வெளியிடப்பட்ட நேரம்: 20:34 (22/05/2017)

கடைசி தொடர்பு:20:57 (22/05/2017)

அமெரிக்க ஐடி வேலை அவ்வளவு மோசமில்லை! - ஒரு வாசகரின் பார்வை #ITLayoffs #ITCrisis

அமெரிக்காவில் பணிபுரியும் ஐடி ஊழியர்களின் நிலை குறித்தும், அத்துறையில் அதிகரித்து வரும் வேலை இழப்புகள் குறித்தும் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.  மினிசோட்டா நகரில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு தமிழரின் அனுபவமே அந்தக் கட்டுரையின் உள்ளடக்கம். 

ஐடி

இந்தியாவில் சுமார் 38 லட்சம் பேர் ஐ.டி துறையைச் சார்ந்திருக்கிறார்கள். அமெரிக்காவில் வசிக்கும் 30 லட்சம் இந்தியர்களில் சரிபாதி பேர் ஐ.டி துறையில் பணியாற்றுபவர்கள்தான். இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் ஐ.டி துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. 

ஐ.டி துறையில் ஆட்குறைப்பு என்பது மிகவும் இயல்பானது தான். ஆனால், தற்போது நடந்து வரும் ஆட்குறைப்பானது மிகவும் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. ஐ.டி.துறையின்  ஆணிவேராக இருக்கும் அமெரிக்காவில் நடந்துள்ள அரசியல் மாற்றமே அதற்குக் காரணம். புதிய அதிபராகப் பொறுப்பேற்றிருக்கும் டிரம்ப்,  'அமெரிக்க வேலை அமெரிக்கர்களுக்கே' என்ற சிந்தாந்தத்தை  கையில் எடுத்திருப்பதும், ஆன்சைட் பணிகளுக்காக அமெரிக்கா செல்லப் பயன்படுத்தும் ஹெச்-1 பி விசாவுக்கான விதிமுறைகளை கடினமாக்கியிருப்பதும் ஐ.டி ஊழியர்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

பெரிய நிறுவனங்கள் பலவும் ஆட்குறைப்புக்கு தயாராகி வருவதாகச் சொல்லப்பட்டு வரும் நிலையில், அதுபற்றி பொது வெளியில் எவ்வித எதிரொலிப்பும் இல்லை. அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய ஐ.டி. ஊழியர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளவும், அதை சமூகக் கவனத்துக்குக் கொண்டு செல்லவுமே நாம் அமெரிக்காவில் பணியாற்றும் அந்த ஊழியரின் அனுபவத்தை, அவரது நலன் கருதிப் பெயர் குறிப்பிடாமல் வெளியிட்டோம். 

ஆனால், அமெரிக்காவில் ஐ.டி துறையில் பணிபுரியும் சிலர் அவரது கருத்தை மறுக்கிறார்கள்.  இதுமாதிரியான கருத்துகள் ஒட்டுமொத்தமாக அமெரிக்க வேலை குறித்து தவறான எண்ணத்தையும் அச்சத்தையும் உருவாக்கி விடும் என்ற கவலையையும் அவர்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். 

ஐடி.துறை

"இங்கு காவல்துறை எல்லோரையும் சமமாகத்தான் பாவிக்கிறது. மேலும், யாரிடம் விசாரணை செய்தாலும் அவர்களின் கைகள் கைத்துப்பாக்கி மீது இருக்கும். இது மிரட்டுவதற்காக அல்ல. அவர்களின் தற்காப்புக்காக.  வேலைக்காக செல்பவர்கள், குறிப்பிட்ட நிறுவனத்தை விட்டு வேறு நிறுவனத்துக்கு வேலை செய்ய முடியாது. சுயமாக தொழில் செய்ய முடியாது என பல கட்டுப்பாடுகள் உள்ளன. இவர்களை அதிகம் வேலை வாங்குவது அமெரிக்க நிறுவனங்கள் அல்ல. நம்மை அங்கே அனுப்பும் இந்திய நிறுவனங்கள்தான். இரண்டுபேர் செய்ய வேண்டிய வேலையை ஒருவர் தலையில் கட்டிவிடுவார்கள்.  பெரும்பாலான இந்தியர்கள் வீடுகளில் சொந்த சமையல்தான். இது செலவையும் குறைக்கும், உடம்பையும் பாதுகாக்கும்.  வளைகுடா நாடுகளில் வீட்டு வேலை செய்வோரின் நிலை உலகறியும். சுதந்திரம் என்பதே கிடையாது. அமெரிக்காவில் அப்படி இல்லை. அதனால் அந்த ஒப்பீடே தவறு.  அமெரிக்காவில் சம்பளம் குறைவு என்ற குற்றச்சாட்டு தவறு. இந்திய சம்பளத்தை ஒப்பிடும்போது அதிகமே. மேலும் குறைத்து கொடுப்பது இந்திய நிறுவனங்களே..." என்று வெங்கட் என்ற வாசகர் நமக்குப் பின்னூட்டம் மூலம் தெரிவித்திருக்கிறார்.

இன்னும் சில வாசகர்களும் 'கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் வாசகரின் அனுபவத்தைப் பொதுமைப்படுத்தக்கூடாது' என்றும் 'இதுமாதிரியான கருத்துகள் ஒட்டுமொத்தமாக அமெரிக்கா ஐ.டி. நிறுவனப் பணிகள் குறித்தே தவறான பிம்பத்தை உருவாக்கிவிடும்' என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

எல்லா விஷயங்களிலும் ஒவ்வொருவருக்குமான பார்வையும், அனுபவமும் வேறுபடவே செய்யும். அமெரிக்கப் பணி விஷயத்துக்கும் அது பொருந்தும். அந்த அடிப்படையில் வெங்கட்டின் கருத்தையும் வாசகர்கள் முன் வைக்கிறோம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்