வெளியிடப்பட்ட நேரம்: 18:19 (23/05/2017)

கடைசி தொடர்பு:18:36 (23/05/2017)

பள்ளிகளில் பகவத்கீதை கட்டாயம்! விவாதம் கிளப்பும் அறிவிப்பு!

பகவத்கீதை

"பள்ளிகளில் பகவத்கீதை வாசிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். இதை அமல்படுத்தாத பள்ளிகளின் உரிமங்களை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளுக்கு இது பொருந்தாது" என்று பி.ஜே.பி நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பிதுரி, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டத்தொடரில், தனி நபர் மசோதா ஒன்றை கொண்டு வந்தார். இம்மசோதா வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில் பகவத்கீதை வாசிப்பு கட்டாயமாக்கப்படுவது சரியா? என்ற கேள்வியோடு முதலில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்திடம் பேசினோம்.

"பாரத நாடு மதச்சார்பற்ற நாடு என்று கூறப்பட்டாலும் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்து நாடு ஆகும். வேதங்களின் சாரம்தான் பகவத்கீதை. அந்தவகையில், பகவத்கீதை இந்துக்களின் வேத நூலாகும். பாரத நாட்டில் இஸ்லாமியர்களின் மதரஸா கல்வி நிலையங்களில் குரான் போதிக்கப்படுகிறது. கிறிஸ்தவ மிஷனரிகளில், பைபிள் போதிக்கப்படுகிறது. இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள பாரதத்தில், இந்துக்களுக்கான கல்வி வழங்கும் பள்ளி எது? இந்துக் கோயில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இங்கு அர்ஜுன் சம்பத்வழிபாடு மட்டுமே நடத்தப்படுகிறது, இந்து சமய பிரசாரங்கள் நடைபெறுவதில்லை. இந்துக்களுக்கான நெறிகள்  குறித்த போதனைகள் வழங்கப்படுவதில்லை. இப்படிப்பட்ட நிலையில் பி.ஜே.பி எம்.பி கொண்டுவந்த தனி நபர் மசோதா வரவேற்கத்தக்கது. இதற்கு அரசு விடை அளிக்க வேண்டும். பகவத்கீதை எந்த மதத்துக்கும் எதிரான நூல் அல்ல. மனிதகுலம் அமைதியாகவும், சகோதரத்துவத்துடனும் வாழத் தேவையான அனைத்து வகையான வழிகளையும் காட்டும் நீதிநெறி நூல் அல்லது ஒழுக்க நெறிநூல் ஆகும். 'நான் என் வாழ்நாளில் எப்போதெல்லாம் சோர்ந்து போகிறேனோ, அப்போதெல்லாம் நான் பகவத்கீதை படித்துதான் ஊக்கம் பெற்றுள்ளேன்' என்று அண்ணல் காந்தியடிகள் தெரிவித்துள்ளார். 

எனவே, பகவத்கீதை வழிகாட்டும் புனிதநூல் ஆகும். இது பரப்பப்பட வேண்டும். இது மட்டுமல்ல இந்தியில் துளசிதாஸர் எழுதிய ராமாயணம், தமிழில் கம்பர் எழுதிய கம்ப ராமாயணம் போன்ற நூல்களும் அவசியம் பள்ளிகளில் பரப்பப்பட வேண்டும். பகவத்கீதை, திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும் என்று நீண்ட நாளாக நாங்கள் கோரிக்கை வைத்து வருகிறோம். 33 நாடுகளில் குரான் ஆட்சி நடக்கிறது. 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் பைபிளை அடிப்படையாக வைத்து ஆட்சி நடக்கிறது. நமக்கு உள்ள ஒரே நாடு பாரத நாடு. அங்கு பகவத்கீதையை வைத்து ஆட்சி நடத்தினால் என்ன தப்பு? நாடாளுமன்ற விவாதத்தின்போது, அனைத்து எம்.பி-க்களும் இந்த மசோதாவை ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அனைவருக்கும் நாங்கள் கடிதம் எழுத உள்ளோம். சிறுபான்மையினர் உணர்வுக்கு மதிப்பு கொடுக்கும்போது பெரும்பான்மை இந்துக்களின் உணர்வுக்கும் ஒரு அரசு மதிப்பு கொடுக்க வேண்டியது நியாயம்தானே!" என்றார் தமதுதரப்பு நியாயமாக.
அடுத்ததாக, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் பேசினோம்.

