வெளியிடப்பட்ட நேரம்: 11:44 (20/05/2017)

கடைசி தொடர்பு:11:43 (20/05/2017)

''பி.ஜே.பி-யின் பின்னணியில் ரஜினி அரசியலுக்கு வந்தால்....'' - எச்சரிக்கும் திருமாவளவன் #VikatanExclusive

'இட ஒதுக்கீடு எங்களை இழிவுபடுத்துகிறது' எனப் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்த கருத்துக்குப் பதிலளித்துப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், 'இது தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு' என்று விமர்சித்திருந்தார். இதன் தொடர்ச்சியாகத் தனியார் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில், திருமாவளவன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வீசியிருக்கிறார் கிருஷ்ணசாமி. தொடரும் இந்த சர்ச்சை மற்றும் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்துப் பேசுவதற்காக திருமாவளவனை நேரில் சந்தித்தோம்....

திருமாவளவன்

'' 'திருமாவளவனுக்குத் தாழ்வு மனப்பான்மை இருப்பதால்தான் இட ஒதுக்கீடு கேட்கிறார்' என கிருஷ்ணசாமி கூறுகிறாரே...?''

''இட ஒதுக்கீடு என்பது அண்மைக்காலத்தில் வந்த ஒன்று. ஆனால், சாதியும் இழிவும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருப்பவை என்பதைத்தான் நான் விளக்கியிருந்தேன். மற்றபடி யாரையும் தனிப்பட்ட முறையில் காயப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு நான் எந்தக் கருத்தையும் கூறவில்லை. 

'சாதியால் உள்ள இழிவைத் துடைத்தெறிய இந்து மதத்திலிருந்து வெளியேற வேண்டும்' என்று அம்பேத்கர் சொன்னார். ஆனால், 'சாதியின் பெயரால் உள்ள இழிவைத் துடைக்க, 'தாழ்த்தப்பட்டோர் என்ற பட்டியலிலிருந்தே வெளியேற வேண்டும்' என்று கூறுவது முரணாக இருக்கிறது. 'இந்து மதத்திலிருந்து வெளியேறுவோம்' என்று அவர் சொன்னால், அம்பேத்கரியத்தைப் பின்பற்றுவது என்பதையும் தாண்டி அடிப்படையிலேயே சரியானது; பொருத்தமானது. 

இந்து மதத்தில் இருப்பதனால்தான் சாதியும், அதன் பெயரால் இழிவும் தொடர்கிறது. தாழ்த்தப்பட்டோர் என்று அடையாளப்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல... இந்து மதத்திலுள்ள ஒவ்வொரு சாதிக்கும் இழிவு உண்டு. ஏனென்றால் ஒவ்வொரு சாதிக்கும் மேல் சாதிகள் உள்ளன. மேல் சாதியாக உள்ளவர்கள் தங்களுக்கு கீழாக உள்ள சாதியினரை ஏதோ ஒரு வகையில் இழிவாகப் பார்க்கிறார்கள்; நடத்துகிறார்கள் என்பதுதான் யதார்த்தமான உண்மை!

மேல் சாதியாக இருப்பவர்கள் தங்களுக்குக் கீழாக இருக்கக்கூடிய சாதியினரைச் சமமாகப் பார்ப்பதும் இல்லை; அவர்களோடு திருமணம் போன்ற கலாச்சார உறவுகளையும் வைத்துக்கொள்வது இல்லை. எனவே, இங்கே இழிவு என்பது ஒவ்வொரு சாதியினருக்கிடையிலும் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த இழிவைத் துடைத்தெறிய வேண்டுமானால், சாதியக் கட்டமைப்பு உள்ள இந்து மதத்துக்குள்ளேயே இருப்பதுதான் தவறு. அதனால்தான் அதிலிருந்து வெளியேறி பவுத்தத்தைத் தழுவினார் அம்பேத்கர். இந்த வேறுபாட்டை விளக்குவதற்காகவே நான் அந்த விளக்கத்தைச் சொல்ல வேண்டியிருந்தது.''

''அடையாளத்தை மீட்டெடுப்பதற்கான எங்கள் போராட்டத்தைத் திருமாவளவன் புரிந்துகொள்ளாவிடில், அவர் தலித் தலைவர் என சொல்லிக்கொள்ளவே அருகதை இல்லாதவர் என அதே பேட்டியில், உங்களை மிகக்கடுமையாக விமர்சித்திருக்கிறாரே...?''

