"உலக அமைதியை நிலை நிறுத்துவதே தற்போது சவால்" - இலங்கையில் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி

''உலக அமைதியை எவ்வாறு நிலைநிறுத்துவது என்பதே நம்மிடையே இருக்கும் மிகப்பெரிய சவால் என்றும், அதில் தாம் ஒருதேசத்தின் மாநிலங்களுக்கு இடையேயான மோதலைப் பற்றி குறிப்பிடவில்லை'' என்றும் பிரதமர் மோடி இலங்கையில் உரையாற்றியுள்ளார்.

இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அதிபர் சிறீசேனாவும், பிரதமர் ரணில் விக்கிரம சிங்கேவும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். பிரதமரின் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சர்வதேச வெசாக் விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வரவேற்பு ஏற்பாடுகள், அலங்காரத் தோரணங்களை கண்டு மோடி வியந்துள்ளார். பின்னர், கொழும்புவில் 120 ஆண்டுகால பழமையான சீமாமாலிகா புத்த கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இலங்கை அதிபர் சிறீசேனா அளித்த விருந்தோம்பலில் பங்கேற்று மகிழ்ந்துள்ளார். 

இந்திய பிரதமர்  மோடி -இலங்கை அதிபர் சிறிசேனா

புத்தபூர்ணிமாவில் பங்கேற்பு!

அதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை ஏற்பாடு செய்துள்ள சர்வதேச வெசாக் தின கொண்டாட்டத்தில் பங்கேற்றார் மோடி. இதில் தலைமையேற்றுப் பேசிய மோடி, "இருளை அகற்றி அறிவை ஒளிபெறச் செய்யும் இந்த நன்னாளில் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். புத்தரின் கொள்கைகள் எந்தக் காலத்துக்கும் பொருத்தமானவை. புத்த மதத்தில் இருந்து இந்திய நிர்வாகம் கலாசாரக் கொள்கைளை பின்பற்றுகிறது. புத்தரின் ஞானத்தை இந்தியாவிலும் பரப்ப இலங்கை அரசு ஆர்முடன் இருக்கிறது. சமூகநீதியும், உலக அமைதியுமே இந்த நன்னாளின் கறுப்புப் பொருள்கள். இப்படியானச் சிந்தனைகளைப் பின்பற்றாதவர்களே சோகமான முடிவுகளை அடைவார்கள். அமைதியை விரும்பாத விளைவின் முடிவே பயங்கரவாதத்தின் உச்சம். இதுபோன்ற வன்முறையும், வெறுப்பும் அவர்களுடைய சிந்தனைக் கொள்கையில் இருந்தே உதிக்கிறது'' என்றார்.

இலங்கையில் பிரதமர் மோடி

மலையகத் தமிழர்களுடன் சந்திப்பு! 

பின்னர், திகோயா நகருக்குச் சென்ற மோடி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்காகக் கட்டப்பட்டிருந்த மருத்துவமனையைத் திறந்துவைத்தார். பின்னர், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "உலக அளவில் போற்றப்படும் தேநீர், இந்த மண்ணில் இருந்துதான் கிடைக்கிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மிகவும் வலிமையானவர்கள். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், சிறந்த பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனும் இந்த மண்ணில் இருந்தே வந்தவர்கள். இந்திய வம்சாவளி மக்களின் கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் இந்திய அரசு உறுதுணையாக இருக்கும். அந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு இலங்கை அரசுடன் இந்தியா ஆலோசனை நடத்தும். மலையக மக்கள் அமைதியாக வாழ்வதற்கு இந்தியா உறுதுணையாக இருக்கும்'' என்றார்.

விழாவில் மோடி

இதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை மோடி சந்தித்துப் பேசினார். மோடியின் வருகைக்கு அங்குள்ள தமிழ் ஈழத் தலைவர்கள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், முன்னாள் அதிபர் ராஜபக்‌ஷே எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். அவருடைய வருகையின்போது, ''கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பைத் தெரிவிப்பேன்'' என்று கூறியிருந்தார். இந்த நிலையில் மோடியும், முன்னாள் அதிபர் ராஜபக்‌ஷேவும் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்தச் சந்திப்பில் என்ன பேசினார்கள் என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

மலையக மக்களுடன் பிரதமர்

பிரதமர்  மோடியின்  இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. போரினால் பாதிக்கப்பட்டத் தமிழர்களின் மறுவாழ்வு, தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்துப் பேச வேண்டும் என்று தமிழ் ஈழ உணர்வாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், பிரதமரின் இந்தப் பயணத்தால் நன்மை விளையுமா என்பது இனிவரும் நாள்கள்தான் தீர்மானிக்கும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!