"உலகம் முழுக்க, சமயங்களை ஏற்றுக்கொண்ட நாடுகளில்கூட வகுப்பறையில் சமயங்களைப் போதிப்பதில்லை. பல்வேறு சாதி, மத பிரிவினரும் பங்கேற்கும் வகுப்பறை என்பது சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதே பள்ளிக் கல்விக்கான அறம். ஏனெனில், கல்வி என்பதே மதச்சாற்பற்ற செயல்பாட்டின் தொடக்கமல்லவா? தொடக்கத்தில்  விவிலியம் (பைபிள்) உட்பட வேத நூல்களில், 'உலகம் தட்டையானது, கடல்தான் அதன் எல்லை' என்று தெரிவிக்கப்பட்டு அது நம்பப்பட்டது. இது தேவன் சொன்ன வாக்காக கருதப்பட்டது. ஆனால் உண்மையில் கல்வி என்பதும், பள்ளி என்பதும் என்ன? அது கேள்வி கேட்கும் இடம். கேள்விகளின் மூலம் உண்மைகளைத் தேடிப் பயணிக்கச் செய்யும் தளம்.  அவ்வகையில், 'உலகம் எவ்வாறு தட்டையாக இருக்கும்?' என்று கேள்வி எழுப்பப்பட்டன. இறுதியில் திருச்சபைகளே அந்தக் கேள்விகளை அங்கீகரித்து, 'உலகம் உருண்டை என்பதை ஏற்றுக்கொள்கிறோம்' என்று போப் ஒப்புக்கொண்டார். இந்த மாற்றத்துக்கு யார் காரணம்? மதச்சார்பற்ற கல்விதானே!

பள்ளி மாணவ செல்வங்கள்

முன்பு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில்  'மெட்ராஸ் எஜுகேஷன் ரூல்ஸ்' என்ற 'டங்கன் ப்ரோபோசல்ஸ்' வரையறுத்தது என்னவென்றால், 'பள்ளிப் பாட வேலை நேரங்களில் எந்த சமய சார்புள்ள செயல்பாடுகளும் இருக்கக்கூடாது. பள்ளி உங்கள் சொந்த கட்டடத்தில் இயங்கினால் பள்ளி வேலை நேரம் முடிந்தபின் (காலை 9 முதல் மாலை 5 மணி வரை) மாணவர்கள் விரும்பினால் உங்கள் சமய கல்வியை வழங்கலாம்' என்பதுதான். மேலும் பிரிட்டிஷ் ஆட்சியிலேயே, பிரேயர்  என்ற முறை இருந்ததில்லை. அதற்குப்பதில்பிரின்ஸ் கஜேந்திர பாபு காலை, மதியம், மாலை அசெம்பிளி (கூட்டம்) என்ற பெயரில் ஆசிரியர்களும், மாணவர்களும் அன்று நடந்த அல்லது முந்தைய நாளில் நடந்த நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு கலந்துரையாடலாக நடத்தப்பட்டது. பிறகு கொடி வாழ்த்துகள் பாடப்படும். ஒரு கல்வி நிலையத்தில் எந்த மதத்தைச் சார்ந்த நூலையும் பாடமாக வைக்கக்கூடாது என்பதே அன்றிலிருந்து இன்று வரையிலுமான நடைமுறை. தமிழ் இலக்கிய பாடத்தில்கூட வில்லிபுத்தூராரின் வில்லி பாரதம், கம்ப ராமாயணம், கண்ணதாசனின் இயேசு காவியம், உமறுப்புலவரின் சீறாப்புராணம் போன்றவையெல்லாம் ஒரு இலக்கியமாக மட்டுமே போதிக்கப்படுகிறது. புனித நூலாக போதிக்கப்படுவதில்லை. காரணம் என்னவென்றால், பள்ளியின் வேலையே கேள்வி எழுப்புவதுதான். புனிதநூல்களை நம்பிக்கையாகக் கொண்டிருக்கும்போது, அதில் எப்படிக் கேள்வி எழுப்ப இயலும்? இப்போது புனித நூலைப் போதிக்கிறீர்கள் என்றால், 'யுத்த காலத்துல கத்தியோடு ரெண்டு பக்கமும் நிற்கும்போது, ஒருத்தர் எப்படி இன்னொருத்தர்கிட்ட மணிக்கணக்கா பேசிக்கிட்டே இருப்பார்? அவர் பேசுற வரை மத்தவங்க வேடிக்கை பார்த்துக்கிட்டு இருப்பாங்களா?' என்றும், 'சொத்துக்காக பங்காளிகள் அடித்துக் கொள்கிறார்கள். எனவே சொத்துக்காக நாங்கள் எங்க சித்தப்பா, பெரியப்பா மக்களை தாக்கலாமா?' என்றும் ஒரு மாணவர் கேள்வி கேட்டால் என்ன செய்வது? இதேபோல் இயேசு போதித்ததைக் கூட ஒரு மாணவர் கேள்வி கேட்டால் என்ன செய்வது? கேள்வி கேட்பதுதானே மாணவச் செல்வங்களின் இயல்பு, பள்ளிக் கல்வியின் அடிப்படையும்கூட. இதன்பொருட்டே, புனித நூல்களாக கருதப்படுவதை பள்ளியில் போதித்தல் தவறு என்று கூறுகிறோம். 

