வெளியிடப்பட்ட நேரம்: 13:11 (19/05/2017)

கடைசி தொடர்பு:13:25 (19/05/2017)

ஜானகி செய்ததை சசிகலா செய்வாரா...? வி.என்.ஜானகி நினைவுதினச் சிறப்பு பகிர்வு!

ஜானகி

வ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பதாகச் சொல்வார்கள். அப்படி ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் மட்டுமின்றி, அவர் உருவாக்கிய அமைப்பின் வெற்றிக்குப் பின்னாலும் இருந்தவர் வி.என்.ஜானகி. அந்த ஆண் எம்.ஜி.ஆர். என்பதைச் சொல்லவும் வேண்டுமா? 

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள வைக்கத்தில், 1923ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் தேதி பிறந்த வி.என்.ஜானகி, கர்நாடக இசையுலகில் புகழ்பெற்ற பாடலாசிரியரான பாபநாசம் சிவனின் தம்பி ராஜகோபாலின் மகள். வைக்கம் நாராயணி ஜானகி என்பதுதான் பின்னாளில் வி.என். ஜானகி என்றானது. இவருடன் பிறந்தவர் மணி என்ற நாராயணன். 

பாடலாசிரியரான ராஜகோபாலுக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்காததால் சொத்துகள் கொஞ்சம்கொஞ்சமாகக் கரைந்து வறுமைக்கு ஆளானது, குடும்பம். இந்த நிலையில் சென்னையில் தயாரிக்கப்பட்டுவந்த 'மெட்ராஸ் மெயில்' என்ற திரைப்படத்தில், பாடல்கள் எழுத வாய்ப்பு வர, 1936ஆம் ஆண்டு நிரந்தரமாக சென்னைக்குக் குடிபெயர்ந்தது ராஜகோபால் குடும்பம். 

இயல்பிலேயே நடனத்தில் ஆர்வம் கொண்டிருந்த ஜானகி, முறையாக ஆசிரியரைக் கொண்டு அவற்றில் தேர்ச்சி பெற்றார். 

சென்னையில் ராஜகோபாலின் குடும்ப நண்பரான பழம்பெரும் இயக்குநர் கே.சுப்ரமணியம், (நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியத்தின் தந்தை) ஜானகியின் நாட்டியத்திறமையைக் கண்டு அவரை, தனது 'நடன கலா சேவா' நாட்டியக்குழுவில் சேர்த்துக்கொண்டார். பிரபலமான இந்தக் குழு, அந்நாளில் இந்தியா முழுவதும் நாட்டிய நாடகங்களை நடத்திவந்தது. நடன கலா சேவாவின் 'வள்ளித்திருமணம்' நாடகத்தில், ஜானகிக்கு முருகன் வேடம். கே.சுப்ரமணியத்தின் துணைவியார் எஸ்.டி சுப்புலட்சுமி இதில் வள்ளியாக நடித்தார். 

நாட்டிய உலகில் புகழ்பெற ஆரம்பித்தபின், ஜானகியை சினிமா வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால் நாடகங்களிலேயே அவர் கவனம் செலுத்தினார். 

1937ஆம் ஆண்டு தனது 'மோஷன் பிக்சர்ஸ் புரொடியூசர்ஸ் கம்பைன்ஸ்' நிறுவனம் மூலம் 'இன்பசாகரன்' என்ற திரைப்படத்தை தயாரித்தார், கே. சுப்ரமணியம். இதில் 13 வயது வி.என்.ஜானகியை நாட்டிய நடிகையாக அறிமுகம் செய்தார். துரதிர்ஷ்டவசமாக இந்தப் படத் தயாரிப்பின்போது, கே. சுப்ரமணியத்தின் ஸ்டுடியோ எதிர்பாராதவிதமாக தீவிபத்துக்குள்ளாகி படத்தின் நெகடிவ் உட்பட அனைத்தும் எரிந்து சாம்பலாயின. (இதைத்தான் பின்னாளில் விலைக்கு வாங்கி ஜெமினி ஸ்டுடியோவை கட்டி எழுப்பினார் எஸ்.எஸ்.வாசன்) 

