'ரஜினி அரசியலுக்கு வந்து 21 வருஷம் ஆச்சு..!' முரண்பாடுகள் சூழ் பயணம் | 'Its been 21 years since Rajini entered politics' Rajinikanth's Controversial journey

வெளியிடப்பட்ட நேரம்: 17:21 (18/05/2017)

கடைசி தொடர்பு:17:46 (18/05/2017)

'ரஜினி அரசியலுக்கு வந்து 21 வருஷம் ஆச்சு..!' முரண்பாடுகள் சூழ் பயணம்

ரஜினிகாந்த்

மீண்டும் அரசியல் உலகின் கவனத்தைத் தன்பால் திருப்பியிருக்கிறார் ரஜினிகாந்த். ரஜினி எதையும் புதியதாக பேசி விடவில்லை என்றபோதும், ரசிகர்கள் சந்திப்பு நிகழ்வில் அரசியல் பற்றி கோடிட்டு அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கிட்டத்தட்ட கால்நூற்றாண்டு காலமாக ரஜினி இப்படி குழப்பமான அறிவிப்புகளைத் தான் வெளியிட்டு வருகிறார்.

"என் தலையில அரசியல் எழுதலை'னுச் சொன்னால் நீங்க ஏமாந்து போவீங்க. ஒருவேளை நான் அரசியலுக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், பணம் சம்பாதிக்கணும், ஊழல் பண்ணணும்னு நினைக்கிற ஆட்களை கிட்டக்கூட சேர்க்க மாட்டேன். நுழைய கூட விட மாட்டேன். அதுனால இப்பவே அவங்க எல்லாம் ஒதுங்கிடுங்க. இல்லைன்னா ஏமாந்து போவீங்க" என பேசிய ரஜினி, இறுதியில் 'என் வாழ்க்கை ஆண்டவன் கையில் தான் இருக்கிறது. அவர் தான் அதை முடிவு செய்வார்' எனப் பேசி பழையபடி குழப்பத்தை விதைத்திருக்கிறார்.

ஆனாலும் இன்றும் இந்தச் செய்தியை தலைப்புச் செய்தியாக்கியதன் மூலம் ரஜினிக்கு இன்னுமொரு வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது. அதோடு ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. உண்மையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து 21 ஆண்டுகள் ஆகிறது. பாட்ஷா படம் வெளிவந்த பின்னரே அரசியல் குறித்து பேச ஆரம்பித்து விட்டார் ரஜினிகாந்த். அப்போதிருந்தே அரசியல் செய்தும் வருகிறார்.

ரஜினிகாந்த்

அரசியல் பயணம் இப்படித்தான் துவங்கியது !

தொண்ணூறுகளின் தொடக்கத்தில், முதல்முறையாக முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா கடும் விமர்சனங்களுக்குள்ளானார். சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம், பல்வேறு முறைகேடுப் புகார்கள், அடக்குமுறை நிர்வாகம், அரசுக்கு எதிராக பேசுபவர்கள் மீதான தாக்குதல்கள் எனப் பல புகார்களால் ஜெயலலிதா கடும் நெருக்கடிக்குள்ளானார். இந்நேரத்தில் ஜெயலலிதாவுக்கு மாற்றாக ரஜினிகாந்த் முன்னிறுத்தப்பட்டார்.

'அரசியலுக்கு வர வேண்டும். 1996ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த் நிற்க வேண்டும்' என்ற குரல்கள் அப்போது எழுந்தன. அப்போது ரஜினிகாந்த் தேர்தலில் போட்டியிடவில்லை என்றபோதும், தி.மு.க - த.மா.கா வேட்பாளரை ஆதரவு தெரிவித்து வீடியோ பிரசாரம் செய்தார் ரஜினிகாந்த். 'ஜெயலலிதா திரும்பவும் ஆட்சிக்கு வந்தா, தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது' என்று சொல்லி அவர் வெளியிட்ட ஐந்து நிமிட வீடியோ அந்தத் தேர்தலில் மிக முக்கியமான பிரசாரமாக பேசப்பட்டது. அந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் பெரும் வெற்றிக்கும் அதுவே காரணமாகச் சொல்லப்பட்டது.

ரஜினிகாந்த் கருணாநிதி

கோவை குண்டுவெடிப்பும்... ரஜினியின் தேர்தல் ஆதரவும்...!

