வெளியிடப்பட்ட நேரம்: 13:03 (23/05/2017)

கடைசி தொடர்பு:14:36 (23/05/2017)

கொஞ்சம் மனது வையுங்கள் Mr.மோடி அண்ட் கோ! #IndiaInCrisis #VikatanExclusive

நரேந்திர மோடி

தார்த்தமாகக் கண்ணில்பட்ட தரவுகள் எதுவும் மகிழ்ச்சியளிப்பதாக இல்லை. அதுவும் கிடைத்த தகவல்களை, படித்த விஷயங்களை ஒன்றோடு ஒன்று பொருத்திப் பார்த்தால், நம் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து பெரும் அச்சம் தோன்றுகிறது. இல்லை... இல்லை... நாம்தான் எல்லாவற்றையும் மிகையாக எடுத்துக்கொள்கிறோம்... அப்படியெல்லாம் ஒன்றும் ஆகாது என்று நம்மை நாமே சமாதானம் செய்துகொண்டு ஆய்வாளர்களுடனும், செயற்பாட்டாளர்களுடனும் உரையாடினால் அவர்களும், நமக்குக் கிடைத்த, நாம் படித்த தகவல்களையே உறுதி செய்கிறார்கள். மாறி வரும் உலக அரசியல் சூழ்நிலைகளும் நம் அச்சத்துக்கு இன்னும் வலுவூட்டுவே செய்கிறது. சரி... பீடிகைகள் மூலம் உங்களை அச்சப்படுத்த, அயர்ச்சியூட்ட விரும்பவில்லை. எமது அச்சத்துக்கான காரணங்கள் இவைதாம்:

பருவநிலை மாற்றமும்... இடப்பெயர்வும்:

'மாறிவரும் பருவநிலை பண்பாட்டுரீதியாக, வாழ்வியல்ரீதியாக, பொருளாதாரரீதியாக மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரப் போகிறது' என்கிறது ஓர் ஆய்வு. ஏற்கெனவே, பல்வேறு பொருளாதாரக் காரணங்களால், விவசாயம் என்பது லாபமற்ற தொழிலாக மாறிவிட்ட இந்தியச் சூழலில், பருவநிலை மாற்றமானது இப்போது வளமான விவசாய பூமியாக இருக்கும் நிலப்பகுதியில் 24 சதவிகிதம் விரைவில் தரிசாக மாறும். இதன் காரணமாக ஒரு மிகப்பெரிய இடப்பெயர்வு இந்தியாவில் நிகழப்போகிறது. ஆசியக் கண்டத்தைப் பொறுத்தவரை இந்தப் பருவநிலை மாற்றமானது, 50 கோடி மக்களின் வாழ்வாதாரத்தில் ஊறு விளைவிக்கப்போகிறது. இந்திய அளவில் இந்த மாற்றமானது, 5 கோடி மக்களைப் பருவநிலை அகதிகளாக மாற்றி வேர்களிலிருந்து தூக்கி எறியப் போகிறது. அது மட்டுமல்லாமல் இது மிகப்பெரிய பஞ்சத்தையும் கொண்டுவரப் போகிறது.

அமிதவ் கோஷ் எழுதிய, ‘The Great Derangement' என்ற சூழலியல் கட்டுரைத் தொகுப்பு நூலில், “இமயமலை பனிப்பாறைகள் இதே வேகத்தில் உருகினால், அதிகபட்சமாக இன்னும் இரண்டு தசாப்தங்களில், இந்தியா உள்பட ஆசியாவின் பெரும்பாலான நாடுகள் மிகப்பெரிய தண்ணீர்ப் பஞ்சத்தைச் சந்திக்கும். ஏற்கெனவே, உலகத்தின் பெரும்பாலான நதிகள் எதுவும் கடலைச் சென்றடைவதே இல்லை” என்று எச்சரிக்கிறார். தண்ணீர்ப் பஞ்சம் வருவதும், நிலம் பாலையாக மாறுவதும்... அதன் தொடர்ச்சியாக ஒரு பெருங்கூட்டம் அகதிகளாக மாறிச் சொந்த தேசத்திலேயே திரியப் போவதும் வெவ்வேறு நிகழ்வுகள் அல்ல. 

இமயமலை

அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை:

பருவநிலை மாற்றமும், அது கொண்டு வரப் போகும் விளைவுகளும் வர இருக்கும் பிரச்னை என்றால், தற்போது இருக்கும் பிரச்னை அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மையே.