முதற்படம் அபசகுனமாக வெளிவராதுபோனதில்  மனவருத்தத்தில் இருந்தவருக்கு, 1940ஆம் ஆண்டு 'கிருஷ்ணன் தூது' என்ற திரைப்படத்தில் மீண்டும் வாய்ப்பு கொடுத்தார் ,கே.எஸ். இதில் ஜானகிக்கு நடன மாது வேடம். தொடர்ந்து மன்மத விஜயம், கச்ச தேவயானி, மும்மணிகள், சாவித்திரி, அனந்த சயனம், கங்காவதார், தேவ கன்யா, ராஜா பர்த்ருஹரி, மான சாம்ரட்சனம் , பங்கஜவல்லி உள்பட கே.சுப்ரமணியத்தின் படங்களில் சிறுசிறுவேடங்கள் கிடைத்தன. இவற்றில் அனந்தசயனம்  படத்தில் முதன்முறையாக சில காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1943-ல் வெளியான தேவகன்யா மற்றும் 'சகடயோகம்' படங்களில் இரண்டாவது கதாநாயகி வேடம். அதைத் தொடர்ந்து சித்ர பகாவலி, தியாகி படங்கள் அவரின் நடிப்பில் வெளிவந்தன.

ஜானகி

நடிக்கத் தொடங்கி 10 ஆண்டுகளுக்குப் பின், அவருடைய 18-வது படமான 'ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி'யில் முதன்முறையாக பிரதான கதாநாயகி வேடம் கிடைத்தது.  கதாநாயகன் பி.எஸ். கோவிந்தன். 

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த இத்திரைப்படத்தின் கதை சுவாரஸ்யமானது. 

ராஜகுருவான சந்நியாசி ஒரு காமப்பித்தன். தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்வதற்காக அஸ்டமாசித்தியை அடைய பூதத்திடம் வழிகேட்கிறான். 1000 தலைகளைக் கொண்டு யாகம் நடத்துமாறு சொல்கிறது பூதம். இதற்காக தந்திரமாக நாட்டின் இளவரசியான சிந்தாமணியை (ஜானகி )ப் பயன்படுத்திக்கொள்கிறான்அவன். மூன்று கேள்விகளைக்கேட்டு அதற்கு விடை சொல்பவரையே இளவரசி மணப்பதே பொருத்தம் என இளவரசிக்கு யோசனை சொல்கிறான். பதில் சொல்லாதவரை முட்டாளாகக் கருதி கொன்றுவிடச் சொல்கிறான்.  அதன்படி போட்டியில் கலந்துகொள்பவர்களிடம் 3 கேள்விகளைக் கேட்டு பதில் அளிக்காதவர்களை வெட்டிக்கொல்கிறாள் இளவரசி. 999 தலைகள் இப்படி வீழ்த்தப்பட்டநிலையில் அதில் தன் ஐந்து அண்ணன்களை இழந்த கதாநாயகனான கோவிந்தன், சிந்தாமணியைப் பழிவாங்குவதாக சபதம் செய்கிறான். தந்திரமாக சிந்தாமணியின் தோழி செங்கமலத்தின் நட்பைப் பெற்று, இளவரசியின் கேள்விகளை அறிந்துகொண்டு தேசாந்திரம் சென்று பதில்களோடு, இறந்தவர்களை உயிர்பிழைக்கவைக்கும் உபாயத்தையும் அறிந்துவருகிறான். போட்டி நாளில் சிந்தாமணியின் கேள்விகளுக்கு அதிரடியாக பதில்களை அளித்து சிந்தாமணியை திருத்துவதோடு சந்நியாசியின் கபட நாடகத்தையும் அம்பலப்படுத்துகிறான், இளவரசி கதாபாத்திரத்தில் நடித்த வி.என்.ஜானகி நடிப்பில் அசத்தியிருப்பார். 

