பழிபோடுகிறார். இந்தியாவின் தலைநகர் டெல்லியாக இருக்கலாம். ஆனால், மருத்துவத்துக்குத் தலைநகர் சென்னைதான். கடல் கடந்த நாடுகளில் இருந்து மருத்துவத்துக்காகச் சென்னைக்குத்தான் வருகிறார்கள். அந்தத் தகுதியைப் பெற்றுத் தந்தது அப்போலோ ஆஸ்பத்திரி. மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் இருக்கிற எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பெய்லே எல்லாம் சேர்ந்து 75 நாள்கள் சிகிச்சை அளித்து இருக்கும்போது தவறு நடக்க வாய்ப்பு இருக்கிறதா? அவருடைய மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. அப்படியொரு விசாரணை வந்தால், அதை எதிர்கொள்வதற்கு அ.தி.மு.க தயாராக இருக்கிறது. அப்போதும் முதல் குற்றவாளியாக ஓ.பன்னீர்செல்வம்தான் நிற்பார்''.

''ஓ.பன்னீர்செல்வத்தை இயக்குவது பி.ஜே.பி என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் குற்றம்சாட்டுகிறீர்கள்?''

''பி.ஜே.பி கட்சி இப்போது ஆள் தேடி அலைகிறது. அதற்கு ஆள் காட்டி அவர்களுக்குத் தேவைப்பட்டார். அந்த ஆள்காட்டியின் பெயர்தான் ஓ.பி.எஸ். அவரைப் பி.ஜே.பி-தான் இயக்குகிறது என்று சொல்வதற்குக் காரணம் என்னவென்றால், முதல்வர் பதவியை முடிக்க வேண்டிய நேரம் வரும்போது, நன்றி தெரிவித்து அவர் பி.ஜே.பி அரசுக்குக் கடிதம் எழுதுகிறார். எதற்கு நன்றி? 39,000 கோடி ரூபாய் வறட்சி நிவாரண நிதியைக் கேட்டபோது பி.ஜே.பி தந்ததா? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தேதியைத் தீர்மானித்த பிறகு நதிநீர்ச் சிக்கலைத் தீர்ப்பதற்கு ஒரே தீர்வு, தீர்ப்பாயம் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மீதே பி.ஜே.பி அரசு கைவைத்திருக்கிறது. அதற்கு நன்றியா? இலங்கை பறிமுதல் செய்து வைத்துள்ள 134 படகுகளைத் திருப்பிக் கொடுக்கும்படி அம்மா கேட்டாரே, திருப்பி வாங்கிக் கொடுத்துவிட்டார்களா? இவர் எதற்கு நன்றி தெரிவிக்கிறார். தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பி.ஜே.பி அரசுக்குத் தனக்கு ஆதரவு தந்ததற்கு நன்றி என்று கடிதம் எழுதுகிறார் என்றால், பி.ஜே.பி-க்குக் கிடைத்திருக்கிற ஆள்காட்டி ஓ.பி.எஸ் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ஆகவே, அ.தி.மு.க-வை உடைக்க வேண்டும் என்பது பி.ஜே.பி-யின் திட்டம். அதற்கு இவர் ஒரு கருவியாகக் கிடைத்திருக்கிறார். அவர்களுடைய வேலைதிட்டத்தைத்தான் இவர் செய்கிறார். தினகரன் கைது அன்றைக்கு அவர் கைதாவார் என்பதை ஓ.பி.எஸ்-தான் சொல்கிறார். சின்னம் முடக்கப்படும் என்பதை முன்கூட்டியே சொல்கிறார். ஆகவே, பி.ஜே.பி இந்த ஆள்காட்டியை வைத்துக்கொண்டு இன்று ஒரு பொம்மலாட்டம் நடத்துகிறது. இது வெறும் பொம்மை; அதுவும் மண்பொம்மை.'' 

நாஞ்சில் சம்பத்

''அமைச்சர் பதவியில் இருப்பவர்கள் இரு அணிகளும் இணைய வேண்டும் என்றும், கட்சி நிர்வாகிகளாகிய உங்களைப் போன்றவர்கள் இரு அணிகளும் இணையக்கூடாது என்றும் சொல்கிறீர்களே.. உங்களுக்குள் ஏன் இந்த முரண்பாடுகள்?''