''அடையாளத்தை மீட்டெடுப்பது என்றாலே, இருந்த அடையாளத்தை நாம் இழந்திருக்கிறோம் என்றுதான் பொருள். அடையாளத்தைத் தாண்டி சமத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில், போராடுவது என்பதுதான் புரட்சிகர நடவடிக்கை. அதற்கு முன்னதாகவுள்ள ஒரு தொடக்க நிலைதான் அடையாள அரசியல். ஏதாவது ஒரு வகையில், தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு அணி திரள்வது; அதன்பின்னர் தங்களுக்கான சமத்துவத்தை நோக்கி பயணிப்பது. ஆகவே சமத்துவத்தை நோக்கிப் பயணிப்பதற்கு முன்னதாக தொடக்க நிலையில் இருக்கிற ஒரு முனைப்புதான் அடையாள அரசியல் என்பது. ஆனால், அடையாளம் என்பது பிற்போக்குத் தனமான அடையாளம்; முற்போக்கு அடிப்படையிலான அடையாளம்; அல்லது புரட்சிகர அடையாளம் என்று நாம் வகைப்படுத்திப் பார்க்கலாம். 
ஒரு பாட்டாளி வர்க்கமாக என்னை நான் அடையாளப்படுத்திக் கொள்வது ஒரு புரட்சிகர அடிப்படையிலான அடையாளம். ஒரு தேசிய இனமாக என்னை அடையாளப்படுத்திக்கொள்வது எந்த இடத்திலும் நமக்கு அது இழிவைத் தருவது இல்லை. அது ஒரு புரட்சிகர அடையாளம்; ஓர் இன விடுதலைக்கானப் போராட்ட அடையாளம்.  இப்படி அடையாளப்படுத்துவதிலேயே பிற்போக்கு, முற்போக்கு என்று இருக்கிறது.

சாதியால் அடையாளப்படுத்திக்கொள்வது எந்த வகையிலும் முற்போக்கானதாக இருக்கமுடியாது. ஏனென்றால், சாதிதான் நம்மை பாட்டாளியாகவும் ஒருங்கிணைக்க விடாமல் தடுக்கிறது; தமிழனாகவும் ஒருங்கிணைக்க விடாமல் தடுக்கிறது; இந்தியனாகவும் ஒருங்கிணையவிடாமல் தடுக்கிறது. இப்படி எல்லா வகையிலும்... உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரளவிடாமல் தடுப்பதற்கு மூலக்கூறாக இருப்பது, மூலக்காரணமாக இருப்பது சாதிதான். எனவே, நம்முடைய பொருளாதார வளர்ச்சி தடைபடுகிறது. அதிகார வலிமை என்பதைப் பெறமுடியாத நிலை ஏற்படுகிறது. அதிகார வலிமை காலம் காலமாக நமக்கு மறுக்கப்பட்டதனால்தான் 'இட ஒதுக்கீடு' என்ற தேவையே எழுந்தது. இட ஒதுக்கீடு என்பது ஏதோ ஒரு கோரிக்கை அல்ல. அல்லது ஒரு சலுகை அல்ல. வஞ்சிக்கப்பட்ட சமூகத்தினருக்கு வழங்கப்படுகிற சட்டப்பூர்வமான ஒரு முன்னுரிமை அது. ஆக, சட்டப்பூர்வமான ஒரு முன்னுரிமையை கோரிக்கையாகவோ சலுகையாகவோ பார்ப்பதனால் வருகிற சிக்கல்தான் இது. இது ஒரு உளவியல் சிக்கல். 

கிருஷ்ணசாமி

பிற்படுத்தப்பட்டவர்களும் இட ஒதுக்கீடு பெறுகிறார்கள். இட ஒதுக்கீடு என்பது வெறும் தாழ்த்தப்பட்டவர்களுக்கானது மட்டுமல்ல; தலித் சமூகத்தினருக்கு மட்டுமல்ல. ஓ.பி.சி-க்கும் இட ஒதுக்கீடு இருக்கிறது. அதனால்தான் தந்தை பெரியார், 'இட ஒதுக்கீடு' என்பதை 'இடப் பங்கீடு' என்று சொன்னார். ஒதுக்கீடு என்றால், எவனோ ஒருவன் முதலாளி குவித்து வைத்துக்கொண்டு மற்றவர்களுக்கு ஒதுக்குவது. பங்கீடு என்றால், சமமாக தங்களுக்கான அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வது. ஆகவே, சமூக நீதிக் கோட்பாட்டின் அடிப்படை என்பது அதிகாரப் பகிர்வு என்பதுதான். அதிகாரப் பகிர்வுக்கான ஒரு அடையாளம்தான் ரிசர்வேஷன்; இட ஒதுக்கீடல் அல்லது இடப்பங்கீடு என்பது. எனவே அதை அதிகாரப் பகிர்வாகக் கருதினால், நமக்கு இழிவாகத் தோன்றாது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு உண்டு. இவர்கள் எல்லாம் காலம் காலமாக வஞ்சிக்கப்பட்டவர்கள். நிலம் அற்றவர்களாக, அதிகாரம் அற்றவர்களாக, கல்வி அற்றவர்களாக தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டவர்கள். அதனால், அவர்கள் மறுபடியும் நிலம் பெற வேண்டும், அதிகாரம் பெற வேண்டும், கல்வி பெறவேண்டும் என்கிற அடிப்படையில் வழங்கப்படுகிற ஒரு முன்னுரிமைதான் இட ஒதுக்கீடு. இதை ஏன் நாம் இழிவாகப் பார்க்கவேண்டும்? இதை எந்தப் பட்டியலில் வைத்திருந்தாலும் மேம்படுத்தப்பட்ட சாதியினர் அல்லது உயர் சாதியினர் என்று யாரும் சொல்லப்போவதில்லை. பிற்படுத்தப்பட்ட சாதியில் இருந்தாலும் இட ஒதுக்கீடுதான்.

