’கருணாநிதி மீது விமர்சனமா... ஜெயலலிதா மீது கரிசனமா...?’ - ஈழ மனம் சொல்லும் உண்மை

அகரமுதல்வன்

கரமுதல்வன், ஈழ இனப்படுகொலையின் சாட்சி. வரலாற்றின் இருள்சூழ்ந்த காலத்தில், கொத்துகொத்தாக ஷெல் குண்டுகள் குழந்தைகளைக் காவு வாங்கிய நேரத்தில் அந்த நிலத்தில் வசித்தவர்; தான் வாழ்ந்த, கண்ட பேரவலத்தைக் கவிதைகள் மற்றும் கதைகள் மூலமாக உலகெங்கும் வாழும் தமிழ்ச் சமூகத்துக்குக் கடத்திக் கொண்டிருப்பவர். இனப்படுகொலை நடந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்ட, சூழ்நிலையில் இப்போது ஈழத்தின் நிலை, புலம்பெயர் தமிழர்களின் அரசியல் நகர்வு, தமிழக அரசியல் எனப் பல்வேறு விஷயங்களை அவரிடம் விரிவாக உரையாடினோம்.  அதன் தொகுப்பு இதோ...

“நீங்கள் அண்மையில் இந்தியப் பிரதமரின் இலங்கைப் பயணம் குறித்து எழுதிய ஒரு கட்டுரையில், 'மீண்டும் இலங்கை இந்தியாவை ஏமாற்றியிருக்கிறது... அதுபோல, இந்தியா மீண்டும் ஈழமக்களை ஏமாற்றியிருக்கிறது' என்று கூறியிருந்தீர்கள்.. இதை எந்தப் பின்னணியிலிருந்து பேசுகிறீர்கள்...?''
 
''ஈழத்தமிழர்களை இந்தியாவின் நீட்சியாகத்தான் பெளத்த பேரினவாதம் பார்க்கிறது; இதைத்தான் மகாவம்சமும் கதைக்கிறது. ஆனால், யாரை இந்தியாவின் நீட்சியாக இலங்கை பார்க்கிறதோ, அந்த மக்களையே இந்தியாவை வைத்துக் கொன்றது. இதுதான் இலங்கையின் தந்திரம். ஈழமக்களும் இலங்கைக்கு எதிரி, இந்தியாவும் இலங்கைக்கு எதிரி. ஓர் எதிரியை, மற்றோர் எதிரியைவைத்துக் கொன்றது. இந்தத் தந்திரம், அண்மையில் இந்தியப் பிரதமர் மோடியின் வருகைவரை வெளிப்பட்டது. ஒருபக்கம், பிரதமரை வரவேற்பதுபோல வரவேற்று, இன்னொரு பக்கம் சிங்கள பேரினவாதத்தைக் கொண்டு இலங்கை மண்ணில் பிரதமருக்கு எதிர்ப்பும் காட்டியது. இதை, சாதாரண எதிர்ப்பாக நாம் புரிந்துகொள்ளக் கூடாது. நாங்கள் இந்தியாவையே எதிர்க்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம் என்று இலங்கை காட்ட விரும்பியது. அதன் வெளிப்பாடுதான் அந்த எதிர்ப்பு. இந்தியா, தன்னை யானை என நம்புகிறது. ஆனால், இலங்கை ஒரு தேளாக அந்த யானையின் தும்பிக்கையில் சென்று விளையாடுகிறது. இலங்கையில் தமிழ்ச் சமூகத்திடம் உரையாற்றிய இந்தியப் பிரதமர், ஈழமக்களுக்கு நடந்த பேரவலத்தை மிகக் கவனமாகத் தன் பேச்சில் தவிர்த்திருக்கிறார். கணியன் பூங்குன்றனார், திருவள்ளுவர் எனப் பேசியவர், மறந்தும் முள்ளிவாய்க்கால் பற்றிப் பேசவில்லை. இலங்கை அரசுக்கு எந்த அசெளகர்யமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று இந்தியா நினைக்கிறது. ஆனால் இலங்கை, தனது நலனுக்காக எப்போதும் இந்தியாவை அசெளகர்யத்திலேயேவைக்கிறது; வைக்கும். புவியியல்ரீதியாக ஈழத்தமிழர்கள்தான் இந்தியாவுக்குப் பாதுகாப்பு. ஆனால், இன்றுவரை இந்தியாவின் கொள்கை வடிவமைப்பாளர்கள், ராஜதந்திரிகள் அதனைப் புரிந்துகொள்ளவே இல்லை. இந்தியா புவியரசியலில் மீண்டும் மீண்டும் தோற்கிறது.'' 

ஈழம்

“இந்தியா, ஈழப்பிரச்னையை வெறும் புவிசார் அரசியலாக மட்டும்தான் அணுகுகிறதா...?''

