வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (15/05/2017)

கடைசி தொடர்பு:12:45 (15/05/2017)

‘தமிழர்களின் பிரச்னை குறித்து மோடி ஒருவரிகூட பேசவில்லை’ - வேல்முருகன்

மிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் இலங்கைக்கு கொண்டாட்டப் பயணமாக சென்று வந்துள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி! ‘இலங்கையில் நடைபெறவிருக்கும் சர்வதேச புத்த மத விழாவில் பங்கேற்பதற்காக மோடி இலங்கை செல்லவிருக்கிறார்’ என்ற செய்தி வெளியானதுமே தமிழகத் தலைவர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும், வெற்றிகரமாக பயணத்தை முடித்துத் திரும்பியிருக்கிறார் பிரதமர்! இந்த நிலையில், மோடியின் இலங்கைப் பயணத்தை எதிர்த்து திருச்சியில் போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனிடம் பேசினோம்.

வேல்முருகன்

“ரஜினியின் இலங்கை பயணத்தை போராட்டம் நடத்தி தடுத்துவிட்டீர்கள். ஆனால், பிரதமர் மோடி வெற்றிகரமாக இலங்கை பயணம் மேற்கொண்டுள்ளாரே...?”

''இந்த தருணத்தில், பாரதப் பிரதமரோ, ரஜினியோ அல்லது செல்வாக்குமிக்க இந்தியத் தலைவர்களோ இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதை தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் விரும்பவில்லை; ஒட்டுமொத்தத் தமிழர்களும் விரும்பவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இறுதிப்போரின்போது நடைபெற்ற இனப்படுகொலை, பாலியல் வன்கொடுமை ஆகிய கொடூரங்களுக்கு நீதிகேட்டு மிகப்பெரிய அளவில், அங்குள்ள தமிழர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 90 ஆயிரம் தமிழ்ப் பெண்கள் விதவைகளாக்கப்பட்டிருக்கிறார்கள். போருக்குப் பின்னர், தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் ஈழத் தமிழர்கள் போராடி வருகிறார்கள். போரின்போது காணாமல் போனதாகச் சொல்லி சிங்கள அரசு கடத்திச் சென்ற 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. உயிரோடு இருக்கிறார்களா? கொன்றுவிட்டார்களா? என்று எந்த உண்மையையும் தெரிந்துகொள்ள முடியவில்லை. 'எங்கள் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள்' என்று அங்குள்ள ஈழ சொந்தங்கள் மன்றாடிக் கிடக்கின்றன. 

இதெல்லாம் போதாது என்று, இங்கிருந்து மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களையும் சிங்கள கடற்படை தினம் தினம் அடித்து விரட்டியும் சுட்டுக் கொன்றும் வேட்டையாடி வருகிறது. பிரிட்ஜோவை சுட்டுக் கொன்ற ரத்தக் கறை இன்னும் காயவில்லை.... இப்போதுவரை இந்தக் கொடூரக் கொலையைச் செய்தவர் யார் என்று விசாரிக்கவோ கைது செய்யவோ இலங்கை அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 134 படகுகளை விடுவிப்பதற்கான அறிவிப்பையும்கூட இதுவரை இலங்கை வெளியிடவில்லை. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான 'கச்சத்தீவு மீட்பு' குறித்து நாம் தீர்மானமே இயற்றியுள்ளோம். இதுகுறித்தும் அங்கே மோடி, ஒருவார்த்தைப் பேசவில்லை. இப்படி ஒட்டுமொத்தமாக 12 கோடி தமிழ் தேசிய இனத்தை அவமானப்படுத்தி அழித்துக் கொண்டிருக்கும் ஒரு நாட்டுக்கு, மோடி சுற்றுப்பயணம் செல்லக்கூடாது என்றுதான் நாங்கள் ஆரம்பத்திலேயே போராடினோம்...''

மோடி

“தமிழர்களுக்கான நலத்திட்டமாக 10 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் என்று மோடி அறிவித்திருக்கிறாரே... அந்தவகையில், இந்தப் பயணம் வரவேற்கக்கூடியதுதானே?”

''முதல் விஷயம்... இவ்வளவு பெரிய பிரச்னைகள் அங்கே நிகழ்ந்துகொண்டிருக்கும்போது, 'நட்பு நாடு' என்று சொல்லிக்கொண்டு அங்கே செல்கிற நமது பிரதமர், மேற்கண்ட பிரச்னைகளில் ஏதாவது ஒன்றுக்கு தீர்வு ஏற்படுத்தும்விதமாக சென்று வந்திருப்பாரேயானால், அவரது பயணத்தை நாமும் வரவேற்கலாம். ஆனால், தமிழர்களின் தலையாயப் பிரச்னைகளான இது குறித்து ஒருவரிகூட மோடி பேசவில்லை. திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசுவதும், எம்.ஜி.ஆர்., முத்தையா முரளிதரன் என்று பெருமை பேசுவதுமாக வெற்றுப்பயணம்தான் போய்வந்திருக்கிறார்.

ஏற்கெனவே இந்தியா கொட்டிக்கொடுத்த நிதி உதவியில், சிங்கள ராணுவத்தினருக்கும், சிங்கள மக்களுக்கும்தான் நலத்திட்டங்களை அந்நாட்டு அரசு செயல்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இப்போது கூடுதலாக 10 ஆயிரம் வீடுகள் கட்டித் தருவதெல்லாம் உண்மையில் யாருக்குப் பயன்படும் என்று நினைக்கிறீர்கள்? எல்லாம் கண்துடைப்பு நாடகம்!''

