Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘என்னைப் பத்தி படமெடுக்க என்ன இருக்கு?’ - மறுத்த டி.எம்.எஸ்.. விடாத விஜயராஜ்! #TMS

TMS

‘சந்திர ஈரமும் சூரிய வீரியமும்

சேர்த்துச் செய்த சுடர்கவிதை

டி.எம்.சௌந்தர்ராஜன்!' - பாடகர் திலகம் டி.எம்.சௌந்தர்ராஜனின் சிம்மக்குரலுக்கு அடிமையான கோடானுகோடி ரசிகர்களில் ஒருவரின் கவிதை இது!

தெள்ளத்தெளிவான தமிழ் உச்சரிப்புடன் தமிழ்த் திரையுலகை இன்றைக்கும் ஆட்கொண்டிருக்கும் இசை ஆளுமை டி.எம்.எஸ் அவர்களின் நினைவுநாள் இன்று.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர் என ஆரம்பித்து, சத்யராஜ், விஜய்காந்த் வரைக்கும் தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகர் ஒவ்வொருவருக்கும் பொருத்தமாகத் தனித்தனிக் குரலில் பின்னணி பாடி, காலத்தால் அழியாத கலைஞனாக நிலைத்துநிற்கிறார் டி.எம்.எஸ்! 

சௌராஷ்டிரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, ஒட்டுமொத்த உலகத் தமிழர்களையும் தனது கந்தர்வக் குரலால் கட்டிப்போட்ட மாபெரும் கலைஞன். இந்தாண்டு ஜனவரி மாதம், அவரின் உருவம் பதித்த தபால்தலையை வெளியிட்டுக் கௌரவித்துள்ளது மத்திய அரசு.

அவரது சாதனையை ஆவணப்படுத்தும்விதமாக, ‘இமயத்துடன்!’ என்ற தலைப்பில், தொலைக்காட்சி நெடுந்தொடர் ஒன்றைத் தயாரித்து இயக்கியுள்ளார் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த விஜயராஜ். 

டி.எம்.எஸ்-ஸின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவுசெய்யும் பணிக்காக, கிட்டத்தட்ட 13 வருடங்கள் அந்த மாபெரும் கலைஞனுடனேயே உண்டு, உறங்கி, நெடுந்தொலைவு பயணித்தவர் விஜயராஜ். டி.எம்.எஸ்-ஸின் சாதனைகள் குறித்த திரைத்துறைப் பிரபலங்களின் பெருமைகளையும் இந்த நெடுந்தொடரில் பதிவுசெய்துள்ளார். மறக்க முடியாத அந்த நாள்களை மகிழ்வும் நெகிழ்வுமாக மீட்டெடுக்கிறார்...

'‘ ‘தமிழ்நாடு அரசுத் திரைப்படக் கல்லூரியில் நடிப்பு, ஒளிப்பதிவு முடித்து 1996-ம் ஆண்டில் வெளியே வந்தேன். ‘சினிமா போன்று இல்லாமல் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும்’ என்ற எண்ணத்தில் இருந்தேன். அப்போதுதான், டி.எம்.எஸ்-ஸோட வாழ்க்கை வரலாற்றை அவரை வைத்தே ஆவணப் பதிப்பாகப் பண்ணவேண்டும் என்ற எண்ணம் வந்தது. உடனே, டி.எம்.எஸ் ஐயாவைச் சந்தித்துப் பேசினேன். ஆனால், அவரோ சற்றும் பிடிகொடுக்கவில்லை. ‘என்னைப் பற்றி படம் எடுக்க என்ன இருக்கு? செத்தா தூக்கிப்போட்டுட்டுப் போங்க. அதான், நான் பாடிய பாடல்கள் இருக்கே. ரசிகர்களுக்கு அது போதும்!’ எனச் சொல்லிவிட்டார். ஆனாலும், எட்டு மாதங்கள் தொடர்ந்து அவரோடு அலைந்து திரிந்து, அவரை ஒருவழியாகச் சம்மதிக்க வைத்தேன். 

‘டி.எம்.எஸ். ஒரு சகாப்தம்’ என்ற பெயரில், 13 வாரத் தொடர் ஒன்றை முதன்முதலில் எடுத்தேன். டி.எம்.எஸ். அவர்கள் கதை சொல்வதுபோல் அமைந்திருந்த இந்தத் தொடரை 1999-ல் பார்த்த, மறைந்த முதல்வர் ஜெயலலிதா ரொம்பவே பாராட்டினாங்க. ‘டி.எம்.எஸ். அவர்கள் நம் தமிழ்த் திரையுலகுக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம். எனவே, அவரைப் பற்றி இன்னும் விரிவா, பொக்கிஷம் மாதிரியான பயோகிராஃபி ஒன்றை ஒரு மெகா தொடரா பண்ணுங்க….’ என்று சொல்லி ஊக்குவித்து, எங்கள் உழைப்பை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்றவர் அவர்தான்.