''இல்லை. இன அரசியலும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், முதன்மையாகப் புவிசார் அரசியல்தான் இருக்கிறது. ஈழமக்கள் தொகையும், அதன் நிலப்பரப்பும் குறைவாக இருந்தாலும், நிலப்பரப்பு அனைத்தும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தவை. அதைத் தன் கட்டுப்பாட்டுக்குள்வைக்கத்தான் இந்தியா, சீனா மற்றும் மேற்கத்திய நாடுகள் துடிக்கின்றன. புவிசார் அரசியலை மனதில்கொண்டுதான் காய்களை நகர்த்துகின்றன. ஆனால், இலங்கை இந்தப் புவிசார் அரசியலில் இந்தியாவை ஒரு பொருட்டாக மதிப்பதேயில்லை. யுத்தம் முடிந்தபின் ராஜபக்‌ஷே என்ன சொன்னார்...? ‘இது இந்தியாவுக்காக நாங்கள் நடத்திய யுத்தம்’ என்றார். ஆனால், உண்மையில் இந்தியாவுக்காக ஒரு யுத்தம் நடத்தி, அதில் தான் வெற்றிபெற்று, இந்தியாவையே தோற்கடித்திருக்கிறது இலங்கை. யுத்தம் முடிந்தவுடன் திரிகோணமலைக்குச் சீனாவுடைய கப்பல்கள்தானே வந்து நின்றன. இலங்கை, பாகிஸ்தானுடன் இணக்கமாக இருக்கிறது. நாளை பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் தலைமன்னாரில் வந்து நிற்காது என்று என்ன நிச்சயம்?'' 

 “நீங்கள், 'ஈழ இந்துக்களை, இந்தியா நீட்சியாகத்தான் பார்க்கிறது. அதனால், இந்துக் கோயில்களை இடிக்கிறது' என்று சொன்னீர்கள். இதுமாதிரியானச் சூழ்நிலையில், இந்துக்களைக் காக்க ஈழசிவசேனா அமைப்பு தொடங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதுதானே...?''

''ஆம். பிள்ளையார் இருந்த அரச மரத்தடியில் எல்லாம் இப்போது புத்தர் இருக்கிறார். பண்பாட்டுரீதியாக முற்றாக அழித்தொழிக்கும் பணியை இலங்கை பேரினவாதம் தொடங்கியிருக்கிறது. இப்படியானச் சூழ்நிலையில் ஈழசிவசேனா அமைப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஈழசிவசேனா, தமிழர்களையே பிரிக்கும் பணியைத்தான் செய்கிறது. கிறிஸ்தவர்கள், இந்துக்களின் வழிப்பாட்டுத் தலங்களை இடிக்கிறார்கள் என்கிறது. கிறிஸ்தவர்கள் இன விடுதலைக்காக ஆற்றிய பங்கு அளப்பரியது. என்றுமே ஈழத்தமிழர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என்று பிரிந்து நின்றதில்லை. ஆனால், இப்போது அவர்களைப் பிரிக்கும் பணியைத்தான் ஈழசிவசேனா செய்கிறது.'' 

 “சமீபகாலமாகச் சமூக ஊடகங்களில் ஓர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், புலிகளுக்கு எதிராகத் தொடர்ந்து பதிவிடுகிறார்களே, கவனிக்கிறீர்களா...?''

''நீங்கள் தி.மு.க-வைச் சேர்ந்த பதிவர்களைத்தானே சொல்கிறீர்கள்...? தொடர்ந்து கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன்... ஆனால், அவர்கள் சொல்வது அனைத்தும் உண்மைக்குப் புறம்பானதாக, புலிகள்மீது வேண்டுமென்றே அவதூறு பரப்பி, தங்கள் நியாயத்தை நிறுவ வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. 'மழைவிட்டும் தூவானம் விடவில்லை' என்று கருணாநிதி குறிப்பிட்டது புலிகளைத்தான் என்று ஒரு பதிவர் எழுதுகிறார். அதாவது, கருணாநிதி உண்ணாவிரதம் இருந்த அன்று இலங்கை கனரக ஆயுதங்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதாம், புலிகள்தான் ஆயுதங்களைத் தொடர்ந்து பயன்படுத்தினார்களாம். நான் அன்று ஈழத்தில் மக்களோடு மக்களாக இருந்தவன் என்பதால் சொல்கிறேன். கருணாநிதி உண்ணாவிரதம் இருந்த அன்று, ஈழமக்கள் இந்த உண்ணாவிரதத்தால் ஏதேனும் ஒருசிறு விடிவு கிடைக்கும், அன்றாவது இலங்கை அரசு அயுதங்கள் பயன்படுத்துவதை நிறுத்தும் என்று நம்பி, இடம்பெயர்வதற்காக நகர்ந்தார்கள். ஆனால், அன்றுதான் இலங்கை அரசு மிகமோசமான கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியது. இதற்கு நானே சாட்சியம். புலிகளை விமர்சிப்பதாக நினைத்து, வரலாற்றைத் திரிக்கத் துடிக்கிறார்கள்.'' ​​​​​​

அகரமுதல்வன்“ 'போர் என்றால் மக்கள் சாவத்தான் செய்வார்கள்' என்று சொன்ன... நினைவேந்தலுக்கு அனுமதி மறுத்த அ.தி.மு.க-வை, ஜெயலலிதாவை ஈழத்தமிழர்கள் விமர்சிப்பதே இல்லை. ஆனால், தி.மு.க-வைத்தான் தொடர்ந்து குறிவைக்கிறது என்ற விமர்சனத்தை புறம்தள்ள முடியாதுதானே...?''

