வெளியிடப்பட்ட நேரம்: 12:02 (20/05/2017)

கடைசி தொடர்பு:12:01 (20/05/2017)

வறட்சிக்கு நிரந்தரத் தீர்வு காண தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்? #TNDrought2017

நீர் பஞ்சம் வறட்சி

ழல் புரையோடிக் கிடக்கும் தேசத்தில், எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியாது... ஆனால், விவசாயிகளையும் கிராம மக்களையும் விரட்டி அடிக்கும் குடிநீர்ப் பிரச்னையை நாம் நினைத்தால், குறிப்பாக அரசாங்கங்கள் நினைத்தால் தீர்க்க முடியும். குடிநீர்ப் பிரச்னையைத் தலையாய பிரச்னையாகக் கருதி புதிய அரசு செயல்பட வேண்டும் என்பதே நம் கோரிக்கை. வற்றாத ஜீவ நதிகளான, கிருஷ்ணா, துங்கபத்ரா, மகா நதி, கோதாவரி ஆறுகள் பாயும், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா மாநிலங்களில் வறட்சியின் கோரப்பிடி இறுகியதால், மக்கள் கொத்துக் கொத்தாக கிராமங்களைக் காலி செய்துகொண்டு நகரங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆடு, மாடுகள் தீவனம் இல்லாமல் செத்து மடிகின்றன. வனவிலங்குகள் குடிநீர் தேடி, சர்வ சாதாரணமாக ஊருக்குள் உலா வருகின்றன. இதெல்லாம் அழிவின் அறிகுறிகள் என்பதை நமது அரசும் புரிந்துகொள்ள வேண்டும். இது தமிழகத்துக்கு ஊதிய அபாய சங்கு. வற்றாத ஜீவ நதிகள் ஓடும் மாநிலங்களின் கதியே இப்படி என்றால், ஆண்டு முழுவதும் ஆறுகள் வறண்டு கிடக்கும் தமிழகத்தின் நிலைமையை எண்ணிப் பாருங்கள்.

மகாராஷ்டிரத்தில் 144 தடை உத்தரவு போட்டுதான் கிராமங்களில் டேங்கர்கள் உதவியுடன் குடிநீர் வழங்குகிறார்கள். தமிழ்நாட்டின் நிலைமையோ அதைவிட மோசமாகவே இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டு மக்களின் தண்ணீர் தேவையை அரசு தீர்க்கவில்லை. நகர மக்களின் தண்ணீர் தேவையில் மட்டுமே அனைத்து அரசுகளும் கவனம் செலுத்துகின்றன. கிராம மக்களின் தேவையை, ஆழ்துளைக் கிணறுகள்தான் பூர்த்தி செய்கின்றன. இன்றைய நிலையில் ஆழ்துளைக் கிணறுகள் ஆயிரம் அடிக்கும் அதிக ஆழம் சென்றால்தான் நீர் கசிகிறது. சில இடங்களில் 2 ஆயிரம் அடி ஆழம்கூட தொட்டுவிட்டதாக பீதி கிளப்புகிறார்கள்.

குடிநீர்ப் பிரச்னை இப்படி என்றால், விவசாயிகள் நிலையோ இன்னும் மோசம். ஒன்று, இரண்டு என ஆழ்துளைக் கிணறுகளால் பூமியைத் துளைத்துக் கொண்டு இருக்கிறார்கள். தண்ணீரைத் தேடி, வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைந்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் தண்ணீர் கிடைத்தபாடில்லை. காசு வெறும் புகையாகப் போய் விடுகிறது. விவரம் புரியாமல், நிலத்தடி நீரைத் தேடித்தேடி, விவசாயிகள் கடனாளியாகி, ஓய்ந்து கிடக்கிறார்கள். சிலர் தற்கொலையில் வாழ்வை முடித்துக் கொள்கிறார்கள். இந்நிலையிலிருந்து விவசாயிகளைக் காப்பாற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். பூமிக்குள்ளிருந்து தொடர்ந்து நீரைச் சுரண்டிக் கொண்டே இருந்தால் எப்படி?

எடுப்பது மட்டுமே நம் வேலை இல்லை. திருப்பிக் கொடுப்பதும்தான். இதற்கு ஒரே வழி, நீர் செறிவூட்டுதல். வானத்திலிருந்து விழும் ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிக்க வேண்டும். பயன்படுத்தியது போக, மீதியை பூமிக்குள் செலுத்த வேண்டும். நிலத்தடி நீரை மேம்படுத்த வேண்டும். கடந்த கால ஆட்சியின் போது வீட்டுக்கு வீடு நிலத்தடி நீர்ச் சேமிப்புத் திட்டம் கொண்டு வந்ததைப் போல, நிலத்துக்கு நிலம் நிலத்தடி நீர் சேமிப்புத் திட்டம் கட்டாயம் ஆக்கப்பட வேண்டும். இருக்கும் நீராதாரங்கள் இணைக்கப்பட வேண்டும். நீரை பூமிக்குள் புகுத்த வேண்டும்.

தண்ணீர் ஓடும் ஆறு

‘பள்ளம் நோக்கித்தான் வெள்ளம் பாயும்’ என்பது பழைய காலம். மலையை நோக்கியும் வெள்ளம் செல்லும் என்பதை நிரூபித்திருக்கின்றன இன்றைய தொழில்நுட்பங்கள். கர்நாடகாவில் 10 க்கும் மேற்பட்ட ‘ஏத்த நீராவார்’ ‘Life irrigation’ திட்டங்கள் செயல்படுகின்றன. 100 அடி, 200 அடி, 300 அடி என நதி நீரை ஆறு மின் மோட்டார்கள் மூலம் ஏற்றி, ஏரி, குளம், குட்டைகளில் நிரப்பி நிலத்தடி நீரைப் பெருக்குகின்றனர். இதனால், வறண்ட பிரதேசமான சாம்ராஜ் நகர ஏரி, குளங்கள் கோடையிலும் நீர் நிறைந்து காட்சி அளிக்கின்றன. அதேபோல ஆந்திராவில் தனியாகக் கால்வாய் வெட்டி, உபரிநீரைக் கொண்டு வந்து வறண்ட பிரதேசமான ராயல சீமா முதல் சித்தூர் மாவட்டம் வரை வளமாக்கியிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து, படித்து, புரிந்துகொண்டு தமிழக அரசும் போர்க்கால அடிப்படையில் கிடைக்கும் சிறிது நீரையும் வீணாக்காமல் பாதுகாக்க வேண்டும். விவசாயிகளுக்கு இருக்கும் ஆயிரம் பிரச்னைகளில் தலையாய பிரச்னை நீர்தான். நீர் ஆதாரங்களைப் பெருக்கினால் மட்டுமே எதிர்காலத்தில் விவசாயம் மட்டுமல்ல தமிழக கிராமங்களும் வாழும்.


-10.01.2016 பசுமை விகடன் இதழில் வெளியான கட்டுரை.


டிரெண்டிங் @ விகடன்