பிற்படுத்தப்பட்ட சாதியிலேயே நூற்றுக்கணக்கான சாதிகள் இருக்கின்றன. அதில் எந்த இடத்தில் நம்மை வைக்கப்போகிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. ஆக நமக்கு மேல் இன்னும் பல நூறு சாதிகள் இருக்கின்றன என்பதுதான் யதார்த்தம். எனவே எந்த பட்டியலுக்குள் போனாலும் சாதி என்றால் இழிவுதான். எஸ்.சி, எஸ்.டி., பி.சி., எம்.பி.சி. என்பதெல்லாம் ஆட்சி நிர்வாகத்துக்காக - நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்ட ஒரு பட்டியல் அது. பி.சி என்பதனாலேயே அது ஒரு சாதி அல்ல; எம்.பி.சி என்பதனாலேயே அது ஒரு சாதி அல்ல. தமிழ்நாட்டில் இருக்கிற எம்.பி.சி. என்பது 108 சாதிகளை உள்ளடக்கியது. அதேபோல் எஸ்.சி என்பது 78 சாதிகளை உள்ளடக்கியது. இந்தியா முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளன. இப்படி சாதிகள் இருப்பதுதான் இழிவு என்று நாம் புரிந்துகொள்ளவேண்டுமே தவிர... சாதியை இழக்காமல், மேம்பட்டுவிட முடியும் என்று கருதுவது ஓர் அரசியல் புரிதல் என்று கருதமுடியாது.''

''1998-ல் நடைபெற்ற மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தின்போது, தொழிலாளர்களை சாதி ரீதியாக பிரித்து போராட்டத்தை திசை திருப்பியதாகவும் உங்களைக் குற்றம் சாட்டுகிறாரே...?''

''மாஞ்சோலை தொழிலாளர்கள் விஷயத்தில் நான் எதிலுமே தலையிடவில்லை; இன்னும் சொல்லப்போனால், அப்போது நான் அரசியலுக்குள்ளேயே தீவிரமாக இறங்கவில்லை. மாஞ்சோலை தொழிலாளர் போராட்டம் வெடித்தது. அதில் பேரணி நடத்தியதில் 17 பேர் கொல்லப்பட்டார்கள். அப்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் மூப்பனாரும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லக்கண்ணு போன்றவர்களும்தான் புதிய தமிழகத்தோடு இணைந்து அந்தப் பேரணியில் கலந்துகொண்டார்கள். 
அப்போது, மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக பனகல் பூங்கா அருகே நடந்த உண்ணாநிலை அறப்போராட்டத்தில், பங்கேற்கச் சொல்லி என்னை அழைத்தது மூப்பனார். அதற்குத்தான் நான் போனேன். 

மாஞ்சோலை தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், 17 பேர் படுகொலை செய்யப்பட்ட கொடுமை இவற்றைக் கண்டித்து நடக்கிற ஒரு போராட்டம்.... அதில் மூப்பனாரே பங்கேற்கும்போது, திருமாவளவன் ஏன் பங்கேற்கக்கூடாது? என்ற கேள்வி எழுந்ததால், அந்த அறப்போராட்டத்தில் நான் பங்கேற்றேன். அதைத்தாண்டி வேறு எந்த விவகாரத்திலும் நான் தலையிடவில்லை. பிறகு ஆண்டுதோறும் நடக்கிற அந்த நினைவேந்தல் நாளில், ஜூலை 23 அன்று தாமிரபரணியில் நமது கட்சியின் சார்பில், மலர் தூவி அஞ்சலி செலுத்திவருகிறோம். அந்த தொழிலாளர்களை எங்கும் நான் சந்தித்ததும் இல்லை; அந்தப் பிரச்னையில் நான் ஒருநாளும் ஈடுபட்டதும் இல்லை. இதுவரையில் நான் மாஞ்சோலைக்கு போனது இல்லை.  மாஞ்சோலை எங்கு இருக்கிறது என்றுகூட எனக்குத் தெரியாது.''

''ஆதி திராவிடர் மற்றும் தேவேந்திர குல வேளாளர் இடையே ஒரு கிராமத்தில் நடைபெற்ற பிரச்னையை தமிழகம் எங்கும் சாதி பிரச்னையாக கொண்டு சென்றதோடு, புதிய தமிழகத்தில் இருந்து ஒடுக்கப்பட்ட மக்களை பிரித்துக்கொண்டு போன குற்றவாளி திருமாவளவன் என்றும் உங்கள் மீது குற்றச்சாட்டு வைத்திருக்கிறாரே...?'' 

