மணல் கொள்ளையைத் தடுக்காத அதிகாரிகளுக்கு வக்கீல் நோட்டீஸ்! கிராம மக்கள் அதிரடி!

மணல்

மிழகம் முழுக்க உள்ள ஆறுகளில் இயங்கிவந்த மணல் குவாரிகளை கோர்ட் உத்தரவால் தற்காலிகமாக மூடி இருக்கும் தமிழக அரசு, 'இனி மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும்' என்று அடுத்த ஆட்டத்துக்கு நாள் நட்சத்திரம் பார்த்து வருகிறது. இந்நிலையில், ''எங்கள் கிராமத்தில் காவிரியில் இருசக்கர வாகனங்கள், மாட்டு வண்டிகள், டெம்போக்கள், மினி லோடுவேன்கள் உள்ளிட்ட வாகனங்களில் இஷ்டத்துக்கு மணல் அள்ளி ஒரு கும்பல், வெளியூர்களுக்கு விற்பனை செய்துவருகிறது. அதைத் தடுக்காத அதிகாரிகளுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம்'' என்று கூறி அதிரவைக்கிறார்கள் மேற்குத் தவுட்டுப்பாளையம் கிராம மக்கள். கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் இருக்கிறது மேற்குத் தவுட்டுப்பாளையம். 

கரூர் மாவட்டத்தில் தோட்டக்குறிச்சி, வாங்கல், மாயனூர், சிந்தலவாடி என்று பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இயங்கிவந்த மணல் குவாரிகள் மூலம் மூவாயிரம் கோடி ரூபாய் வரை ஒரு கும்பல் ஆட்டையைப் போட்டதாக மாவட்ட மக்கள் புலம்பிவந்தனர். இந்த மணல் கொள்ளையின் பின்னே இருந்த கும்பல், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் பெயரைப் பயன்படுத்தி மணல் கொள்ளையை ஜாம்ஜாமென்று நடத்திவந்ததாக அதிரடிக் குற்றச்சாட்டைச் சுமத்தி வந்தார்கள். இந்த மணல் கொள்ளை கும்பலுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்த காவிரி பாதுகாப்பு இயக்கம், கடந்த 13-ம் தேதிகூட தோழர் நல்லக்கண்ணு, இயக்குநர் கௌதமன் ஆகியோரை அழைத்துவந்து பேரணி, பொதுக்கூட்டம் எல்லாம் நடத்தி மணல் கொள்ளைக்கு எதிராகப் பொங்கி எழுந்தனர். இதற்கிடையில்தான், பல்வேறு வாகனங்களில் மணலைத் திருடி விற்பனை செய்துவரும் கும்பல்கள்மீது நடவடிக்கை எடுக்காத கலெக்டர், ஆர்.டி.ஓ., தாசில்தார், ஆர்.ஐ., கிராம நிர்வாக அலுவலர் என்று அதிகாரிகளுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி அதிரவைத்திருக்கிறார்கள் கிராம மக்கள்.

மணல் கொள்ளை

மேற்குத் தவுட்டுப்பாளையத்தைச் சேர்ந்த விஜயனிடம் பேசினோம். "எங்க கிராமத்துல ஏற்கெனவே மணல் குவாரி மூலமா காவிரியையே நிர்மூலமாக்கிட்டாங்க. இங்கிருக்கும் பாலத்தின் அடி பேஸ்மட்டம் தெரியுமளவுக்கு மணலைப் பல அடி ஆழத்துக்குத் தோண்டி அள்ளிட்டாங்க. அது ஒரு பக்கமிருக்க, சிலர் உள்ளூர்த் தேவைக்காக இருசக்கர வாகனங்கள், மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுனாங்க. மாட்டு வண்டிகளில் உள்ளூர்த் தேவைக்கு மணல் அள்ளுறதைச் சட்டம் அனுமதிக்குது. அதனால, ஆரம்பத்துல யாரும் அதைத் தடுக்கலை. ஆனா, கடந்த ரெண்டு மாசமா ரெண்டு மூணு கும்பல் மாட்டு வண்டி மட்டுமன்றி, டெம்போக்கள், மினி லோடுவேன்கள் என முப்பதுக்கும் மேற்பட்ட வண்டிகளை வெச்சுக்கிட்டு, 'உள்ளூர்த் தேவைக்கு' என்கிற பெயருல காவிரி ஆத்துக் கரை ஓரங்களுல இருபது அடிக்கும் மேற்பட்ட ஆழத்துல மணலை அள்ளித் திருட ஆரம்பிச்சாங்க.அதை ஓர் இடத்துல கொட்டிவெச்சு, லாரி லாரியா வெளியூர்களுக்கு விற்பனை செஞ்சு வந்தாங்க. இதைக் கேள்விப்பட்ட நாங்க கொதிச்சுப்போய், நூதன முறையில மணல் திருடும் அந்தக் கும்பலைத் தடுக்கப் பாத்தோம். அதனால, அந்தக் கும்பல் எங்க மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துச்சு. மணல் திருடும் அந்தக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி எங்க கிராம வி.ஏ.ஓ., ஆர்.ஐ., தாசில்தார், ஆர்.டி.ஓ., மாவட்ட கலெக்டர், பொதுப்பணித் துறை அதிகாரிகள்னு பல அதிகாரிகளுக்கும் போனிலும், நேரிலும் புகார் கொடுத்தோம். 'நடவடிக்கை எடுக்குறோம்'னு வாய்மொழியாச் சொன்னாங்களே தவிர, மணல் கொள்ளையர்கள்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கலை. 

