வெளியிடப்பட்ட நேரம்: 13:34 (18/05/2017)

கடைசி தொடர்பு:13:46 (18/05/2017)

தண்ணீர்... கண்ணீர்... தவிக்கும் தமிழ்நாடு!

தண்ணீர்

பொங்கல் திருவிழா காலம். தமிழர் திருநாளை  கொண்டாட டெல்டா மாவட்டத்திலுள்ள  சொந்த கிராமத்துக்குப் போயிருந்தேன். செழிப்பாகக் காணப்படும்  வயல்வெளிகள் வறண்டு காணப்பட்டன. காய்ந்துபோன பூமியைக் கண்டு நொந்தபடியே மாரிமுத்து அண்ணனிடம் பேசினேன். விவசாயத்தை தன்னுடைய உணர்வோடும், உயிரோடும் கலந்த ஒன்றாக நேசிப்பவர் அவர்.  விவசாயம் குறித்து எப்போதும் எனக்குப் புதுப் புதுத் தகவல்களை கற்றுத்  தருபவர் அவர்.  "தம்பி பயிர் கருகிப்  போறது என்பது, நம்ம குழந்தைங்க தீயில கருகுறதுக்கு சமம். தாங்க முடியாத வலிதான் ஆனா இதையும் தாண்டி, வர்ற மாசங்கள்ல நமக்குப் பெரிய பெரிய ஆபத்தெல்லாம் இருக்கு. ஏன்னா நிலத்தடி நீருல   நிறைய உப்புத்தன்மை இருக்கும். அது அதிகரிச்சிருக்கு. சாகுபடி செய்ற காலங்கள்ல  வயல்ல பாயுற ஆத்து நீராலும் , நவம்பர், டிசம்பர் மாசத்துல வர்ற பருவ மழையும்தான் நிலத்துக்குள்ள இறங்கி, உப்போட  அளவைக் குறைக்கும். இதுதான் அடுத்த பருவ காலம் வரை நிலத்தடி நீர் மூலமா நம்ம குடிநீர் பிரச்னையை நீக்கும்.இந்த ஆண்டு ஆத்து நீரும், மழை நீரும் நம்மள ஏமாத்திடுச்சு. நமக்குப் போதியளவுல ரெண்டும் கிடைக்காததால  இப்போவே நிலத்தடி நீரோட உப்புத்தன்மை அதிகரிச்சிடுச்சு. அது போக அடுத்து வர்ற மாசங்கள்ல அதிகரிச்சி, மாவட்டத்துல தண்ணிப் பிரச்னை பெரும் பிரச்னையா மாறும். நமக்குத் தான் எல்லைகோடுங்க இருக்கு. இயற்கைக்கு அதெல்லாம் இல்லை. ஒரு மாவட்டத்தில மட்டுமில்லாம ஒண்ணோடு ஒண்ணா தொடர்பாகி தமிழ்நாடே தண்ணிக்குத் தத்தளிக்கப் போகுது. நம்ம மக்கள் குடி தண்ணிக்காக ரொம்பவே கஷ்டப்படப் போறோம்" என வேதனையோடு எச்சரித்தார்.  

குடிநீர் வாரியம் எச்சரிக்கை:

விவசாயியின் வாக்கு வேத வாக்கு என்பதுபோல இப்போது 40 டிகிரி செல்சியஸைக் கடந்து அனலடிக்கும் கோடையில், ஒட்டுமொத்த தமிழகவாசிகளும்  தண்ணீருக்காகத் தவித்து வருகின்றனர். 30 ரூபாய் கேன் தண்ணீரையே 300 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கிச் செலவிடும் மோசமான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு அபாய கட்டத்தை உணரும் தற்காலச் சூழலில், விவசாயி மாரிமுத்து அண்ணனின், எச்சரிக்கையை எனது நட்பு வட்டத்தில் உள்ள, குடிநீர் வடிகால் வாரியத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவரிடம் தெரிவித்தேன். அவரோ, "உண்மைதான். தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் ஜனவரி மாதக் குறிப்பில், ' தமிழகத்துக்குக் குடிநீர் வழங்கும் 547 ஸ்கீமில், வருகின்ற  மே மாதத்தில் வெறும் 50 சதவிகிதக் குடிநீர் அளவை மட்டுமே எட்ட முடியும் என்று எச்சரித்திருந்தது. தொடர்ந்து, ' தமிழ்நாட்டின்  397 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாள் ஒன்றுக்கு 2,061 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஜனவரியில் அது 1,707 மில்லியன் லிட்டர் என்ற அளவில் மட்டுமே தண்ணீர் வழங்க முடிந்தது. நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு சராசரியாக  40-90 லிட்டர் நீர் கிடைத்தால் ஓரளவு தன் நிறைவானதாக இருக்கும். ஆனால் அதைப் பூர்த்தி செய்யுமளவுக்கான தண்ணீர் வரத்து இல்லை. இதில் தென் மாவட்டங்களின் நிலைமை கடும் மோசமாகும். குறிப்பாக வைகை அணை கடுமையாக பாதிக்கப்படும். குடிநீர் வழங்கும்  68 திட்டங்கள் வைகையை  நம்பி உள்ளன. இதுவே தேனி , திண்டுக்கல், சிவங்கை, ராமநாதபுரம் மற்றும் மதுரையின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்கிறது. கோவையைப் பொறுத்தவரை சிறுவாணி ஓரளவு தப்பித்துக்கொள்ளும். காவேரியோ(மேட்டூர்) கடும் பாதிப்பைச் சந்திக்கும்'  என்று தெரிவித்திருந்தது.  மே மற்றும் ஜூன் மாதத்தைக் கணக்கில் கொண்டே இந்த எச்சரிக்கையை அப்போது கொடுத்தனர். ஆனால் தற்போதோ கோவை சிறுவாணி உட்பட அனைத்து நீர்நிலைகளிலும், நீர் இருப்புக் குறைந்துள்ளது. நிலத்தடி நீரும் அதளபாதாளத்துக்கு இறங்கி விட்டது. கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டில் வாரியம் உள்ளது" என்று தங்கள் நிலைமையை விளக்கினார். 

வறட்சி மேட்டூர் அணை

142 ஆண்டில் இல்லாத வறட்சி :

தற்போது வட கிழக்குப் பருவ மழையில் 62% குறைந்துள்ளது. தென் மேற்குப் பருவமழையும் 20% அளவு குறைந்துள்ளது. 142 ஆண்டுகளில் இல்லாத வறட்சியை நடப்பாண்டில் நாம் சந்திப்பதால், அதன் தாக்குதல்களும் கடுமையாகவே உள்ளன. 1970-களுக்கு முன்பு மேட்டூர் அணை  திறக்கப்பட்டு நான்கு மாதங்களில் கிடைத்த மொத்த நீரளவு  20,000 கோடி கன அடியாகும் . பயிருக்கு பயன்பட்ட 11,000 கோடி கன அடிப் போக, மீதி   9,000 கோடி கன அடி நீர், நிலத்தடி நீராக சேமிப்பானது. ஆனால் இப்போது ஆற்றில் நீர் வராததால் நிலத்தடி நீர்மட்டம் மிகக் கடுமையாக கீழிறங்கி விட்டது.  மேட்டூர் அணை  நீர்மட்டம் 23.14 அடியாக குறைந்துள்ளதால் 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 'நிலத்தடி நீர் குறித்த சூழலியல் பார்வை நம்மிடம் குறைவு. தமிழகத்தில் மொத்த நிலப்பரப்பில் நீர் ஊடுருவும் திறனுள்ள பகுதி 27% மட்டுமே. மீதி 73% நிலம் அடியில் பாறைகளைக் கொண்டது. இந்த 27% பகுதியும் 17% ஆற்றுப்படுகைகளில் மட்டுமே அமைந்துள்ளது. இது நிலத்தடி நீரை சிக்கனமாகக் கையாள வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது.' என சூழலியலாளர் நக்கீரன் தமது கட்டுரையின் வாயிலாகத் தெரிவிக்கிறார்.  ஆனால் 'நிலத்தடி நீர் குறித்த போதிய அக்கறை அரசிடம் இல்லை என்பதையே அதன் செயல்பாடுகள் காட்டுகின்றன. அதுவும் தமிழ்நாடு முழுக்கத் தண்ணீர் தட்டுப்பாடு  தீவிரம் அடைந்துள்ளது' என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

கண்ணீருடன் தண்ணீருக்காக காத்திருக்கும் மக்கள்

துயரத்தின் விளிம்பில் சென்னை :