1947-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம், ஜானகிக்கு ஒரேநாள் இரவில் பெயரும் புகழையும் தேடித் தந்தது. 'வெள்ளித்திரைக்கு அதிஅற்புதமான நடிகை கிடைத்தார்' என சினிமா பத்திரிகைகள் புகழாரம் சூட்டின. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமானார்.

படத்தில் கிடைத்த புகழால், அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்தன. அந்தக் காலத்தில் திரையுலக சூப்பர் ஸ்டாரான தியாகராஜபாகவதருடன் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது. 

1948-ல் வெளியான 'ராஜமுக்தி' திரைப்படம் வி.என் ஜானகிக்கு பெரும்புகழைத் தேடிக்கொடுத்ததோடு, அவரின் வாழ்க்கையையும் திசைமாற்றியது. படத்தில் நடித்த துணைநடிகர் ஒருவருடன் அவருக்கு நட்பு உருவானது. பிரபல கதாநாயகி ஜானகி சாதாரண துணை நடிகர் ஒருவரை காதலிப்பதாக பத்திரிகைகள் எழுதின. அதே ஆண்டில் வெளியான மோகினி படத்தில் அந்த நடிகருடன் மீண்டும் இணைந்து நடிக்கும் சூழல் வந்தது. இப்போது துணை நடிகன் கதாநாயகனாக ஆகிவிட்டிருந்தார். நட்பு, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது. இதனிடையே 'லைலா மஜ்னு', 'வேலைக்காரி' ஆகிய படங்கள் வெளியாகின. இதற்கிடையில், கதாநாயகி ஆகிவிட்ட அந்தத் துணைநடிகர் திரைத்துறையில் உச்சக்கட்ட புகழை அடைந்திருந் தார். அவர் வேறு யார், எம்.ஜி.ஆர்.தான்!

1950-ல் வெளியான 'மருதநாட்டு இளவரசி' திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் - ஜானகி ஜோடி மீண்டும் இணைந்தது. 'நாம்' படத்துடன்  திரையுலகுக்கு முழுக்குப் போட்டுவிட்டு எம்.ஜி.ஆரின் வாழ்க்கைத் துணைவியாக ஆனார் ஜானகி. இந்தத்  திருமணத்துக்கு சாட்சிக் கையெழுத்திட்டவர், தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பத்தேவர்.

எம்.ஜி.ஆரை ஜானகி திருமணம் செய்துகொள்வதற்கு சட்டப்படியான பிரச்னை எழுந்தது. பெரும் போராட்டத்திற்கு இடையில் அந்த வழக்கை வென்று ஜானகியை மணந்தார் எம்.ஜி.ஆர்.

1962-ல் மனைவி சதானந்தவதியின் மறைவுக்குப் பின்னர், ராமாவரம் தோட்டத்துக்கு ஜானகியுடன் குடிபுகுந்தார் எம்ஜி.ஆர். 

எம்.ஜி.ஆரின் திரை மற்றும் அரசியல் வாழ்வில் ஜானகிக்குப் பெரும்பங்கு உண்டு. பிரபலமான கதாநாயகியாக இருந்தாலும் திரைத் துறையில் இருந்து ஒதுங்கிய பின், ஒரு குடும்பப் பெண்மணியாக, எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கைக்கு பெரும் பக்கபலமாக இருந்தவர், ஜானகி. மனைவி ஜானகியை ஜானு என்றே அழைப்பார் எம்.ஜி.ஆர். சமையலில் கைத்தேர்ந்த ஜானகியின் கைப்பக்குவத்துக்கு எம்.ஜி.ஆர் தீவிர ரசிகர். ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவரானாலும் அசைவப் பிரியரான எம்.ஜி.ஆருக்காக தன்னை மாற்றிக்கொண்டவர் ஜானகி. பொதுவாக  படப்பிடிப்பில் ஒரு பெரும்கூட்டமாக சாப்பிடும் பழக்கம் கொண்டவர் எம்.ஜி.ஆர். இதனால் எப்போதும் பெரிய விருந்துபோல் சமைத்து படப்பிடிப்புக்கு அனுப்பிவைப்பார் ஜானகி. பல நேரங்களில் மதியம் ஒரு மணிக்கு எங்கிருந்தாலும் ராமாவரம் இல்லத்துக்கு வந்துவிடுவார் எம்.ஜி.ஆர். அத்தனை கைப்பக்குவம் ஜானகிக்கு. 