1996 தேர்தலோடு ரஜினியின் அரசியல் முடிந்து விடவில்லை. 1998ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது மீண்டும் தி.மு.க - த.மா.கா கூட்டணியை ஆதரித்தார் ரஜினிகாந்த். கோவையில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த நேரம் அது. 'கோவை குண்டுவெடிப்பை இஸ்லாமியர்கள் செய்திருக்க முடியாது' எனச் சொன்னார். கோவை குண்டுவெடிப்பு சம்பவம் அந்த தேர்தலில் முக்கியமானதாக இருந்தது. பி.ஜே.பி.க்கு அதை முன்னிறுத்தி பிரசாரம் செய்தது. இந்நேரத்தில் 'இஸ்லாமியர்கள் இதை செய்திருக்க முடியாது'  என்பது பி.ஜே.பி.க்கு எதிரான பிரசாரமாகவே பார்க்கப்பட்டது.

பி.ஜே.பி.யும், இந்து அமைப்புகளையும் ரஜினியின் இந்த வாய்ஸ், அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ரஜினியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவும், போராடவும் திட்டமிட்டனர். அந்நேரத்தில் பி.ஜே.பி. தலைவர் அத்வானியிடம் போனில் பேசினார் ரஜினி. அதோடு தன் ஆன்மீக குரு தயானந்த சரஸ்வதி மற்றும் முக்கிய அரசியல் விமர்சகர் ஆகியோரைச் சந்தித்த ரஜினிகாந்த்,  அத்வானியின் அறிவுரை, தயானந்த சரஸ்வதியின் ஆசியுரை, அரசியல் விமர்சகரின் விமர்சனம் எல்லாம் என்ன செய்ததோ தெரியவில்லை. அப்படியே அமைதியானார். அதன் பின்னர் யாரையும் ரஜினி ஆதரிக்கவே இல்லை.

ரஜினிகாந்த் ராமதாஸ்

பா.ம.க.வுக்கு எதிராக ரஜினியின் அரசியல்

1998ம் ஆண்டு ரஜினியின் வாய்ஸ் சர்ச்சையை ஏற்படுத்த, 2001ம் ஆண்டு தேர்தலில் யாரையும் ரஜினி ஆதரிக்கவில்லை. 2001 ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் வந்தது. 2004ம் ஆண்டு தேர்தலின் போது மீண்டும் ரஜினியின் கண்ணசைவு ரசிகர்களைத் தேர்தல் அரசியலில் களமிறக்கியது. 2002ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான 'பாபா' திரைப்படத்துக்குப் பா.ம.க. பிரச்னை செய்தது. இதனாலே அப்படம் பெரும் பாதிப்பை சந்தித்ததாக ரஜினி நம்பினார்.

இதனால் ஆவேசமடைந்தவர், 2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் அக்கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்ய ஆணையிட்டதாக செய்திகள் வெளியாகின. இதை உறுதிப்படுத்தும் வகையில் பா.ம.க.வுக்கு எதிராக வேலை பார்த்தனர் ரஜினி ரசிகர்கள். இது இரட்டை இலை, தாமரைக்கே ரசிகர்களின் ஓட்டு என்ற சூழலை அந்த தேர்தலில் உருவாக்கியது.

ரஜினிகாந்த் ஜெயலலிதா

தைரியலட்சுமியான ஜெயலலிதா !

யார் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவானலும் காப்பாற்ற முடியாது என ரஜினி சொன்னாரோ, அவரின் ஆட்சி மீண்டும் வந்திருந்தது. பா.ம.க எதிர்ப்பு நிலை  என்பது அ.தி.மு.க., பி.ஜே.பி. ஆதரவு நிலையாகக் கருதப்பட்ட நேரம் அது.  2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜெயலலிதாவுக்குப் பாராட்டு விழா நடந்தது. அப்போது அதில் பங்கேற்றார் ரஜினிகாந்த். ஜெயலலிதா பாராட்டு விழாவில் ரஜினி பங்கேற்றதே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவர் பேசியது பரபரப்பைக் கூட்டியது. அந்த விழாவில் ஜெயலலிதாவை  'தைரியலட்சுமி' எனப் புகழ்ந்தார்.  ஜெயலலிதா இரு தேர்தல்களில் எதிர்த்த ரஜினிகாந்த், திடீரென ஜெயலலிதாவைப் புகழ்ந்தது என்பது அரசியல் உலகில் பரபரக்கப்பட்டது.

இதன்பிறகு எந்தத் தேர்தல்களிலும் தனது கருத்தை ரஜினிகாந்த் தெரிவிக்கவில்லை. அரசியல் குறித்து கருத்துத் தெரிவிப்பதையும் தவிர்த்தார். தி.மு.க., அ.தி.மு.க.., பி.ஜே.பி. என அனைவருக்கும் நெருக்கமானவராகவே தன்னை நிறுத்திக்கொண்டார். 2010ம் ஆண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதிக்குப் பாராட்டு விழா நடந்தது. பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்ற பெயரில் நடந்த இந்த விழாவில், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர்கள் பங்கேற்றனர். விஜயகாந்த் உள்ளிட்ட வெகு சிலரே பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

ரஜினிகாந்த் கருணாநிதி

இடைவிடாது தொடர்ந்த முரண்பாடுகள்...

