வெளியிடப்பட்ட நேரம்: 21:17 (20/05/2017)

கடைசி தொடர்பு:21:16 (20/05/2017)

இந்தியாவின் முதல் புத்தக கிராமம் பற்றி அறிந்து கொள்வோமா?

புத்தக கிராமம்

ரு அழகிய மலைகிராமத்தில் அமர்ந்து கொண்டு நமக்குப் பிடித்தமான ஒரு புத்தகத்தை படிக்கும் அனுபவம் என்பது மிகவும் ரசனையான ஒன்று. அப்படி ஒரு புத்தக ரசனையை அதிகரிக்கும் விதத்தில் மகாராஷ்டிரா மாநிலம் பிலார் என்ற மலைகிராமம், இந்தியாவின் முதல் புத்தக கிராமம் ஆக உருவாக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து புத்தக கிராமம்

மகாராஷ்டிரா அரசுக்கு எப்படி ஒரு யோசனை தோன்றியது? மகாராஷ்டிரா கல்வித்துறை அமைச்சர்  வினோத்தாவ்டே இங்கிலாந்து சென்றபோது அங்கு இது போல ஒரு புத்தக கிராமம் இருப்பதை அறிந்தார். இங்கிலாந்து நாட்டில், வாயே ஆறு பாயும் இடத்தில் ஹே ஆன் வாயே (Hay-on-Wye) என்ற அழகிய கிராமம் உள்ளது. இந்தச் சிறிய ஊரில் புத்தகங்கள் விற்கும் கடைகள் நிறைய இருக்கின்றன. குறிப்பாக பழைய புத்தகங்கள் இங்கு கிடைக்கும். இந்த ஊரில் 1988-ம் ஆண்டில் இருந்து ஹே திருவிழா நடக்கிறது. இது ஒரு இலக்கிய திருவிழா. உலகம் முழுவதிலும் இருந்து இலக்கிய கர்த்தாக்கள் இங்கு ஒன்று கூடுவார்கள்.
இதேபோல ஒரு கிராமத்தை இந்தியாவில் உருவாக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் திட்டமிட்டார். அதன் விளைவாகத்தான் கடந்த 4ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் பிலார் கிராமம் புத்தக கிராமமாக  உருவாக்கப்பட்டது. மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவிஸ் இந்த புத்தகக் கிராமத்தைத் தொடங்கி வைத்தார். பிலார் கிராமம் மலைகள் சூழ்ந்த இயற்கை எழில் சூழ இருக்கிறது. இந்த கிராமத்தில் விளையும் ஸ்ட்ராபெர்ரி பழம் உலக அளவில் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இப்போது இன்னொன்றிலும் பிரபலம் ஆகி இருக்கிறது. ஆம் இந்தியாவிலேயே முதல் புத்தக கிராமமாக பிலார் கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.

பிலார் புத்தக கிராமம்

புத்தக கிராமம்இந்தப் புத்தக கிராமத்தை உருவாக்கும் பணிகள் கடந்த 2015-ல் தொடங்கியது. பம்பாய் ஐஐடி சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னர்  மூன்று கோவில்கள், இரண்டு பள்ளிகள், ஏழு வீடுகள், தங்கும் விடுதிகள் என 25 இடங்களில்  புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. 15 ஆயிரம் அரிய வகை மராத்திய, ஆங்கிலப் புத்தகங்கள் மற்றும் பழைய புத்தகங்கள், தீபாவளி மலர்கள் உள்ளிட்ட புத்தகங்கள் இங்கு படிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த 25 இடங்களிலும் ஓவியர்களைக் கொண்டு 70 விதமான நவீன ஓவியங்களையும் மகாராஷ்டிரா அரசு வரைந்துள்ளது.

பிலார் மெயின் ரோட்டில் உள்ள ஒரு விடுதியில் அப்துல்கலாம் எழுதிய அக்னி சிறகுகள், திருப்புமுனைகள் ஆகிய மராத்தி மொழிபெயர்ப்பு புத்தகங்கள் இருக்கின்றன. இந்த விடுதியின் உரிமையாளர் ராகுல் கூறுகையில், "எங்கள் விடுதியில் தங்குபவர்கள் இனிமேல் ஸ்ட்ராபெர்ரியை சுவைத்தபடி புத்தகங்களையும் படிப்பார்கள்" என்றார்.

பிலார் கிராமத்தில் உள்ள முதிய பெண்களுக்கு புத்தகங்கள் படிப்பது புதிய அனுபவமாக இருக்கிறது. லட்சுமி வசந்த் என்ற பெண்மணி கூறுகையில், "மாலை நேரங்களில் பக்கத்துவீட்டுப் பெண்களுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பேன். இப்போது புத்தகங்கள் படித்து வருகிறேன். என்னுடன் பேசும் பெண்களும் புத்தகங்கள் படிக்கிறார்கள்" என்றார்.

பிலார் கிராமத்தில் 5 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். மராத்திய இலக்கியத்துக்கான முக்கியமான களமாக பிலார் கிராமத்தை மாற்றவும் மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது. சாஹயத்திரி மலைப் பகுதியில் இருப்பதால் ஏராளமான சுற்றுலாப்பயணிகளும், இலக்கிய ஆர்வலர்களும் பிலார் கிராமத்தை நோக்கி வருவார்கள் என்று அரசு எதிர்பார்க்கிறது.  
தமிழகத்திலும் இதுபோன்ற ஒரு புத்தக கிராமத்தை உருவாக்க தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும் என்பது புத்தக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்