புறநகர் நிலைமை இப்படி என்றால் சென்னை மாநகரின் நிலைமை மிக மோசம்.  சுமார் ஒரு கோடி மக்கள் புழங்கும் பெரு நகரம். இங்கு தண்ணீர் வரத்து என்பது பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரப்பாக்கம், வீராணம் ஏரிகள் மூலம் கிடைக்கிறது. இதன் மொத்த நீர் கொள்ளளவு  என்பது  12, 513 மில்லியன் கன அடியாகும். ஜனவரியில் மொத்தமாக இதில் நிரம்பியிருந்த நீரின் அளவோ,   2,066 மில்லியன் கன அடி மட்டுமே. அதே மாதம் கடந்தாண்டிலோ 10,349 கன அடியாக இருந்தது. இதனால் நிலத்தடி நீரின் அளவு கணிசமாகக் குறைந்து காணப்படுகிறது. திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார், பெருங்குடி , சோழிங்கநல்லூர் என சென்னை மாநகரின் அனைத்துப்  பகுதிகளிலும்  கடந்தாண்டு 40.47 மீட்டர் அளவில் சரிந்திருந்த நிலத்தடி நீர்மட்டம், இந்தாண்டு 23.3 மீட்டர் கூடுதலாகி , 63.77 மீட்டர்  அளவில் மிக மோசமாகச் சரிந்துள்ளது. 

இந்திய நிலை :

தமிழ்நாடு மட்டுமல்ல  இந்தியா முழுக்க இதுவே நிலைமை. உணவை விளைவிப்பதற்கான தேவை, மின்னாற்றலுக்கான தேவை , சமையல் செய்ய, குளிக்க, குடிக்கும் தண்ணீர்  என சராசரியாக ஒரு இந்திய குடிமகனின்  நீர் தேவையின், ஆண்டு சராசரி 30 லட்சம் லிட்டர்  தண்ணீராக ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்தது. அது தற்போது 10 லட்சம் லிட்டராக சுருங்கி விட்டது.  தற்போதைய இதன்  உலகச் சராசரி 60 லட்சம் லிட்டர் ஆகும். இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் சராசரியாக ஆண்டொன்றுக்கு முப்பது சென்ட்டிமீட்டர் (சுமார் ஒரு அடி) வீதம் குறைந்துவருகிறது. தமிழ்நாட்டில் 374 வட்டாரங்களில் நிலத்தடி நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டிவிட்டது இதற்கு என்ன காரணம்? 

தண்ணீர் கண்ணீர்

கார்ப்பரேட் சுரண்டல் :

1947-ல் தமிழ்நாட்டின் நில பரப்பளவில் 50,000 நீர்நிலைகள் இருந்தன. இன்றைய அதன் நிலையோ 20,000 நீர் நிலைகளாகச் சுருங்கிவிட்டன. மதுரை, சென்னை மாநகரங்களைச் சுற்றி மட்டும் 500 ஏரி, குளங்கள் காணாமல் போய்விட்டன அல்லது காணாமல் போகடிக்கப்பட்டுவிட்டன. இந்தியாவில் பல லட்சங்களில் இருந்த நீர் நிலைகள் இன்று 6.42 லட்சம் குளங்கள், ஏரிகள், குட்டைகள் உள்ளதாக சுருங்கிவிட்டன . இது மத்திய அரசு கணக்கெடுத்துக் கொடுத்த அறிக்கையாகும்.  ஆக்ரமிப்புகளால் பல ஏரி, குளங்கள் எல்லாம் பகாசுர தொழிற்சாலைகளாகவும், கார்ப்பரேட் சொகுசு மால்களாகவும், திரையரங்குகளாகவும், வேளாண் நிலங்கள் ரியல் எஸ்டேட் மனைகளாகவும் காட்சி தருகின்றன. இதில் 'பெரும்பாலான குளங்கள் அரசுத்துறை சம்மந்தப்பட்ட அமைப்புகளால் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற நீர்வள நிலைக்குழு தனது 16-வது அறிக்கையில் கோடிட்டு காட்டியுள்ளது' என்று தனது கட்டுரை ஒன்றின் வாயிலாக தெரிவிக்கிறார் பேராசிரியர் அ .நாராயணமூர்த்தி. இவையெல்லாவற்றிலும் தப்பித்து வரும் நதிகளில் தனியார் தொழிற்சாலைகள் ஆலைக் கழிவுகளைக் கலக்கின்றனர். ஆலைகள் மற்றும் நகராட்சிகள் கழிவு நீரைத் தூய்மைப்படுத்தாமல் நீர்நிலைகளில் கலப்பதால் நிலமும் நீரும் பெருமளவு கெடுகின்றன. இதிலிருந்து தப்பும் நதிகளை மிகப்பெரிய போர்வெல்களால் உரிந்து எடுக்கிறது தனியார் குளிர்பான கார்ப்பரேட் நிறுவனங்கள். நாள் ஒன்றுக்கு  பத்தரை லட்சம் லிட்டர் தண்ணீர்  தாமிரபரணியில் இருந்து சுரண்டப்படுகிறது. இவையின்றி முள் மர விதை தூவப்பட்டு, அது வளர்ந்து மரமாவதன் மூலமும்  நிலத்தடி நீர்  அழிகிறது. 