ஜானகி

பின்னாளில் குழந்தையில்லாத குறையைப் போக்க ஜானகியின் தம்பி பிள்ளைகளைத்தான் எம்.ஜி.ஆர்.- ஜானகி வளர்த்தனர். கணவரின் உதவும் குணத்துக்கு ஜானகி எப்போதும் குறுக்கே நின்றதில்லை. தவறு செய்யும் ஊழியர்களிடம் கடுமையாகக் கோபப்படுவார், எம்.ஜி.ஆர். சில சமயங்களில் வேலையிலிருந்தும் அனுப்பிவிடுவார். அப்போது எம்.ஜி.ஆரை சமாதானப்படுத்துவதில் ஈடுபடுவார்,  ஜானகி. 

அண்ணா, கருணாநிதி முதற்கொண்டு எத்தனையோ தலைவர்கள் அவரின் கைச்சமையலை ருசித்தவர்கள். கருணாநிதி அவரை அக்கா என்றழைப்பார். புகழ்பெற்ற நடிகரின் மனைவி, பின்னாளில் முதலமைச்சரின் மனைவி என ஆனபோதும், ஓர் எளிய  குடும்பப் பெண்மணியைப்போலவே எல்லோரிடமும் பழகுவார் ஜானகி. 

’எம்.ஜி.ஆரின் கைகள் கொடுத்துச் சிவந்தவை' என்பார்கள். ஜானகியின் கைகளையும் அப்படிச் சொல்லலாம். பொது இடங்களில் தன் கைகளில் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாலும், வீட்டில் உதவிகேட்டு வருவோருக்கு மனைவி ஜானகியின் கைகளால்தான் கொடுக்கச்செய்வார், எம்.ஜி.ஆர். ராமாவரம் தோட்டத்தில் எப்போதும் சமையல் அடுப்பு எரிந்த வண்ணம் இருக்கும். ஏழை-எளியவர் ஆனாலும் சொகுசு காரில் வந்திறங்கும் தொழிலதிபர்களானாலும் சாப்பிடவைக்காமல் அனுப்பமாட்டார்கள், எம்.ஜி.ஆர் - ஜானகி தம்பதி.

படப்பிடிப்புக்காக வெளிநாட்டுப் பயணங்களின்போது, மனைவி ஜானகியையும் உடன் அழைத்துச்செல்வார், எம்.ஜி.ஆர். சில நாட்களுக்குகூட மனைவியைப் பிரிந்து அவரால் இருக்கமுடியாது. அந்த அளவுக்கு ஒருவருக்கொருவர் அன்புகொண்டிருந்தனர். 

முதலமைச்சரானபின்னர் எம்.ஜி.ஆர் அரசியலிலும், அரசு நிர்வாகத்திலும் மனைவி ஜானகிக்கு முக்கியத்துவம் அளித்ததில்லை. ஜானகியும் அவற்றில் குறுக்கிட்டதில்லை.

திருமண நாளன்று வெளியே செல்லாமல் மனைவி ஜானகியுடன் அன்றைய பொழுதைக் கழிப்பது எம்.ஜி.ஆரின் வழக்கம். அரசியல் பரபரப்புகளை மறந்து அன்று தங்களின் சினிமா நாட்களை இருவரும் அசைபோடுவார்கள் . உறவினர்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். வெளியாட்களுக்கு அன்று அனுமதி கிடையாது. 

