வெளியிடப்பட்ட நேரம்: 09:54 (23/05/2017)

கடைசி தொடர்பு:09:52 (23/05/2017)

அ.தி.மு.க அரசைக் கவிழ்க்க நடராசன் சதி? : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 45 

சசிகலா

தி.மு.க ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வைத்து, முதல்வர் நாற்காலியைக் கைப்பற்றினார் ஜெயலலிதா. ஆனால், “தனது ஆட்சிக்கும் அப்படிப்பட்ட நிலை ஏற்படுமோ... தன்னிடம் இருக்கும் முதல்வர் நாற்காலியையும் டெல்லி பறித்துவிடுமோ...” என்ற அச்சத்திலேயே ஜெயலலிதா நாள்களை நகர்த்திக் கொண்டிருந்தார். நடராசன் அப்படியானதொரு இனம் புரியாத பயத்தை ஜெயலலிதாவிடம் ஒவ்வொரு நாளும் உருவாக்கிக் கொண்டே இருந்தார். ஜெயலலிதாவால் நடராசனை கணிக்கவும் முடியவில்லை; கட்டுப்படுத்தவும் முடியவில்லை. ஜெயலலிதாவின் எண்ணத்திற்கேற்ப நடராசனின் நடவடிக்கைகளும் புரியாத புதிராகவே இருந்தன. 

ஜெயலலிதாவை எச்சரித்த நரசிம்மராவ்!

1991-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா சில மாதங்கள் கழித்து, பிரதமர் நரசிம்மராவை டெல்லியில் போய்ச் சந்தித்தார். பல விஷயங்கள் நரசிம்ம ராவ், ஜெயலலிதாகுறித்து ஜெயலலிதாவிடம் பேசிய நரசிம்மராவ் இறுதியில், “நடராசன் என்பவர் யார்? உங்கள் கட்சியில் அவர் என்ன பொறுப்பில் இருக்கிறார். அவர் அடிக்கடி அ.தி.மு.க எம்.பி-க்களை அழைத்து வந்து மத்திய அமைச்சர்களை சந்திக்கிறாரே. யார் அவர்... கட்சியில் அவர் என்ன பொறுப்பில் இருக்கிறார்...?” என்று கேட்டு பொடி வைத்தார். பிரதமர் வாயில் இருந்து நடராசனின் பெயரைக் கேட்ட ஜெயலலிதா அந்த இடத்திலேயே கொஞ்சம் உறைந்து போனார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமலேயே பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த ஜெயலலிதா, அ.தி.மு.க எம்.பி-க்களை அழைத்து திட்டித் தீர்த்தார். “நடராசனுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று நான் பலமுறை உங்களை எச்சரித்துள்ளேன்; ஆனால், நீங்கள் அதைப் பொருட்படுத்தவே மாட்டேன் என்கிறீர்கள்; இனிமேல் நடராசனோடு தொடர்பு வைத்துக் கொண்டு நீங்கள் ‘லாபி’ செய்வது எனக்குத் தெரியவந்தால், என் நடவடிக்கை கடுமையானதாக இருக்கும்” என எச்சரித்துவிட்டு தமிழகம் திரும்பினார். தமிழகம் வந்ததுமே, அப்போது உளவுத்துறை டி.ஐ.ஜியாக இருந்த பஞ்சாபகேஷனிடம் நடராசன் விவகாரங்கள் குறித்து ரிப்போர்ட் கேட்டார். அவர் அளித்த ரிப்போர்ட் ஏற்கெனவே அதிர்ச்சியில் இருந்த ஜெயலலிதாவுக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது. “அந்த அளவுக்கு அரசாங்கத்தின் எல்லா இடத்திலும் நடராசனின் ஆதிக்கம் இருந்தது” என அந்த ரிப்போர்ட் தெளிவுபடுத்தியது. ‘பாம்பறியும் பாம்பின் கால்’ என்பதற்கேற்ப, “நம்மைக் கவிழ்த்துவிட்டு, ஆட்சியில் அமர நடராசன் திட்டமிடுகிறார்” என்றே ஜெயலலிதா கருதினார். 

அடுத்த முதல்வர் நடராசனா?