“பல்வேறு இனமக்களை குடிமக்களாகக் கொண்ட ஒரு மிகப்பெரிய அரசாங்கம், பக்கத்து நாட்டோடு பகைமை பாராட்டுவது அதன் வெளிநாட்டுக் கொள்கைக்குப் பங்கம் விளைவித்துவிடாதா?”

“இலங்கைக்கு நாம் உதவி செய்யவில்லை என்றால், அங்கே சீனா வந்து தளம் அமைத்துவிடும்; கால் பதித்துவிடும் என்கிறார்கள். அப்படியென்றால், இந்தியாவின் நலனுக்காக 12 கோடி தமிழ் மக்களின் உரிமைகளையும் வாழ்வுரிமைகளையும் சிங்களவன் காலடியில் கொண்டுபோய் பலியிடுவதும் மண்டியிட வைப்பதும் எந்த வகையில் நியாயம்? ஆனாலும், இப்போது சீனாவும் அமெரிக்காவும்தான் இலங்கையை கட்டுப்படுத்தி வருகிறது. அது வேற விஷயம்!

இவ்வளவு பெரிய இனப்படுகொலை நடந்திருக்கிறது, இதுகுறித்து சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என அங்குள்ள மக்கள் போராடிவருகிறார்கள். சொந்த நாட்டிலேயே தமிழர்கள் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். இந்தப் பிரச்னைகள் குறித்தெல்லாம் ஒரு வரிகூட பேசாமல், ‘வாரணாசிக்கும் இலங்கைக்கும் விமானம் விடுகிறேன்’ என்று பேசியிருப்பது தமிழர்களைப் பொறுத்தவரையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிருப்பதாகத்தான் இருக்கிறது.”

மோடி 1

“நல்லெண்ண அடிப்படையில், புத்த மத விழாவில் கலந்துகொள்ளப்போகும் இடத்தில், அங்கே உள்ள உள்நாட்டுப் பிரச்னைகள் குறித்து எப்படி பேசமுடியும்?”

''மதச்சார்பற்ற நாட்டின் பிரதமராக இருக்கக்கூடிய ஒருவர், புத்த மத வெறி - இன வெறி பிடித்த ஒரு நாட்டுக்கு பயணம் மேற்கொள்வது எதற்காக? என்றுதான் நாங்கள் கேட்கிறோம். இன்றைய செய்தியில்கூட, புத்த பிட்சுகள் கூடியிருக்கும் அரங்கத்தின் உள்ளே விருந்தினரான நமது பிரதமர் மோடி செல்கிறார். ஆனாலும், அங்கே உட்கார்ந்திருக்கும் பிட்சுகளில் ஒருவர்கூட அவருக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை. அப்படியே அலட்சியமாக உட்கார்ந்திருக்கிறார்கள். இதைவிட மோடிக்கு வேறு என்ன கேவலம் வேண்டும்? மதவெறி பிடித்த அந்தப் பிட்சுகள் மோடி என்ற தனிமனிதரை அவமானப்படுத்தவில்லை.... ஒட்டுமொத்த இந்தியர்களையும் அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள். இதே பிட்சுகள் அவர்களது அதிபர் வருகையின்போது எழுந்து நின்று மரியாதை செய்வது வழக்கமானது. ஆனால், இப்போது அந்நிய நாட்டுப் பிரதமரோடு அவர்களது அதிபரும் வரும்போது, எழுந்து நின்று மரியாதை செலுத்துவதைக்கூடத் தவிர்க்கிறார்கள். ஏற்கெனவே, இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தியை துப்பாக்கியால் அடித்து அசிங்கப்படுத்திய நாடுதானே இலங்கை. இந்த அளவுக்கு பாசிஷ வெறி பிடித்த இவர்களையா நட்பு நாடு என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்? 

இலங்கையில் உள்ள தேயிலைத் தோட்ட மக்களிடையே மோடி பேசும்போது, 'தமிழர்களான நீங்கள் இந்தியாவிலிருந்து 200 வருடங்களுக்கு முன்பு இங்கே வந்து கடுமையாக உழைத்து இந்த தேசத்தை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு சென்றிருக்கிறீர்கள்' என்று பாராட்டியிருக்கிறார். இதன்மூலம் அவர் சொல்ல வருவது என்ன? இலங்கையில் உள்ள தமிழர்கள் பூர்வ குடி மக்கள் அல்ல என்றுதானே....? பிழைப்பு தேடி வந்த இடத்தில், நீங்கள் ஏன் தனிநாடு கேட்கிறீர்கள்? என்று சொல்ல வருகிறாரா? 'மலையகத் தமிழர்களைத்தான் மோடி அவ்வாறு குறிப்பிட்டார்' என்று நாளையேகூட இந்தக் கூற்றை பி.ஜே.பி-யினர் மறுத்துப் பேசலாம். ஆனால், அவர் அப்படி மலையகத் தமிழர்கள் என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. பொத்தாம் பொதுவாக தமிழர்களையேதான் அப்படிக் கூறுகிறார். ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது... மோடியின் இந்தப் பயணம் தமிழர்களுக்கு நல்லது செய்யாவிட்டாலும், நிச்சயம் கெடுதலை செய்திருக்கிறது என்பது மட்டும் உறுதி!''

- கோபமும், கொந்தளிப்புமாக முடிக்கிறார் வேல்முருகன்!


டிரெண்டிங் @ விகடன்