TMS

(டி.எம்.எஸ், இளையராஜா ஆகியோருடன் விஜயராஜ்)

அதன்பிறகு 2001-லிருந்து 2013 வரை பதின்மூன்று வருடங்களில் பல்வேறு சிரமங்கள், போராட்டங்களுக்கிடையே கடும் உழைப்போடு ‘இமயத்துடன்….’ என்ற தலைப்பில் 150 வாரத் தொடரை எடுத்து முடித்தோம்’’ என்று பெருமை பொங்கச் சொல்லும் விஜயராஜ், இத் தொடரைத் தயாரிப்பதற்கான பெரும்பங்கு பண உதவியை நண்பர்கள் செய்தனர் என நன்றியோடு குறிப்பிடுகிறார். 

டி.எம்.எஸ். முதன்முதலில் மைக் முன் நின்று பாடிய பாடலில் ஆரம்பித்து, எம்.ஜி.ஆர். – சிவாஜியின் திரைப் பாடல்களுக்கு உயிர் கொடுத்து முன்னணித் திரை இசைக் கலைஞராக ஜொலித்தது வரையிலான அனைத்துக் காலகட்டங்களும் ‘இமயத்துடன்…’ தொடரில் பதிவாகியிருக்கின்றன. 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் டி.எம்.எஸ்.ஸோடு பழகியவர்கள், நண்பர்கள், பல்துறைச் சாதனையாளர்களையெல்லாம் சம்பவ இடத்துக்கே சென்று சந்தித்து, அவர்களோடு டி.எம்.சௌந்தரராஜனைக் கலந்துரையாடச் செய்து படமாக்கியிருப்பதுதான் இத்தொடரின் ஸ்பெஷல்! 

‘‘டி.எம்.சௌந்தர்ராஜன் பிறந்து வளர்ந்த வீடு, அவர் படித்த செயின்ட் மேரிஸ் ஸ்கூல், வரதராஜ பெருமாள் கோயில்…. என மதுரையில் படப்பிடிப்பை ஆரம்பித்தோம். 1946-ல் ‘கிருஷ்ண விஜயம்’ படத்துக்காக கோவையிலுள்ள சென்ட்ரல் ஸ்டூடியோவில்தான் டி.எம்.எஸ். தனது முதல் திரைப் பாடலைப் பாடினார். இப்போது அந்த ஸ்டூடியோ பூட்டப்பட்டு புதர்மண்டி சிதிலமடைந்து கிடக்கிறது. அந்த ஸ்டூடியோவில் அவர் பாடிய அறையில் மறுபடியும் டி.எம்.எஸ்.ஸைப் பாடவைத்துப் படம்பிடிக்க முடிவுசெய்தோம். இதற்காகச் சுமார் ஒன்றரை வருடங்கள் அலைந்து திரிந்து அனுமதி வாங்கி, ஸ்டூடியோவைத் திறந்து சுத்தம் செய்து, அதே அறையில் டி.எம்.எஸ். அவர்களை  பாட வைத்தோம். 50 வருடங்களுக்கு முன் தனது கலையுலகப் பிரவேசத்துக்கு பிள்ளையார் சுழி போட்ட அந்த இடத்தில் அவரை மறுபடியும் நிற்கவைத்தபோது, அவரது முகத்தில் பரவிய பரவச உணர்வுகளை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. உணர்ச்சிபூர்வமான அந்தத் தருணங்களை அப்படியே பதிவுசெய்திருக்கிறோம். பின்னர், அதே கோவையில் உள்ள ‘பட்சி ராஜா ஸ்டூடியோ’விலும் பாட வைத்தோம். இந்த ஸ்டூடியோவில்தான் எம்.ஜி.ஆருக்காக முதன்முதலில், ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…’ பாடலைப் பாடியிருந்தார் டி.எம்.எஸ். 

TMS

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் படமாக்கவும் பல காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. ‘தேவகி’ படத்தில் அவர் நடித்த ஸ்டூடியோவிலும் ஷூட் செய்தோம். 

