வெளியிடப்பட்ட நேரம்: 19:12 (16/05/2017)

கடைசி தொடர்பு:19:12 (16/05/2017)

''எங்க வலி தெரியலையா?''- குமுறும் போக்குவரத்துத் தொழிலாளர்கள்!

வேலை நிறுத்தம்

''நாங்கள் கேட்பது இனாம் அல்ல, நியாயமாக எங்களுக்குச் சேரவேண்டிய உரிமைத் தொகை. அதைப் பெறும்வரை ஓயமாட்டோம்'' –இரண்டாம் நாளாகத் தொடரும் போக்குவரத்துத்துறைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் தமிழ்நாட்டின் இயல்பு வாழ்க்கை கடுமையான சிதைவுக்கு உள்ளாகியிருக்கிறது. தங்களின் ஏழு அம்சக் கோரிக்கைகளுக்காக அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருடன் மே 14-ம் தேதி நடந்த 6-ம் கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிய, இந்தத் தகவல் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் பரவியது. உடனடியாக பேருந்துகளை டிப்போவுக்குக் கொண்டு சென்று நிறுத்தினர் ஓட்டுநரும், நடத்துநரும். பேருந்து நிலையங்களில் எந்தப் பயணியையும் ஏற்றிக்கொள்ளவில்லை.

பயணிகள் துன்பம் : 

''மே 15- ம் தேதியில் இருந்துதானே பஸ் ஓடாதுன்னு சொன்னாங்க. ஆனா இன்னைக்கே பஸ்ஸெல்லாம் நிறுத்துறீங்களே?'' எனப் பயணிகள் புலம்பினர். சென்னை மட்டுமல்லாமல் மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் எனத் தமிழ்நாடு முழுக்க இதுவே நிலைமை. கைக்குழந்தைகளுடனும், முதியோர்களை அழைத்தபடியும் வண்டலூர் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் உள்ள சாலைகளில் வழியெங்கும் மக்கள் பேருந்து கிடைக்காமல் சாரி சாரியாக நடந்து சென்றனர். இதுதான் தருணம் என்று பல தனியார் பேருந்துகள் கொள்ளை வேட்டையில் ஈடுபட்டன. சென்னையிலிருந்து சேலம், கோவை செல்ல ரூ 1,000, 1,500 என வசூலித்தனர். திங்கட்கிழமை வார முதல் நாளிலேயே வேலைக்குச் செல்ல முடியாமல் பலர் அவதிப்பட்டனர். ''ஒருமணி நேரமா நிக்கிறேன். ஒரு பஸ்ஸும் வரல. ஆட்டோவுல போலாம்னா அடைச்சுக்கிட்டு வராங்க. ஷேர் ஆட்டோவோ அதைவிட மோசம். 10 ரூபா டிக்கெட்டை, 50 ரூபாய்க்கு கொடுத்தாங்க. இன்னும் எத்தனை நாள் இப்படி கஷ்டப்படணுமோ'' என்று தலையில் அடித்துக்கொண்டார் வடபழனியில் தென்பட்ட பயணியொருவர். கிண்டியில் ஒரு பெண்மணியோ, ''பஸ்ஸு கிடைக்காம காய்கறி லோடு வண்டியில ஏறி வந்தோம்'' என்றார் கடுப்பாக. சென்னை மாநகரம் என்றில்லாமல் தென்கோடியில் உள்ள குக்கிராமம் வரை இதே நிலை நீடிக்க, ''உங்கள் வேலை நிறுத்தம் மக்களை கடுமையாக பாதிக்கிறதே?'' என்றோம் போக்குவரத்துத்துறைத் தொழிலாளர்களிடம்.

குமுறும் பொதுமக்கள்

தொழிற்சங்கம் விளக்கம் :

“மக்களைத் துன்பப்படுத்த வேண்டும் என்று விருப்பமில்லை. எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. ஆனால், உண்மையில் மக்களைத் துன்புறுத்துவது நாங்கள் இல்லை; பொறுப்பற்ற, இரக்கமற்ற இந்த அரசுதான்'' என்ற சி.ஐ.டி.யு துணைச் செயலாளர் சந்திரன் அதன் காரணத்தையும் விளக்கத் தொடங்கினார்.

''1) மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் செய்யப்படும். கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதியுடன் 12-வது ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்ததால், செப்டம்பர் 1-ம் தேதியிலிருந்து புதிய ஊதிய ஒப்பந்தம் அமலுக்கு வரவேண்டும்.

2) பணி ஓய்வு பெற்றுச் செல்லும் தொழிலாளர்களுக்கு சட்டப்படி சேரவேண்டிய கிராஜுவிட்டி (பணிக்கொடை) பி.எஃப், விடுப்பு ஒப்படைப்பு சம்பளம், மருத்துவ தொழில்நுட்பக் கல்லூரிகளுக்குத் தொழிலாளி செலுத்திய பங்குத்தொகை என  எதுவும் வழங்கப்படவில்லை.

