வெளியிடப்பட்ட நேரம்: 19:07 (21/05/2017)

கடைசி தொடர்பு:17:57 (21/05/2017)

மோடியின் 'மேக் இன் இந்தியா' கனவு நிறைவேறுமா?

மேக் இன்  இந்தியா

"நாட்டில் இன்று வேலைவாய்ப்பில்லாமல் இளைய சமுதாயமே தவித்து வருகிறது. ஏராளமானோர் வேலைவாய்ப்பின்றி, வாழ வழியில்லாமல் அவதியுறுகின்றனர். ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நான் ஆட்சிக்கு வந்தால், ஆண்டுக்கு 2 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவேன். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். ஐந்து ஆண்டு ஆட்சியில் 10 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும்" - 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது மோடி பேசியதன் முக்கிய சாராம்சம் இது. மோடி வெற்றிபெற்று பிரதமராகி மே 26-ம் தேதியுடன் மூன்றாண்டுகள் நிறைவடைய உள்ளது. இந்த மூன்றாண்டில், அவரது கூற்றுப்படி 6 கோடி இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளனவா? மத்திய அரசின் தொழிலாளர் துறை (Government Labour Bureau) வெளியிட்ட வேலைவாய்ப்பு குறித்த பட்டியலே இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கிறது. 

2016-ல் மொத்தம் உற்பத்தித்துறையில் 95 ஆயிரம் வேலைவாய்ப்புகளும், வர்த்தகத்துறையில் 26,000 வேலை வாய்ப்புகளும், கல்வித்துறையில் 67,000 வேலைவாய்ப்புகள் என மொத்தம் எட்டு முக்கியத் துறைகளில் 2.31 லட்சம் இளைஞர்களே வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். மோடி அறிவித்த ஓராண்டு கணக்கில் ஒரு கோடியே 97 லட்சத்து 69 ஆயிரம் வேலை வாய்ப்புகள் குறைவு ஆகும்.
அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் மிகக் குறைந்த அளவே வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளன. 

2009 – 10.06 (இலட்சங்களில்)
2010 – 8.65
2011 – 9.30
2012 – 3.22
2013 – 4.19
2014 – 4.21
2015 – 1.55 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இரண்டாவது ஆட்சியில், அதாவது 2009 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டுகளில் 35.42 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2009-2011 வரை மூன்றாண்டுகளில் 28.01 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மோடி தலைமையில் பி.ஜே.பி அரசு பொறுப்பேற்ற இந்த மூன்றாண்டுகளில் 8.07 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது மன்மோகன்சிங் ஆட்சியுடன் ஒப்பிடுகையில், 19.94 லட்சம் குறைவாகும்.  

மேக் இன்  இந்தியா

காரணம் என்ன?

வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தொடர்ந்து தேய்மானம் ஏற்பட்டு   வருவதற்கான காரணங்களாக உள்நாட்டு உற்பத்தி விகிதம் குறைவு, புதிய நிறுவனங்கள், ஆலைகள் திறக்கப்படாதது, தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ பல நிறுவனங்கள் மூடப்பட்டு வருவது போன்றவற்றைத் தெரிவிக்கிறார்கள் தொழில்துறை வல்லுநர்கள். சம காலத்தில் ஆட்டோமேஷன் (இயந்திரமயமாதல்), கணினிசார் துறைகளில் பெருமளவிலான ஐ.டி தொழிலாளர்கள் வேலை இழப்பு போன்றவை இதர காரணங்களாகும். உலகெங்கும் இந்தப் பிரச்னை இருந்தாலும், இந்தியாவில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது என்கின்றனர் ஐ.டி துறையினர். இதனால் 69% வேலைகள் பாதிப்படையும் என்று உலக வங்கி தனது ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளது. அதேநேரம் டிஜிட்டல் துறைக்கான போதிய கல்வியை குழந்தைப் பருவத்திலிருந்தே அளித்து வரும் நாடுகளில், ஐ.டி தொழிலாளர்கள் தங்களின் பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என கணிக்கின்றனர் இத்துறை சார்ந்த ஆய்வாளர்கள். ஆனால், ‘டிஜிட்டல் இந்தியா’ முழக்கம் தொடரும் இந்தியாவில் டிஜிட்டல்சார் வளர்ச்சி இல்லாத குழந்தைகள் 38.7% அளவில் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. "எதிர்கால டிஜிட்டல் சூழலில் குழந்தைகளால் போட்டிபோட முடியாத சூழல் ஏற்படும். டிஜிட்டல் தொழில்நுட்பம் குறைவாக அறிந்த குழந்தைகள் இருக்கும் நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணமிது" என உலக வங்கி தலைவர் கிம், கோடிட்டுக் காட்டியதை இங்கே பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்.  


