வெளியிடப்பட்ட நேரம்: 12:41 (22/05/2017)

கடைசி தொடர்பு:12:41 (22/05/2017)

உடையும் உயிர்ச்சங்கிலி... இணைக்க என்ன வழி? #BiodiversityDay

உயிர்ச்சங்கிலி

‘உலகில் எங்கோ ஒரு பட்டாம்பூச்சி பறப்பதற்கும், இன்னொரு மூலையில் அணுகுண்டு வெடிப்பதற்கும் சம்பந்தமுண்டு’ என்கிறது கேயாஸ் தியரி. ஒரு வண்டி ஓட எரிபொருள் மட்டும் போதாது. பெரிய சக்கரமோ, திறமையான ஓட்டுநரோ இருந்தால் மட்டும் ஓடாது. வண்டி ஓட சிறியதும், பெரியதுமாகப் பல்வேறு பொருள்கள் தேவைப்படுகின்றன. இந்த பூவுலகும் அப்படித்தான். கண்ணுக்குத்தெரியாத நுண்ணுயிர்கள் முதல் மிகப்பெரிய உயிரான யானைகள் வரை, ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கின்றன. மனிதன் பயன்படுத்தும் எந்தப் பொருளும் அவனால் மட்டும் தயாரிக்கப்பட்டதல்ல. அதன் மூலத்தை உற்றுப்பார்த்தால், பல உயிர்களின் உதவியால் ஒவ்வொரு பொருளும் படைக்கப்பட்டிருப்பது தெரியும்.

விவசாயி விதைப்பதால் மட்டுமே பயிர் விளைந்துவிடுவதில்லை. அந்தப் பயிருக்குத் தேவையான சத்துகளை நுண்ணுயிர்கள் கொடுக்கின்றன. மகரந்தச்சேர்க்கை தேனீக்கள் மூலமாக நடக்கிறது. பயிருக்குத் தீமை செய்யும் பூச்சிகளை, நன்மை செய்யும் பூச்சிகள் அழிக்கின்றன. இப்படி நமக்குத் தெரியாமலே உதவும் உயிர்கள் அனேகம் இருக்கின்றன. இப்படி ஒவ்வொரு செயலும், உயிர் தொகுப்பினாலேயே நிகழ்கிறது. அப்படிப்பட்ட உயிர் தொகுப்பைத்தான் பல்லுயிர் பெருக்கம் அல்லது உயிரியல் சமநிலை என்கிறார்கள். 

காய்த்துத் தொங்கும் ஒருமரத்தைப் பார்க்கும்போது, அதன் கனிகள்தான் நம் கண்களுக்குத் தெரியும். ஆனால், அத்தனை கனிகளுக்கும், இலைகளுக்குமான சத்துக்களை அனுப்ப ஓய்வே இல்லாமல் உழைத்துக்கொண்டே இருக்கும் வேர்களின் வேதனை நாமறியாதது. ஒரு சின்னஞ்சிறு செடி வளர, தண்ணீரும், சத்துகளும் போதுமான பராமரிப்பு மட்டும் போதாது. நாம் கொடுக்கும் சத்துகளை அப்படியே எடுத்துக்கொள்ளும் சக்தி வேர்களுக்கு இல்லை. குழந்தைகளுக்குக் கொடுக்கும் சோற்றை, பிசைந்துக் கொடுப்பதுப்போல, உரங்களையும் உடைத்துக்கொடுக்க வேண்டும். அதன் மூலங்களைச் சிதைத்துக்கொடுத்தால்தான் வேர்களால் எடுத்துக்கொள்ள முடியும். வெளியிலிருந்து கொடுக்கும் இடுபொருள்கள் மட்டுமல்லாது... மண்ணிலேயே பல நுண்ணூட்ட சத்துகள் இருக்கின்றன. அவற்றையும் வேர் உறிஞ்சுக்கொள்ளும் வகையில் மாற்றித்தர வேண்டும். இதையெல்லாம் செய்வது யார்? அதைச் செய்வதற்காக லட்சக்கணக்கான பணியாளர்களை, மண்ணுக்குள்ளேயே வைத்திருக்கிறது இயற்கை. ‘இது நான் நட்ட மரம்‘ என்று  யாரும் உரிமை கொண்டாடிவிட முடியாது. நீங்கள் நடவு செய்த செடி, லட்சக்கணக்கான உயிர்களின் உழைப்பால்தான் மரமாக நிற்கிறது என்ற உண்மையை உணர்வதே இல்லை. மண்ணுக்கு மேலே மனிதர்கள் உழைப்பதைப் போல், பல்லுயிர்ப் பெருக்கம் சிதையாமல் காக்கும் பணியில், கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் மண்ணுக்குள்ளே உழைத்துக்கொண்டே இருக்கின்றன. மண்ணுக்குள் சதா நடந்தேறிக்கொண்டே இருக்கும் அந்த குருஷேத்திர போரால்தான், உலகம் இன்னமும் உயிர்ப்புடன் உலவுகிறது. இவைகள் இல்லாவிட்டால் பூமியில் இறந்து விழும் எந்த உடலும் இற்றுப்போகாது... இலைதழைகள் மக்காது. ஒளிச்சேர்க்கை நடக்காமல், பயிர்களும், உயிர்களும் உண்ணாநோன்பு இருக்க வேண்டிய நிலை ஏற்படும். வளி மண்டலம் விழி பிதுங்கி நிற்கும்.