''இதுவும் ஒரு அபாண்டமான குற்றச்சாட்டு. வத்திராயிருப்பு புதுப்பட்டியில் இந்த முரண்பாடு இருந்தது உண்மை. அதை தூண்டிவிட்டு கூர்மைப்படுத்தி மோதலுக்கு கொண்டுபோனது புதிய தமிழகம் கட்சியைச் சார்ந்தவர்கள்தான். நான் மிகக் கடுமையாக அவர்களுக்கு அறிவுரை சொல்லி ஒற்றுமையாக இருங்கள் என்றுதான் கூறியிருக்கிறேன். பிரச்னை நடக்கிறபோதெல்லாம் அங்கே அழைப்பார்கள். நான் ஒருபோதும் போனது இல்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலும் மூன்று சமூகப் பிரிவினர்களும் உள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் உள்ள அந்த மூன்று பிரிவைச் சார்ந்த முன்னணிப் பொறுப்பாளர்கள் அந்தப் பகுதிக்குப் போயிருக்கிறார்கள். ஒரு நாள்கூட நான் இப்படி பிளவுபடுத்திப் பேசியது இல்லை. இதற்காகவே தலித் என்கிற சொல்லைப் பயன்படுத்துகிறேன். ஒற்றைச் சொல்லில் எல்லோரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று. அவர் தனித்தனியே சொன்னதினால்தான் அவரால் யாரையும் ஒருங்கிணைக்க முடியவில்லை. ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனிப் பெயரைச் சொல்லி, நீங்கள் வேறு, நாங்கள் வேறு என்கிற உணர்வைத் தொடர்ந்து அவர் ஊட்டியதால், அனைத்து தலித் வகுப்பினரும் அந்தக் கட்சியில் இணையமுடியாத ஒரு நெருக்கடி இருந்தது. நான் அப்படி அல்ல. என்னுடையத் தலைமையில், விடுதலைச் சிறுத்தைக் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து தலித் அல்லாதவர்களையும் இதிலேயே பெருவாரியாகக் கொண்டுவந்து சேர்க்க வேண்டும் என்கிற அடிப்படையில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறேனே தவிர... ஒரு நாளும் நான் உட்சாதி அடிப்படையில் அரசியல் செய்ததே கிடையாது. 

ராஜபாளையம் பக்கத்தில், ஒரு கிராமத்தில் நான் பேசிக்கொண்டிருந்தபோது, பொதுப்படையாக நான் பேசியதைக் கேட்ட சில இளைஞர்கள் எழுந்து, 'நீங்கள் குறிப்பிட்ட ஆதி திராவிடர் சமூகத்தைப் பற்றி மட்டும் பேசுங்கள். பறையர் சமூகத்தைப் பற்றி மட்டும் பேசுங்கள்' என்று துண்டுச் சீட்டு எழுதிக் கொடுத்தார்கள். நான் அதை மறுத்து, 'பொதுவாக தமிழகத்தில் உள்ள பிரச்னைகள், தமிழர்கள் சந்திக்கிற பிரச்னைகள், சாதிய அடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்கள் சந்திக்கிற பிரச்னைகள் என்று பேசிக்கொண்டே போனேன். அதில், சில இளைஞர்கள் விரக்தி - அதிருப்தியடைந்து எழுந்துபோய், நான் ஏற்றிவிட்டு வந்த கொடியை அப்போதே இறக்கிவிட்டார்கள்.  'இந்த ஒரு சாதிக்காக உன்னைத் தலைவராக நாங்கள் ஏற்றுக்கொண்டோம். ஆனால், நீ பொதுவாக தமிழர் தமிழர் என்று பேசுகிறாய். எனவே, இங்கு கொடி வேண்டாம்' என்று கூறி கொடியை இறக்கிவிட்டார்கள். நான் அதைப்பற்றிக் கவலைப்படவே இல்லை. அதற்குப்பிறகு இன்னும் அந்தக் கிராமத்துக்கு நான் போகவும் இல்லை. என்னைப் பொதுவாக பொது நீரோட்டத்தில், பொது மைய நீரோட்ட அரசியல் தளத்தில், ஒடுக்கப்பட்ட அனைவருக்குமான ஒரு தலைமையாக, ஒரு அடையாளமாகப் பார்க்க வேண்டுமே ஒழிய... ஒரு குறிப்பிட்ட அரசியல் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போன்ற ஒரு போக்கை நான் ஒருபோதும் அனுமதித்தது இல்லை. ஆகவே அது தவறான தகவல். அந்தமாதிரியாக நான் எந்த இடத்திலும் நான் சொன்னதும் இல்லை. அப்படி சொன்னதாக எந்த சான்றும் கிடையாது.''

ராமதாஸ்

''மதவாத சக்திகள் தமிழகத்தில் காலூன்ற விடாமல் தடுக்க தி.மு.க கூட்டணிக்கு பா.ம.க வந்தாலும் ஆதரிக்கத் தயார் - என்று நீங்கள் பேசியதாக செய்திகள் வெளிவந்திருக்கிறதே...'' 

