வெளியிடப்பட்ட நேரம்: 17:54 (19/05/2017)

கடைசி தொடர்பு:17:54 (19/05/2017)

ரான்சம்வேர்-க்கு முன்னோடிகள்... இவர்கள் உலகை நடுநடுங்க வைத்த ஹேக்கர்ஸ்!

ரான்சம்வேர் வைரஸ்

லகம் முழுவதும் தற்போது அனைவரையும் கதிகலங்க வைத்துவருகிறது ரான்சம்வேர். இது இணையத்தில் உலவி அதன் மூலம் கணினிகள் ஹேக் செய்து வருகின்றன. அப்படி ஹேக் செய்யப்பட்ட கணினியின் மொத்த தகவல்களையும் திருடி வைத்துக்கொண்டு கணினியைச் செயலிழக்கச் செய்து வருகின்றனர். அப்படி செயலிழக்கவைக்கப்பட்ட கணினிகளை மறுபடியும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டுமானால், ஒரு குறிப்பிட்ட தொகையை நாம் அந்த ஹேக்கர்களுக்கு பிணையத் தொகையாகத் தரவேண்டும். இதுவரை சுமார் 150 நாடுகளில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான கணினிகளை இது தாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரான்சம்வேர் ஆனது வானகிரிப்ட், டபிள்யூகிரை ஆகிய ஃபார்மெட்டுகளில் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது. 

உலகில் இதுவரை நடந்த சைபர் அட்டாக்குகளில் இதுதான் மிக மோசமானதாகக் கருதப்படுகிறது.  ஆனால், இந்த ரான்சம்வேரை எந்த நாட்டைச் சேர்ந்தவர் உருவாக்கினார், எப்படி பரப்பிவருகிறார் என்பது போன்ற தெளிவான உண்மைகள் இதுவரை கண்டறியப்படவில்லை. ரான்சம்வேர் ஹேக்கிங் போல இதற்கு முன் சில வைரஸ்களைப் பரப்பிவிட்டு உலகை நடுங்கச் செய்த அதிமுக்கியமான ஹேக்கர்களைப் பற்றி இப்போது தெரிந்துகொள்வோம். டெக்னாலஜி இன்றளவு இல்லாத காலத்திலேயே வைரஸ்களால், இவர்கள் உலகை எந்த அளவுக்கு உலுக்கியுள்ளார்கள் என்பதைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

ராபர்ட் மோரிஸ் :ராபர்ட் மோரிஸ்

கம்ப்யூட்டர் உலகின் முதல் வைரஸ் ராபர்ட் மோரிஸ் உருவாக்கிய 'மோரிஸ் வைரஸ்'தான். அமெரிக்காவைச் சேர்ந்த இவர் 1988-ம் ஆண்டு கார்னல் பல்கலைக்கழக மாணவராக இருந்தபோது இந்த வைரஸை உருவாக்கினார். சாதாரண வைரஸாக உள்நுழைந்து மொத்த கம்ப்யூட்டரையும் காலி செய்துவிடும் இந்த மோரிஸ் வைரஸ். இந்த வைரஸ் பரவ ஆரம்பித்த முதல் 3 நாள்களுக்குள் உலகம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான கம்ப்யூட்டர்களின் தகவல்களைத் திருடி, அனைத்தையும் செயலிழக்கச் செய்துவிட்டார் மோரிஸ். 'இன்டர்நெட் எங்கெல்லாம் வீக்காக இருக்கிறது என்று பார்க்க ஆசைப்பட்டேன் அவ்வளவுதான்' என்று கைது செய்யப்பட்டபோது சொன்னாராம் மோரிஸ். இதனால் 100 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல், 'ஹேக் செய்து பிறர் கம்ப்யூட்டரை நம்மால் கட்டுப்படுத்தவும் முடியும்' என அனைவருக்கும் புரிய வைத்தவரும் மோரிஸ்தான்.

