“இனவிடுதலைக்கான போராட்டம் இன்னும் ஓயவில்லை!” களநிலவரம் சொல்லும் முன்னாள் இலங்கை எம்.பி.

விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான இறுதிப்போர் முடிவுற்று எட்டாண்டுகள் ஆகிவிட்டன. போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். அந்தச் சோக வடு நம்மைவிட்டு மறையாமல், நெஞ்சில் ரத்தமாய் உறைந்து போயுள்ளது. இந்நிலையில், உறவுகளையும், உடைமைகளையும் இழந்து அங்கு வாழ்ந்துவரும் மக்களின் நிலை குறித்து இலங்கை நாடாளுமன்ற முன்னாள் தமிழ் எம்.பி-யும், வட இலங்கை மாகாண சபை உறுப்பினருமான சிவாஜிலிங்கத்திடம் பேசினோம்... 

"விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்து வந்த போர் முடிந்து எட்டாண்டுகள் கடந்துவிட்டன. அங்கு வாழ்கிற தமிழர்களின் மறுவாழ்வு எப்படி உள்ளது?''

"தமிழர்களின் மறு வாழ்வுக்காக இந்திய அரசால், கட்டப்பட்ட 50 ஆயிரம் வீடுகளைத் தவிர எந்தவித மறுவாழ்வு நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொள்ளவில்லை. பல்லாயிரக்கணக்காண ஏக்கர் நிலம், மக்களின் வாழ்விடங்கள் உள்ளிட்டவை இன்னும் ராணுவக் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. போரில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு இலங்கை அரசு எந்தவித மருத்துவ உதவிகளும் செய்து தரவில்லை. காயத்தின் ரணத்திலிருந்து அவர்களால் இன்னும் மீளமுடியவில்லை. இப்படியான துன்பங்களை அனுபவித்து வரும் தமிழ் மக்களுக்கு, நிதிப் பற்றாக்குறை காரணமாக எங்களாலும் முழுமையான உதவிகள் எதுவும் செய்ய முடியவில்லை. புலம் பெயர்ந்த தமிழர்களிடமிருந்து உதவிகள் கிடைத்தாலும் அது போதுமானதாக இல்லை.

இவ்வாறான நிலையில், இலங்கை ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் என 20 ஆயிரம் பேரின் நிலை என்ன சிவாஜிலிங்கம்ஆனது என்பது குறித்து எந்தவிதப் பதிலும் அரசு தரவில்லை. இலங்கை அதிபர் தேர்தலின் போது, 'கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்போம்' என்று வாக்குறுதி கொடுத்திருந்தனர். ஆனால், கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப்பேசிய பிரதமர் ரணில் விக்ரம சிங்கே, 'காணாமல் போனவர்கள் சரணடைந்தவர்கள் அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம்' என்றார். அவருடைய இந்தப் பேச்சு காணாமல் போனவர்களின் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனைத்தொடர்ந்து சில மாதங்கள் கழித்து மீண்டும், 'காணாமல் போனதாக சொல்லக்கூடியவர்கள் அனைவரும் வெளிநாடு சென்றிருக்கிறார்கள்' என்று கூறுகிறார். அப்படி வெளிநாடு போனார்கள் என்றால், டிக்கெட் வழங்கியது யார்? அவர்கள் எந்த நாட்டில் வாழ்கிறார்கள்? அவ்வாறு வாழ்கிற தமிழ் மக்கள் பத்திரமாக இருக்கிறோம் என்றாவது சொல்ல மாட்டார்களா? எங்களை மட்டும் ஏமாற்றவில்லை. சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றுகிற வேலையை இலங்கை அரசு செய்து வருகிறது. 

ஐ.நா-வின் வழிகாட்டுதல்படி இலங்கையில் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. சட்டம் இயற்றி ஓராண்டு ஆன பிறகும் அலுவலகம் இதுவரை திறக்கவில்லை. மனித உரிமை ஆணைய அலுவலகம் திறக்க முற்படுகின்றனர். அதனைத் தடுத்து நிறுத்தும் வேலைகளை இலங்கை அரசு செய்து வருகிறது. ஜெனீவாவின் தீர்மானத்தை நிறைவேற்றவும் தயாராக இல்லை. நடந்துமுடிந்த இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளையும் அனுமதிக்கவில்லை. சர்வதேச சமூகத்தின் முன்பு கொடுத்த வாக்குறுதியையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டது  இலங்கை அரசு. இப்போதாவது இலங்கை அரசின் சூழ்ச்சிகளைச் சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்."

