புலித்தோல் போர்த்தி பூனை வென்ற கதை..! #StartUpBasics - அத்தியாயம் 8

ஸ்டார்ட்அப்


ஸ்டார்ட்அப் கதைகளில் சில விசித்திரமான, இப்படி கூட நடக்குமா என்று ஆச்சர்யப்பட வைக்கும் சம்பவங்களும் நடக்கும். நீங்கள் ஒரு பொருளை விற்கிறீர்கள். அதே பொருளை அனுபவம் இல்லாத புதியவர்கள் உங்களிடம் இருந்து கடனாக வாங்கி அந்த பொருளுக்கு வண்ணம் அடித்து, அழகாக பேக்பண்ணி அதே சந்தையில் விற்று உங்களைவிட அதிகம் சம்பாதிக்கிறார்கள். அதுவும் மிக சின்னக் குழு இதை சாதித்தார்கள் என்றால்? அதை தான் மின்ட்(mint) செய்து காட்டினார்கள். 

1999ல் வெங்கட் ரங்கன் என்ற அமெரிக்கவாழ் இந்தியர் யாட்லி(Yodlee) என்ற ஒரு ஸ்டார்ட்அப்பை ஆரம்பித்தார். அது ஒரு வித்தியாசமான ஐடியா. யாட்லியில் உங்கள் கணக்கைத் துவக்கி அதனுடன் உங்கள் வங்கிக் கணக்கை அல்லது கிரெடிட் கார்ட் கணக்கை இணைத்துவிட்டால் உங்கள் கணக்கில் நடக்கும் வரவு- செலவு கணக்குகளை தனித்தனியாக பிரித்து இதில் இதில் இவ்வளவு செலவாகி இருக்கிறது என்று புட்டுபுட்டுவென வைத்துவிடும்.

இது அமெரிக்கர்களுக்கு மிகப்பெரிய தேவையாக அப்போது இருந்தது. வங்கி ஸ்டேட்மென்ட் எடுத்து என்னென்ன செலவு செய்திருக்கிறோம் என்பதை அலசி ஆராய்ந்து பட்ஜெட் போடுவது வழக்கம். பட்ஜெட் போட்டு செலவு செய்தாலும் சில நேரங்களில் நாம் எவ்வளவு செலவு செய்தோம் என்று தெரியாமலேயே நிறைய செலவு செய்ய வேண்டிஇருக்கும். அப்போது யாரவது நம் கையைப் பிடித்து நிறுத்தினால் தேவலை என்று தோன்றும் அல்லவா.. அதைத்தான் இவர்களது இணையதளம் செய்யும். இதற்காக அவர்கள் கட்டணம் எதுவும் வசூலிக்கமாட்டார்கள். வங்கி பரிவர்த்தனைகளை கண்காணித்து, உங்கள் பட்ஜெட் ரிப்போர்ட்டை தயாரிப்பது மட்டுமே அவர்கள் வேலை.

இது அன்று பலருக்கும் தேவைப்பட்டது. வங்கிகள் இவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்தச் சேவையை வழங்கினார்கள். இந்தச் சேவையை கொடுக்கும் வங்கிகளிடம் மக்கள் நிறைய கணக்குகள் துவக்கினார்கள். வங்கி சேமிப்பு கணக்கு, கிரெடிட் கார்ட், இன்ஷூரன்ஸ் மற்றும் நிதி ஆலோசனை நிறுவனங்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டன. இன்னொருபுறம் ஒரு பெரும் புள்ளிவிவரம் வர்த்தக நிறுவனங்களுக்கு கிடைக்கும். எந்தத் துறையில் மக்கள் அதிகம் செலவழிக்கிறார்கள்? எந்த வகை சேமிப்பில் ஆர்வம் காட்டுகிறார்கள், எந்த நிறுவனத்தின் பொருள்களை அதிகம் வாங்குகிறார்கள். எந்தப் பகுதி மக்கள் குறைவாக செலவழிக்கிறார்கள்? அந்தப்பகுதியின் தேவை என்ன என்ற பல விவரங்களை மிகத் துல்லியமாக தந்துவிடும்.

அப்படியானால் மக்களின் பொருளாதார ரகசியங்கள் கசியப்படுகின்றனவா.. என்று கேட்டால் அது பாதி உண்மை மட்டுமே. இன்னார் இவ்வளவு செலவழிக்கிறார் என்ற ரிப்போர்ட்டை அவரைத் தவிர வேறு யாருக்கும் கொடுக்கமாட்டார்கள். அதற்கு அரசாங்கத்தின் கட்டுப்பாடு உண்டு. ஆனால் இந்த இந்த நிறுவனத்தின் சேவையை அதிகம் பயன்படுத்துகிறார்கள், இந்தப் பொருள்கள் அதிகம் வாங்கப்படுகின்றன என்று பொதுவான புள்ளிவிவரம் தருவதற்கு எந்தத் தடையும் இல்லை.