இந்த விழாவில் அஜித் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ''எந்தப் பிரச்னைகள் வந்தாலும், சில அமைப்புகள் திடீரென்று ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தறாங்க. அதிலே எங்களையும் கலந்துக்கச் சொல்லி வற்புறுத்துறாங்க. மிரட்டுறாங்க. சென்சிட்டிவ்வான விஷயங்களில் அரசாங்கம் முடிவெடுக்கிறதுக்கு முன்னாடி இவங்களே அறிக்கை விடுறாங்க. கூட்டம் நடத்துறாங்க. நாங்க கலந்துக்காட்டி தமிழர் கிடையாதுன்னு முத்திரை குத்துறாங்க. கருத்துச் சொல்லாட்டியும், அரசியலுக்கு வராட்டியும் விட மாட்டேங்குறாங்க... வந்தாலும் மிரட்டுறாங்க'' என்று அஜித் அதிரடியாகப் பேச... அதுவரை கருணாநிதியின் அருகே அமர்ந்திருந்து அவருடன் பேசிக்கொண்டிருந்த ரஜினிகாந்த், திடீரென எழுந்து நின்று கை தட்டினார். அஜித்தை விட அதிகம் கவனிக்கப்பட்ட ஆளாக ரஜினி மாறினார்.

"இந்த விழாவை விஜயகாந்த் உள்ளிட்ட சிலர் புறக்கணித்திருந்தனர். ரஜினிக்கு இதில் விருப்பம் இல்லையென்றால் புறக்கணித்திருக்கலாம். அதை விடுத்து விழாவில் பங்கேற்று, கருணாநிதியுடன் நெருக்கமாக அமர்ந்திருந்தவர், அஜித் பேசியதும் எழுந்து நின்று கை தட்டியது சரியல்ல. முரண்பாடுகள் நிறைந்த மனிதராக இருக்கிறார்" என அப்போது ரஜினி மீது விமர்சனம் எழுந்தது. இதற்கிடையே ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு  அளித்தார். மோடியையும், பி.ஜே.பி. தலைவர்களையும் தனது வீட்டுக்கு அழைத்துச் சந்தித்தார்.

ரஜினிகாந்த் மோடி

விளக்கமும், விளக்கத்துக்கு விளக்கமும்...

இதன் பின்னர் திரைப்பட வெளியீட்டின் போதெல்லாம் அரசியல் குறித்து பேசுவார். சினிமாவிலும் அரசியல் வசனங்கள் அதிகரித்தன. இதை ரஜினி விரும்பவே செய்தார்.  'அரசியலைப் பார்த்து பயப்படலை. தயங்குறேன்' ' 'நான் அரசியலுக்கு வருவதை ஆண்டவன் தான் முடிவு செய்ய வேண்டும்' எனப் பேசுவதை வழக்கப்படுத்தினார். அதன் தொடர்ச்சிதான் சில தினங்களுக்கு முன்னர் அரசியல் குறித்த ரஜினியின் பேச்சு.

ரஜினிக்கு அரசியல் ஆசை என்பது நிறைந்திருப்பதைதான் ரஜினியின் தொடர்ச்சியான பேச்சு உணர்த்துகின்றன. இப்போது பேசியதும் அப்படித்தான். இதைப் பேசிய மறுநாள் செய்தியாளர்களிடம் பேசும் போது, அரசியல் பற்றி நான் யோசிக்கவே இல்லை என்று சொன்னார் ரஜினி.

அரசியல் பற்றி வெளிப்படையாகப் பேசாதவர், அரசியல் பற்றி பேசினால் அது குறித்து விவாதிக்கலாம். ரஜினி அரசியல் பற்றி பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அரசியல் களத்தில் ரஜினிகாந்த் என்பவர் முரண்பாடுகள் நிறைந்த ஒரு மனிதர். அதனால்தான் அவர் பேச்சுக்கு அவரே விளக்கமும், அந்த விளக்கத்துக்கு இன்னொரு விளக்கமும் கொடுக்க வேண்டிய சிக்கல் ஏற்படுகிறது.

இப்போது சொல்லுங்கள்... யாருக்காவது ரஜினியின் அரசியல் பிரவேஷம் குறித்து சந்தேகம் இருக்கிறதா என்ன?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close