பள்ளி மாணவ செல்வங்கள்

பகவத் கீதையோ, பைபிளோ, குரானோ, வீட்டுக்குப் போனபின் பாட்டி தாத்தா, அப்பா, அம்மா எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சொல்லித்தரலாம். அதில் தவறில்லை. பகவத்கீதைக்கு ஆதரவாக அண்ணல் காந்தியை கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். ஆனால் காந்தி ஏன் கொல்லப்பட்டார்? கொன்றது யார்? எந்த சமயத்தைச்சார்ந்தவர்? என்பதெல்லாம் இந்த நாட்டு மக்கள் நன்கு அறிந்ததே. எனவே சிறுபான்மையினர் விசயத்துக்கு வருகிறேன். இந்திய அரசியலமைப்பு சட்டம் 30(1) பிரிவின் படி, சிறுபான்மை நிர்வாகம் நடத்துவதற்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த உரிமைகள் எதற்காக என்றால், அவர்களுடைய பண்பாட்டிற்கான கல்வியை வழங்க கொடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அரசு கொடுத்துள்ள பாடத்திட்ட வேலை நேரங்களில் சமய போதனைகள் வழங்கக் கூடாது என்பதே சட்ட விதி. அப்படி நடத்தினால் அது சட்டப்படி தவறு. பள்ளி வேலை நேரம் முடிந்து, பெல் அடித்தபின் அவர்கள் சொந்தக் கட்டடத்தில் மாணவர்களிடம் சமயக் கல்வியை வழங்கலாம். இதேபோல ஜெயகோபால் கரோடியா, இந்து வித்யாலயா, விவேகானந்தர் இந்து வித்யாலயா என்று பள்ளிகள் உள்ளன. அங்கு பாடவேளை முடிந்தபின் இந்து சமய போதனைகள் வழங்கப்படுகிறது. அதேநேரம் அரசுப் பள்ளி என்றால் பள்ளிப் பாட வேலை மட்டுமல்ல அதன் பிறகும்கூட எந்த சமய போதனைகளும் வழங்கக்கூடாது என்பது சட்ட விதி.  நாம் திரும்பத் திரும்ப வலியுறுத்துவதும் இதுதான். வகுப்பறை என்பது கேள்வி கேட்கும் தளம். அதன்மூலம் அறிவு நோக்கி மாணவர்களை வளர்த்தெடுக்கும் அற்புத பயணம். அங்கு எந்தவித மத கல்வியும் வழங்குவது, ஆரோக்கியமான மாணவச் சமூகத்தை மட்டுமல்ல, ஆரோக்கியமான கல்வியையும் வளர்த்தெடுக்காது" என்றார் பொறுப்போடு.

பள்ளிக்கல்வி என்பது அறிவை வளர்ப்பது மட்டுமல்ல, சமூக நல்லிணக்கத்தையும், சமத்துவத்தையும் வளர்த்தெடுக்கும் தாய் போன்றவரும்கூட. நல்ல தாய்தான் சிறந்த சமூகத்தை படைப்பார்!


டிரெண்டிங் @ விகடன்