1984-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நோய்வாய்பட்டு, முதலில் அப்போலோவிலும் பிறகு அமெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டபோது, ஒரு தாயைப்போல எம்.ஜி.ஆரை அவர் கவனித்துக்கொண்டது மருத்துவர்களையே ஆச்சர்யப்படவைத்தது. எம்.ஜி.ஆர் உடல்நிலை சீராகித் திரும்பிவந்ததற்கு ஜானகி அம்மையார், ஒரு முக்கிய காரணம் என்று பலரும் குறிப்பிட்டார்கள். 

1986-ம் ஆண்டு ஜானகிக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அந்நாளில் எம்.ஜி.ஆர் துடிதுடித்துப் போனார். அன்று முழுவதும் அவர் பூனைக்குட்டி போல, ராமாவரம் தோட்டத்தைச் சுற்றிச் சுற்றி வந்தார். “ஜானுவுக்கு ஒண்ணும் ஆகாதுல்ல” என பார்ப்பவர்களிடம் எல்லாம் பரிதவிப்போடு கேட்டபடி இருந்தார், எம்.ஜி.ஆர். அத்தனை அன்பு, தன் துணைவியார் மீது எம்.ஜி.ஆருக்கு! 

1987 டிசம்பர் 24-ல், தமிழகத்தை நிலைகுலையவைத்த எம்.ஜி.ஆரின் மரணம் நிகழ்ந்த்து.  எதிர்பாராத அந்தச் சூழலில் அடுப்பங்கரையில் இருந்து ஆட்சிக்கட்டிலுக்கு வந்தார் ஜானகி. அற்ப ஆயுசில் ஆட்சி கவிழ்ந்தாலும் தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் என்ற வரலாற்றுப் பெருமை பெற்றார், ஜானகி.

எம்.ஜி.ஆர். காலத்திலேயே உருவாகிவிட்டிருந்த கோஷ்டி மோதல் இந்த காலத்தில் விஸ்வரூபமெடுத்தது. கணிசமான எம்.எல்.ஏக்களுடன் ஜெயலலிதா கட்சியை உடைத்தார். ஜெயலலிதாவின் பரமவைரியான ஆர்.எம்.வீரப்பன் ஜெயலலிதாவை எதிர்க்க ஜானகியை அவருக்கு நேர் எதிராக நிறுத்தினார். ஜா அணி, ஜெ. அணி எனப் பிரிந்துநின்றது அதிமுக. அரசியல்களத்தை அதகளப்படுத்திய அக்காலகட்டத்தில், ஜானகி அம்மையாருக்கு தூக்கம் இல்லை என்றே சொல்லலாம். பல போராட்டங்களை அந்நாளில் சந்தித்தார் அவர். 

எம்.ஜி.ஆரின் தீவிர அரசியல் களத்தில் அதுவரை வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்தவருக்கு களத்தில் முதல் ஆளாக நிற்கும் கட்டாயம் ஏற்பட்டது. அது முற்றிலும் புதிய அனுபவம். அத்தனை களேபரங்களிலும் நாகரிகமாகவே அரசியல் செய்தார் ஜானகி. 

ஆனாலும் ஜெயலிதாவுடன் மல்லுக்கட்டுவதன் மூலம் கணவரின் கட்சி கரைந்துகொண்டிருப்பதை எண்ணி ஒரு கட்டத்தில் அவர் வேதனைப்பட்டார். கணவரின் கடும் உழைப்பாலும், பலரின் போராட்டங்களாலும் உருவான கட்சி சிதைந்துபோய்க்கொண்டிருந்தது அவருக்குக் கவலையை அளித்தது.  இந்த நேரத்தில், 1989-ல் சட்டமன்றத் தேர்தல் வந்தது. எம்.ஜி.ஆர். தோற்றுவித்த கட்சி, அ.தி.மு.க (ஜா), அ.தி.மு.க (ஜெ) என இரண்டு அணிகளாக தேர்தல் களத்தில் நின்றன.