''கொள்கை ரீதியாகச் சிந்திக்கிறவர்கள், இணைப்பு வேண்டும் என்று விரும்பவில்லை. அதிகாரத்தில் என்றைக்கும் ஒட்டிக்கொண்டு இருக்க வேண்டும் என்று கருதுகிறவர்கள், இணைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். 'அதிகாரம் ஒரு தொற்றுநோய்' என்று அண்ணா சொன்னார். அந்தத் தொற்றுநோய் அவர்களைத் தொற்றி இருக்கிறது. அவ்வளவுதான்''.

''டிசம்பரில் தேர்தல்; ஜனவரியில் ஸ்டாலின் முதலமைச்சர் என்று தி.மு.க நிர்வாகிகள் சொல்லி வருகிறார்களே?''

''அப்படிச் சொன்னால்தான் தி.மு.க தொண்டர்களைத் தக்கவைக்க முடியும். இப்போது ஏற்பட்டிருக்கிற அசாதாரணமானச் சூழலில்கூடத் தி.மு.க விஸ்வரூபம் எடுக்கவில்லையே? எதிர்க் கட்சித் தலைவர், தன்னுடைய கடமையைச் செய்ய முடியவில்லையே? நமக்கு நாமே திட்டப்படி தனக்குத்தானே சட்டையைக் கிழித்துக்கொண்டு நாடகம் ஆடுகிறாரே தவிர, எதிர்க் கட்சித் தலைவர் தன்னுடைய கடமையைச் செய்யவில்லை. இந்த நேரத்தில்கூட இந்தக் கட்சியைத் தூக்கி நிறுத்த முடியவில்லை என்றால், இவர் என்றைக்குக் கட்சியைத் தூக்கி நிறுத்தப்போகிறார்?''

''ம.தி.மு.க மேடைகளில் பல ஆண்டுகள் முழங்கியவர் நீங்கள். இப்போது அந்தக் கட்சியின் 24-வது ஆண்டு தொடக்க விழா. வைகோ புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். அதுபற்றிச் சொல்லுங்களேன்?''

''தி.மு.க-வைவிட்டு எம்.ஜி.ஆர் பிரிந்துவந்த காலகட்டத்தில்கூட, வைகோவுடன் வந்த அளவுக்கு நிர்வாகிகள் வெளியே வரவில்லை. 9 மாவட்டச் செயலாளர்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் புகழ்பெற்ற, செல்வாக்குபெற்ற குடும்பத்துப் பின்னணி உள்ளவர்கள் வைகோவை நம்பி வந்தார்கள். அவர்களை அரவணைத்து, வேலை திட்டம் கொடுத்துக் கட்சியை இயக்க வேண்டும் என்று அவர் ஒரு நாளும் நினைத்தது இல்லை. வைகோ என்கிற மகத்தான மனிதனுக்குள்ளே இப்படியொரு மோசமான, சர்வாதிகார குணம் அவரிடத்தில் இருக்கிறது. தானே பேச வேண்டும்; தானே எழுத வேண்டும்; தான் மட்டுமே இயங்க வேண்டும். இந்த வெளிச்சம் வேறு யார் மீதும் விழுந்துவிடக்கூடாது என்கிற ஒரு கட்சி, கரைசேராது என்பதற்கு ம.தி.மு.க இன்றைக்கு ஓர் உதாரணம். அவர் சிறைச்சாலையில்  இருக்கிறது கூடத் தப்பிக்கிற முயற்சி. தமிழ்நாட்டில் இருக்கும் ஆயிரம் பிரச்னைகளுக்கு முகம் கொடுக்காமல் சிறைச்சாலைக்குள் போய் ஒளிந்துகொள்கிறார் என்றால் அது தப்பிக்கிற முயற்சி. காலம் அவரை கைவிட்டுவிட்டது.''

படங்கள்: அ.சரண்குமார், 

மாணவப் பத்திரிகையாளர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்