வெளியிடப்பட்ட நேரம்: 18:37 (12/05/2017)

கடைசி தொடர்பு:20:11 (12/05/2017)

தி.மு.க வைரவிழாவில் ஸ்டாலினின் கூட்டணிக் கணக்கு!

கருணாநிதியுடன் ஸ்டாலின்

'எதிர்க் கட்சி உறுப்பினர், எதிர்க் கட்சி கொறடா, எதிர்க் கட்சித் துணைத் தலைவர், எதிர்க் கட்சித் தலைவர், அமைச்சர், முதலமைச்சர்' - இந்த 6 பொறுப்புகள்தான் சட்டமன்றத்தில் முக்கிய ஸ்தானங்கள். தமது 60 ஆண்டுகால அரசியல் பயணத்தில் இந்த 6 ஸ்தானங்களையும், இந்தியாவிலேயே அலங்கரித்த ஒரே தலைவர் எங்கள் தலைவரே" என கருணாநிதி குறித்து புகழாரம் சூட்டுகிறார் தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன். உண்மைதான், கருணாநிதியின் மேடும் பள்ளமும் நிறைந்த 60 ஆண்டுகால அரசியல் அனுபவத்துக்கு மதிப்பளித்து, அதைக் கொண்டாடும்வகையில் வரும் ஜூன் 3-ம் தேதி வைர விழா அறிவித்துள்ளது தி.மு.க. அன்று தமது 94-வது வயது பிறந்த நாளைக் கொண்டாடும் தலைவர் கருணாநிதிக்கு, ''கழகம் கொடுக்கும் ஊக்கப்பரிசு, இந்த வைர விழா'' என்கின்றனர்  தி.மு.க-வினர்.

7 மாநில முதல்வர்கள் பங்கேற்பு :

''இவ்விழா இந்திய அளவில் அனைவரையும் திரும்பிப் பார்க்கவைப்பது மட்டுமல்ல, இந்திய அரசியலில் திருப்புமுனை ஏற்படுத்தும் அசைவாகவும் இருக்கவேண்டும்'' என்ற மு.க.ஸ்டாலின் உத்தரவையொட்டி, ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கும் விழாவுக்கான பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்வர்  மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களைத் தி.மு.க மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி நேரில் சந்தித்து அழைத்துள்ளார். அதேபோல், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை தி.மு.க எம்.பி-யான டி.கே.எஸ்.இளங்கோவன் நேரில் சந்தித்து விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். விழாவுக்கு 7 மாநில முதல்வர்கள் உள்ளிட்ட இந்திய தேசியத்  தலைவர்கள் பலர் பங்கேற்க அழைப்புவிடுக்கப்பட... நாம் இதுகுறித்து அதன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பேசினோம்.

ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அனைத்து கட்சிக் கூட்டம்

தி.மு.க-வின் திருவிழா :

"நாங்கள் கொண்டாட்ட மனநிலையில் உள்ளோம். தோல்வியே சந்திக்காதவர் எங்கள் தலைவர். வேறெந்த தலைவருக்கும் கிடைக்காத பெருமை இது. அரசியலில் மூன்று தலைமுறைகளைக் கண்டவர். அவருக்கான விழா என்பது கழகத்தின் உடன்பிறப்புகளுக்கு உற்சாகமளிப்பது மட்டுமல்ல, கொள்கைகளை நெஞ்சில் ஏந்தி பாய்ச்சலோடு பயணிக்க உத்வேகமும் அளிக்கும். சோனியா காந்தி, ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் தோழர்  சீத்தாராம் யெச்சூரி, சி.பி.ஐ கட்சித் தோழர் டி.ராஜா, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், கேரளா முதல்வர் பினராய் விஜயன், புதுவை முதல்வர் நாராயணசாமி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, ராஷ்டிரிய ஜனதாள தளத் தலைவர் லல்லு பிரசாத் யாதவ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் போன்ற தேசியக் கட்சித் தலைவர்கள் விழாவில் பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ளனர். அவர்கள் வருகை உறுதியாகியுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 'வெளியூரில் இருக்கிறேன். எப்படியாவது வருகிறேன். இல்லையேல், எங்கள் மாநில பிரதிநிதியை அனுப்பிவைக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், 'உடல்நிலை சரியில்லை' என்று தகவல் அளித்துள்ளார். ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வருகை இன்னும் முடிவாகவில்லை. என்றாலும், வருவதற்கான முயற்சிகளில் இருப்பதாகத் தகவல் அனுப்பியுள்ளனர். இவையில்லாமல் தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இது, தி.மு.க-வின்  மிகப்பெரிய திருவிழா" என்றார் உற்சாகம் குறையாமல்.

