அ.தி.மு.க-வின் அசரடிக்கும் ஓராண்டு சாதனை! - அவல நகைச்சுவை

மிழக அரசியல் வரலாற்றில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க இரண்டாவது முறையாக ஆட்சி அரியணையைத் தொடர்ந்து தக்கவைத்து சாதனை படைத்தது. கடந்த ஆண்டு இதே மே 23-ம் தேதி ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றபோது, தமிழக மக்களும் அவரிடம் நிறைய எதிர்பார்த்தார்கள்; ஜெயலலிதாவும் தனது தலைமைக்கு தமிழக மக்கள் கொடுத்த மிகப்பெரிய அங்கீகாரத்துக்கு நன்றிக் கடனாய் பல்வேறு நலத்திட்டங்கள் உள்ளிட்ட மக்கள் பணிகளைச் செயல்படுத்தும் ஆர்வத்தோடு முதல்வராகப் பொறுப்பேற்றார்.

ஆனால்....

ஜெயலலிதா

ஜெயலலிதாவின் மன வலிமைக்கு ஈடாக அவரது உடல் வலிமை இல்லாமல் போனது தமிழகத்தின் துரதிர்ஷ்டம். தொடர்ந்து உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தவர், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்துவந்தார். இறுதியாக, அவர் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சி... விமானநிலையம் - சின்னமலை மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாதான். அந்த நிகழ்விலும் அவரால் நேரடியாகக் கலந்துகொள்ள இயலவில்லை; காணொளி காட்சிமூலம்தான் தொடங்கிவைத்தார். 

இப்படிப் போய்க்கொண்டிருந்த சூழ்நிலையில்தான் திடீரென செப்டம்பர் 22 ஆம் தேதி இரவு 'காய்ச்சலால்' பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து மருத்துவமனை சிகிச்சையில் அவர் இருந்த 75 நாள்களும், மர்மமும் சர்ச்சைகளாகவும் கடந்துபோயின. இந்தநிலையில், டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு அந்த அதிர்ச்சி செய்தியை அறிவித்தது மருத்துவமனை.... 'தமிழக முதல்வர் ஜெயலலிதா, திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார்'

நாடே துக்கக் கடலில் மூழ்கிக் கிடந்தபோதும், 'அடுத்து செய்யவேண்டியது என்ன?' என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் மட்டும் சுறுசுறுப்பாகக் களமாடினர். ஜெயலலிதா, சொத்துக்குவிப்பு வழக்கில், சிறை சென்றபோது தாடி வளர்த்து, சோக மயமாக அழுது புலம்பி கண்ணீர் வடித்த அவரது அமைச்சரவை சகாக்கள் அனைவரும், ஜெ.மறைந்த அன்றைய தினம் நள்ளிரவே புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தை தேர்ந்தெடுத்து அவசர அவசரமாகப் பொறுப்பேற்று அனைவரையும் வியக்கவைத்தனர்.

ஓ.பன்னீர்செல்வம்

அன்னையை இழந்த குழந்தையாக பரிதவித்துக்கிடந்த அ.தி.மு.கவைக் காப்பாற்றுமாறு அக்கட்சியைச் சேர்ந்த அனைத்து தலைவர்களும் 'சின்ன அம்மா' சசிகலாவை வற்புறுத்தினர். அவர்களது கோரிக்கையை ஏற்க துளியும் விருப்பம் இல்லாதிருந்த நிலையிலும், அ.தி.மு.க-வின் எதிர்கால நலன் கருதி கட்சியின் பொதுச்செயலாளராக வேண்டா வெறுப்பாக பொறுப்பேற்றுக்கொண்டார் சசிகலா. அதன்பிறகும், 'கட்சியும் ஆட்சியும் ஒரே நபரிடம்தான் இருக்கவேண்டும்' என்று மறுபடியும் அ.தி.மு.க-வில் இருந்தே குரல்கள் ஒலிக்கத் தொடங்க... மறுபடியும் வேண்டா வெறுப்பாக சசிகலாவே தமிழக முதல்வராகப் பொறுப்பேற்பதற்கான ஆயத்த வேலைகள் அரங்கேறின. முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் எந்த கேள்வியும் கேட்காமல், பிப்ரவரி 5ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்து சசிகலா முதல்வர் பொறுப்பேற்க வசதியாக சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றார்.

ஆனால்....

திடீரென பிப்ரவரி 7ஆம் தேதி இரவு மெரினா கடற்கரையில் உள்ள ஜெ. சமாதிக்கு வந்தமர்ந்த ஓ.பன்னீர்செல்வம் தியானத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து 40 நிமிடங்கள் ஜெ. ஆன்மாவுடன் அவர் நடத்தியப் பேச்சுவார்த்தையின் பலனாக அவருக்கு திடீர் ஞானோதயம் ஏற்பட்டது. மெரினாவில் கூடிய அத்தனைப் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ''முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யுமாறு சசிகலா கும்பலால் நான் மிரட்டப்பட்டேன்'' என்று துணிச்சலாகப் பேசி கண் கலங்கினார். ஒட்டுமொத்த தமிழகமும் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலையைப் பார்த்து கதறித் துடித்தது.