கேரளாவிலுள்ள எம்.ஜி.ஆரின் சொந்த ஊரான ‘குழல் மன்னம்’ (பாலக்காடு) பகுதியில், எம்.ஜி.ஆர். தமது மனைவி சதானந்ததேவியோடு வாழ்ந்த வீட்டிலும் படப்பிடிப்பு நடத்தினோம். எம்.ஜி.ஆர். அரசியலுக்குச் சென்றபிறகு ‘தன்னை சரியாகக் கவனிக்கவில்லை’ என்ற வருத்தம் டி.எம்.எஸ்ஸுக்கு இருந்தது. ஆனாலும், எம்.ஜி.ஆரோடு பழகிய நினைவுகளில் ஆழ்ந்ததில், டி.எம்.எஸ். அவர்கள் ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டுவிட்டார். எம்.ஜி.ஆரின் உறவுகளோடு கலகலப்பாகப் பேசிச் சிரித்ததில் பழைய வருத்தங்கள் எல்லாம் மறைந்துவிட்டன. எந்த இடத்திலும் டாக்குமென்டரி ஃபீல் வந்துவிடக்கூடாது என்பதற்காக ரொம்பவே மெனக்கெட்டு எடுத்திருக்கிறோம். சுருக்கமாகச் சொன்னால், இந்த மெகா தொடர் டி.எம்.எஸ். என்கிற தனி ஆளுமையின் சரித்திரமாக மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவின் வரலாற்றையே சொல்வதுபோல் இருக்கும்.’’ – ஒரு சாதனையாளனின் சரித்திரத்தைச் சரியாகவும் முழுமையாகவும் பதிவுசெய்துவிட்ட திருப்தியோடு பேசுகிறார் விஜயராஜ்.

திரையுலகில் டி.எம்.சௌந்தர்ராஜனோடு முரண்பட்டு இருந்ததாகச் சொல்லப்படும் டி.ராஜேந்தர், இளையராஜா ஆகியோரோடும் டி.எம்.எஸ்-ஸை உரையாட வைத்து, வதந்திகளை உடைத்தெறிந்திருப்பதைப் பெருமையாகவே நினைக்கிறார் விஜயராஜ்.

‘‘டி.எம்.எஸ். பாடிய பாடல்களின் பழைய ஆடியோ, வீடியோக்கள் அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. யாரேனும் வைத்திருந்தாலும், தர மனம் இருக்காது. ஆனால், மலேசியாவிலுள்ள தாமஸ் என்கிற தமிழர், பீட்டா டேப்பில் டி.எம்.எஸ்-ஸின் எல்லா ரெக்கார்டுகளையும் பத்திரப்படுத்தி வைத்திருந்ததைக் கேள்விப்பட்டு, அங்கே சென்றோம். தன்னிடமிருந்த அத்தனை பாடல்களையும் எங்களுக்குத் தந்து உதவியதோடு, ‘டி.எம்.எஸ். ஐயா அவர்களின் பாடல்களை வைத்துதான் நாங்கள் பிழைக்கிறோம். அதனால், இந்த ஆடியோ - வீடியோ கிளிப்ஸ்களை உங்களுக்குத் தருவது உதவி அல்ல; நாங்க அவருக்குச் செய்ற கைம்மாறு’ என்று தாமஸ் சொன்னது எங்களை நெகிழவைத்தது'' என்று உணர்ச்சிப் வசப்படுகிறார் விஜயராஜ்.

லதாமங்கேஷ்கர் – டி.எம்.எஸ் சந்திப்பின்போது, ‘'நான் சிவாஜி கணேசனின் ரசிகை. அவர் எங்கள் குடும்ப நண்பர். அவரோட குரலிலேயே பாடி, அவரின் பாடல்களுக்கு உயிர் கொடுத்தவர் நீங்க. அதனால, உங்கமேலே எப்பவுமே எனக்குப் பெரிய மதிப்பும் மரியாதையும் உண்டு’' என்று உணர்ச்சிவசப்பட்டாராம் லதாமங்கேஷ்கர். 

‘‘திரைப் படங்கள், சீரியல்கள் இயக்குவதற்கான வாய்ப்புகள் எனக்கு நிறைய வந்தன. எல்லாவற்றையும் மறுத்து ஒதுக்கிவிட்டு ஒரு தவம் போல் வைராக்கியத்தோடு இந்தத் தொடரை இயக்கியிருக்கிறேன். இதை முழுமையாக முடித்து வெளியிடுவதில் இருந்த தடங்கல்கள் யாவும் நீங்கிவிட்டன. விரைவில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில், ‘இமயத்துடன்….’ தொடரை ரசிகர்கள் பார்த்து ரசிக்கலாம். டி.எம்.எஸ். அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே இப்படியொரு பெருமுயற்சியைச் செய்துமுடித்ததும், அதனை டி.எம்.எஸ். அவர்களே பார்த்துப் பாராட்டியதுமே எனக்குப் பெரும் மனநிறைவாக இருக்கிறது’’ என்கிறார் விஜயராஜ் கண்கள் பனிக்க.

தமிழ்த் திரை இசையுலகின் சகாப்தமாக விளங்கிய டி.எம்.சௌந்தர்ராஜன் எனும் மாபெரும் கலைஞனுக்கு மறைவு என்பதே கிடையாது. காற்றுள்ளவரை இந்தக் கந்தர்வக் குரலும் ஒலித்துக்கொண்டேயிருக்கும்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