வேறு எந்தப் புள்ளி விபரத்தையும் எடுக்கவில்லை... அரசு கொடுத்திருக்கும் கணக்கே, கடந்த காங்கிரஸ் ஆட்சியைவிட, வேலைவாய்ப்பின்மை இந்த ஆட்சியில் உயர்ந்திருக்கிறது என்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது... நரேந்திர மோடி, ''ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உண்டாக்குவேன்'' என்றார். ஆனால், தேசம் அந்தத் திசையில் பயணிப்பதாகத் தெரியவில்லை. நம் தேசத்தில் 2015-ல் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் 1.35 லட்சம், அதேபோல 2016 ஏப்ரல் - டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் 2.31 லட்சம். ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் 2009-ல் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள்  12.65 லட்சம், 2013-ல் 4.19 லட்சம் மற்றும் 2014-ல் 4.93 லட்சம். ஐ.நா-வின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு, “இந்தியாவில் 2016-ல் 1.77 கோடியில் இருந்த வேலைவாய்ப்பின்மை, இந்த ஆண்டு, 1.78 கோடியாக உயர்ந்து, 2018-ல் 1.8 கோடி ஆகும்” என்று கூறுகிறது. 

இதில், பி.ஜே.பி அரசை மற்றும் குற்றம் சொல்லி ஒன்றுமில்லை. மாறிவரும் பொருளாதாரச் சூழ்நிலையால், சர்வதேச அளவில் இத்தகைய கவலைதரும் சுழல்தான் நிலவுகிறது. 

வெளியேறு... எங்கள் வாய்ப்பைக் கொடு:

வேலையில்லாத் திண்டாட்டம் என்பது இப்போது சர்வதேச பிரச்னை. வளம் கொழிக்கும் நாடுகள், சொர்க்கபுரியாகக் கருதப்பட்ட மேற்கத்திய நாடுகள் அனைத்திலும் இப்போது இதுதான் நிலைமை. டொனால்ட் ட்ரம்ப், “உண்மையில் அமெரிக்காவில் உள்ள வேலைவாய்ப்பு பிரச்னை, அரசு தரும் புள்ளிவிபரங்களைக் காட்டிலும் அதிகம்” என்கிறார். அதற்குக் காரணமாக அவர் கைகாட்டுவது உலகமயமாக்கலை. ''எந்தச் சித்தாந்தம் ஒரு காலத்தில் எண்ணற்ற வேலைவாய்ப்புகளை வழங்கியதோ, இப்போது அதே சித்தாந்தம்தான் பிரச்னை'' என்கிறார். தங்கள் வாய்ப்புகள் எல்லாம் வேறு யாருக்கோ செல்கிறது. அது ஒரு தரப்பை, அதாவது மிகக் குறைந்த மக்களுக்கு மட்டும் வளத்தை அளித்திருக்கிறது என்று உலகமயமாக்கலைக் கழுவேற்றி, மண்ணின் மக்களுக்கே கோஷம்'' என்கிறார். அதாவது, இப்போது அவர்களது கோஷம், “வெளியாரே... வெளியேறு... மண்ணின் மக்களுக்கு மட்டுமே வேலை” என்பதுதான். 

இப்போது, இந்த மூன்று புள்ளிகளையும் ஒன்றோடு ஒன்று பொருத்திப் பாருங்கள். ஒருபக்கம், பருவநிலைமாற்றம் இந்தியாவில் ஏறத்தாழ 5 கோடி மக்களைப் பருவநிலை அகதிகளாக திரியவிடப் போகிறது, இன்னொரு பக்கம் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துக்கொண்டே போகிறது. உலகளாவிய அளவில் மண்ணின் மக்களுக்கே வேலை என்ற கோஷம். இதனோடு நம் எதிர்காலத்தையும் பொருத்திப்பார்த்தால், அச்சமாக இருக்கிறதுதானே...? ஆனால், இதுதான் இப்போது நமது நிலை. அச்சப்படுத்தவெல்லாம் சொல்லவில்லை... வேலை இல்லை என்றால், பருவநிலை அகதிகளாகத் திரிய நேரிட்டால் என்ன நடக்கும்...? கலகம்தான் வெடிக்கும். 

அரசர்கள் ஆள்வதற்காகவாவது தேசம் வேண்டும்.  தயவுசெய்து இந்தப் பிரச்னைகளிலும் கொஞ்சம் மனதுவையுங்கள்  Mr. மோடி...!. இது உலகளாவிய சிக்கல்தான், நீங்கள் மட்டும் தனியாக எதுவும் செய்துவிட முடியாது. ஆனால், இந்திய அளவில் சூழலியலுக்கு உகந்த, தற்சார்பு பொருளாதாரத்துக்கான சில கொள்கை முடிவுகளை எடுக்கலாம்.

எந்தப் பன்மைத்துவமும் இல்லாமல் நீங்கள்தான் இப்போது இந்தியாவின் முகமாக இருக்கிறீர்கள். அதனால்தான், துறை சார்ந்த கோரிக்கை வைக்காமல் நேரடியாக உங்களிடமே சொல்கிறோம், “கொஞ்சம் மனதுவையுங்கள்  Mr. மோடி”.  

பின் குறிப்பு:

தமிழ் பொதுச் சமூகம், தமிழகத்தையும் மறைமுகமாக மத்திய அரசுதான் ஆள்கிறது என்று கருதுவதால்தான்  தமிழக அரசு ஓராண்டு நிறைவு செய்யும் நாளில், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்காக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறோம்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்