வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (23/05/2017)

கடைசி தொடர்பு:18:51 (23/05/2017)

"வாழ்க்கை ஒரு வட்டம்" - ட்ரம்ப் ட்வீட் தந்த ட்விஸ்ட்!

ட்ரம்ப் மற்றும் மெலானியா ட்ரம்ப்

ர் அரசன் சட்டம் இயற்றுகிறான் அல்லது மற்ற நாட்டவரை விமர்சிக்கிறான் என்றால், அந்த விஷயத்தில் அவன் வலிமையானவனாக இருக்கிறான் என்றுதான் அர்த்தம். ஆனால் அது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விஷயத்தில் தலைகீழ். எதைத் தவறு என்று ட்ரம்ப் விமர்சித்தாரோ அதையே அவரது மனைவியும், மகளும் செய்து ட்ரம்ப்-ஐ தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளனர். அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்று 100 நாள்களுக்கு மேல் ஆகியுள்ளது. இந்த நிலையில், அவர் தனது முதல் அரசு முறைப் பயணமாக சவுதி அரேபியாவுக்குச் சென்றார். மனைவி மெலானியாவுடன் சவுதி அரேபியா வந்து இறங்கிய ட்ரம்ப்-ஐ அந்த நாட்டு மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ் அல் சாத் வரவேற்றார். விமான நிலையத்தில் அவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

மே 20, 2017 சனிக்கிழமை அன்று சவுதி அரேபியாவுக்குச் சென்றார் ட்ரம்ப். அப்போது, இஸ்லாமியர்கள் வழக்கமாக அணியும் 'பர்தா' எனப்படும் தலையங்கியை ட்ரம்ப்பின் மனைவி மெலானியா அணியவில்லை. அவர் வழக்கமான அவரது நேர்த்தியான உடையிலேயே வந்திருந்தார். மெலானியாவைப் பொறுத்தவரை அவர் முன்னாள் 'மாடல்' என்பதால் அவருக்கு எந்த உடையும் கச்சிதமாகப் பொருந்தும். அதுபோன்ற சவுதிஅரேபியப் பயணத்தின்போதும் மெலானியா உடை அணிந்திருந்தார். இத்தகைய சூழலில், சவுதி அரேபியாவுக்கே உரிய வழக்கமாக பெண்கள் உடல் முழுவதையும் மறைக்கக்கூடிய ஆடைகளையே அணிவர். அது மட்டுமல்லாமல், தலையங்கியும் கட்டாயம் அணிய வேண்டும் என்பதுதான் அந்நாட்டு வழக்கம். ஆனால், மெலானியா தலையங்கி அணியவில்லை. என்றாலும், அந்நாட்டில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றில், 'மெலானியா அணிந்திருந்தது ஒரு கண்ணியமான உடைதான். அதைப் பார்க்கும்போதே அபையா அணிந்திருப்பதுபோலத் தான் காட்சியளித்தது' என செய்தி வெளியிடப்பட்டிருந்தது. மேலும், ட்ரம்ப் மனைவியின் ஆடை பற்றி பல மதிப்புமிக்க விமர்சனங்களும் வந்துள்ளன. தலையங்கி அணியாமல் சவுதி அரேபியாவுக்கு வந்தவர்களில் மெலானியா முதல் பெண்ணல்ல. ஏற்கெனவே அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சல் ஒபாமாவும் தலையங்கி அணிந்தது இல்லை. மற்ற பெண் தலைவர்களான  பிரிட்டன் பிரதமர் தெரசா மே, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோரும் சவுதி அரேபியாவுக்குச் சென்றபோது, தலையங்கி அணியவில்லை.

இதுவரை சவுதி அரேபியாவுக்குச் சென்ற பெரும்பாலான பெண் தலைவர்களும், வெளிநாட்டுத் தலைவர்களின் மனைவிகளும் தலையங்கிகள் அணிந்தது கிடையாது. ஆனால், 2015 ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் ஓபாமா மனைவி மிச்சல் ஓபாமா தலையங்கி அணியாமல் சவுதி அரேபியாவுக்குச் சென்றதை, ட்ரம்ப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து பதிவிட்டிருந்தார். அதில், "ஒபாமா மனைவி தலையங்கி அணிய மறுத்ததைப் பலரும் பாராட்டுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் அங்கு அவமானப்பட்டிருக்கிறார்கள். இப்போது இருக்கும் எதிரிகளே போதும்" என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், ட்ரம்ப் அப்போது பதிவிட்டதை பலரும் இப்போது பேசி வருகின்றனர்.

2015-ல் ட்ரம்ப் செய்த ட்வீட்

மெலானியாவின் உடை மற்றும் தலையங்கி பற்றி வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "பெண்கள் அபையா அணிவது முக்கியமானது என்று கருதும் ஒரு நாடு சவுதி அரேபியா. மெலானியாவுக்கு உடை தயாரித்தவர் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஸ்டெல்லா மெக்கார்ட்னி என்பவர்தான். அவர் கறுப்பு நிறத்தில் நீள கவுன், தங்க நிறத்திலான பட்டை (belt), கைகளில் தங்க நிறத்திலான பட்டன் ஆகியவற்றை வைத்து மிக நேர்த்தியாக உருவாக்கியிருந்தார். மெலானியாவைப் பொறுத்தவரை, அவர் சென்ற இடத்துக்கு ஏற்றவாறுதான் உடை அணிந்திருந்தார். மேலும், அவர் தலையங்கி அணிய வேண்டியத் தேவையில்லை. அதுமல்லாமல், யாரும் அவரை தலையங்கி அணியும்படி கட்டாயப்படுத்தவும் இல்லை" என்று தெரிவித்தார்.

மெலானியாவுடைய உடை பற்றிய விவாதங்கள் ஒருபுறம் இருந்தாலும், இன்னொரு புறம் அவர் ட்ரம்பின் கையை தட்டிவிட்டதுதான் வைரலாகப் பரவி வருகிறது. இஸ்ரேல் விமான நிலையத்தில் இறங்கியது முதல் மெலானியாவை ட்ரம்ப் கண்டுகொள்ளவே இல்லை. மீடியா மற்றும் பத்திரிகை அருகில் வருவதைப் பார்த்த ட்ரம்ப் உடனே மெலானியாவின்  கையைப் பிடிப்பதற்காக தன் கையை நீட்டினார். ஆனால், மெலானியா அதை தட்டிவிட்டார். இந்தச் செயல், செய்தித் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்களின் வீடியோவில் பதிவானது. இப்படி, ட்ரம்ப் என்ன செய்தாலும் சர்ச்சை மற்றும் வைரலுக்கு பஞ்சமில்லாமல் பார்த்துக் கொள்கிறார். வெளிநாட்டில், ட்ரம்ப் உடன் கைகோக்க அவரது மனைவி மறுத்தது, மிச்சல் ஒபாமாவை ட்ரம்ப் விமர்சனம் செய்த நிலையில், அவரது மனைவியே தலையங்கி அணியாமல் சென்றது போன்ற விஷயங்கள் அவரது முதல் வெளிநாட்டுப் பயணத்தில் மிகப் பெரிய மைனஸ் தான்.

ட்ரம்ப் தொடர்புடைய இந்த சர்ச்சைகளை நெட்டிசன்களும் தங்கள் பங்குக்கு விட்டு வைக்காமல், ஏராளமான மீம்ஸ்களைப் போட்டு விமர்சித்து வருகிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்