வெளியிடப்பட்ட நேரம்: 17:18 (15/05/2017)

கடைசி தொடர்பு:10:31 (16/05/2017)

மேடைக்குப் பின்னால் தாமரை! ரஜினி உணர்த்த முயற்சிப்பது என்ன?

rajini fans meeting

"நான் ஒருதடவ சொன்னா, நூறுதடவ சொன்னா மாதிரி","நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா, வரவேண்டிய நேரத்தில கண்டிப்பா வருவேன்", "லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருவேன்", "அதிகமா ஆசைப்படற ஆம்பளயும், அதிகமா கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் கிடையாது", "என் வழி தனி வழி" - இவையெல்லாம் நடிகர் ரஜினிகாந்த் தன் படங்களில் சொன்ன 'பஞ்ச் ' வசனங்கள்.

ரசிக்கக்கூடிய வகையிலான இதுபோன்ற திரைப்பட வசனங்களை ரஜினி ரசிகர்களும், தமிழக மக்களும் சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை. ஏதோ ஒருகட்டத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்றே நம்பியுள்ளனர். பல்வேறு தருணங்களில் ஆங்காங்கே உள்ள  ரசிகர்மன்ற நிர்வாகிகள், ரஜினி அரசியலில் தலைமை ஏற்க வேண்டும் என்று பேனர்கள், போஸ்டர்கள் அடித்த காலமும் உண்டு.

இதுபோன்ற நிலையில்தான், பல ஆண்டுகளுக்குப் பின்னர் ரஜினிகாந்த் சென்னையில் ரசிகர்களைச் சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பானது அவரின் அரசியல் பிரவேசம் பற்றிய முடிவெடுக்கும் சந்திப்பாக இருக்கும் என்று தமிழகம் முழுவதும் உள்ள மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஆனால், இன்று ரசிகர்கள் முன்னிலையில் பேசிய ரஜினி எப்போதும் போல், "நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்தான் இருக்கிறது" என்று திடமில்லாத கருத்தையே தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று முதல் 5 நாட்கள் ரஜினிகாந்த், ரசிகர்களைச் சந்திக்க முடிவு செய்துள்ளார். கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்டவாரியாக ரசிகர்களைச் சந்தித்து வரும் அவர், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் மட்டுமே திருமண மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ரஜினிரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி, "21 ஆண்டுகளுக்கு முன், அப்போதிருந்த கட்டாயத்தில் ஒரு கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தேன். ரசிகர்களும் என் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து, அந்தக் கூட்டணியை அமோக வெற்றிபெறச் செய்தனர். அரசியல் என்பது பண முதலைகள் அதிகம் உள்ள குளம் போன்றது. அது தெரிந்திருந்தும் நான் அதில் எப்படிக் காலை விடுவேன்? ரசிகர்களை சில அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொண்டனர்.
ரசிகர்கள் சிலரும் அரசியலில் பணத்தின் ருசியை அறிந்து கொண்டதால், எப்போது அரசியல் பிரவேசம் என்று தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். எம்.பி. ஆக வேண்டும்; எம்.எல்.ஏ ஆக வேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறேதும் இல்லை. ஆனால் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் அரசியலுக்கு வர விரும்புபவர்களை நான் அருகில் வைத்துக்கொள்ள மாட்டேன்" என்றார்.

மேலும் "என் வாழ்க்கையில் அனைத்தையும் தீர்மானிப்பது ஆண்டவன்தான்; அந்தவகையில் நான் அரசியலுக்கு வருவதும் ஆண்டவன் கையில்தான் உள்ளது. என்னைப் பொறுத்தவரை நான் இன்று நடிகன்; ஆண்டவன் நாளை என்னவாக தீர்மானிக்கிறாரோ, அதில் நியாயமான உண்மையான தர்மத்துடன் பணியாற்றுவேன். ஒருவேளை அரசியலுக்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டால், நியாயமானவர்களை அருகில் வைத்துக் கொள்வேன்" என்று வழக்கமான குழப்பத்துடன் பேசினார்.

திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த அலங்கரிக்கப்பட்ட மேடையில், ரஜினியுடன் பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் மட்டுமே அமர்ந்திருந்தார். இருவரின் பின்புறத்தில், அமைக்கப்பட்டிருந்த திரையில், ரஜினியின் 'பாபா' பட 'கதம் கதம்' சிம்பலுடன், வெண்தாமரைச் சின்னமும் ஒருங்கே அமைந்தது போன்ற ஒரு புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

ரஜினியைப் பொறுத்தவரை எப்போதுமே பி.ஜே.பி-யுடன் இணக்கமான நட்பைக் கொண்டுள்ளார். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக சென்னை வந்த மோடி, நேராக ரஜினியை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்துப் பேசினார். நட்புரீதியாக இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது என்று அப்போது ரஜினி குறிப்பிட்டார். அதன் பிறகும் பல்வேறு தருணங்களில் ரஜினியை தங்கள் பக்கம் இழுக்க பி.ஜே.பி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், ரஜினி தரப்பில் இருந்து இதுவரை பி.ஜே.பி-க்கு ஆதரவாகவோ, மறுத்தோ எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை. மேடைக்கு பின்புறம் உள்ள அடையாளத்தைப் பார்க்கும்போது, புதிய சின்னமோ என்ற எண்ணம் ரசிகர்கள் மட்டுமல்ல, மக்கள் மனதிலும் எழாமல் இல்லை, இதன் மூலம் பி.ஜே.பி-க்கு டாட்டா காட்டிவிட்டாரா ரஜினி என்று எண்ணத் தோன்றுகிறது.

சென்னை ஆர்.கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தலுக்கான பி.ஜே.பி வேட்பாளர் கங்கை அமரன், ரஜினியை அவரது வீட்டில் சந்தித்தார். இதையடுத்து, ரஜினியின் ஆதரவு கிடைக்கும் என்ற தோற்றத்தை ஏற்படுத்த பி.ஜே.பி எத்தனித்தது. ஆனால், அதற்கும் ரஜினி வளைந்து கொடுக்கவில்லை.

இப்படிப்பட்ட நிலையில்தான், சென்னையில் ரசிகர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார் ரஜினி. வழிநடத்தக்கூடிய திறமையான தலைமை ஏதும் இல்லாமல் நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பல் போன்று, தமிழக அரசியல் களம், தற்போது தள்ளாடிக் கொண்டிருக்கிறது. தங்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளை தீர்த்துவைக்கக்கூடிய ஆபத்பாந்தவனாக, அரசியல் செல்வாக்குமிக்க தலைவர் யாராவது உதயமாக மாட்டார்களா என்று தமிழக மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் சூழலில், ரஜினி அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா? என்பது அவருக்கும், அவர் தெரிவிப்பது போல அந்த ஆண்டவனுக்கும் மட்டுமே தெரிந்த உண்மை!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்