வெளியிடப்பட்ட நேரம்: 11:42 (20/05/2017)

கடைசி தொடர்பு:16:11 (20/05/2017)

'நீதிபதி கர்ணனை விடுதலைச் சிறுத்தைகள் ஆதரிப்பது ஏன்?' - விளக்குகிறார் தொல். திருமாவளவன்

'இட ஒதுக்கீடு சர்ச்சை', 'ரஜினியின் அரசியல் பிரவேசம்', 'நீதிபதி கர்ணன் விவகாரம்' என சமீபத்திய நாட்டு நடப்புகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விகடனுக்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டியின் தொடர்ச்சி கீழே....

திருமாவளவன்

''நீதித்துறையின் மாண்பைக் கொச்சைப் படுத்திவிட்டார் நீதிபதி கர்ணன் என, முன்னாள் நீதிபதி சந்துரு உள்ளிட்டோர் விமர்சிக்கிறார்கள். ஆனால், நீங்கள் தொடர்ந்து நீதிபதி கர்ணனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துவருவதன் பின்னணி என்ன?'' 

''நீதியரசர் கர்ணன் விவகாரத்தைப் பொறுத்தவரையில், தொடக்கத்திலிருந்தே நானும் ஒரு கவனிப்பாளாராகத்தான் இருக்கிறேன். இதுவரையில் அவரை நான் சந்தித்ததும் இல்லை; பேசியதும் இல்லை. அப்படிப்பட்ட நிலையில், சாதி அடிப்படையில் நீதிபதி கர்ணன் நிலையை ஆதரிக்க வேண்டிய அவசியம் எனக்கு எழவில்லை. அந்த அடிப்படையில் யாரையும் நான் ஆதரித்ததும் இல்லை. ஆனால், நீதிபதி கர்ணன் செயல்படுவது எப்படி நீதியின் மாண்பை சீர்குலைக்கிறதோ, அதேபோல உச்ச நீதிமன்ற நீதிபதிகளுடைய நடவடிக்கை இருக்கிறதா இல்லையா? என்பதுதான் கேள்வி. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எந்த அடிப்படையில், நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்தை நீதிபதி கர்ணன் செய்தார் என்று தீர்மானித்தார்கள்? இதற்கு எந்தச் சட்டம் அவர்களுக்கு அடிப்படையாக இருந்தது? அதை இதுவரையில், யாரும் விளக்கவில்லை.  

ஒரு நீதிபதியை விசாரிப்பதற்கு இன்னொரு நீதிபதியால் முடியாது. ஓர் உயர் நீதிமன்ற நீதிபதியை விசாரிக்க வேண்டுமானாலும், உச்ச நீதிமன்ற நீதிபதியை விசாரிக்க வேண்டுமானாலும் அதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலும் வேண்டும். அதுவும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு வேண்டும். இந்த நடைமுறை என்பது சாதாரணமான எனக்குத் தெரிகிறபோது, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குத் தெரியாதா? ஏன் நீதிபதி கர்ணனை நாடாளுமன்றத்தில் நன்னடத்தை விசாரணை அடிப்படையில் விசாரிக்க அவர்கள் முயற்சிக்கவில்லை? அதற்கான முனைப்பை ஏன் அவர்கள் எடுக்கவில்லை? நீதிபதி கர்ணன் தன் சக நீதிபதிகளின்மீது சில குற்றச்சாட்டுகளை வைக்கிறார். அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையா பொய்யா என்று விசாரிக்க வேண்டுமானாலும்கூட நாடாளுமன்றத்தினுடைய ஒப்புதல் தேவை. அப்படியென்றால், நாடாளுமன்றத்துக்குத்தானே இவர்கள் பரிந்துரைத்திருக்க வேண்டும். ஆனால், எடுத்த எடுப்பிலேயே நீதிபதி கர்ணன் நீதிமன்ற அவமதிப்பு செய்துவிட்டார் என்று எந்த அடிப்படையில் குற்றம் சாட்டுகிறார்கள்?என்பதுதான் கேள்வி.

எனது கேள்வி நீதிபதி கர்ணனை ஆதரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் எழுப்பப்படுவது அல்ல; அரசியல் அமைப்பு சட்டத்தையோ அல்லது வேறு சட்டத்தையோ உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பின்பற்றி இருக்கிறார்களா? என்பதுதான் கேள்வி. 
அரசியலமைப்புச் சட்டப்படி, (உறுப்பு எண் 242) ஓர் உயர் நீதிமன்ற நீதிபதியை இன்னொரு நீதிபதியால் விசாரிக்க முடியாது; விசாரிக்கவும் கூடாது. இது எப்படி உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குத் தெரியாமல் போனது? ஒரு நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவரா இல்லையா என்று பரிசோதிப்பதற்கு ஆணையிடுகிறார்கள். எந்தச் சட்டத்தின் அடிப்படையில் ஆணையிட்டார்கள்?
சாதாரண ஒரு குடிமகனைக் கூட, 'இவர் மனநலம் பாதித்தவரா? சோதனை பண்ணுங்க...' என்று சொல்லிவிடமுடியாது. அது சட்டம் இல்லை. அப்படியென்றால், அவரைத் தொல்லைப்படுத்துகிற ஒரு நடவடிக்கைதானே இது? ஆக அந்த இடத்தில் அவர் ரிஜெக்ட் பண்ணுகிறார். வந்தவர்களை திருப்பி அனுப்புகிறார். 

