வெளியிடப்பட்ட நேரம்: 13:36 (23/05/2017)

கடைசி தொடர்பு:13:36 (23/05/2017)

காட்டை விட்டு நகரங்களுக்கு நகரும் சிறுத்தைகள்... என்ன காரணம்?

நேரம் இரவு பத்து மணி, ஊருக்குள் விநோத அலறல் சத்தம் ஒன்று கேட்டுகொண்டேயிருக்கிறது, இரவென்பதால் அனைவரும்  வீட்டை விட்டு வெளியே வர பயப்படுகிறார்கள். முப்பது நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்த அலறல் சத்தம் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஓய்ந்துப் போகிறது. காலை ஆறு மணிக்கு வீட்டிற்கு வெளியே வருகிற ஒருவர் பதறி அடித்து காவல் துறைக்கும் வனத்துறைக்கும்  தகவல் தெரிவிக்கிறார்.  "சார்... இங்க ஒரு சிறுத்தை சுருக்குல மாட்டி செத்து கெடக்கு சார்" 

சிறுத்தை

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பதினைந்திற்கும் மேற்பட்ட சிறுத்தைகள் இறந்திருக்கின்றன. காடுகளில் சரியான உணவில்லாமலும் தண்ணீர் இல்லாமலும் குடியிருப்புப் பகுதிகளுக்கு வருகிற சிறுத்தைகள் மட்டும் எப்படி சாகின்றன?  உண்மையில் அவை சிறுத்தைகளுக்கு வைக்கப்பட்ட சுருக்கே அல்ல என்கின்றனர் கிராம மக்கள். அப்படியெனில் யாருக்கு வைக்கிற சுருக்கில் மாட்டி சிறுத்தைகள் சாகின்றன என்கிற கேள்வி எழலாம். 

இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேல் விவசாயம் செய்கிற உள்ளூர் விவசாயி  ஒருவரைச் சந்தித்து இது குறித்து  கேட்டபோது  " இருபது  வருடங்களுக்கு முன்  விவசாயத் தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் பன்றிகளை விரட்ட பயன்படுத்தப்பட்ட முறைக்கு  "பன்னிக்காய் "  என்று பெயர். வெடிமருந்தை  ஒரு காகிதத்தில் சுற்றி, அதை ஒரு பந்து போல மாற்றி விவசாய தோட்டங்களில் வைத்து விடுவார்கள். பந்தை அழுத்தினால் வெடிக்கும்படியாக  "பன்னிக்காய்" வடிவமைக்கப்பட்டிருக்கும். தோட்டத்திற்கு வருகிற பன்றிகள் அதை கடித்ததும் பன்னிக்காய் பெரிய சத்தத்துடன் வெடித்து விடும். வாய் வெடித்ததில் சில பன்றிகள் தப்பித்து ஓடி விடும். சில பன்றிகள் இறந்துவிடும். கால ஓட்டத்தில் வெடிமருந்து என்பது தீவிரவாதமாக பார்க்கப்பட்டதாலும், வெடி சத்தம் காட்டிக் கொடுத்துவிடும் என்பதாலும்,  பயந்து போன வேட்டையர்கள் கையில் எடுத்த முறைதான் "சுருக்கு" “ என்கிறார். 

மோட்டார் சைக்கிளின் பிரேக் கேபிள்தான்  "சுருக்கு". கேபிளை வளையம் போல் செய்து விலங்குகள் நடமாட்டம் இருக்கிற பகுதிகளில் வைத்து விடுவார்கள். சுருக்கு இருக்கிற பக்கம் வருகிற விலங்குகள், சுருக்கில் காலையோ, தலையையோ கொடுத்து விடும்.  அடுத்த நொடி சுருக்கு அந்த விலங்கின் காலையோ கழுத்தையோ இறுக்கிவிடும். சுருக்கின் பிடியிலிருந்து தப்பிக்க முயல்கிற விலங்குகள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இறந்துபோகின்றன. சில விலங்குகள் உடல் காயங்களுடன் தப்பித்துப் போய்விடுகின்றன.  அப்படி இறந்து போகிற சிறுத்தைகளும் புலிகளும் தான் செய்தித்தாள்களில் செய்தியாகின்றன. அப்படியெனில் தப்பித்து போனவை? 

சிறுத்தை

உடல் காயங்களுடன் தப்பிப் போகிற சிறுத்தைகளும், புலிகளும் வனத்தில் இருக்கிற விலங்குகளைத் தாக்கும் வலுவை இழக்கின்றன. உடல் காயம் காரணமாக  இரையைத் துரத்துவதிலும் தாக்குவதிலும் தோல்வியடைகிற சிறுத்தைகள் உளவியல்ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றன. உயிர் வாழ்ந்தே ஆக வேண்டும் என்கிற கட்டத்தில்தான் அவை குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து, எளிதில் கொல்ல முடிகிற வீட்டு விலங்குகளான கோழி, நாய், மாடுகளைத் தாக்கிக் கொல்கின்றன. சில நேரங்களில் மனிதனையும் தாக்குகின்றன. எளிதில் உணவு கிடைப்பதால்தான் அவை மீண்டும் மீண்டும் குடியிருப்புப் பகுதிகளுக்கு வருகின்றன. 

பத்ரசாமிசுருக்கு வைப்பதை எப்படித் தடுப்பது என ஓய்வு பெற்ற நீலகிரி மாவட்ட வன அலுவலர் திரு பத்ரசாமி அவர்களிடம் கேட்ட போது  "இப்போது வைக்கப்படுகிற சுருக்குகள் எல்லாமே உணவிற்காக வைக்கப்படுகிற சுருக்குத்தான். மான், முயல், ஆடுகளைக் குறிவைத்து வைக்கப்படுகிற சுருக்கில் சிறுத்தைகளும் புலிகளும் மாட்டிக்கொள்கின்றன. சுருக்கு வைப்பதைத் தடுக்க வேண்டுமானால் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை குடியிருப்புப் பகுதிகளை ஒட்டி இருக்கிற வனப்பகுதிகளைக் கண்காணிக்க வேண்டும், மக்களிடம் விலங்குகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், சுருக்கு வைப்பவர்கள் அதிகபட்சமாக இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள்தான் இருப்பார்கள், அதனால் வனத்துறையில் மோப்ப நாய்களைப் பயன்படுத்தி குற்றவாளிகள் அடையாளப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டால் மட்டுமே சுருக்கும், உயிரிழப்பும் குறையும்" என்கிறார். 

சிறுத்தை, புலி மட்டுமல்ல, கரடிகளும் சுருக்கில் மாட்டி விடுகின்றன. ஆனால் கரடிகள் உருவத்தில் பெரியவை என்பதால் சுருக்கைச் சேதப்படுத்திவிட்டுப் போய்விடுகின்றன. செய்தியாகிற விலங்குகளைத் தவிர்த்து மற்ற விலங்குகள் எல்லாமே உணவாகின்றன என்பதுதான் உண்மை. விலங்குகளுக்குச் சுருக்கு வைத்தால் பிணையில் வெளிவர முடியாத அளவிற்கு சட்டங்கள் கடுமையாகத்தான் இருக்கின்றன. இருந்த போதிலும் சுருக்கு வைப்பது இப்போது வரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. 'ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு' என்கிறது நியூட்டனின் மூன்றாவது விதி. சுருக்கு வைக்கப்படுகிற அதே வினாடி ஊருக்குள் பாய ஒரு சிறுத்தையோ கரடியோ காத்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. 

-ஜார்ஜ் ஆண்டனி

படங்கள்: சந்திரசேகர்


டிரெண்டிங் @ விகடன்