டேவிட் எல்.ஸ்மித்டேவிட் எல்.ஸ்மித் :

இப்போது ரான்சம்வேரால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான 'பேட்ச்' ஃபைலை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனை நிறுவிக்கொண்டால் ரான்சம்வேரிலிருந்து தப்பித்துவிடலாம் என்று அறிவுரையும் வழங்கி வருகிறது. ஆனால், ஒருகாலத்தில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தயாரிப்பையே ஹேக் செய்து அந்த நிறுவனத்தை மட்டுமல்லாமல், அந்த நிறுவனத் தயாரிப்புகளைப் பயன்படுத்திக் கொண்டிருந்த அனைவரையும் அலறவிட்டவர்தான் டேவிட் எல்.ஸ்மித். 1999-ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட்டின் எம்.எஸ் வேர்டை குறிவைத்து உருவாக்கப்பட்ட வைரஸின் பெயர் 'மெலிஸ்ஸா வைரஸ்'. இந்த வைரஸ் மெயிலில் வரும். அட்டாச் செய்யப்பட்ட எம்.எஸ்.வேர்டு ஃபைல் கொண்ட மெயிலைத் திறந்தாலே போதும் உங்கள் கம்ப்யூட்டர் பற்றிய மொத்த ஜாதகமும் டேவிட் கைக்கு போய்விடும். அதோடு இதே வைரஸ் ஃபைல், உங்கள் மெயிலிலிருந்து தானாகவே 50 பேருக்கு ஃபார்வர்ட் ஆகிவிடும். அந்த 50 பேர் அந்த ஃபைலைத் திறந்தால், அவர்கள் கணக்கிலிருந்தும் தலா 50 பேருக்குச் செல்லும். இவரால் ஏற்பட்ட நஷ்டம் மட்டும் 80 மில்லியன் டாலர்.

மைக்ரோசாப்ட்

ஜோனதன் ஜேம்ஸ் :ஜோனதன் ஜேம்ஸ்

ஹேக்கிங் உலகின் முடிசூடா மன்னன். 'காம்ரேட்' என்ற பெயரில் ஹேக்கிங் விளையாட்டைக் காட்டி அமெரிக்காவையே நடுநடுங்கச் செய்தவர். 1999-ம் வருடம் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையில் ஆயிரக்கணக்கான சீக்ரெட் மெயில்களைத் திருடினார். பல ராணுவ அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை மொத்தமாக உருவி அமெரிக்க ராணுவத்துக்கு பெரிய தலைவலியை உருவாக்கியவர். நாசாவின் கம்ப்யூட்டர்களை வசப்படுத்தி மூன்று முறை விண்வெளிப் பயண ஆராய்ச்சியை நிறுத்தி சுமார் 2 மில்லியன் டாலர் நஷ்டத்தை நாசாவுக்கு ஏற்படுத்தியவர். யார் இவர்? என்று அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை மற்றும் உளவுத்துறைப்பிரிவு சல்லடை போட்டு துளைக்க... அந்த 'காம்ரேட்' ஹேக்கர் கண்டுபிடிக்கப்பட்டான். குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டபின் அமெரிக்காவுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை மற்றும் நாசாவுக்கு விளையாட்டு காட்டியது ஜோனதன் ஜேம்ஸ் என்கிற 15 வயது சிறுவன். இவன் சிறியவன் என்பதால், அமெரிக்க அரசு தண்டனை அளிக்காமல், எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தது. ஆனால், ஜோனதன் ஜேம்ஸ் இதோடு நிறுத்திவிடவில்லை. மக்களின் கிரெடிட் கார்டுகளின் தகவல்களைத் திருடி பண மோசடி செயலில் ஈடுபட்டுள்ளான். இந்த வழக்கின் கீழ் 2008 -ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டான். வழக்கு நடந்துகொண்டிருந்த வேளையில், பல கார்ப்பரேட் நிறுவனங்களும், இணையதளங்களும் ஜேம்ஸ் மீது அடுக்கடுக்கான பல புகார்களைக் கொடுத்தன. இதனால் மனம் வேதனை அடைந்த ஜேம்ஸ் சிறைக்குள்ளேயே தற்கொலை செய்துகொண்டான். ஜேம்ஸ் தற்கொலை செய்துகொண்டபோது தி டெலிகிராப் பத்திரிகை கூறியது என்ன தெரியுமா? 'ஒரு அறிவாளியைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொன்றுவிட்டன.'

