Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரஜினி பாராட்டிய நான்கு அரசியல் கட்சிகளின் தலைவர்களின் ப்ளஸ், மைனஸ்!

ரஜினி

ப்போதாவது வெளிவரும் திரைப்படங்களைப் போலவே, எப்போதாவது ஒரு முறைதான் பொதுவெளியில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகிறார். சென்னையில் தமது திருமண மண்டபத்தில் கடந்த சில நாள்களாக ரசிகர்களைச் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்வில் பங்கேற்று வந்தார்.

ரஜினி தமிழரா?

ரசிகர் சந்திப்பின் முதல் நாளில், "எப்போ ஆண்டவன் சொல்றானோ அப்போ அரசியலுக்கு வருவேன்" என்று வழக்கம் போல பொடி வைத்துப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் ரசிகர்களைச் சந்தித்து வரும் இந்தத் தருணத்தில், இலங்கை இறுதிக்கட்டப்போரில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. முள்ளிவாய்க்கால் சம்பவம் குறித்து செய்தியாளர் ஒருவர் ரஜினியிடம் கேட்க அதற்கு நோ கமென்ட் என்று சொல்லி இருக்கிறார்.

ரஜினிகாந்த் ஒரு தமிழர்தானா என்று சமூக தளங்களில் சகட்டு மேனிக்கு வெளுத்து வாங்கினார்கள். இதனால்தானோ என்னவோ இன்று (19-05-17) ரசிகர்கள் சந்திப்பின் கடைசி நாளில், நான் ஒரு பச்சை தமிழன்தான் என்று சொன்னவர், தமிழினத்தலைவர்களாக அடையாளப்படுத்திக் கொள்ளும் மு.க.ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், திருமாவளவன், சீமான் ஆகியோரைப் பாராட்டித் தள்ளிவிட்டார்.

தி.மு.க-வுடன் எப்போதும் பாசம்

இந்த லிஸ்டில் மு.க.ஸ்டாலின் தவிர மற்ற நான்கு பேரும் ஏதோ ஒரு தருணத்தில் ரஜினிக்கு எதிராக கருத்துகளைக் கூறி வந்திருக்கின்றனர்.  சீமான் இன்றளவும் ரஜினிக்கு எதிராகப் பேசி வருகிறார். அவர்களைத் திடீரென்று ரஜினி பாராட்டி இருப்பதன் காரணம் பின்னால் அவரது நுணுக்கமான அரசியல் இருக்கிறது. ரஜினி பாராட்டிப் பேசிய தலைவர்களின் ப்ளஸ் மைனஸ் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

மு.க.ஸ்டாலின்

ரஜினிகாந்துக்கு தி.மு.க தலைவர் கருணாநிதி மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் எப்போதும் சாஃப்ட் கார்னர் உண்டு. எப்போதுமே அவர்கள் குடும்பத்தைப் பகைத்துக்கொள்ள நினைத்தது இல்லை. முக்கியமான குடும்ப நிகழ்வுகளில் ரஜினிகாந்த் கலந்து கொண்டிருக்கிறார். ரஜினிகாந்த் குடும்ப நிகழ்வுகளில் தி.மு.க குடும்பமும் பங்கேற்றிருக்கிறது. தன்னுடைய அரசியல் ஆலோசகராகக் கருதிய சோ.ராமசாமி, ஸ்டாலினை தனியாக விட்டால் அரசியல் களத்தில் கலக்கி விடுவார் என்று சொன்னதை மேற்கோள் காட்டி ரஜினி இப்போது பேசியிருக்கிறார்.