அதன்பிறகு நடைபெற்ற தமிழக அரசியல் மாற்றங்கள் எல்லாம் திட்டமிட்டு எழுதி முடிக்கப்பட்ட திரைக்கதையாக.... மென்பொருள் கட்டளைகளுக்கு அடிபணியும் கணினியாக இயங்கத் தொடங்கியதுதான் ஆச்சர்யம். 

சசிகலா

'சசிகலாவை முதல்வராக்கியேத் தீருவது' என்று கங்கணம் கட்டிக்கொண்டு கூவத்தூர் சொகுசுவிடுதிக்குள் போய் தானாக அடைபட்டு, 'மகிழ்ச்சி' தவம் இருக்க ஆரம்பித்தனர் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள். மர்மப் புன்னகையோடு க்ரீன்வேஸ் சாலை வீட்டிலேயே தனி அணி சேர்த்துக் கொண்டிருந்தார் ஓ.பன்னீர்செல்வம். இதற்கிடையில், சொல்லிவைத்தது போல் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை கிடைத்தது சசிகலாவுக்கு. வேறு வழியின்றி தனது முழு ஆதரவோடு முதல்வர் பொறுப்பில் எடப்பாடி பழனிசாமியை அமரவைத்த சசிகலா, சிறைத்தண்டனையை அனுபவிக்க ஆயத்தமானார். கடைசி நிமிடத்தில் என்ன நினைத்தாரோ... தலைமை யாரும் இன்றி திக்கற்று நின்ற அ.தி.மு.க-வை வழிநடத்த தனது அக்காள் மகன் டி.டி.வி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்துவிட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு ஆக்ஸிலேட்டரை மிதித்துக் கிளம்பினார். துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி தினகரனை நியமனம் செய்த சசிகலாவின் தொலைநோக்குப் பார்வையை பாராட்ட மனமின்றி 'குடும்ப அரசியல், வாரிசு அரசியல்' என்று வாரித் தூற்றினர் தமிழக அரசியல்வாதிகள்.

32 வருடங்கள் ஜெயலலிதாவோடு அரசியல் கற்றிருந்த சசிகலாவின் இந்தக் காய் நகர்த்தல்களை எல்லாம், இஷ்டத்துக்கு கலைத்துப்போட்டு ஆட ஆரம்பித்தனர் டில்லி ராஜாக்கள். ஆர்.கே. நகர் தேர்தல் அறிவிப்பு, பணப்பட்டுவாடா, இரட்டை இலை முடக்கம், தொப்பி, மின்விளக்கு, அம்மா அ.தி.மு.க, புரட்சித்தலைவி அம்மா அ.தி.மு.க... என்று கடந்த சில மாதங்கள் தமிழக அரசியலை சுத்தவிட்டவர்கள்... 'தேர்தல் கமிஷனுக்கே கமிஷன் கொடுக்க முயன்றதாக'க் கூறி டி.டி.வி தினகரனையும் திகாருக்கு அனுப்பி வைத்தனர். இத்தனைக் களேபரங்களுக்கு மத்தியில், காவிரிப் பிரச்னை, வரலாறு காணாத வறட்சி, விவசாயிகள் தற்கொலை, நிர்வாணப் போராட்டம், நீட் தேர்வு... என கொசுறு செய்திகளும் தமிழக செய்தி வரிசையில் அவ்வப்போது இடம்பிடித்தன. இந்தப் பிட் செய்திகளால், உருகிப்போன அமைச்சர் ஒருவர், தமிழகத்தின் தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்குவதற்காக, தெர்மக்கோலால் வைகை அணையை மூடி வரலாற்றுப் புகழ் பெற்றது தமிழகத்தின் பெருமை!

அ.தி.மு.க.

சசிகலா சொந்தங்கள் தமிழகத்தைவிட்டே வெளியேறிவிட்ட சூழலில், 'மறுபடியும் முதலில் இருந்து....' எனப் புது ரூட் பிடித்த ரத்தத்தின் ரத்தங்கள்.... 'அ.தி.மு.க அணிகள் இணைப்பு' என்று அடுத்த அட்ராசிட்டியை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். 'நிபந்தனை இல்லை', 'நிபந்தனை உண்டு', 'அமாவாசை இருட்டில் பெருச்சாளி போவதெல்லாம் வழி'.... என்று இந்த விளையாட்டும் என்டர்டெயின்மென்ட்டுக்கு பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.  இதற்கிடையில், கொங்கு மண்டல எம்.எல்.ஏ-க்கள் 8 பேர் தனிக்கூட்டம் நடத்தி எடப்பாடி தலைமையிலான ஆட்சிக்கே செக் வைக்கும் முயற்சியில் அறிவிப்பு வெளியிட்டு அடிவயிற்றைக் கலக்கியிருக்கிறார்கள். 
இத்தனை சங்கதிகளுக்கு இடையிலும், 'அ.தி.மு.க-வின் ஒரு வருட ஆட்சி சாதனை' எப்படி?' என்று கேள்வி கேட்பவர்களுக்குப் பதில்... 'இருட்டில் கறுப்புப் பூனையைத் தேடும் கதைதான்!'

Do you like the story?

Please Appreciate the Author by clapping!