''நம்பியவர்கள் மீதுதானே கோபம்கொள்ள முடியும். ஈழ விஷயத்தில் தொடக்கத்திலிருந்தே பெரும் பங்காற்றியது, தி.க-வும், தி.மு.க-வும்தான். பெரியார் திடல்தான், புலிகளுக்கு முகவரியாக இருந்தது. தி.மு.க-வினர் ஊர் ஊராகச் சென்று எங்களுக்காக நிதி திரட்டி அனுப்பினார்கள். இதை ஈழமக்களும் சரி, புலிகளும் சரி நன்கு அறிவர். ஆனால், ஒரு கடினமான காலத்தில் இவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதுதானே முக்கியம். போரின் உச்சநாள்களில், கருணாநிதியால் சில விஷயங்களைச் செய்திருக்க  முடியும் என்று ஈழமக்கள் நம்பினார்கள்... அந்த நம்பிக்கை பொய்த்ததன் வெளிப்பாடுதான் இந்தக் கோபம்.'எம்.ஜி.ஆருக்குப் பின், அ.தி.மு.க-வைப் பெரிதாக ஈழத்தமிழர்கள் நம்பியதே இல்லை. ஆனால், 'ஈழத்தில் நடந்தது இனப்படுகொலைதான்' என்று அ.தி.மு.க-தானே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது?''   

''அப்படியானால் புலிகள் மீது தவறே இல்லை என்கிறீர்களா... தமிழினி எழுதிய, 'கூர்வாளின் நிழலில்' என்ற புத்தகத்தில், புலிகள் செய்த பல தவறுகளைப் பட்டியலிட்டு இருக்கிறாரே...?

அதைத் தமிழினிதான் எழுதினாரா என்ற சந்தேகமே இன்னும் தீரவில்லை. இனப்படுகொலைக்குப்பின், புலிகளைப் போர்வெறியர்களாகச் சித்தரிக்கும் வேலை தொடர்ந்து நடக்கிறது. உண்மையில், தாங்கள் பலமாக இருந்த காலத்தில் ஆயுதத்தை மெளனிக்கச் செய்தவர்கள் புலிகள். ஒவ்வொரு மாவீரர் நாள் உரையின்போதும், தாங்கள் சமாதானத்தைத்தான் விரும்புவதாக புலிகள் பேசி இருக்கிறார்கள்; அதற்கான முன்னெடுப்புகளைச் செய்திருக்கிறார்கள். ஆனால், தொடர்ந்து இலங்கை வஞ்சித்திருக்கிறது. அதேநேரம், புலிகள் தவறு செய்யவில்லை என்று கூறவில்லை... அவர்களைப் புனிதப்படுத்தவில்லை. அவர்களும் சில தவறுகளைச் செய்திருக்கிறார்கள். ஆனால், ஈழத்தமிழர்கள் நீதி கேட்டு நிற்கும் சூழ்நிலையில் இப்போது அதனைமட்டும் பெரிதுப்படுத்த வேண்டிய காரணம் என்ன...?''

 “புலம் பெயர் தமிழர்களின் செயல்பாடு இப்போது எப்படி இருக்கிறது...?''

''மிக மோசமாக இருக்கிறது. இன்னும் பிரபாகரன் இருக்கிறார் என்று சொல்வதைவிட மிகப்பெரிய முட்டாள்தனம் என்ன இருக்கும்...? இது பிரபாகரனைக் கேவலப்படுத்தும் செயல். போர் முனையில் மக்களைத் தவிக்கவிட்டுவிட்டு, பிரபாகரன் தப்பிச்சென்று இருப்பாரா என்ன..? ஆனால், அறிந்தோ... அறியாமலோ புலம்பெயர் தமிழர்கள் அதனைத்தான் இன்னும் செய்துகொண்டிருக்கிறார்கள்.'' 

“இலங்கையில் உள்ள தமிழர்களுக்கான பாராளுமன்ற பிரதிநிதிகளின் செயல்பாடு...?''

''அவர்கள் ஆளும் கட்சிக்கு விருப்பமானதை மட்டுமே செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தம் ஆளும் கட்சியின் மனம்கோணாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு இந்த இனப்படுகொலையால் எந்த இழப்பும் இல்லை... அதனால், இந்தப் பேரழிவு எதுவும் அவரைப் பாதிக்கவில்லை. ஆனால், போரின் வடுக்களை, வலி மிகுந்த நினைவுகளைச் சுமந்துகொண்டிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு, உலகத்தின் எந்த மூலையில் யார் பாதிக்கப்பட்டாலும் வலிக்கிறது. அதனால்தான் பாலச்சந்திரனை இழந்த தீபச்செல்வனால், சிரியாவின் அயலான் குர்திக்காகக் கவிதை எழுதமுடிகிறது. அந்த மக்களின் துயரைத் தன் துயராகக் கருத முடிகிறது. அந்த மக்கள்தான் நீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.'' 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!