மு.க.ஸ்டாலின் சாதகமான அம்சங்கள் என்று பார்க்கும் போது முதலில் நினைவுக்கு வருவது மிசா காலத்தில் சிறையில் அவர்மீது நடந்த தாக்குதல்கள்தான். அரசியலில் கீழ்நிலையிலிருந்து படிப்படியாக முன்னேறியவர். சென்னை மாநகர மேயராக பணியாற்றியவர். பின்னர், 2006-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியின்போது உள்ளாட்சித் துறை அமைச்சராகத் திறம்பட பணியாற்றினார். அந்த சமயத்தில் கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட போது துணைமுதல்வராகவும் பணியாற்றினார். மேயர், அமைச்சர், துணை முதல்வர் என அரசின் நிர்வாக அனுபவங்களைத் திறம்பட கையாண்டு இருக்கிறார். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற திறம்பட செயல்பட்டவர். இவை எல்லாம் அவரது ப்ளஸ் பாயின்ட்களாகச் சொல்லலாம். அவரது மைனஸ் என்று பார்த்தால், தி.மு.க-வின் மூத்த தலைவர்களை மதிக்க மறுக்கிறார். முதல்வர் பதவிக்கு வர ஆசைப்படுகிறார். தனக்கென ஒரு குறுகிய வட்டத்தை வைத்துக்கொண்டிருக்கிறார் என்பது மட்டும்தான்.

அன்புமணி ராமதாஸ்

பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, ரஜினிகாந்த் தமது திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்ட ரஜினி புகைபிடிக்கும் காட்சிகளைத் தவிர்த்து வருகிறார். எந்த வழியிலும் இல்லாமல் தனிரூட்டில் பயணித்து வருகிறார் அன்புமணி. முதல்வராக வாய்ப்பில்லை என்று தெரிந்தும், முதல்வர் வேட்பாளராக கடந்த தேர்தலில் வலம் வந்தார். இந்த அடையாளம் அவரை தமிழகம் முழுதும் தெரியவைத்தது. மதுவிலக்குக்கு எதிரான கொள்கை, புகைபிடித்தலுக்கு எதிரான இயக்கம். பசுமை தாயம் என்ற தன்னார்வ நிறுவனத்தின் வழியே  சுற்றுச்சூழல் ஆர்வலர் என்ற அடையாளம் என ப்ளஸ் பாயின்ட்களுடன் அன்புமணி பயணப்படுகிறார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கொடுத்த விவகாரம் தொடர்பாக அவர் மீதான வழக்கு நிலுவையில் இருக்கிறது. குறுகிய வட்டத்தில் ஜாதி கட்சியின்தலைவர் என்ற அடையாளமும் அவருக்கு இருக்கிறது. இவை எல்லாம் அவருக்கான மைனஸ் பாயின்ட்கள் .

திருமாவளவன்

ரஜினிகாந்த் இலங்கை செல்ல இருந்தபோது, அவர் இலங்கை செல்லக்கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார். இதை ஏற்றுக்கொண்ட ரஜினி, தமது பயணத்தை ரத்து செய்தார். உடனே திருமாவளவன், ரஜினிக்கு நன்றி தெரிவித்தார்.

தெளிவான சிந்தனைகளுடன் கூடிய அரசியல் கருத்துகளைக் கொண்டிருப்பவர் என்ற ப்ளஸ் பாயின்ட் திருமாவளவனுக்கு இருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு மாற்றாக ஓர் அணி உருவாக வேண்டும் என்று தொடர்ச்சியாக பாடுபட்டு வருபவர். அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பி.ஜே.பி என எல்லா மட்டத்திலும் நட்புணர்வு பாராட்டி வருபவர் என இந்த அம்சங்கள் எல்லாம் அவர் மீதான ப்ளஸ் பாயின்ட்களாகக் கருதப்படுகிறது. திருமாவளவன்மீது குறிப்பிட்டுச் சொல்லும்படி மைனஸ் பாயின்ட்கள் ஏதும் இல்லை.

சீமான்

ஒரு நடிகராகவும், அரசியல் தலைவராகவும் ரஜினிகாந்த் குறித்து மிகமிகக் கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருபவர். சமூக வலைத்தளங்களில் இளைஞர்களால் கொண்டாடப்படும் தலைவர். தமது கம்பீரமான பேச்சுகளால் தமிழகம் முழுவதும் மேடைகளை அதிர வைக்கிறார். தேர்தலில் தொடர் தோல்விகள் வந்த போதும், சளைக்காமல் தனித்துப் போட்டி என்பதில் உறுதியாக நிற்பவர். இவையெல்லாம் சீமானின் ப்ளஸ் பாயின்ட்கள். தமிழ் கடவுள் முருகன் என்றெல்லாம் திடீர், திடீரென பேசி சர்ச்சைகளில் சிக்குவதுதான் இவரது மைனஸ் பாயின்ட்டாக இருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ

Advertisement