3) போக்குவரத்துத் தொழிலாளர்களது பணம் சுமார் 4,500 கோடி ரூபாயை, போக்குவரத்துக் கழகங்கள் தவறாகக் கையாண்டு செலவு செய்துவிட்டன. இதைத் தொழிலாளர்களின் கணக்கில் செலுத்த வலியுறுத்தினோம். அரசுத் தரப்பில் இது சம்பந்தமாக எந்தவிதமான உத்தரவாதமும் தரப்படவில்லை.

4) ஏற்கெனவே செய்துகொள்ளப்பட்ட 12 ஊதிய ஒப்பந்தங்களில் ஒப்புக்கொண்டு நிறைவேற்றப்படாத ஒப்பந்தப் பிரிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்பதற்கு ஆக்கபூர்வமான வழிமுறைகள் அரசுத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படவில்லை.

5) ஓய்வு பெற்ற  போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஓய்வூதிய காலப் பணப்பலன்கள் சுமார் ரூ.1,700 கோடி நிலுவையில் உள்ளது. தற்போது அரசு இதில் ரூ.250 கோடியை மட்டுமே அளித்துள்ளது. மீதமுள்ள தொகையை 3 மாதத்துக்குள் வழங்கவேண்டும் என்று காலவரையறை கோரினோம். ஆனால், அரசுத்தரப்பில் இதைக் கண்டுகொள்ளவேயில்லை.

இப்படி முக்கியமான ஏழுக்கும் மேற்பட்ட கோரிக்கைகளை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரிடம் முன்வைத்தோம். ஆறு கட்டமாகப் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஒருமுறை தொழிலாளர் நலத்துறை தனித்துணை ஆணையர் யாஸ்மின் பேகம் தலைமையில், அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், மற்றும்  தொழிற்சங்கங்கள் கொண்ட முத்தரப்புப் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.  எங்களுக்குச் சேர வேண்டிய தொகையை வழங்காமல், முதற்கட்டமாக 750 கோடி, பின்பு செப்டம்பரில் 500 கோடி என ரூ.1,250 கோடி மட்டும் ஒதுக்குவதாகச் சொல்வது எந்தவகையில் நியாயம்? ஏதேதோ காரணங்களுக்காக லட்சம் கோடிகளில் கடன் வாங்கும் இந்த அரசு நியாயமாக எங்களுக்குச் சேர வேண்டிய 7000 கோடியைத் தருவது அவ்வளவு கடினமான ஒன்றா என்ன?! இந்த ரூ. 1,250 கோடியையும்கூட அரசு உத்தரவாக அறிவிக்காமல், வாய்மொழியாகவே அமைச்சர் கூறுகிறார். ஆக, எங்களை மட்டுமல்ல, பொதுமக்களையும் இந்த அரசு ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்றுதானே அர்த்தம்?'' என்றார் காத்திரமாக.

தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை

எங்கள் வலி தெரியுமா உங்களுக்கு?

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடம் பேசியபோது, ''போக்குவரத்துத் தொழிலாளர்கள், வேண்டுமென்றே மக்களுக்குத் துன்பம் ஏற்படுத்துவது போன்ற மாயத் தோற்றத்தை, இந்தப் பொறுப்பற்ற தமிழ்நாடு அரசு, ஏற்படுத்தி திசைதிருப்பப் பார்க்கிறது. உண்மையில் எங்க வலி தெரியுமா அவர்களுக்கு? ஓய்வூதியத்தை நம்பி பெண்ணுக்குக் கல்யாணம் பேசி வைத்தவர்கள், அந்தப் பணம் வராமல் போனதால் நின்றுபோன கல்யாணங்கள் எத்தனை தெரியுமா? மகன், மகள் மேல் படிப்புக்காக இந்தப் பணத்தை நம்பியவர்கள், பிற்பாடு இதுவராமல் அஞ்சு வட்டிக்குக் கடன் வாங்கி, இன்றுவரை அந்த வட்டியை மட்டுமே கட்டி வருகிற குடும்பங்களோட துயரம் தெரியுமா? நியாயமான எங்கள் ஓய்வுக்காலப் பலன்கள், பணிக்கொடை, வைப்பு நிதி,  விடுப்பு ஒப்படைப்புத் தொகை என இவை எல்லாவற்றையுமே வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும், ஏன் அதை இந்த அரசு மதிக்கவில்லை? நாங்க இனாம் கேட்கல, எங்க வியர்வையில இருந்து பிடித்தம் செஞ்ச எங்க பணத்தைத்தான் கேட்கிறோம். சுமார் 7,000 கோடி ரூபாயைத் தராமல், நிலுவையில் வச்சிருக்கு இந்த அரசு. நட்டக் கணக்கு சொல்லுது. உண்மையில நட்டத்துக்கான காரணங்கள் என்ன தெரியுமா?