செயல்படும் ஸ்டாலின் :

''அனைத்துக் கட்சிக் கூட்டம், விவசாயிகள் பிரச்னை தீர்வுக்காக மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம், பொதுப் பிரச்னைகளில் ஒருங்கிணைவு என்று மாநில அரசியலில் முக்கிய நகர்வுகளை நகர்த்திய மு.க.ஸ்டாலினின் தேசிய அளவிலான நகர்வே இந்த வைர விழா'' என்கின்றனர் அரசியலை உற்றுநோக்கும் அறிஞர்கள். ''இது தேசிய அளவில் அரசியல் கூட்டணிக்கான அச்சாரமாக இருக்கலாம்'' என அலசுகின்றனர், அவர்கள். ''பதவியின் கனம் கூடும்போது அதன் மீதான பொறுப்புகளும் கூடுகின்றன. அதை உணர்ந்த மு.க.ஸ்டாலினின்  சமீபகாலச் செயல்பாடுகள் நுணுக்கமாகவும், துல்லியமாகவும் இருந்து 'செயல் தலைவர்' என்ற பதவிக்குப் பொருத்தமாக இருக்கிறது'' என்று புகழாரம் சூட்டுகின்றனர் மூத்த தி.மு.க தலைவர்கள். தொடர்ந்து அதுகுறித்து விவரிக்கின்றனர். 

கருணாநிதி ஸ்டாலின்

கருணாநிதி வழியில் ஸ்டாலின் :

எம்.ஜி.ஆர் மறைந்த காலம். தமிழ்நாட்டு வெற்றிடத்தில் தனித்த இடம்பிடித்துவிட வேண்டும், குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால் விட்ட இடத்தைப் பிடித்துவிடவேண்டும் என்று அப்போதைய  காங்கிரஸ் தலைவர் ராஜிவ் காந்தி பகீரத முயற்சிகள் எடுத்தார். அதேநேரம், தேசியக் கட்சியாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மீது, நிதியமைச்சராக இருந்த வி.பி.சிங், ஊழல் புகார்கள் எழுப்பி காங்கிரஸில் இருந்து விலகினார்; ஜனதா தளம் என்ற கட்சியை உருவாக்கினார்; ராஜிவ் மீது தொடர்ந்து ஊழல் புகார்களை எழுப்பினார்; அப்போது, பல்வேறு தேசியத் தலைவர்களிடம் தலைவர் கருணாநிதி தொடர்ந்து பேசினார். அம்முயற்சிக்கான பலன், ஜனதா தளம், தெலுங்கு தேசம், தி.மு.க., அசாம் கண பரிஷத், காங்கிரஸ் (எஸ்) உள்ளிட்ட 7 கட்சிகள் கூட்டணியான தேசிய முன்னணி உருவானது. 1988-ம் ஆண்டு செப்டம்பரில் சென்னையில் இக்கூட்டணியின் தொடக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. அது, அப்போதைய காலத்தில் தேசிய அளவில் பெரும் அதிர்வை உண்டாக்கியது. 1988 பொதுக்கூட்டத்தில் அப்போது இளைஞர் அணிச் செயலாளராக இருந்து மு.க.ஸ்டாலின் நடத்திய பேரணி, தேசியத் தலைவர்களைத் திரும்பிப் பார்க்கவைத்தது. 30 ஆண்டுகள் கடந்துவிட்டது. 2017-ல் இன்று செயல் தலைவராக இருந்து அதேபோன்று ஒரு முக்கிய அசைவை மு.க.ஸ்டாலின் நிகழ்த்துகிறார். இது, மு.க.ஸ்டாலின் முதிர்ச்சி அடைந்துள்ளார் என்று காட்டுகிறது.

ஸ்டாலின் ராஜதந்திரம் :