''பா.ம.க சேர்ந்தாலும் ஆதரிக்கத் தயார் என்ற வார்த்தையை நான் சொல்லவில்லை. வள்ளியூரில் நடைபெற்ற அம்பேத்கர் திருவுருவச் சிலை திறப்புவிழாவில் பேசுகிறபோது, 'தி.மு.க-வோடு நாங்கள் கைகோத்திருப்பது கூட்டணிக்கு அச்சாரமா? என்று பலரும் கேட்கிறார்கள். ஆனால், அந்த நோக்கத்தில் நாங்கள் கைகோக்கவில்லை. தமிழகத்தை சூழ்ந்துவருகிற வகுப்புவாத அரசியல் எனும் அபாயத்தில் இருந்து தமிழகத்தையும் தமிழ்நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டும். அதற்காக தி.மு.க மட்டுமல்ல, இடதுசாரிகளும் ஒன்றுசேர வேண்டும். தி.மு.க-வுக்கு நான் இந்த மேடையில் விடுக்கிற வேண்டுகோள், 'நீங்கள் தேர்தல் அரசியலுக்கு, தேர்தல் கூட்டணிக்கு யாரை வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளுங்கள். ஏன் பா.ம.க ராமதாஸைகூட அழைத்துக்கொள்ளுங்கள். எங்களுக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை. நாங்கள் தேர்தல் கூட்டணிக்காக கைகோக்கவில்லை. இந்த வகுப்புவாத அரசியல் என்னும் பேரபாயத்திலிருந்து தமிழகத்தை காப்பாற்றுவதற்காகத்தான் தி.மு.க-வோடு கை கோத்திருக்கிறோம். இதற்காக போராட்டக் களத்தில் என்றும் உங்களோடு இருப்போம்' என்றுதான் பேசினேன். அந்த இடத்தில், நான் 'பா.ம.க வந்தாலும்' என்ற வார்த்தையை சொல்லவில்லை. பா.ம.க வந்தால், சேர்த்துக்கொள்ளுங்கள்; எங்களைத் தவிர்த்துவிடுங்கள். நாங்கள் கூட்டணிக்காக வரவில்லை. கூட்டணிக்கு நீங்கள் பா.ம.க-வை வைத்துக்கொள்ளுங்கள்; போராட்டத்துக்கு நீங்கள் எங்களை வைத்துக்கொள்ளுங்கள் என்ற அடிப்படையில்தான் பேசினேன்.''

''தேர்தல் நேரத்தில், பா.ம.க அங்கம் வகிக்கும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இருக்காது என்கிறீர்களா?''  

''இனி எந்தக் காலத்திலும் பாட்டாளி மக்கள் கட்சி இருக்கிற அணியில் விடுதலை சிறுத்தைகள் இருக்கவே மாட்டோம். இப்படி அடிமனதில் இருந்து சொல்வதற்கு காரணம்.... அந்த அளவுக்கு அபாண்டமான பழியை என்மீது சுமத்தி, சாதாரண அப்பாவி மக்களிடத்திலே எனக்கு எதிரான ஒரு வெறுப்பை விதைத்துவிட்டார்கள். நான் சொல்லாததை சொன்னதாக... செய்யாததை செய்ததாக... தன்னுடைய சுயநலனுக்காக, தன் மகனை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக பிற சமூகத்தின் வாக்கு வங்கிகளை அடையவேண்டும் என்பதற்காக ஓர் அப்பட்டமான அவதூறை - அபாண்டமான பழியை என்மீது தூக்கி எறிந்தார். இதை நம்பி தி.மு.க-வும் எங்களை போன தேர்தலில், தவிர்த்தது. தி.மு.க கூட்டணியில் இருந்து நாங்களாக வெளியேறவில்லை. எங்களை அந்த அணியிலே வைத்திருந்தால், இந்தப் பிரசாரத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று அச்சப்பட்டு எங்களை கூட்டணியில் இணைத்துக்கொள்ள அல்லது தொடர்ந்து நீடிக்க தி.மு.க அன்றைக்கு விரும்பவில்லை. அதை நாங்கள் புரிந்துகொண்டு உணர்ந்துகொண்டு எங்களுக்கான தனிவெளியை நாங்கள் உருவாக்கினோம். இதுதான் கடந்த காலத்தில் நடந்தது. இதனை வள்ளியூர் கூட்டத்தில் நான் பேசினேன். 'நாங்கள் தி.மு.க கூட்டணியில் நீடித்திருந்தால், இன்றைக்கு உங்களுக்கு தேவைப்படுகிற ஒரு 20 இடங்களில் வெற்றி பெற்றிருக்க முடியும். வெறும் 46 வாக்குகளில் ராதாபுரம் தொகுதி போய்விட்டது. இப்படி 150 வாக்குகளிலும் 250 வாக்குகளிலும் பல தொகுதிகளை இழந்திருக்கிறீர்கள். இதையெல்லாம் நீங்கள் கைப்பற்றியிருக்க முடியும். தங்கப் பதக்கம் வாங்க வேண்டிய நீங்கள், வெள்ளிப் பதக்கத்தை வாங்கிக்கொண்டு அதிலே திருப்தி அடைந்துகொண்டிருக்கிறீர்கள்' என்று அந்த பொதுக்கூட்டத்தில் நான் பேசினேன்.'' 