கண்டுகொள்ளாத அரசு :

தண்ணீர் தட்டுப்பாடு பெரும் துயரமாக மாறிக்கொண்டே இருப்பதற்கு பின்னால் அரசின் பங்களிப்பும் இருப்பதாகச் சுற்றுசூழலியர்கள் தெரிவிக்கின்றனர். பெரும் பணக்காரர்கள், மேட்டுக்குடியினரின் நுகர்வு, ஏற்றுமதிக்கான வேளாண் பொருட்கள் விளைவித்தல், ஏற்றுமதிக்கான  ஆலைகளில் பொருட்கள் உற்பத்தி செய்தல் ஆகிய காரணங்களால் தண்ணீர் பயன்பாடு பெருகுகிறது. பெரிய பெரிய மால்களில் வாஸ்பேஷனின் முன் கைநீட்டினால்  சென்சார் மூலம் தாராளமாக தண்ணீர் வரும் அதே நொடியில் தமிழ்நாட்டு வீதி குழாய்களில் நெஞ்சு வலிக்க நிலத்தடி நீரை இரைத்துக்கொண்டிருக்கின்றனர் தமிழக மக்கள். ஆலைகள், கார்ப்பரேட் நிறுவனங்களின்  தேவைக்கு மீறிய அபரிதமான சுரண்டல்களால், பூமிப்பந்தின் இயற்கை சூழல் மாற்றமடைகிறது. மிக மோசமாக சூழல் கெட்டுவருவதால் பருவ மழை பொய்க்கிறது இல்லையேல் அளவுக்குமீறிய பெரு மழையாகப் பொழிகிறது. (2015 வெள்ளம்) தனியார் கார்ப்பரேட் ஆலைகளின் சுரண்டலை அரசு கண்டுகொள்வதில்லை. நியூட்ரினோ ஆய்வகத்துக்கு தினமும் 12 லட்சம் லிட்டர் தண்ணீர பெரியாற்றிலிருந்து உறிஞ்சுவதற்கு  அனுமதி கொடுத்தது தமிழக அரசு’ என்பது கூடுதல் தகவல்.

தண்ணீர் கண்ணீர்

தண்ணீர் தட்டுப்பாட்டால் உலக அழிவு ?

இந்தியாவில் ஓர் ஆண்டுக்குப் பயன்படுத்தக்கூடிய  நிகர நீரின் அளவு 1,121 பில்லியன் கியூபிக் மீட்டர்கள். மத்திய அரசால் வெளியிடப்படும் புள்ளிவிவரப்படி, 2050-ல் நீரின் தேவை 1,447 பில்லியன் கியூபிக் மீட்டர்களாக அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு உலக வங்கி வெளியிட்ட பருவநிலை மாற்றம் தொடர்புடைய அறிக்கையில், நீர்ப் பற்றாக்குறை உள்ள நாடுகள் வரும் 2050-ம் ஆண்டுவாக்கில் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பின்னடைவைச் சந்திக்க நேரிடும் என்றும்  எச்சரிக்கிறது. இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் தண்ணீர் பஞ்சம் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. போதிய குடிநீர் கிடைக்காமலும், கிடைத்தாலும் கழிவுகள் கலந்த அசுத்த நீராலும் வாரம்தோறும் 35 ஆயிரம் குழந்தைகள் உலகெங்கும் இறக்கின்றனர். இந்தப் பட்டியலில் தமிழ் குழந்தைகள்  இடம் பிடிப்பது தமிழக அரசுக்கு அழகல்ல. தண்ணீருக்காக உள்நாட்டில் குழப்பங்கள் ஏற்படும், தண்ணீருக்காகவே உலகப் போரும் வரலாம் என எச்சரிக்கின்றனர் சர்வதேச சூழலியலாளர்கள். விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.


டிரெண்டிங் @ விகடன்