இங்கு அ.தி.மு.க இரண்டாகப் பிளவுபட்டிருக்க, அதையொட்டி ஒரு பினாமி ஆட்சி நடத்த மத்திய பி.ஜே.பி ஆட்சி முயற்சிக்கிறது. திராவிடம், தமிழ், தமிழர் என்ற தத்துவார்த்த அடையாளங்களை அழிக்கும் முனைப்போடு செயல்படுகிறது. இதை நாங்கள் எல்லாம் தெரியப்படுத்துவதற்கு முன்பே மு.க.ஸ்டாலின் உணர்ந்துள்ளார். அதன்பின்னான அசைவுகளே அனைத்துக் கட்சி கூட்டம் உள்ளிட்ட ஒருங்கிணைவு ஏற்பட்டதாகும். தேசிய அளவில் எதேச்சதிகாரமாக பி.ஜே.பி ஒற்றையாட்சி நடத்துகிறது. அதன்மூலம் ஒற்றை மதவாத ஸ்டாலின்தத்துவம், ஒற்றைமொழி என்ற திணிப்புகளை தீவிரப்படுத்துகிறது. இதை உணர்ந்து அகில இந்திய அளவில் தமது போராட்டங்களைக் கட்டியமைத்தார் மு.க.ஸ்டாலின். விவசாயிகள் பிரச்னைக்காக டெல்லி பயணித்தார். இந்தி திணிப்பு மற்றும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள், மாவட்டந்தோறும் விளக்க கருத்தரங்கங்கள் என மத்திய அரசின் எண்ணங்களுக்கும், செயல்வடிவங்களுக்கும் கடும் எதிர்ப்புகளை வெளிக்காட்டி வருகிறார். தேசிய அளவிலும் பி.ஜே.பி-க்குக் கருத்தியல்ரீதியாக வலுவான எதிர் அரசியல் சக்தியே தி.மு.க என்பதை பறைசாற்றுவதாகவும் உள்ளது அவரின் செயல்பாடுகள். கட்சி மூத்த நிர்வாகிகளுடனான உரையாடல்களிலும் மத்திய பி.ஜே.பி அரசுக்கு எதிரான மூவ் குறித்தே அலசுகிறார்; கருத்துகளை உள்வாங்குகிறார். வைரவிழாவுக்காகப் பல்வேறு கட்சிகளையும் அழைத்தும், பி.ஜே.பிக்கு அழைப்பு கொடுக்கப்படவில்லை என்று பி.ஜே.பி தலைவர்கள் விமர்சிக்கின்றனர். இதற்கு, 'திராவிட இயக்கங்களை ஒழிப்பதுதான் எங்களது முதல் வேலை எனக் கூறும் பி.ஜே.பி-யினருக்கு தி.மு.க-வைக் குறைகூற எந்தத் தகுதியுமில்லை. திராவிட இயக்கங்களை அழிக்க நினைப்பவர்களை தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழா மேடையில் அமரவைத்து அவர்களைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்த விரும்பவில்லை' என்று பதிலளித்துள்ளார். கொள்கைரீதியான பதிலடி மட்டுமல்ல, தலைவர் கருணாநிதிக்கு உண்டான கொள்கை சார்ந்த எள்ளலும் உள்ளது. இதைத்தான் நாங்கள் மு.க.ஸ்டாலின் முதிர்ச்சி அடைந்து வருகிறார் என்று சொல்கிறோம். 

ஸ்டாலினின் தேசியப் பார்வை: 

மதவாதத்துக்கு எதிராகப் பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைத்து மதச்சார்பின்மை அடையாளத்தை முன்வைக்கிறார் மு.க.ஸ்டாலின். இந்த முயற்சி வென்றால், தேசிய அரசியல் போக்கில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். அது, கூட்டணியாக இருந்தாலும் ஆச்சர்யமில்லை. அதற்கான தொடக்கமாக இந்த வைரவிழா இருக்கும்" என்கின்றனர் நம்பிக்கையோடு. பொதுவாக மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கேரளா என தென் கிழக்குக் கடற்பகுதி மாநிலங்கள் தமக்கு எப்போதும் தலைவலி கொடுக்கும் மாநிலங்களாக இருக்கும் என பி.ஜே.பி கருதும். அங்கிருந்தே பி.ஜே.பி-க்குத் தற்போது வலுவான எதிர்ப்பு ஒருங்கிணைவை ஏற்படுத்தும் முயற்சிகளை தொடங்கியுள்ளது தி.மு.க. தேசிய அளவிலான கட்சிகளை ஒரு குடையின்கீழ் திரட்டுவதன் மூலம் பி.ஜே.பி-க்கு எதிரான வலுவான கொள்கைசார்ந்த கட்சியாகவும், எதிர் சக்தியாகவும் தி.மு.க-வை நிறுத்துகிறார் மு.க.ஸ்டாலின்.  அதேநேரம், ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ் எனும் அ.தி.மு.க-வின் உள்விவகாரங்களை மையமிட்டே சுற்றிவந்த அரசியல் பேச்சுகளைத் தமது பக்கம் லாகவமாகத் திருப்பியுள்ளார் மு.க.ஸ்டாலின். கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பயணிப்பது, பி.ஜே.பி-க்கு எதிராக அகில இந்திய அளவில் ஓர் ஒருங்கிணைவுக்கான முயற்சிகளில் ஈடுபடுவது என மு.க.ஸ்டாலினின் செயல் யுக்திகள், கூட்டணிக் கணக்கைக் கடந்து ஒரு பக்குவப்பட்ட 'செயல்' தலைவராக மு.க.ஸ்டாலினை அடையாளப்படுத்துகிறது.


டிரெண்டிங் @ விகடன்