வெளியிடப்பட்ட நேரம்: 19:09 (12/05/2017)

கடைசி தொடர்பு:19:51 (12/05/2017)

ப்ளஸ் டூ ரிசல்ட் : 70 ஆயிரம் பேர் தோல்வி ஏன்?

இந்தக் கல்வி ஆண்டு முதல் இனி பள்ளிப் பொதுத்தேர்வு முடிவுகளில் ரேங்கிங் முறை இருக்காது. இதனால், மாணவர்களுக்கு மதிப்பெண்கள் குறித்த டென்ஷன் இருக்காது என்று அறிவித்தார் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன். 8.9 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதிய ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் 8.2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வுபெற்றிருக்கிறார்கள். இந்த கல்வி ஆண்டு ப்ளஸ் டூ ரிசல்ட்டில் தேர்ச்சிவிகிதம் 92.1. இது சென்ற ஆண்டைக் (91.4%) காட்டிலும் அதிகம். ஆண்களைக் (89.3%) காட்டிலும் பெண்களே (94.5%) அதிகம் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். மாற்றுத்திறனாளிகள் (78%) அதிகம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்திலும் (97.85%), கடலூர் மாவட்டம் கடைசி இடத்திலும் (84.86%) உள்ளன.

தலைநகர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ஒரு அரசுப் பள்ளிகளில்கூட நூறு சதவிகிதத் தேர்ச்சி இல்லை...என்றெல்லாம் அறிவித்திருக்கிறது தமிழகத் தேர்வுத் துறை இயக்குநரகம். இந்த நிலையில் நமது கல்விச் சூழலில் தேர்ச்சி விகிதங்கள் உணர்த்துவது என்ன? நமது கல்வி முறையில் உடனடியாகச் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன? கல்வியாளர்களிடம் பேசினேன்...

ப்ளஸ் டூ ரிசல்ட்

``ரேங்கிங் முறை அறிவிக்காததால் மாணவர்களுக்கு மன அழுத்தம் குறையும், போட்டிமனப்பான்மை நீங்கும், சக மாணவனை சகோதரனாகப் பார்ப்பான். முதலிடத்தில் வரும் மாணவர்களை வைத்து பிசினஸ் செய்யும் பள்ளி நிர்வாகத்தின் கொட்டம் அடங்கும். தாழ்வுணர்ச்சியில் மாணவர்கள் தற்கொலை செய்வதெல்லாம் குறையும்தான். வரவேற்கிறேன்’’ என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

ஆனால், இந்தத் தேர்வு முடிவுகளை முன்வைத்து அவர் எழுப்பும் கேள்விகள், நமது கல்விச்சூழலின் யதார்த்த நிலையை விளக்குகின்றன.பிரின்ஸ் கஜேந்திரபாபு ``ப்ளஸ் டூ ரிசல்ட்டில், முந்தைய ஆண்டைக் காட்டிலும் தேர்ச்சிவிகிதம் அதிகம்’ என்கிறது தமிழகத் தேர்வுத் துறை இயக்குநரகம். ஆனால், தேர்ச்சிபெறாதவர்கள் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பது இங்கு முக்கியம். கிட்டத்தட்ட 8.9 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 70 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தேர்ச்சியடையவில்லையே ஏன்? 1000-க்கும் அதிகமான மதிப்பெண் வாங்கிய, கிட்டத்தட்ட 1.5 லட்சம் பேரில்தான், அரசு உயர்கல்வி நிறுவனங்களில் இருக்கும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான சீட்களை நிரப்பப்போகிறார்கள்.

700-க்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்கள் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர். இவர்களில் அதிகமானவர்கள் நிச்சயம் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மாணவர்களாகத்தான் இருப்பார்கள். இவர்கள் வாங்கிய மதிப்பெண்கள் அடிப்படையில் அரசாங்க உயர்கல்வி நிறுவனங்களில் சீட் கிடைக்காது. எனவே, தனியார் கல்லூரிகள் நோக்கித் தள்ளப்படுவார்கள். அங்கே அதிக கல்விக்கட்டணம், இருக்கும். `அதான் ஆதிதிராவிட நல அரசாணை 92-ன்படி கல்விக்கட்டணம் தருகிறோமே’ என்று அரசாங்கம், சொல்லும். அப்படியே தந்தாலும், அவர்கள் சேரும் தனியார் கல்லூரிகளின் தரத்துக்கு அரசாங்கத்தால் உத்திரவாதம் தரமுடியாத அளவுக்கு எல்லாவகையிலும் தரக் குறைவாகத்தான் இருக்கின்றன. இவற்றை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் வருடாவருடம் தேர்ச்சிவிகிதத்தை அதிகப்படுத்திக் காண்பிப்பதால் நிரந்தரப் பயன் இல்லை.