ஜெயலலிதாவின் இரும்புக்கரம் நடராசனுக்கு எதிராக நீண்டது. 1992 ஆகஸ்ட் 2ஆம் தேதி தஞ்சையில் நடராசன், ‘தமிழ் அரசி’ பத்திரிகையின் வாசகர் வட்ட சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்தப் பத்திரிகையின் ஆசிரியர், வெளியீட்டாளர் எல்லாம் நடராசன்தான். நிகழ்ச்சிக்கு முதல் நாள் போலீஸ் நடராசனைச் சந்தித்து, ‘உங்களுக்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி இல்லை’ என்றது. அதோடு, நடராசனை ஏறத்தாழ வீட்டுச் சிறையில் வைத்ததுபோல் அவரை நகரவிடாமல் வைத்தது. நடராசன் கொந்தளித்தார். ஆனாலும் அவரால் நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை. அதன் பிறகு  சுப்பிரமணிய சாமி சென்னையில் ஒரு புத்தகம் வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் நடராசனும் கலந்துகொண்டார். பூச்செண்டு, தஞ்சாவூர் தட்டு எல்லாம் கொடுத்து சுவாமியை நடராசன் குஷிப்படுத்தினார். அப்போது நடராசனோடு வந்த சிலர், “50 எம்.எல்.ஏ-க்கள் அண்ணன் பின்னால்தான் இருக்கின்றனர்” என்றனர். அதைக் கேட்டு சிரித்த சுவாமி, “ஓகோ... அப்போ தமிழ்நாட்டுக்கு அடுத்த சி.எம். நடராஜன்தானா” என்றார். இந்தத் தகவலும் ஜெயலலிதாவை எட்டியது.

சுப்பிரமணிய சாமி, நடராசன்

A to Z.... Z to A....

ஜெயலலிதாவின் நடவடிக்கைகளால் வெறுத்துப்போய் இருந்த நடராசனும் தன் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை. அவர் வழக்கம்போல் அவர் பாதையில் மாயமானைப் போல் காட்சி அளித்துக் கொண்டிருந்தார். இந்தியன் வங்கி சார்பில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்ட நடராசன், “A இருக்க வேண்டிய இடத்தில் Z-ஐப் போட்டு, Z இருக்க வேண்டிய இடத்தில் வேறொன்றைப் போட்டு, இன்றைக்கு அரசியலில் Z-யை A-ஆக்கியிருக்கிறேன். நான் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் Z-யை காலி செய்து அந்த இடத்துக்கு A-வைக் கொண்டு வருவேன்” என்றார்.

சசிகலா - நடராசன்

இவை எல்லாவற்றையும் கேட்ட ஜெயலலிதா பத்திரிகைகளுக்கு காட்டமாக ஒரு அறிக்கையைக் கொடுத்தார்.  அதில், “கழகத்தின் ஆட்சியைக் கவிழ்க்க நடராசன் சதித் திட்டம் தீட்டுகிறார். அதனால், அவரோடு கழகத்தினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது” என்று குறிப்பிட்டு இருந்தார். அதோடு நடராசனோடு நெருங்கிய தொடர்பில் இருந்த தேனி பன்னீர் செல்வம், சிவகங்கை முருகானந்தம், நெல்லை வேலய்யா, பால்ராஜ், ஆர்.பி.ஆதித்தன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தார். ஆனால், அப்போதும் சசிகலா ஜெயலலிதாவுடனேயே இருந்தார். தன் சொந்தத் தம்பி திவாகரனை துரத்திவிட்டபோதும் சசிகலா ஜெயலலிதாவுடனே இருந்தார். தனது அண்ணன் விநோதகனை ஜெயலலிதா துரத்தி விட்டபோதும் சசிகலா ஜெயலலிதாவுடனே இருந்தார். தனது அக்காள் மகன் தினகரனை ஜெயலலிதா துரத்திவிட்டபோதும் சசிகலா ஜெயலலிதாவுடன்தான் இருந்தார். தன் கணவர் நடராசனை ஜெயலலிதா துரத்தி துரத்தி அடித்தபோதும் சசிகலா, ஜெயலலிதாவுடனே இருந்தார். ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாத நடராசன் நேராக போயஸ் கார்டனுக்கு கிளம்பிப்போய், “உங்களை ஆட்சியில் அமர்த்தப் பாடுபட்டவன் நான்... என்னை சந்தேகிக்கிறீர்கள்.. என்னை வெளியில் அனுப்பிவிட்டு, என் ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கி விட்டீர்கள். அதுபோல, சசியையும் அனுப்பிவிடுங்கள். உங்களுக்கு உதவி செய்வதற்கு மட்டும் சசி வேண்டுமா? என்று சத்தம் போட்டார். ஆனால், அந்தச் சத்தம் வெறுமனே காற்றில் கரைந்து காணாமல் போனது. ஜெயலலிதாவும் சசிகலாவை அனுப்பிவிடவில்லை; சசிகலாவும் ஜெயலலிதாவை விட்டு விலகிவிடவில்லை. 

கதை தொடரும்....

இந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்...


டிரெண்டிங் @ விகடன்