நட்டத்துக்கான பிரதான காரணங்களில் சில :

அரசு சேவைத்துறை  நிறுவனமான போக்குவரத்துக் கழகம் சுங்கசாவடிக்கு (டோல்கேட்) கட்டணம் செலுத்தவேண்டியிருக்கு. போக்குவரத்துக்கழக பேருந்துகள் காப்பீடு (இன்சூரன்ஸ்) செய்யப்படாததால கோடிக்கணக்கான ரூபாய் விபத்து இழப்பீடு வழங்கும் நிலை, ஒவ்வொரு நாளும் வரவுக்கும் செலவுக்கும் இடையில உள்ள வித்தியாசத்தால ஏற்படுற 5 கோடி இழப்பு, அரசு விழாக்களுக்காக தேவையற்றவகையில் திட்டமிடல் இல்லாம ஒரேநேரத்தில ஒரே கழகத்தில் நூற்றுக்கணக்கான பேருந்துகளை இயக்குறதால ஏற்படக்கூடிய தேவையற்ற செலவினங்கள் ஆகின்றன. இதெல்லாம்விட அனுமதி இல்லாத ஆம்னி பேருந்து மற்றும் தடம்மாறி இயக்கப்படும் சிற்றுந்துகளால் ஏற்படுத்தப்படும் இழப்பு ரொம்பவே அதிகம். இந்தப் பேருந்துகள் பல, மந்திரிகளோட சொந்தக்காரங்க, பினாமிங்க பெயர்ல ஓடுறதுதான் கொடுமை.மேலும் அரசு அறிவித்த சலுகைகள் (இலவசப் பயண அட்டைகள்) காரணமா போக்குவரத்துக் கழகங்களுக்கு நிறைய வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பள்ளிக் குழந்தைகளுக்கு அரசு அறிவித்த இலவச பஸ் பாஸ் போன்ற திட்டங்களால் கழகத்துக்கு ஏற்படுகிற நட்டத் தொகையில், போக்குவரத்துக்கழகங்கள் ஏத்துக்கிட்ட தொகைபோக மீதித் தொகையை அரசு வழங்கவேயில்ல. பணி ஓய்வு பெற்றபின், நியாயமா எங்களுக்குச் சேரவேண்டிய பணத்தையும் தராம, எங்க பிரச்னையையும் போக்காம எங்க கஷ்டத்த ரசிக்கிற இந்த அரசு சாடிஸ்ட் அரசு” என்று குமுறினர். தொடர்ந்து பேசியவர்கள், ''நட்டக்கணக்கு காட்டி, போக்குவரத்துத் துறையை தனியாருக்குத் தாரை வார்க்கும் திட்டமிருக்குமோன்னு தோணுது. ஆனால், அதையும் எங்க தொழிலாளர் போராட்டம் முறியடிக்கும்'' என்றனர் உறுதியான குரலில்.

பஸ் ஸ்ட்ரைக்

''மக்களுக்கு பாதிப்பேயில்லை'' - அமைச்சர் கருத்து

“37 சங்கங்களில் சி.ஐ.டி.யு, தொ.மு.ச உள்ளிட்ட 10 சங்கங்கள்தான் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. ஏனைய சங்கங்கள் ஈடுபடவில்லை. தமிழ்நாட்டில் போக்குவரத்து பிரச்னை ஏற்படவேயில்லை. 75 சதவிகிதப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ரெயிலில் பயணிக்க வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம் உள்ளவர்களை வைத்து 100 சதவிகிதப் பேருந்துகளும் இயக்கப்படும்” என்கிறார் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்.

அரசின் மக்கள் விரோதச் செயல் :

''கோரிக்கைகளின் நியாயம் உணராமல் போட்டி மனப்பான்மையோடு, அனுபவம் இல்லாதவர்களைக் கொண்டு பேருந்துகளை இயக்க, அரசு முயல்கிறது. ஏற்கெனவே இதுபோல் செய்து, பல விபத்துகள் ஏற்பட்ட மோசமான அனுபவங்கள் உண்டு. வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர் குடும்பங்களை காவல்துறை மிரட்டுகிறது. பொய் வழக்குகள் போடப்படுகிறது. இதுபோன்ற மோசமான நடவடிக்கைகளைக் கண்டித்து  ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது'' என்றார் சி.ஐ.டி.யு செயலாளர் அ.சவுந்தரராஜன்.போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் விரைவுப் பேருந்து வேகத்தில் கூர்மையடைந்து பயணிக்கிறது.  

‘இது உங்கள் சொத்து’- என்ற வாசகம் ஒவ்வொரு பேருந்திலும் எழுதப்பட்டிருக்கும். உண்மைதான், மக்களின் சொத்தை மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தவேண்டியதே ஓர் அரசின் கடமையாக இருக்க வேண்டும். அரசு, தமது ஈகோவைத் துறக்க வேண்டிய நேரமிது.


டிரெண்டிங் @ விகடன்