''பி.ஜே.பி-யின் பின்னணியில் ரஜினி தமிழக அரசியலுக்குள் வருவார் எனப் பேசப்பட்டு வரும் சூழலில், ரஜினியின் அரசியல் பிரவேசத்தை நீங்கள் வரவேற்றிருக்கிறீர்களே...?''
 

''ரஜினி இன்னும் கட்சி பெயரை அறிவிக்கவில்லை; கட்சியின் கொள்கை என்னவென்று அறிவிக்கவில்லை. அவருக்கு என்ன பின்னணி இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. ஒரு குடிமகன் என்கிற முறையில் அவரும் கட்சி தொடங்க உரிமை பெற்றவர். நானும் ஒரு குடிமகன் என்கிற முறையில் அதை வரவேற்கிறேன்; அவ்வளவுதான். 

ரஜினிகாந்த் தனது தனித்தன்மையை இழக்காமல், ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கி தனித்து அவர் பயணிக்கத் தொடங்கினால், இளைய தலைமுறை கட்டாயம் அவர் மீது ஒரு நம்பிக்கையைப் பெற்று அணி திரள வாய்ப்பு இருக்கிறது. ஆனால், பி.ஜே.பி போன்ற அடையாளத்தோடு அவர் தொடக்கத்திலேயே அரசியலில் அடியெடுத்துவைத்தால், எடுத்த எடுப்பிலேயே அவர் சிறுபான்மையினரின் ஆதரவை இழக்க நேரும். ஒடுக்கப்பட்ட சமூகத்தினர், விளிம்புநிலை சமூகத்தினரின் ஆதரவையும் இழக்க நேரும். ஆகவே எனக்குத் தெரிந்த வரையில், அவர் நீண்டகாலமாக தமிழக அரசியலை உற்றுக்கவனித்துவரக் கூடியவர். ஒவ்வொரு அரசியல் கட்சியின் பின்னணியையும் அறிந்தவர். ஒவ்வொரு தலைவரின் ஆற்றலையும் புரிந்தவர். இன்னும் சொல்லப்போனால், இங்குள்ள சூது, சூழ்ச்சி, நெளிவு, சுளிவு அனைத்தையும் புரிந்தவர். எனவே, அவர் அரசியலில் அடியெடுத்து வைக்கும்போதே ஒரு மதவாத அடையாளத்தோடோ அல்லது வேறு ஒரு அடையாளத்தோடோ அடியெடுத்து வைக்கமாட்டார். எம்.ஜி.ஆரைப் போல அனைவருக்குமான ஒரு தலைமையைத் தரக்கூடிய அடையாளமாகத்தான் அவர் தன்னைக் காட்டிக்கொள்ள முனைவார் என்று நான் நம்புகிறேன்.

ரஜினி

பி.ஜே.பி-க்கு ஒரு நீண்ட நெடிய அரசியல் பின்னணி இருக்கிறது. ஊரறிந்த உலகறிந்த கொள்கை இருக்கிறது. அவர்களுடைய நோக்கம் என்ன, இலக்கு என்ன என்பது நமக்குத் தெரியும். ஒவ்வொரு சாதியையும் தனித்தனியாக அவர்கள் ஒருங்கிணைக்கப் பார்க்கிறார்கள். 
தாழ்த்தப்பட்ட சாதியில் இருக்கிற, பட்டியலில் இடம் பெற்றிருக்கிற சாதிகளைக்கூட தனித்தனியாக்கிவிட்டால், பி.ஜே.பி-க்கு எதிரான ஒரு அரசியல் சக்தி உருவாகாமல் தடுத்துவிட முடியும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம். புது தில்லியிலே ஆட்சியை அமைப்பது மட்டுமல்ல... ஒவ்வொரு மாநிலத்திலும் பி.ஜே.பி-யின் ஆட்சியை அமைப்பதுதான் அவர்களது நோக்கம். அதற்கு அவர்களுக்குத் தேவை... சாதி அடிப்படையில் வாக்கு வங்கிகளை திரட்டி வைத்திருக்கிற அமைப்புகளின் ஆதரவு; அவர்களை ஒருங்கிணைக்கிற முயற்சி... இதுதான் இன்றைக்கு அவர்களுடைய அஜென்டாவாக இருக்கிறது. 

தமிழ்நாட்டில், நமக்குள் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அ.தி.மு.க., தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் 50 ஆண்டு காலம் சாதியவாத சக்திகளும், மதவாத சக்திகளும் தலைதூக்க விடாமல் தடுப்பதற்கு காரணமாக இருந்திருக்கின்றன. அந்த இரண்டு கட்சிகளும் தொடர்ந்து வலிமையாக இருந்ததனால், சாதி வெறி சக்திகளும் மதவெறி சக்திகளும் இங்கே வலிமை பெறமுடியவில்லை.

''சாதியை ஒழித்து சமத்துவம் காணவந்த திராவிடக் கட்சிகளும் கடந்த 50 ஆண்டுகால தமிழக அரசியலில், சாதி அரசியலைத்தான் வளர்த்தெடுத்திருக்கிறது எனத் தமிழ் ஆதரவாளர்கள் ஆதாரப்பூர்வமானக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்களே...?''