கிராம தொழிலாளர்

உலக அளவில் வேலைவாய்ப்பு நிலை :

"உலகில் 140 கோடி பேர் அல்லது மொத்த உழைப்பாளர்களில் 42% பேர் எந்த நேரத்திலும் வேலை பறிபோகக்கூடிய அபாயத்தில் வேலை செய்து வருகின்றனர்" என்று '2௦17-ல் உலக வேலைவாய்ப்பு, சமூக நிலைமை போக்கு' என்ற அறிக்கை எச்சரிக்கிறது. 
தற்போது இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அளவு 8.72% ஆகும். இதில் நகர்ப்புறங்களில் 10% அளவிலும், கிராமப்புறங்களில் 8% அளவிலும் வேலை வாய்ப்பின்மை நிலவுகிறது. "இளைஞர்களின் எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்தும் திட்டமிடல்களோடு செயல்படுகிறோம். 2020-ம் ஆண்டில் சர்வதேசத்தோடு ஒப்பிடும்போது இந்திய இளைஞர்கள் கணிசமான அளவில் வேலைவாய்ப்பு பெற்று தன்னிறைவோடு இருப்பார்கள்" என்று மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால், "தற்போதைய நிலை தொடருமானால், ஒவ்வொரு ஆண்டும் 1.2 கோடியிலிருந்து 1.5 கோடி வரை இளைஞர்கள் வேலை தேடி அலையும் சூழல் ஏற்படும்" என்கின்றனர் தொழில்துறை வல்லுநர்கள். உலகெங்கும் ஓர் மந்தநிலை நிலவுகிறது. இது உள்நாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், "அமெரிக்க வேலைகள் அமெரிக்கர்களுக்கே" எனும் ‘அமெரிக்கமயமாதல்’ அரசியலைத் தூக்கிப்பிடிக்கத் தொடங்கியதன் தாக்கம், அங்கே பணி புரியும் இந்திய  இளைஞர்கள் திருப்பி அனுப்பப்படும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இங்கிருந்து புதிதாக இளைஞர்கள் அங்கே ஐ.டி பணிகளுக்குச் செல்ல இயலாதவண்ணம், விசா கெடுபிடிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்குள்ளும் இன்ஃபோசிஸ், விப்ரோ, காக்னிசென்ட் போன்ற பெரும் ஐ,டி. நிறுவனங்கள் இந்தாண்டுக்குள் சுமார் 56,௦௦௦ ஐ.டி பொறியாளர்களை வேலைநீக்கம் செய்யும் ஆயத்தப் பணிகளை இப்போதே தொடங்கி விட்டன. வரும் நான்கு ஆண்டுகளில் சுமார் 6 லட்சம் இளைஞர்களை வீட்டுக்கு அனுப்பும் அபாய சூழலுக்கு ஐ.டி நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.


மோடி

மோடி திட்டம் :

நகர்ப்புற நிலைமை இப்படி என்றால், கிராமப்புறங்களில் நிலைமை மேலும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. நாட்டு மக்களில் மூன்றில் இரு பங்கு மக்களுக்கு வேலை வாய்ப்பை அளித்து வந்த வேளாண்மையும் கூட 1.1 சதவீத அளவிற்கே வளர்ச்சி அடைந்திருக்கிறது. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் கிராமப்புறங்களில் வேலையின்மைக்கும், குறைந்த வருமானம் பெற்று வந்தவர்களுக்கும் ஓரளவு நிவாரணம் அளித்து வந்தது. நாடு முழுதும் சராசரியாக ஆண்டிற்கு 45 நாட்களுக்கு, நாளொன்றுக்கு 140 ரூபாய் ஊதியத்தில் வேலை கிடைத்தது. 2015-16-ம் ஆண்டில் நாடு முழுவதும் இத்திட்டத்தின்கீழ் வேலை செய்வதற்காக 8 கோடியே 40 லட்சம் பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து வைத்திருந்தனர். 2009-ம் ஆண்டில் இத்திட்டம் தொடங்கிய பின்னர் இதுவே அதிகபட்ச அளவாகும். கிராமங்களில் வேலைவாய்ப்பு நுகர்வு தீவிரமடைந்து வருவதை இதுகாட்டுகிறது. ஆனால் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழான இந்தத் திட்டத்திற்கு, நடப்பாண்டில் ரூ 48 ஆயிரம் கோடி மட்டுமே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டைக் காட்டிலும் 600 கோடி மட்டுமே அதிகம். இதுஎந்தளவுக்கு பெரியளவில் வேலைவாய்ப்பை அதிகரித்திடும் என்று தெரியவில்லை.

ஒருபக்கம் வேலைவாய்ப்பின்மை, மறுபக்கம் வேலை பறிபோகும் நிலை என ஒரு அபாய கட்டத்திற்கு இளைய சமுதாயத்தினர் தள்ளப்பட்டுள்ளனர். இதைப்போக்க புதிய பார்வைகளை உள்வாங்கி, புதிய வாய்ப்புகளை உருவாக்கி நிவாரணம் அளிப்பதே மோடியின் 'மேக் இன்  இந்தியா ' என்ற கனவுக்கு அர்த்தம் சொல்வதாக இருக்கும்!


டிரெண்டிங் @ விகடன்