"அண்மையில், ஐ.நா-வில் நடைபெற்ற மனித உரிமை பேரவைக்கூட்டத்தில் போர்க்குற்றம் தொடர்பாக இலங்கையின் விசாரணைக்கு இரண்டு ஆண்டுகள் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதற்கு இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆதரவு அளித்துள்ளன. இது சரியான நடவடிக்கையா?'' 

''பொருத்தமற்ற செயல்பாடு.... போர்க்குற்றம் தொடர்பாக  தீர்மானத்தை நிறைவேற்றுகிறேன் என்று இலங்கை சொல்லியிருந்தது, அதற்கு ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் கால அவகாசம் கொடுத்திருந்தால், அதனை ஏற்கலாம். ஆனால், 'விசாரணையைத் தொடங்கவே மாட்டேன்' என்று இருக்கிற இலங்கை அரசுக்குக் கால நீட்டிப்பு கொடுத்திருப்பது கேலிக்கூத்தானது. இதுபோன்ற கேலிக்கூத்தான நாடகங்கள் சர்வேதச அரங்கத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. எங்களுக்கும் வேறு வழியில்லை. வெறுப்பின் ஊடாகவே இதனைக் கடந்து சென்று கொண்டிருக்கிறோம்.''

"இனப்படுகொலை நடந்ததற்கான ஆவணங்கள், ஆதாரங்கள் இருந்தும் ஏன் ஐக்கிய நாடுகள் சபை தன்னிச்சையான ஒரு விசாரணையைத் தொடங்கவில்லை? ஐ.நா-வின் நடவடிக்கையில் உங்களுக்கு நம்பிக்கையுள்ளதா?'' 

"இலங்கையை ஐ.நா ஆதரிக்கிறதா என்பதைவிட, இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து இலங்கையை ஆதரித்துதான் தீர்மானம் கொண்டு வந்தன. பின்னர் இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி மகிந்தா ராஜபக்க்ஷேவை வீட்டுக்கு அனுப்பியது. பூகோள அரசியல் நலன் காரணமாகத் தற்போது மென்மைப் போக்கை கடைப்பிடிக்கிறார்கள். இதில் நிச்சயம் தோல்வி அடைவார்கள்."

இலங்கை

" 'போர்க்குற்றம் செய்த இலங்கை அரசே, அதனை விசாரிக்கலாம்' என்ற ஐ.நா-வின் ஒப்புதல் அபத்தமாக இல்லையா? குற்றத்தை செய்தவரையே வழக்கையும் விசாரித்துக்கொள்ளச் சொல்வது எந்த வகையில் நியாயம்?''

''இனப்படுகொலை செய்துள்ள இலங்கை ராணுவத்தை, இலங்கை அரசாங்கமே விசாரிக்கலாம் என்று ஐ.நா கூறியதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அதனை நாங்கள் ஒருபோதும் ஏற்க முடியாது. அதில் எந்த நியாயமும், நீதியும் இல்லை. இலங்கை ராணுவம் எமது மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்துள்ளது. இப்படியான இனப்படுகொலை நிகழ்த்திய இலங்கை அரசின் மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு. இதற்காக இன்று வரை போராடிக்கொண்டிருக்கிறோம். சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி நினைவேந்தல் வாரம் ஒன்றை அனுசரித்து வருகிறோம். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு இலங்கையின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ருவான் விஜயரத்ன, 'சிவாஜிலிங்கம் 5 பேரைச் சேர்த்துக்கொண்டு விளக்குகளை ஏந்தி இலங்கைக்கு எதிரானப் போக்கை கையாண்டு வருகிறார். இது எங்களுக்குக் கவலை தருகிறது. அவருடைய இந்த நடவடிக்கைக்கு விரைவில் பதிலடி கொடுப்போம்' என்று கூறியுள்ளார்.

அவரின் இந்தப் பேச்சுக்கு நானும் பதிலடி கொடுத்துள்ளேன். அதாவது, 'போரினால் லட்சக்கணக்கான மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்து போனார்கள். அந்த லட்சக்கணக்கான மக்களை இழந்த பல லட்சக்கணக்கான மக்கள் வேதனைத் தீயில் வெந்து கொண்டிருக்கிறார்கள். அவையெல்லாம் உங்களுக்குக் கவலையளிக்கவில்லை. நாங்கள் ஐந்து பேர் விளக்கு ஏற்றியதுதான் கவலை அளிக்கிறதா? இருப்பினும் இதையாவது கவனித்தீர்களே... இதுவே எங்களுக்கான வெற்றிதான். என்ன நடவடிக்கை வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள். அதைக்கண்டு அஞ்ச மாட்டோம். எதையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். நாங்கள் பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை; விடுதலைக்காக ஆயுதப் போராட்டம் நடத்தியவர்கள். நாங்கள் உயிர் பிழைத்திருப்பது எங்களுடைய அதிர்ஷ்டம் என்றே சொல்லவேண்டும். அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்காக போராடி வீதியில் மடிவதற்கும் தயாராக இருக்கிறோம். எனவே, என்ன  நடவடிக்கை வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளுங்கள்' என்று தெரிவித்தேன். அது மட்டுமல்ல... இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிக்கு மற்றொன்றையும் கூறினேன். 

