வெளியிடப்பட்ட நேரம்: 15:13 (16/05/2017)

கடைசி தொடர்பு:15:12 (16/05/2017)

நத்தம் முதல் ப.சி வரை தொடரும் ரெய்டு அரசியல்

கார்த்தி சிதம்பரம்

மிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய ரெய்டு அரசியல் ப.சிதம்பரம் வரை நீள்கிறது. ரெய்டு அரசியலில் சிக்கியவர்கள் குறித்து சில நாள்களுக்கு மட்டும் பரபரப்பு இருக்கிறது. ரெய்டு நடைபெற்ற சில நாட்களுக்குப்பின்னர்  பரபரப்பு ஓய்ந்து விடுகிறது. ரெய்டு என்ற பெயரில் தமிழகத்தை பி.ஜே.பி அசைத்துப் பார்க்கிறது என்று தமிழக அரசியல் தலைவர்கள் கருதுகின்றனர்.  

நத்தத்தில் தொடங்கிய ரெய்டு

நத்தம் விஸ்வநாதன் 2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் முக்கிய சக்தியாக விளங்கியவர் நத்தம் விஸ்வநாதன், இவரது வீடு மற்றும் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வீடு உட்பட 40 இடங்களில் கடந்த ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி, வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.  தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகாரில் சிக்கிய அன்புநாதன் வீட்டில் ரெய்டு நடைபெற்றது. இந்த ரெய்டின் தொடர்ச்சியாகவே நத்தம் விஸ்வநாதன் வீட்டில் சோதனை நடைபெற்றதாகக் கூறினர். நத்தம் விஸ்வநாதன் கைது செய்யப்படப் போகிறார் என்று செப்டம்பர் 21-ம் தேதி வரை பரபரப்பு நிலவியது. பின்னர் ஒன்றும் இல்லாமல் புஸ்வாணம் ஆகிவிட்டது. ஜெயலலிதாவையும், சசிகலாவையும் மிரட்டுவதற்கே இந்த சோதனை நடத்தப்பட்டதாகப் பேசப்பட்டது.

சேகர் ரெட்டிக்கு குறி

மணல்குவாரிகளைக் கையில் வைத்திருக்கும் சேகர் ரெட்டி அலுவலகம், வீடுகளில் கடந்த டிசம்பர் 8-ம் தேதி வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தினர். அவரது வீட்டில் இருந்து பணமும், தங்கமும் கைப்பற்றப்பட்டதாகக் கூறினர். அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகனராவ், வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் கடந்த டிசம்பர் 21-ம் தேதி வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்றது. இதில் ராம மோகனராவுக்கு எதிராக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இப்போது தொழில்முனைவோர் மேம்பாட்டுக் கழக இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.  ரெய்டுக்கான காரணம் என்ன என்பது இன்றுவரை புரியாத மர்மம்தான்.

சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோரின் வீடுகளில் டிசம்பர் 24-ம் தேதி சோதனை நடைபெற்றது. அதில் மணல் குவாரிகள் தொடர்பாக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகச் சொன்னார்கள். கைது செய்யப்பட்ட இவர்களும் இப்போது ஜாமீனில் இருக்கிறார்கள்.

ரெய்டு விஜயபாஸ்கர்

அமைச்சர் வீட்டிலேயே ரெய்டு

கடந்த ஏப்ரல் 7-ம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணத்தில் இருந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக 89 கோடி ரூபாய் பட்டுவாடா நடைபெற்றதாகவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு தொடர்பு என்றெல்லாம் தகவல் வெளியானது. சிட்லபாக்கம் ராஜேந்திரன், நடிகரும், சமக கட்சியின் தலைவருமான சரத்குமார் வீட்டிலும் ரெய்டு நடைபெற்றது. அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்க வேண்டும் என்றெல்லாம் கோரிக்கைகள் எழுந்தன. சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கும் விசாரணைக்காக விஜயபாஸ்கர் சென்று வந்தார். ஆனால், இப்போது அந்தப் பரபரப்பு ஓய்ந்து விட்டது.
இப்போது ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகள், அலுவலகங்களில் சி.பி.ஐ சோதனை நடைபெற்று வருகிறது. இந்த ரெய்டும் வழக்கம்போல் இரண்டு, மூன்று நாள் பரபரப்பு செய்தி ஆனபின்னர் முடிவுக்கு வரலாம். இது சி.பி.ஐ தொடர்பான ரெய்டு என்பதால் தொடர் நடவடிக்கைகளும் இருக்கலாம்.

ஏறக்குறைய கடந்த செப்டம்பர் முதல் இன்று வரை தொடரும் ரெய்டால், பிரேக்கிங் நியூஸ்-களுக்கு மத்திய அரசு தீனி போட்டதைத் தவிர வேறு என்ன பலன் கிடைத்தது?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்