புத்தம் புதியதாகக் கிடைத்த பூமிபந்து என்ற பேருந்தைத் தனது இஷ்டத்துக்குப் பயன்படுத்திய மனிதன், அதை பராமரிக்க ஏனோ மறந்துப்போனான். விளைவு, சுந்தரா டிராவல்ஸ் போல் ஓடிக்கொண்டிருக்கிறது வண்டி.  மனிதனின் பேராசையும், நுகர்வு வெறியும், உயிர் சங்கிலியின் ஒவ்வொரு கண்ணியையும் உடைத்துக்கொண்டே இருக்கின்றன. அழிந்து வரும் உயிர்களின் பட்டியல் ஆண்டுக்காண்டு நீண்டுக்கொண்டே இருக்கிறது. தவளைகள் அழிந்தன, கொசுக்கள் பெருகின. இப்படி உயிர்ச்சங்கிலி உடைய உடைய, புதுப்புது நோய்கள், புவிவெப்பம், பனிப்பாறை உருகுதல் எனச் சூழலுக்கு எதிரான நிகழ்வுகள் நடந்துக்கொண்டே இருக்கின்றன. அணில், அரணை, பறக்கும் அணில், வரையாடு, டால்பின், எறும்புத்தின்னி, ஆசிய சிங்கம், சோலைமந்தி, ஓநாய்கள், மனிதக்குரங்கு, மரப்பல்லி, ராஜநாகம், துருவக்கரடி என அழியும் தருவாயில் உள்ள உயிர்களின் சிவப்பு பட்டியல் நீளமாகிக்கொண்டே இருப்பது, மனிதகுலத்துக்கான அபாய அறிவிப்பு. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சிப் பெற்ற எத்தனையோ உயிர்களை இந்த நூற்றாண்டில் இல்லாமல் செய்திருக்கிறோம். 

‘பிக்னிக்’ என்ற பெயரில் சுற்றுலாத்தளங்களை டாஸ்மாக் பாட்டில்களாலும், பிளாஸ்டிக் கழிவுகளாலும் குப்பைகளாக்கி விட்டோம். தன் பஞ்சுப்போன்ற தரைப்பகுதியால் பெய்யும் மழைநீரைப் பிடித்து வைக்கும் மலைப்பகுதிகள், அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றும். ஆனால், நாம் மலைகளில் குவித்து வைத்துள்ள பிளாஸ்டிக் மலைகளால், மழைநீர் பூமிக்குள்ளேயே செல்ல வழியில்லாமல் வழிந்தோடி விடுகிறது. விளைவு, முதுமலையில் யானைகள் குடிக்க நீர் இல்லாமல், எலும்பும், தோலுமாக தண்ணீர் தேடி தவித்த நாக்குகளுடன் அலைகின்றன. நமது போதைக்கு ஊறுகாயாக மாறிப்போயின வனவிலங்குகள். ஆறு, குளம், குட்டை என அனைத்து நீராதாரத்தையும் குத்தி கிழித்து, மண்ணை, மணலை அள்ளிக்கொண்டு போனார்களே அரசியல்வாதிகள். அப்போது அதைத் தடுக்காமல், மௌனசாட்சியாக இருந்தோமே... அதற்கு தண்டனைதான் இன்றைக்கு குடிநீருக்காக காலிகுடங்களுடன் வீதிவீதியாக அலைகிறோம்.

பயோடைவர்சிட்டி என்பது உயிர்தொகுப்பு மட்டுமல்ல.. மண், மலை, நிலம், நிலத்தடி நீர், புல், பூண்டு என எல்லாம் சேர்ந்ததுதான். 
சுற்றுச்சூழலில் இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்குக் காரணமான நாம்தான், அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட வேண்டும். போனவையெல்லாம் போகட்டும். இனியாகிலும், மலைகளை மலைகளாக இருக்க விடுவோம். செடி,கொடி, மரம், காடு, காட்டுயிர்கள் என அனைத்தையும், அதன் இயல்பில் இருக்கவிடுவோம். இதற்கு நாம் பெரிதாக எந்த உதவியும் செய்யத்தேவையில்லை. உபத்திரவம் கொடுக்காமல் இருந்தால் போதும். சின்னஞ்சிறிய பாக்டீரியா முதல், யானை வரை எண்ணிடலங்கா உயிர்களின் ஆதாரமாக விளங்கும் காடுகளுக்குள் பிளாஸ்டிக் பயன்பாடுத்தாமல் இருப்போம். வாகனங்களின் இரைச்சலால் விலங்குகளைப் பீதியடையச் செய்யாமல் இருப்போம். இயற்கையை எந்த விதத்திலும் பாழ்படுத்தாமல், வெறும் பார்வையாளனாகவே கடந்து விடுவோம். உயிர்ச்சங்கிலி உறுதிபெறும். ‘உலக பயோடைவர்சிட்டி’ நாளான இன்று, நமக்காக ஓய்வே இல்லாமல் உழைத்துக்கொண்டிருக்கும் உயிர்களை வணங்கி, நமது செயல்கள் மூலம் அவைகளுக்கு நன்றி செலுத்துவோம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்