கேரி மெக்கினோன்கேரி மெக்கினோன் :

"வேற்று கிரகவாசிகளைப் பற்றி ஏதேனும் மறைக்கப்பட்ட தகவல்கள் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்கத்தான் ஹேக் செய்தேன்" என்று இப்போதும் தனது சொந்த நாடான ஸ்காட்லாந்தில் இருந்துகொண்டு சொல்லிவருகிறார் கேரிமெக்கினோன். இவரை எப்படியாவது கைது செய்துவிட வேண்டும் என்று அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகம் போராடி வருகிறது. ஒருவேளை கேரி கைது செய்யப்பட்டால், அவருக்கு அமெரிக்காவில் 70 ஆண்டுகள் சிறை தண்டனை காத்துக்கொண்டிருக்கிறது. 70 ஆண்டுகள் சிறை தண்டனையா? அப்படி எதை ஹேக்கிங் செய்தார் என்கிறீர்களா? அமெரிக்காவின் ராணுவ தளத்துக்குள்ளும், நாசா விண்வெளி ஆராய்ச்சிக்குள்ளும் சர்வசாதாரணமாக சென்று வந்தவர் கேரி. ராணுவதளம் மற்றும் நாசாவில் 2001-ம் ஆண்டிலிருந்து 2002-ம் ஆண்டுவரை சுமார் 97 கம்ப்யூட்டர்களை ஹேக் செய்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் 300-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களின் மொத்த ஃபைல்களையும் அழித்து சுமார் 7 லட்சம் டாலருக்கும் அதிகமாக நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளார். விக்கிலீக்ஸிடம் இருப்பதை விட 100 மடங்கு ரகசியங்களைத் தன்வசம் வைத்துள்ளாராம் இந்த கில்லாடி கேரி.

கெவின் பால்சன் :கெவின் பால்சன்

'டார்க் டேன்ட்டி, என்ற புனைபெயரோடு உலாவந்த கெவின் செய்து வந்தது சற்று நூதன ஹேக்கிங் ரகம். ரேடியோ நிறுவனங்கள் தொடர்ச்சியாகப் போட்டி நிகழ்ச்சிகள் நடத்தி வந்தன. அப்போது அந்த நிறுவனங்களின் தொலைபேசிகளை ஹேக் செய்து முதல் பரிசு பெறுபவராகத் தன்னைத்தானே அறிவித்துக்கொண்டு முதல் பரிசுகளைத் தட்டி வந்தார். இதை நூதனமாக செய்து வந்ததால், யாரிடமும் மாட்டிக்கொள்ளவில்லை. ஆனால், கவனம் வேறுபக்கம் திரும்பி அமெரிக்காவின் உளவு நிறுவனமான எஃப்.பி.ஐ-யின் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்து அத்தனை ரகசியங்களையும் அள்ளிவிட்டார். பின் போலீசாரால் கைது செய்யப்பட்டு 51 மாதம் கடுங்காவல் தண்டனை பெற்றதோடு, 56,000 டாலர் நஷ்ட ஈடும் கட்டியுள்ளார். அதன் பிறகு வெளிவந்த கெவின் தற்போது 'வயர்டு' என்ற செய்தி இணையத்தின் ஆசிரியராகவும், பெண்கள் மீதான பாலியல் மற்றும் வன்கொடுமை தடுப்பு ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.


டிரெண்டிங் @ விகடன்