வெளியிடப்பட்ட நேரம்: 21:03 (17/05/2017)

கடைசி தொடர்பு:21:02 (17/05/2017)

“சுவர்கள் வேண்டாம்... பாலம் கட்டுவோம்” - அழைக்கும் பிரிட்டன் பெண் ஊடகவியலாளர்!

ஏஞ்சிலா ஞ்சிலா ராப்சன், முன்னணி சுதந்திர ஊடகவியலாளர். ஏறத்தாழ நாற்பது தேசங்களுக்குப் பயணித்து செய்தி சேகரித்தவர்.  தொண்ணூறுகளில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள சியரி லியோன் தேசத்தில் நடந்த உள்நாட்டுக் கலகம், லத்தீன் அமெரிக்க நாடுகளின் சூழலியல் பிரச்னைகள், சிரியா உள்நாட்டு யுத்தம் என தேச எல்லைகள் கடந்து இந்தப் புவியின் சமகாலப் பிரச்னைகளை, ஒரு ஊடகவியலாளராக அந்தச் சூழலின் விளிம்பிலிருந்து நின்று  எழுதியவர், பேசியவர், ஆவணப் படங்கள் எடுத்தவர்.  

ஈரமற்ற மே மாதக் காற்று வீசும் டெல்லியில், ஒரு மதிய வேளையில் அவரைச் சந்தித்தேன். உலகம் முழுவதும் பரவும் ட்ரம்பிசம்,  ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து லண்டன் விலகியது, உலகம் சந்திக்கும் சூழலியல் பிரச்னைகள், இதழியல் துறையின் எதிர்காலம் என பல்வேறு விஷயங்களைப் பற்றி உரையாடினோம். 

அந்த உரையாடலிலிருந்து,

"நீங்கள் முன்பு ஒரு உரையாடலில்,  ‘ஒவ்வொரு கணமும்  ஊடகவியலாளராக இருக்கதான் நான் விரும்புகிறேன்’ என்று சொன்னீர்கள். எது உங்களை அப்படிச் சொல்ல வைத்தது. ஏன் இந்த துறையை தேர்ந்தெடுத்தீர்கள்?"

"தொடக்கத்தில் எனக்கு ஊடகத் துறையின் மீதெல்லாம் பெரிய ஈர்ப்பு எதுவும் இருக்கவில்லை. ஒரு ஆப்பிரிக்கப் பயணம்தான், என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. ஆம், அப்போது நான் ஒரு என்.ஜி.ஓ-வில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அதன் சார்பாக நான், ஆப்பிரிக்கக் கண்டத்தின் சியரி லியோன் தேசத்துக்குச் சென்றேன். அங்கு உள்நாட்டுக் கலகம் நடந்து கொண்டிருந்த சமயம் அது. பெண் குழந்தைகள் எல்லாம் பாலியல் அடிமைகளாக விற்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.  அங்கு நடந்து கொண்டிருந்த சம்பவம் எல்லாம் என்னை மொத்தமாக உருக்குலைத்துப்போட்டது. அதுதான் என்னை எழுதத் தூண்டியது. ஒரு ஊடகவியலாளராக என்னை மாற்றியது. தேச எல்லைகள் கடந்து என்னை அலைய வைத்து மனித உரிமை மீறல்கள், போர்கள் தொடர்பாக  ரிப்போர்ட் செய்ய வைத்துக் கொண்டிருக்கிறது." 

"நீங்கள் ஒரு செயற்பாட்டாளராக இருந்து ஊடலவியலாளராக மாறியவர்தானே?"

"ஆம். மனித உரிமை செயற்பாட்டாளராக இயங்கிக் கொண்டிருந்தேன்." 

"ஒரு செயற்பாட்டாளருக்கென்று ஏற்கெனவே முன்முடிவுகள் இருக்கும். ஒரு விஷயத்தை ஒரு சார்பாக மட்டும்தான் அணுக முடியும்.நீங்கள் அறமென்று நம்பும் விஷயத்தின் பக்கம் நின்று ரிப்போர்ட் செய்வீர்கள்.  உங்கள் கண்ணோட்டத்திலிருந்து செய்தி கொடுப்பீர்கள்.  இது சரியா?"

"என் பார்வையில் சரி என்றுதான் நினைக்கிறேன். உண்மையான செயற்பாட்டாளருக்குதான் மக்களின் வலிகள் தெரியும் புரியும். ஊடகம் மக்களின் வலிகளைத்தானே பேசவேண்டும்.  ஒரு ஊடகவியலாளர் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாகத்தானே இருக்க வேண்டும். நான் அப்படிதான் இருக்கிறேன்.  ஒரு தேசத்தில் யுத்தம் நடக்கிறதென்றால், அந்த யுத்தம் குறித்தான அரசியலை எழுதலாம். ஆனால், யுத்த களத்தில் நின்று கொண்டு கொத்துக் கொத்தாக குண்டு போடுபவர்களின் நியாயத்தைப் பேசிக் கொண்டு இருக்கக் கூடாது. குருதியில் நனைந்து கொண்டிருக்கும் குழந்தைகளின் குரலாகத்தான் நீங்கள் இருக்க வேண்டும்." 

