வெளியிடப்பட்ட நேரம்: 13:44 (15/05/2017)

கடைசி தொடர்பு:15:08 (15/05/2017)

பஸ் ஸ்டிரைக் அறிவிப்பைத் தொடர்ந்து, எப்படி இருந்தது கோயம்பேடு?

பஸ்

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகையை தமிழக அரசு வழங்காததால் போக்குவரத்துத் தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அண்ணா தொழிலாளர் சங்கம் தவிர்த்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட முடிவுசெய்திருந்தன. இதையடுத்து, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் தொழிலாளர் நல அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். மூன்று கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படாததால், போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் இன்று காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளன. அதிகாரபூர்வமாக இன்றுதான் வேலைநிறுத்தம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சில தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், தமிழகத்தின் பல இடங்களில் முன்கூட்டியே அதாவது நேற்று இரவு முதலே ஸ்டிரைக்கை தொடங்கினர். ஏராளமான பேருந்துகள் மாலை 6 மணிக்கே பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டன. இதனால் பல இடங்களில் பேருந்துகள் இயக்கப்படாததால், பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். சில பேருந்துகள் பணிமனைகளுக்கு வெளியே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டதால், மக்கள் அவதிக்கு ஆளாக நேரிட்டது. 

ஆனால், போக்குவரத்துத் துறை அமைச்சரோ, "பேருந்துகளை எப்போதும் போல இயக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்; பொதுமக்கள் கவலை கொள்ள வேண்டாம்" என்று அறிவித்திருந்த போதிலும், சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் போதிய எண்ணிக்கையில் பேருந்துகள் ஓடவில்லை. சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின்னர் வெளியூர்களில் இருந்து பணிக்குத் திரும்புவோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.

கோயம்பேடு

பேருந்து ஸ்டிரைக், சென்னை கோயம்பேடு பேருந்துநிலையத்தில் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை அறிய அங்கு நேரில் சென்றோம். பொதுவாக வெளியூர் செல்வோர் வெள்ளிக்கிழமைகளில்தான் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குழுமி இருப்பார்கள். ஆனால், நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆன போதிலும் மாலை முதலே கோயம்பேடு பேருந்து நிலையம் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்ததைக் காண முடிந்தது. பெரும்பாலானோர் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கான மாநகரப் பேருந்துகள் வராததால், நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இருப்பினும் வெளியூருக்குச் செல்லும் பேருந்துகள் எப்போதும் போல இயங்கிக்கொண்டுதான் இருந்தன. இரவு 10 மணிக்குமேல் பேருந்து நிலையத்துக்குள் வரும் பேருந்துகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டன.பேருந்து நிலைய அதிகாரியிடம் அதுபற்றிக் கேட்டபோது "ஸ்ட்ரைக் நடக்கும்னு ஏற்கெனவே அறிவிச்சுட்டோம். அதனால் மக்களும்  பேருந்துக்காக வெயிட் பண்ணமாட்டாங்க. ஆனா திடீர்னு இன்னைக்கு சாயங்காலத்துலேர்ந்தே ஸ்ட்ரைக்னு சொல்லிட்டாங்க. இதுமக்களுக்குத் தெரியாது. அதனால் ஊருக்குப் போகணும்னு அவங்களும் வந்துட்டாங்க. அதனால் இரவு 11 மணி வரைக்கும் வண்டிய ஒட்டிக்கலாம்னு சொல்லிட்டாங்க. அதுக்குள்ள வர்ற பயணிகளை மட்டும் ஏத்திக்கிட்டு போயிரலாம்னு பேருந்துகள இயக்கினோம். இதைக் கருத்தில்கொண்டே 10 மணியில் இருந்து உள்ளே வர்ற வண்டிய நிறுத்திட்டோம். இப்ப வரைக்கும் கூட்டம் கொஞ்சமாதான் இருக்கு. இங்க இருக்குற வண்டிகள்ல இந்தக் கூட்டத்தை ஏத்திகிட்டு போயிட முடியும். ஆனா நாளையிலிருந்து பஸ் எதும் ஓடாது. எப்போதும்போல பஸ் ஓடும்னு அரசாங்கம் சொல்லுது. அது முடியாத காரியம். எங்க தொழிலாளர் நலனும் முக்கியமல்லவா?" என்றார். 

சொல்லியது போலவே 11 மணிக்குப் பிறகு கோயம்பேடு பேருந்து நிலையம் பேருந்துகளற்ற வெறும் மைதானமாகவே காட்சியளித்தது.  ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்களும் அதிகளவு சிரமம் இல்லாமல் கிடைத்த பேருந்தில் ஏறிக்கொண்டு பயணப்பட்டார்கள். 

அரசுப் பேருந்து நிலையம்தான் வெறிச்சோடி விட்டது. அருகில் இருக்கும் தனியார் பேருந்து நிலையம் எந்த நிலையில் இருக்கிறது என்பதற்காக அங்கு சென்றோம். அங்கும் ஒரு சில பேருந்துகள் மட்டுமே நிறுத்தப்பட்டிருந்தன. பொதுவா ஞாயிற்றுக்கிழமை எப்பவுமே இப்படித்தான் இருக்கும் என்று ஓட்டுநர் ஒருவர் கூறினார். வரும் வழியில் வடபழனி பணிமனையில் ஏதாவது பஸ் நிற்கிறதா? என்று பார்த்தோம். ஆனால், அங்கு ஒரு பேருந்துகூட இல்லை. ஆனால் பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்காக நின்றுகொண்டிருந்தார்கள். 

கோயம்பேடு பேருந்துநிலையம் மட்டுமல்ல; தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ள பேருந்துநிலையங்கள், இந்த ஸ்டிரைக்கால் வெறிச்சோடிக் காணப்பட்டன.


டிரெண்டிங் @ விகடன்