'5 பேருடன் விளக்கை ஏற்றுகிறேன் என்று கூறினீர்களே? தமிழினத் தலைவன் பிரபாகரன் 1974-ம் ஆண்டின் பிற்பகுதியில் 5 பேருடன்தான்  தமிழ் ஈழப் புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தார். பின்னாளில், நடைமுறை அரசாங்கத்தைவிட சிறப்பான  சட்டம் - ஒழுங்குடன் முப்படைகளையும் கட்டி அந்த இயக்கம் இயங்கியது. தி பெஸ்ட் ஸ்டேட்டாக இருந்ததை உலகமும், இலங்கையும் மறந்திருக்காது' என்ற பதிலையும் பாதுகாப்புத் துறை அமைச்சருக்குத் தெரிவித்தேன்.

தன்னைக் காத்துக் கொள்பவன் தலைவன் அல்ல. மக்களையும் சேர்த்துக் காப்பவனே தலைவன். மக்களுக்கு நாம் முன்னுதாரணமாக இருந்தால்தான் மக்கள் நம்மை தலைமையாக ஏற்பார்கள். என் தலைவர் தங்கத்துரை சொன்னக் கருத்தை சொல்ல விரும்புகிறேன். 'நூற்றுக்கணக்கான சிங்கங்கள் கூட்டத்துக்கு செம்மறி ஆடுகள் தலைமை தாங்குமானால், எல்லாமே செம்மறி ஆடுகளாகத்தான் தெரியும். செம்மறி ஆட்டுக்கூட்டத்துக்கு சிங்கங்கள் தலைமை தாங்குமானால் அது சிங்கக் கூட்டம் போல் செயல்படும்' என்று சொன்னார். அதைத்தான் இன்றுவரை பின்பற்றுகிறேன். உங்களுடைய அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டோம். மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், எங்கள் செயல்பாடுகள் இருக்கும்.

தமிழ் ஈழ மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்குப் பதில் சொல்லாமல் மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் புதைகுழியை ஏற்படுத்த முயற்சிக்கிறது இலங்கை அரசாங்கம். அப்படி ஒரு முள்ளிவாய்க்கால் புதைகுழியில் புதைந்துபோக மாட்டோம். மக்களை ஒன்று திரட்டி எங்களுடைய உரிமையையும் நீதியையும் பெற போராட்டத்தை நடத்துவோம்."

பாதிக்கப்பட்ட தமிழர்கள்

"இந்தப் போராட்டம் தமிழீழப் போராட்டமாக இருக்குமா?'' 

"இலங்கை அரசு தொடர்ந்து எங்களை துரத்துமானால், அதற்கு எதிராக எங்களுடைய நடவடிக்கை எழுச்சி பெறும். பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கான போராட்டமாக இருக்கும். தமிழ் ஈழ அமைப்புகளுக்கு இதில் ஈடுபாடு இல்லை என்றாலும் அதற்காகப் போராட்டம் இருக்கும். இந்தப் போராட்டத்தில், பெண்கள், குழந்தைகள் எனப் பலரும் பங்கேற்று கற்களை வீசுகிற அளவுக்காவது போராட்டமாக இருக்கும்."

"தமிழீழம் மலர வாய்ப்புள்ளதா?''  

"எங்களை நாங்கள் ஆள்வது எங்களுடைய உரிமை என்பதை கருத்தில்கொண்டு அதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை. ஆனால், இலங்கை அப்படியான எந்தவித நடவடிக்கையையும் எடுக்காது. அதற்கு எதிராக மட்டுமே இலங்கை அரசின் நடவடிக்கை இருக்கும். தொடர்ந்து அந்தக் கோரிக்கை நிராகரிக்கப் படுமேயானால், இலங்கை இரண்டு துண்டுகளாக உடைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது." 

"பிரபாகரனின் இழப்பை எப்படி பார்க்கிறார்கள் தமிழர்கள்?'' 

"இலங்கையுடனான போரில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டிருப்பது தமிழர்களுக்கு மிகுந்த கவலை தந்த விஷயம். தமிழினத் தலைவன் பிரபாகரன் இல்லாத இந்தச் சூழலைப் பாதுகாப்பற்ற சூழலாகத்தான் பார்க்கிறார்கள்." 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!