"உங்களுக்கு பிரிட்டன் தாயகம் என்பதால் கேட்கிறேன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியதை உங்கள் மக்கள் எப்படி பார்க்கிறார்கள்? மக்களின் மனநிலை இப்போது எப்படி இருக்கிறது?"

"அந்த வெளியேறுதல் முடிவு ஜனநாயகப்பூர்வமாக, வாக்கெடுப்பின் அடிப்படையில் நடந்த ஒன்றுதான். ஆனால், நான் அறிந்த அளவில் மக்கள் யாரும் இந்த முடிவால் சந்தோஷம்  அடையவில்லை.  இது எப்படி நிகழ்ந்தது என்று தினம் தினம் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.  மீண்டும் இணைய வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். "

ட்ரம்ப்

"ட்ரம்பின் வெற்றியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?"

"நிச்சயம் சந்தோஷமாகப் பார்க்கவில்லை.  இன்னும் கடுமையாகச் சொல்ல வேண்டுமென்றால் அச்சுறுத்தலாகதான் பார்க்கிறேன்.  ஆம், நான் மக்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும், மக்கள் மனங்களை அன்பென்னும் பாலம் கொண்டு இணைக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், அவர் மக்களைப் பிரிக்க சுவர்கள் கட்டுவது குறித்துப் பேசுகிறார்.  பிரித்தாளும் கொள்கைகள் இந்த உலகத்துக்கு ஏற்றதல்ல என்னும்போது, அதை முன்மொழிபவர் மட்டும் எப்படி ஏற்றுக் கொள்ள கூடியவராக இருப்பார்." 

"இந்த உலகு இப்போது எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னையாக நீங்கள் எதனை நினைக்கிறீர்கள்?"

"சக மனிதன் மீதான அன்பின்மையும், அரசுகளின் வெறுப்பு அரசியல் கொள்கையும், பிறகு நம் மெளனமும்தான்.  ருவாண்டோ தொடங்கி இப்போது சிரியா வரை சக மனிதன் மீது மிகப்பெரிய தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. அரசுகளின் கொள்கைகள் வெறுப்பை உமிழ்வதாக இருக்கின்றன.  இதற்கெல்லாம் மேலாக சூழலியல் கேடுகள். அடுத்த தலைமுறைக்கு மிச்சம் வைக்காமல் அதிகம் சுரண்டிக் கொண்டிருக்கிறோம். நாமே நம் பூமியை வாழத் தகுதியற்றதாக மெல்ல மாற்றிக் கொண்டிருக்கிறோம்."   

"ஊடகத்துறையின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?"

"உலகம் சுருங்கிவிட்டது. உள்ளங்கைக்கு வந்துவிட்டது. எல்லாம் டிஜிட்டலாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதேநேரம் அச்சு ஊடகம் முழுவதுமாக இல்லாமல் போகும் என்று நினைக்கவில்லை.    அச்சு ஊடகத்தில் வருவது மட்டும்தான் உண்மை என்ற மனோபாவம் உலகம் முழுவதும் இருக்கிறது. அதனால், மக்கள் நாளிதழ்களைப் படிக்க விரும்புகிறார்கள்.  இங்கே, மலையாளத்தின் முக்கிய நாளிதழின் நிருபர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, அவர்கள் தங்கள் நாளிதழின் விற்பனை ஏறுமுகத்தில் இருப்பதாகவே கூறினார்கள். ஆனால், மக்களிடம் செய்தியைக் கொண்டு சேர்க்க ஒரு ஊடகவியலாளன் அனைத்து வழிவகைகளையும் கையாளவேண்டும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவேண்டும். அதற்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்ளவேண்டும். அச்சு ஊடகமோ, டிஜிட்டலோ செய்தியில் உயிர் இருக்கவேண்டும்." 

"நாற்பதுக்கும் மேற்பட்ட தேசங்களுக்குப் பயணித்து இருக்கிறீர்கள், அங்கு மக்களோடு பழகி இருக்கிறீர்கள். உங்களுக்கு பிடித்த நாடு எது?"

"நாடு என்பது மக்களால் கட்டமைக்கப்பட்ட ஒன்றுதானே?  எனக்கு இந்திய மக்களை மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு முறையும் இந்த மக்களிடமிருந்து ஒரு புது விஷயத்தைக் கற்றுக் கொள்கிறேன். எனக்கு இந்த மக்களால் இந்த தேசத்தையும் பிடிக்கும். மீண்டும் மீண்டும் இந்தியாவுக்குப் பயணிக்கவே விரும்புகிறேன்." 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்