அந்த புள்ளிவிவரம் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், புதிய சேவை வழங்குவதற்கும் தேவையான அடிப்படை சந்தை நிலவரத்தை துல்லியமாக சொல்லிவிடும். அதுதான் அவர்களுக்குத் தேவை. அதற்காக பல புள்ளிவிவர நிறுவனங்கள்  மக்களை நேரடியாக சந்தித்து பல கேள்விகள் கேட்டு கஷ்டப்பட்டு வாங்குவார்கள். அதுதான் இங்கு மிகவும் ஈசியாக முடிந்து விடுகிறது. அதுவும் துல்லியமான டேட்டா மக்களது வங்கி நடவடிக்கைகளை வைத்து கிடைக்கிறது எனும்போது அதைவிட வேறென்ன வேண்டும்.

இப்படி யாட்லி வளர்ந்து வரும்போது அந்த ட்விஸ்ட் நிகழ்ந்தது. அவர்களது தொழில்நுட்பத்தை பிறநிறுவனங்களும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் API ஆக மாற்றி வழங்கி வந்தார்கள். அதை வைத்து Mint.com என்ற ஒரு ஸ்டார்ட்அப் கொஞ்சம் மெருகேற்றி அழகிய வடிவத்தில் எளிதில் பயன்படுத்தக் கூடிய அளவில் வழங்கினார்கள். அது அமெரிக்க மக்களிடையே மிகப்பெரிய கவனத்தைப் பெற்று பெருவெற்றி அடைந்தது. அவர்களது நிறுவனத்தில் பல பெரிய முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்தன. அதற்கு முதன்முதலில் முதலீடு செய்தவர் ராம்ஸ்ரீராம் என்ற சென்னை தமிழர் (இவர் கூகுள் நிறுவனத்துக்கும் Angel Investorஆக ஆரம்ப முதலீடு செய்து பெருவெற்றி பெற்றவர்)

மின்டின் வளர்ச்சி ஒரு கட்டத்தில் யாட்லியைவிட உயரத்துக்குச் சென்றது தான் நகைமுரண். ஆனால் மின்ட் யாட்லியின் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் மின்டின் வளர்ச்சி யாட்லிக்கும் சேர்த்தே பயன்கொடுத்தது. 2009ன் இறுதியில் மின்ட்டை INTUIT என்ற ஐடி நிறுவனம் இந்திய மதிப்பில் ஆயிரம்கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. அப்போது மின்டில் வேலைபார்த்தவர்களின் எண்ணிக்கை 35ஐ தாண்டவில்லை என்பது சிறப்பு. காரணம் யாட்லியின் தொழில்நுட்பத்தை அழகுபடுத்தி வெளியிட்டது மட்டுமே மிண்டின் பெரிய வேலை. மிச்சதெல்லாம் யாட்லியின் உழைப்பு.

யாட்லியின் சந்தை மதிப்பு 180 கோடியாக மதிப்பிடப்பட்டது தான் வேடிக்கை. யாட்லி அதன்பிறகு தான் Usability என்ற பயன்திறனிலும் வடிவமைப்பிலும் கவனம் செலுத்தியது. ஏன் இந்திய ஐடி சந்தையே அப்போது தான் விழித்துக்கொண்டது. வெறும் தொழில்நுட்பம் மட்டும் போதாது அதை மக்களுக்கு பிடிக்கும்வண்ணம் அழகான வடிவமைப்பும், பயன்படுத்துவதற்கு மிக எளிதாக இருக்கவேண்டும் என்று நிறைய Usability Designerகளை வேலைக்கு எடுத்தார்கள். 

2015ல் யாட்லியை என்வெஸ்ட்மென்ட்(Envestment) என்ற சாப்ட்வேர் நிறுவனம் 570 மில்லியன் டாலர்களுக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் 3700 கோடிகளுக்கு) விலைக்கு வாங்கியது. காரணம் மிக எளிது யாட்லியிடம் மூன்று கோடி அமெரிக்கர்களின் Finance ஜாதகம் இருக்கிறது. அவை குத்துமதிப்பான தகவல்களை அல்ல மிகத் துல்லியமான கணக்கைத் தருபவை. அமெரிக்கர்களின் வரவு- செலவு கணக்குகளை கையில் மை தடவி பார்ப்பது போல பார்த்துவிடலாம்.

ஸ்டார்ட்அப் பாடம்

என்னதான் சிறப்பான ஐடியாவாக இருந்தாலும், நுணுக்கமான தொழில்நுட்பத்தை கொண்டிருந்தாலும், சந்தையின் தேவையை பூர்த்தி செய்தாலும் வெற்றிக்குப் போதாது. அதைத் தாண்டி எளிய அழகான வடிவமைப்பு இருக்கவேண்டும். அகத்தின் அழகு முகத்தில் தெரிய வேண்டும். அது மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் (Usability) பயன்திறனை கொண்டிருக்க வேண்டும். யாஹூ கூகுளிடம் தோற்ற இடம் அது தான். ஆர்குட் பேஸ்புக்கிடம் தோற்று காணாமல் போன இடமும் அதுவே. அடுத்தவாரம் இதைப் பற்றி இன்னும் விரிவாக பேசுவோம்.

 

முந்தைய அத்தியாயங்கள்
  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!