''தி.மு.க., அ.தி.மு.க-வில் சாதியவாதிகள் இல்லையா? சாதிய அரசியல் இல்லையா? என்ற கேள்விகளுக்கு... தி.மு.க., அ.தி.மு.க-வில் சாதிய அரசியல் இருக்கலாம்; சாதிய வாதிகள் இருக்கலாம். ஆனால், சாதி வெறியை மட்டுமே மையமாகக் கொண்டு, அதையே உயிர் மூச்சுக் கொள்கையாகக் கொண்டு தலித் வெறுப்பு அரசியலையும் அல்லது சிறுபான்மை இன வெறுப்பு அரசியலையும் உத்திகளாகக் கொண்டு இயங்குகிறவர்கள் வேறு; ஒரு கட்சிக்குள்ளேயே சாதிய உணர்வோடு இருக்கிறவர்கள் என்பது வேறு. ஆக, தி.மு.க., அ.தி.மு.க-வில் சாதிய உணர்வோடு இருப்பவர்கள் உண்டு. ஆனால், வெறுப்பு அரசியல் தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இல்லை. பி.ஜே.பி-க்கும் இதர சாதிய வாத அமைப்புகளுக்கும் தலித் வெறுப்பு அல்லது முஸ்லிம் வெறுப்பு அல்லது கிறிஸ்தவ வெறுப்பு என்கிற வெறுப்பு அரசியல் ஒரு மாபெரும் உத்தியாக, தேர்தல் உத்தியாக இருக்கிறது. அதை அவர்கள் 'சோஷியல் என்ஜினீயரிங்' என்ற பெயரால் கையாள்கிறார்கள். ஆகவேதான், அந்த வகுப்புவாத அரசியலை, சாதியவாத அரசியலை எதிர்க்கவேண்டும் என்கிற அடிப்படையில் சொல்கிறோம். மற்றபடி தனிப்பட்ட முறையில், பி.ஜே.பி மீது எங்களுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை.''

''இதுவரையிலும் மதவாதம் பேசிவந்த பி.ஜே.பி., இப்போது தமிழகத்தில், சாதி ரீதியாக மக்களைப் பிளவுப்படுத்தி தன்னை நிலை நிறுத்திக்கொள்ளப் பார்க்கிறது என்கிறீர்களா?

''பாரதிய ஜனதா கட்சியை குறைசொல்லவேண்டும் என்பதற்காக நான் சொல்லவில்லை. பாரதிய ஜனதா கட்சியே அதை ஒரு வெளிப்படையான செயல்திட்டமாக செய்துகொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு அக்கட்சியின் தலைவரான அமித்ஷா மதுரையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தில் குறிப்பிட்ட சிலர்.... மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள சகோதரர்கள் பங்கேற்றார்கள். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி, 'உங்கள் சமூகத்தை நாங்கள் பிற்படுத்தப்பட்ட சாதிப் பட்டியலில் சேர்க்கிறோம்' என்பதுதான். 

ஒரு சமூகத்தை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதா? பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதா என்றெல்லாம் முடிவெடுக்கிற அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறது என்றாலும்கூட, மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் அதைச் செய்யமுடியாது. தமிழ்நாடு அரசுதான் ஒவ்வொரு சமூகத்தினுடைய பின்னணியைத் தீர்மானிக்கிறது. அவர்களுடைய வாழ்விடம், தொழில், வருமானம், வரலாற்றுப் பின்னணி, கலாச்சாரம், வழிபடக்கூடிய கடவுள், திருமண முறை, சடங்கு முறை.... இப்படிப் பல்வேறு காரணிகளை அடிப்படையாக வைத்தே ஒவ்வொரு சமூகத்தையும் எந்தெந்த சாதிப் பட்டியலில் இணைக்கவேண்டும் என்று அவர்கள் முடிவு செய்கிறார்கள். ஆக, மாநில அரசும் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தால்தான் அந்தப் பட்டியலில் சேர்க்கமுடியும். இது சாதாரண மக்களுக்குத் தெரியாது. 'பி.ஜே.பி நினைத்தால் சேர்த்துவிட முடியும்' என்று கருதுகிறார்கள். அதற்கு வாய்ப்பே கிடையாது. தமிழ்நாட்டில் ஒருவேளை பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால், அல்லது தமிழ்நாட்டில் பி.ஜே.பி-யின் கட்டுப்பாட்டில் இயங்குகிற ஒரு பொம்மை ஆட்சி நிகழ்ந்தால், அவர்கள் விரும்புகிற மாதிரி அந்தப் பரிந்துரைகளை செய்துகொள்ளலாம். அப்படி இல்லையென்றால், அது நடக்காது. ஆகவே, பி.ஜே.பி கட்சி சொல்லுகிற வெளிப்படையான செயல்திட்டத்தில் இருந்துதான் நாங்கள் இந்தக் குற்றச்சாட்டை சொல்கிறோம். அவர்கள் இதுவிஷயமாக ஒவ்வொரு மக்களையும் சந்திக்கிறார்கள். ஒவ்வொரு சமூகத்தினரிடமும் தனித்தனியாக சொல்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். பி.ஜே.பி-யைப் பற்றிப் பேசுகிறார்கள். அந்தந்த சாதியப் பெருமைகளை அங்கீகரிக்கிறார்கள். 'ஆமாம் நீங்கள் இதுபோன்ற பின்னணியைக் கொண்டவர்கள்தான். உங்களுக்கென்று ஒரு பெருமை இருக்கிறது. அதனால், உங்களுடைய சமூக வாக்குகளை எல்லாம் ஒன்றாகத் திரட்டுங்கள். யாதவர், நாடார், தேவேந்திர குல வேளாளர்கள் எல்லோரும் தத்தமது சமூக வாக்குகளை எல்லாம் ஒன்றாகத் திரட்டி வையுங்கள். நாங்கள் வந்து கூட்டி அள்ளிக் கொள்கிறோம்' என்ற ஒரு தந்திரத்தைதான் பயன்படுத்துகிறார்கள். இந்த தந்திரத்தை எப்படி இவர்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. 

''தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைப் பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் இணைப்பதனால், அந்த சமூகம் மேம்பட்டுவிட ஒரு வாய்ப்பு ஏற்படும்; அடையாளத்தை மீட்டெடுக்க முடியும் என்ற அவர்களது அடிப்படை நோக்கம் தவறு என்கிறீர்களா?''

''இதனால் ஒரு சமூகம் எப்படி மேம்பட்டுவிட முடியும்? வேண்டுமானால், அந்த சமூகத்தைச் சேர்ந்த 4 அல்லது 5 பேர் எம்.எல்.ஏ ஆகலாம்; எம்.பி ஆகலாம். ஆனால், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது. ஆக, ஒரு தனிநபர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதற்காக அப்பாவி ஜனங்களினுடைய எதிர்காலத்தை பாழ்படுத்துவது எந்த வகையில் நியாயமாக இருக்கமுடியும்? ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இன்னும் 80 சதவிகித மக்கள் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டிருக்கிறார்கள். கிராமப்புறங்களில் இன்னும் விவசாயக் கூலிகளாக வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். பள்ளிக் கல்வியைத் தாண்டமுடியாதவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். ஆக, நாம் ஒரு 10 சதவிகிதம் பேர் மேலே வந்துவிட்டால், உடனே 'அடையாளத்தை மாற்றவேண்டும்' என்று நினைப்பது அடித்தட்டில் கிடக்கிற மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் சொல்லப்படுகிற கூற்று. 

அதிகாரத்தை நுகரமுடியாமல், கல்வியைப் பெற முடியாமல், வேலை வாய்ப்பு பெற முடியாமல், இன்னும் அடித்தட்டிலேயே கிடந்து உழல்கிற அந்த எச்ச சொச்சமாய் இருக்கிற மக்களின் எதிர்காலத்தைப் பற்றிதான் நாங்கள் கவலைப்படுகிறோம். நான் நினைத்தால் ஒரு புத்திஸ்டாக மாறிவிட முடியும்; முஸ்லிமாக மாறிவிட முடியும். ஆனால், என்னுடைய உடன்பிறந்தவர்களோ என்னுடைய பங்காளிகளோ என் கிராமத்தைச் சார்ந்தவர்களோ மறுபடியும் அதே சேற்றில்தான் உழல வேண்டியிருக்கும். என்னால், என் கிராமத்தில் உள்ள 150 குடும்பத்தினரையும் முஸ்லிமாக மாற்றமுடியாது. நான் ஒரு 30 குடும்பங்களை வேண்டுமானால் மாற்றலாம். மிச்சம் இருக்கக்கூடிய 120 குடும்பங்களும் எதிர்காலத்திலே என்ன நிலைக்கு ஆளாகும்? 50 வருடங்களுக்குப் பின்னால் அவர்களது நிலை என்ன... 100 வருடங்களுக்குப் பின்னால் அவர்களது நிலை என்ன? அப்படித்தான் தலித்துகள் இங்கே சிறுபான்மையினர் ஆனார்கள்; அப்படித்தான் மதம் மாற்றம் ஆனவர்களும் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். ஆக இந்த சிறுபான்மை என்பதே ஒருவகையில் இவர்களுக்குப் பாதிப்பாகவே இருக்கிறது. இந்த அடிப்படையில்தான் இந்தக் கருத்துகளை நான் முன்மொழிகிறேனே தவிர... வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது. தனிப்பட்ட முறையில் பி.ஜே.பி மேல் எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை. பி.ஜே.பி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அத்தனைபேரும் என்னுடன் நல்ல நட்புக்கு உரியவர்கள்தான்.''

‘நீதிபதி கர்ணனுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் பேசிவருவதன் பின்னணி’ தொடர்பான கேள்விகளுக்கு தொல். திருமாவளவன் அளித்த விளக்கங்களைப் படிக்க இங்கே கிளிக்செய்யவும்.


டிரெண்டிங் @ விகடன்