விஜயன் இதனால, கடந்த மாசம் மணல் திருடுபவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எங்க கிராமத்தைச் சேர்ந்த 315 பேரிடம் கையெழுத்து வாங்கி மேற்சொன்ன அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பினோம். அப்படியும் நடவடிக்கை எடுக்கலை. உள்ளூர் வி.ஏ.ஓ மணல் திருடுபவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காம, அவர்கள் வைக்கும் விருந்துல கலந்துகிட்டு விலைபோயிட்டார். இதனால கோபமான நாங்க, வழக்கறிஞர்கள் ஜெகநாதன் மற்றும் கோபாலகிருஷ்ணன் மூலமா மேற்படி நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினோம். அதில், 'மணல் திருட்டை நூதன முறையில் நடத்தும் கும்பல்மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி உங்க பார்வைக்குப் பலமுறை போனிலும், நேரிலும் புகார் கொடுத்தோம். மக்களிடம் கையெழுத்து வாங்கியும் அனுப்பிப் பார்த்துட்டோம். ஆனா, எந்த நடவடிக்கையையும் நீங்க யாரும் எடுக்கலை. அதனால, 'மணல் திருட்டைக் கைகட்டி வேடிக்கை பார்த்த உங்கமீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் என்ன'னு நோட்டீஸ் அனுப்பினோம். அதோடு, 'ஏழு நாள்ல இந்த வக்கீல் நோட்டீஸைக் கண்டு மணல் திருடுபவங்கமீது நடவடிக்கை எடுக்கலைன்னா, உங்கமீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்'ன்னு எச்சரிக்கை செஞ்சிருந்தோம். ஆனா, நாங்க சொன்னபடி ஏழு நாள்கள் கடந்தும் எந்த அதிகாரியும் மணல் திருட்டைத் தடுக்கலை. அதனால, நாங்க எச்சரிக்கை செஞ்சபடி கலெக்டர் தொடங்கி வி.ஏ.ஓ வரை அனைத்து அதிகாரிங்க மீதும் கோர்ட் மூலம் நடவடிக்கை எடுக்கப்போறோம்" என்றார் அதிரடியாக!.

அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய வழக்கறிஞர்களில் ஒருவரான ஜெகநாதனிடம் பேசினோம். "காவிரியில் இருபுறமும் கரையோரம் ஆங்காங்கே இருபதடிக்குக் குழி வெட்டி மணல் திருடுகிறது இந்தக் கும்பல். கரை ஓரங்களில் இப்படி மணல் அள்ளிய பிரமாண்டக் குழிகள் இருக்கின்றன. காவிரியின் நடுவேயும் மணல் அள்ளிய குழிகள் உள்ளன. ஆனால், காவிரியில் தண்ணீர் வரும்போது காவிரிக் கரையோரம் குளிப்பவர்களும், ஆடிப் பதினெட்டு உள்ளிட்ட விசேஷங்களின்போதும் இங்கே நீராட வரும் புதுமண ஜோடிகளும் இந்தக் குழிக்குள் மாட்டி உயிர்விடும் ஆபத்தும் இருக்கிறது. அதனால், இந்திய தண்டனைச் சட்டப்படி அரசு வேலையில் மாதச் சம்பளம் வாங்கிக்கொண்டு மணல் திருட்டு செய்பவர்களின்மீது நடவடிக்கை எடுக்காமல் கூட்டுக் களவாணித்தனம் செய்யும் கலெக்டர் தொடங்கி வி.ஏ.ஓ வரை அனைத்து அதிகாரிகள் மீதும் பிரைவேட் வழக்குத் தொடுக்க இருக்கிறோம்" என்றார்.

இது சம்பந்தமாகக் கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜிடம் பேச முயன்றோம். நம்மிடம் அவர் பேசுவதைத் தவிர்த்தார். அவர் சார்பாக நம்மிடம் பேசிய அதிகாரி ஒருவர், "மணல் திருடுபவர்கள்மீது நடவடிக்கை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். சமீபத்தில்கூட மணல் திருடிய இரண்டு லாரிகளை மடக்கிப் பிடித்தோம். அதேபோல், மணல் திருட்டு சம்பந்தமாகப் பொதுமக்கள் புகார் தந்தாலும், அதன்பேரில் உடனே நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால், அதிகாரிகள்மீது காழ்ப்பு உணர்ச்சியில் யாரோ சிலரின் தூண்டுதலின் பேரில் அந்தக் கிராம மக்கள் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். இதை நாங்கள் சட்டப்படி சந்திப்போம்" என்றார்.

படங்கள்: நா.ராஜமுருகன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!