இதைவிட இப்போதிருக்கும் மகா குழப்பம், மருத்துவம் போன்ற உயர்கல்வி பயில இனி ப்ளஸ் டூ மதிப்பெண்கள் கணக்கில் வராது. நீட் நுழைத்தேர்வு மதிப்பெண்தான். ஐ.ஐ.டி ஜாயின்ட் என்ட்ரன்ஸ் தேர்வில்கூட பள்ளிகளைவிட கோச்சிங் சென்டர்களே அதிகம் கோலோச்சுகின்றன. சமீபத்தில் ஒரு கோச்சிங் சென்டர், இந்திய அளவில் முதல் 20 இடங்களைப் பிடிப்பது எங்கள் கோச்சிங் சென்டர் மாணவர்கள் என்று செய்தியே வெளியிட்டது. இதனால் ஒரு நாட்டில் மாநில மக்களின் உரிமைகளையே முறித்துப்போட அனுமதித்துவிட்டார்கள். தவிர, தரம் உயர்த்தப்பட்ட அரசு மேலநிலைப்பள்ளிகளில் 6 சப்ஜெக்ட்டுக்கு 4 ஆசிரியர் போஸ்ட்டிங்தான் போடுகிறார்கள். அங்கே ஆசிரியருக்கு அதிகப் பணிச்சுமை. கல்விப்பணியோடு சேர்த்து ஆசிரியர்களை மற்ற வேலைகளில் ஈடுபடுத்துவது இவையெல்லாம் நமது கல்விச் சூழலைக் கெடுக்கின்றன. இவற்றைச் சரிசெய்யாமல் தேர்ச்சிவிகிதத்தை அதிகம் எனக் காட்டுவதெல்லாம் ஏட்டுச் சுரைக்காய்... அது கறிக்கு உதவாது’’ என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

கல்வியாளர் எஸ்.ஏஸ்.ராஜகோபால் சொல்லும் கோணம் மிக முக்கியமானது...எஸ்.எஸ்.ராஜகோபாலன்

``தேர்வில் இனி ரேங்கிங் முறை இருக்காது என்று சொல்வதால் இப்போது இருக்கும் கல்வி சிஸ்டத்தில் எந்தவிதமான நேர்மறையான மாற்றங்களும் வந்துவிடாது. அதேநேரத்தில் மைனஸும் இல்லை. போட்டிமுறை, இண்டிவிஜுவல் முறை, குழுமுறை கல்வி... என உலகத்தில் மொத்தம் மூன்று வகையான கல்வி முறைகள் இருக்கின்றன. நாம் பின்பற்றுவது போட்டிமுறைக் கல்வி. பிறரை வீழ்த்திவிட்டு முன்னேறுவது. அதாவது மற்றவரை பற்றி மொட்டை பெட்டிஷன் போட்டு ஒருவர் ஆபீஸில் புரமோஷன் வாங்குவதற்குச் சமமானது.

அடுத்து, அடுத்தவரைப் பற்றி கவலைப்படாத இண்டிவிஜுவல் முறை. இருப்பதிலே பெஸ்ட் குழுக் கல்வி முறைதான். இது மற்றவர்களைத் தட்டிக்கொடுத்து வேலைவாங்கி குழுவாக இயங்கி முன்னேறும் முறையைக் கற்றுத்தருகிறது. உலகத்தின் முக்கிய நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களில் அதிகமானவர்கள் குழுமுறைக் கல்வியில் படித்தவர்கள்தான்.

எல்லாவற்றுக்கும் மேலாக நாம் பொதுத்தேர்வு பற்றி கவலைப்படுவதை விட வேண்டும். வகுப்பறை மீதும், கற்பித்தல் மீதும் அதிக அக்கறை செலுத்த வேண்டும். ஆரம்பக் கல்வியை மிகுந்த தரமானதாக மாற்ற வேண்டும். அதுதானே கல்விக்கான அஸ்திவாரம். இதிலெல்லாம் கவனம் செலுத்தாமல் இப்போது பள்ளிக் கல்வித் துறையில் நீட் வெடியைக் கொளுத்திப் போட்டுவிட்டார்கள். இது நம் வகுப்பறையை இன்னும் சீரழிக்கும். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் நீட் என்பதெல்லாம் மேல் மட்டத்தில் 5000 பேர் சம்பந்தப்பட்ட சமாசாரம். இதில் எங்கே இருக்கிறது பொதுநலம். சிஸ்டம் மாறாமல் சிலபஸை தலையில் தூக்கிவைத்துக்கொள்வதில் ஒரு பலனும் கிடையாது!’’ என்கிறார் எஸ்.எஸ்.ராஜகோபால்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்