வெளியிடப்பட்ட நேரம்: 19:32 (22/05/2017)

கடைசி தொடர்பு:19:29 (22/05/2017)

மனிதன் நிம்மதியாக வாழ யானைகள் காப்பாற்றப்பட வேண்டும்... ஏன்?

தடிமனான தோல் கொண்ட அந்தப் பெரிய உருவம், மண்ணில் மல்லாக்க விழுந்துக் கிடக்கும் அந்தப் படத்தை வாரத்துக்கு ஒரு முறையேனும் நாம் பார்ப்போம். " யானை மரணம் " என்ற செய்தி நமக்குப் பழக்கப்பட்ட ஒன்று தான். அந்த செய்திகள் நமக்கு ஒன்றும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிடுவதில்லை. யானைகள் சாவது யானைகளுக்கு மட்டும் கெடுதி அல்ல, அது மனிதர்களுக்கும்கூட பெரிய கேடு தான். இயற்கை, காடு, யானை, உயிர் இதுபோன்ற பெரிய காரணங்கள் வேண்டாம்... யானைகள் ஏன் உயிரோடு இருக்க வேண்டும் என்பதற்கும் மனித இனம் சிறப்பாக இருப்பதற்கும் சில முக்கிய  காரணங்கள் இருக்கின்றன.

1. கேன்சருக்கான மருந்து :

சமீபத்தில் சிகாகோ யூனிவர்சிட்டியில் மேற்கொண்ட ஓர் ஆராய்ச்சியில், யானைகளின் டிஎன்ஏ கேன்சர் செல்கள் பெருக்கத்தைத் தடுக்கும் திறனைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தனர். இது குறித்த தொடர் ஆராய்ச்சியிலிருந்து, கேன்சர் தடுப்பு மருந்துகளைக் கண்டறிய முடியும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். 

2. காது  கேட்கும் திறன் :

மனிதர்களின் காது கேட்கும் திறனும், யானைகளின் கேட்புத் திறனும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அளவில் தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக, மனிதர்களுக்கான காது பிரச்னைகள் குறித்த ஆராய்ச்சிகளுக்கு எலிகளைக் கொண்டுத் தான் சோதனை செய்வார்கள். ஆனால், எலிகளின் கேட்கும் திறன், மனிதர்களின் கேட்புத் திறனிலிருந்து மாறுபட்டது. 

மேலும், யானைகளுக்கு தரையில் ஏற்படும் அதிர்வுகளைக் கொண்டு உணரும் திறன் அதிகமாக இருக்கும். இது மனிதர்களுக்கும் இருக்கும் திறன் தான். இப்படியாக, யானைகளுக்கும் மனிதர்களுக்குமான இந்த ஒற்றுமைகளைக் கொண்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டால், நிறைய விஷயங்களைக் கண்டறிய முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மனிதர்களுடனான தொடர்பு யானை

3. மூட்டு வலிப் பிரச்னைகள் :

மனிதர்களுக்கு ஏற்படும் "ஆர்த்திரிட்டிஸ்" பிரச்னைகள் யானைகளுக்கும் அதிகம் ஏற்படும். நடக்கும் விதத்தில் தொடங்கி, மூட்டு அமைப்பு வரை யானைகளுக்கும், மனிதர்களுக்கும் நிறைய ஒற்றுமைகள். ஆர்த்திரிட்டிஸ் பிரச்னைகள் குறித்து, யானைகளில் நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

கால்களுக்கிடையேயான ஒற்றுமை

4. வயோதிகம் மற்றும் மாதவிடாய் :

யானைகளுக்கும், மனிதர்களுக்கும் கிட்டத்தட்ட ஒரே அளவிற்கான வாழ்நாள் தான் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதைக் கொண்டு வயது மூப்பு சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும் என்று சொல்லப்படுகிறது. அதே போல், மனிதர்களுக்கும், திமிங்கிலத்துக்கும், யானைகளுக்கும் மட்டுமே "மெனோபாஸ்" இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்த ஆராய்ச்சிகளும், மனிதர்களின் பல பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் என்று நம்பப்படுகிறது. 

5. வளமான காடுகளுக்கு யானைகள் அவசியம்:

ஒரு ஆப்ரிக்க யானை அதிகபட்சமாக ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 56 கிமீ வரை நடக்கும். அப்படி என்றால் ஒவ்வொரு நாளும் அவ்வளவு தூரத்துக்கு, விதைகளைப் பரப்புகிறது. யானையின் சாணத்திலிருக்கும் விதைகளை பல பறவைகள் விரும்பி உண்ணும். யானைகள் காடுகளைப் புதுப்பித்துக் கொள்ளவும் உதவுகிறது. பழைய மரங்களை உடைத்து உண்பதன் மூலம், புது மரங்கள் வளர இடம் ஏற்படுத்தித் தருகிறது. இப்படியாக, வளமான காடுகள் உருவாக்கத்தில் அவை பெரும் பங்கு வகிக்கின்றன. 

மரங்கள் ஒடிக்கும்

6. கிணறு தோண்டி, தண்ணீர் வழங்கும் :

யானைகளின் மிகப் பெரிய ஆச்சர்யத் திறன் இது. மோப்ப சக்தி கொண்டா அல்லது நீர் அதிர்வுகளைக் கொண்டா என்பது தெரியவில்லை... ஆனால், நீர் அவசியமான வறட்சிக் காலங்களில் நீர் இருக்கும் இடங்களைக் கண்டறிந்து, அந்த இடத்தைத் தோண்டி நீரை ஊற்றெடுக்க வைக்கும். அவைகளுக்கு மட்டுமல்லாது, இன்ன பிற விலங்குகளுக்கும், காடுகளில் வசிக்கும் பழங்குடிகளுக்கும் கூட இவை பல நேரங்களில் உதவியாக இருக்கும். 

தண்ணீர் கண்டுபிடிக்கும்

இன்றைய நிலையில், ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும் தான் யானைகள் பெருமளவில் இருக்கின்றன. இதில் ஆப்ரிக்க யானைகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது வேட்டை தான். இன்றும் அவை பல காரணங்களுக்காக ஆயிரக்கணக்கில் வேட்டையாடப் படுகின்றன. ஆசியாவில், யானைகள் வேட்டையாடப்படுவது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும்கூட அதன் இறப்புகளுக்கு முக்கிய காரணியாக இருப்பது வாழ்விடப் பற்றாக்குறை தான். அதன் வழித்தடங்கள் பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டதும், அதற்கான உயிர்ச்சூழலில் மனிதர்களின் தலையீடு அதிகமானதும் தான்  அழிவுக்கு வித்திட்டிருக்கிறது. 

காட்டில் வாழும்

வனம், வளங்கள், உயிர்கள், விலங்குகள், மரம், செடி, கொடி, இயற்கை... எல்லாம் கேட்டு, கேட்டு சலித்த வார்த்தைகளாக இருக்கலாம். நம் தேவைகளும், நம் வாழ்வும் மட்டுமே நமக்கு முக்கியமானவையாக இருக்கலாம். ஆனால், பூமி நமக்கு மட்டுமே சொந்தமானவை அல்ல என்பதை நாம் உணர வேண்டும். பிற உயிரினங்களிடமிருந்து நாம் சற்றே மாறுபட்டிருக்கிறோமே தவிர, மேம்பட்டு அல்ல என்பதை உணர வேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்