ஜானகி

சேவல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெ. அணி, 27 இடங்களில் வென்றது. ஜானகி அணியில் பி.எச். பாண்டியன் மட்டுமே வென்றார். தேர்தல் தோல்வியை நாகரிகமாக ஏற்றுக்கொண்ட ஜானகி, கழகத்தவரின் ஆதரவு பெருமளவு ஜெயலலிதாவுக்கே உள்ளதை உணர்ந்தார். வீம்புக்காக தொடர்ந்து போராடி, கணவர் உருவாக்கிய கட்சியைக் காணாமல்போகச் செய்வதை விரும்பாமல் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தார். தனது அணியையும், கட்சி அலுவலகத்தையும் முறைப்படி ஒப்படைத்து விட்டு, கவுரவமாக அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இத்தனைக்கும் அன்று தலைவர்களின் ஆதரவு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பெருமளவு ஆதரவு அவருக்கே இருந்த்து. ஆனாலும் கட்சியின் நலன்கருதி திடமான இந்த முடிவை எதிர்த்தார்.

இன்று அதிமுகவின் தலைமைக்கழகமாக உள்ள கட்டடம் ஜானகிக்குச் சொந்தமானது. அதையும் மனமுவந்து கட்சிக்காக விட்டுக்கொடுத்தார்  ஜானகி. இதன்பின்னரே கட்சியில் குழப்பம் தீர்ந்து ஒரு தெளிவு பிறந்தது. போட்டி அணி என ஒன்றில்லாததால் ஜெயலலிதாவின் தலைமையில் ஒருங்கிணைந்தனர். வெற்றிகளைக் குவிக்க ஆரம்பித்தது அதிமுக.

தன் இறுதிக்காலத்தில் பேசமுடியாத்தால் பெரும் சிரமப்பட்ட எம்.ஜி.ஆர் தன்னைப்போன்று அடுத்த தலைமுறை சிரமப்படக்கூடாது என தான் வாழ்ந்த வீட்டையே காதுகேளதாதோர் பள்ளியாக மாற்றினார். கணவரின் இறுதிஆசையை நிறைவேற்ற அந்த பள்ளியின் நிர்வாகத்தினை கவனித்தபடி, தனது இறுதிக்காலத்தைக் கழித்த ஜானகி அம்மையார், 1996 மேமாதம் இதேநாளில் தனது 73-வது வயதில் மறைந்தார். 

கட்சியா...கத்திச்சண்டையா என்ற நிலை உருவானபோது, கட்சியைக் காக்க கவுரமான முடிவை எடுத்தவர் ஜானகி. அவருடைய நினைவுநாள் கடைப்பிடிக்கப்படும் இந்த நாளில், அதிமுகவில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டதைப்போன்ற குழப்பமான ஒரு சூழல் உருவாகியிருப்பது, துரதிர்ஷ்டவசமான ஒற்றுமை. சசிகலா ஒருவரை நீக்கிவிட்டால் கட்சியுடன் இணைவதாகச் சொல்கிறது ஓ.பி.எஸ் தரப்பு. கட்சியின் எதிர்காலம் குறித்த இந்த நிபந்தனைக்கு இன்றுவரை சசிகலா தரப்பிடம் இருந்து இதுவரை எந்த பதிலுமில்லை. ஆளும் அரசின் ஆயுள் குறைவதை உணர்ந்தும் எச்சரிக்கை அடையாமல் முரண்டு பிடிக்கிறது சசி தரப்பு. 

பரபரப்புக்காக கத்திவீசிக்கொண்டு கணவரின் கட்சியைக் காணாமல் போகச் செய்யாமல் கவுரவமாக அன்று ஜானகி எடுத்த முடிவுதான் அடுத்த இரண்டு தலைமுறைகளுக்கு அதன் ஆயுளை நீட்டித்தது. மோசமான இந்த பிளவினால் கட்சி அடுத்தடுத்து பிரச்னைகளை சந்தித்துக்கொண்டிருக்கும் நிலையில், ஜானகி பற்றிய நினைவின் மூலம் தன் கட்சியைக் காப்பாற்ற, இரு அணிகளுக்கும் எம்.ஜி.ஆரின் ஆத்மா தரும் சமிக்ஞை என்று இதை எண்ணலாமோ?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்