கர்ணன்

அடுத்ததாகவும் ஒரு கேள்வி எழுகிறது... அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்ற சந்தேகத்தில் இருந்தவர்கள், அனுப்பப்பட்ட குழுவினர் அறிக்கை தராதபோது, எந்த அடிப்படையில், அவர் மனநலம் சீரோடுதான் இருக்கிறார்; சரியாகத்தான் இருக்கிறார் எனவே அவரைக் கைது செய்யுங்கள் என ஆணையிட்டார்கள்? ஆக எந்த இடத்திலுமே 7 பேர் கொண்ட அந்த நீதிபதிகளேகூட சட்டத்தைப் பின்பற்றியதாகத் தெரியவில்லை. நீதிபதி கர்ணன் அவர்களுடைய கருத்தையோ அவருடைய அறிக்கையையோ, பேட்டியையோ எந்த ஊடகமும் பதிவு செய்யக்கூடாது என்பது எவ்வளவு பெரிய எதேச்சதிகாரமான ஒரு நடவடிக்கை...? இதுவும் நமக்கு ஒரு பெரிய சந்தேகத்தை எழுப்புகிறது. அது தொடர்பாக மனுத்தாக்கல் செய்யக்கூடிய வழக்கறிஞரை உச்ச நீதிமன்றம் மிரட்டுகிறது. 'மறுபடியும் மறுபடியும் நீ இதே மாதிரி செய்தால், உன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரிக்கிறார்கள். இதுவெல்லாம் ஜனநாயகத்துக்கு எதிரான ஒரு நடவடிக்கை என்று நாம் சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியவில்லை. ஆகவே, நான் சட்டத்தைப் பற்றிக் கவலைப்படுகிறேன். ஜனநாயகத்தைப் பற்றிக் கவலைப்படுகிறேன். சட்டத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கவேண்டிய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளே, சட்ட வல்லுநர்களே, அரசியல் அமைப்புச் சட்ட நிபுணர்களே சட்டத்தை முறையாகப் பின்பற்றியிருக்கிறார்களா? என்ற கேள்வி பொதுவெளியில் எழுப்பப்படுகிறது. அதில் நானும் ஒருவன். அவ்வளவுதான். ''

''நீதிபதி கர்ணன் மீதான நடவடிக்கைகளுக்கு பின்னணியாக வேறு ஏதேனும் காரணங்கள் இருப்பதாக நினைக்கிறீர்களா?''

''தெரியாது. கர்ணன் ஏன் இந்தப் புகார்களைச் சொல்கிறார்? அல்லது கர்ணன்மீது ஏன் இந்த நடவடிக்கையை அவர்கள் வேகமாக எடுக்கிறார்கள்? என்பதை நாம் ஒரு யூகத்தின் அடிப்படையில் சொல்லமுடியாது. ஆதாரங்கள் என்னிடத்தில் இல்லை. ஆனால், இவர் செய்தது எவ்வளவு தவறு என்று நாம் ஒப்புக் கொள்கிறோமோ... அதாவது இவரும் அவர்கள் மேல் எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் தண்டிக்கச் சொல்லி ஆணை பிறப்பிக்கிறார். அவர்களும், மனநலம் சரியாக இருக்கிறதா, இல்லையா? எனப் பரிசோதிக்கச் சொல்லி ஆணையிடுகிறார்கள். ஆக இவர்கள் இருதரப்பினரின் நடவடிக்கைகளும் 'அரசியலமைப்புச் சட்டம் இங்கே எப்படி இருக்கிறது?' என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. அடுத்ததாக, நாடாளுமன்றத்தினுடைய அதிகாரம் என்ன? என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. குடியரசுத் தலைவர், பிரதமர், சட்டத்துறை அமைச்சர் அல்லது நாடாளுமன்றத்தைச் சார்ந்த மற்ற நிர்வாகிகள் என அனைவரும் இவ்விஷயத்தில், தொடர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டே இருப்பதும் ஏன் என்று விளங்கவில்லை. என்னைப் பொறுத்தவரையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனையும் நாடாளுமன்றம் அழைக்கவேண்டும். இது தொடர்பான விவாதத்தை நடத்தி அரசியல் அமைப்புச் சட்டம் சம்பந்தமான ஒரு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.''

‘பி.ஜே.பி-யின் பின்னணியில் ரஜினி அரசியலுக்கு வந்தால்....’ என்பது குறித்து திருமாவளவன் கூறியவற்றைப் படிக்க இங்கே கிளிக்செய்யவும்