வெளியிடப்பட்ட நேரம்: 10:41 (26/05/2017)

கடைசி தொடர்பு:10:41 (26/05/2017)

“போஸ்டர்... கட்-அவுட்... நான்கு லாரிப் பூக்கள்!” : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 46

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் தமிழக மக்களுக்கு... தமிழக அரசியலுக்கு... ஒருவிதமான படோடோபமான, ஆடம்பர அரசியலை அறிமுகம் செய்தார். காமராஜர் காலத்தில் அதற்கு வழியே இல்லை. அண்ணா காலத்தில் அதை யாரும் நினைத்துப் பார்த்திருக்கக்கூட முடியாது. கருணாநிதி காலத்திலும் அவ்வளவு ஆடம்பரம் அரசியலில் எட்டிப்பார்க்கவில்லை. சொகுசான நடிகராக இருந்து, முதல்வரான எம்.ஜி.ஆர் காலத்தில்கூட நிலைமை அவ்வளவு மோசமாகவில்லை. அதுவரையிலும் ஆர்ப்பாட்டமான அரசியல் இருந்தது. ஆனால், ஆடம்பர அரசியல் என்ற ‘கான்செப்ட்’ தமிழகத்துக்கு அறிமுகம் ஆகவில்லை.  ஜெயலலிதா காலத்தில் அது தமிழகத்துக்குள் எட்டிப் பார்க்கத் தொடங்கி... பிறகு, அரசியலின் அங்கமாக மாறிப்போனது. அந்தக் காலகட்டத்தில் ஜெயலலிதா தன்னை, தமிழகத்தை ரட்சிக்க வந்த ஆதிபராசக்தியின் வடிவமாக கற்பனை செய்து கொண்டார். தன்னைவிட்டால் தமிழகத்துக்கு வேறு நாதி இல்லை என்ற நினைப்பில் இருந்தார். இனி நிரந்தரமாக தமிழகத்தில் அ.தி.மு.க-வின் ஆட்சிதான் என்று தப்புக் கணக்கைப் போட்டுக் கொண்டார். அந்த எண்ணம் அவர் கண்ணில் இருந்து எதார்த்தத்தை மறைத்தது. எதார்த்தம் தெரியாததால், அவருக்கும் தமிழக மக்களும் இருந்த இடைவெளி அதிகரித்துக்கொண்டே போனது. 

ஜெயலலிதா எங்கு போனாலும் அவருடைய காருக்கு முன்னாலும் பின்னாலும் தலா 50 கார்கள் அணிவகுத்தன; மேரி மாதா, ஆதி பாராசக்தி வடிவத்தில் சித்தரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் போஸ்டர்கள் தமிழகத்தை கேலிக்குரிய மாநிலமாக பார்க்க வைத்தன; ஜெயலலிதாவின் 150 அடி உயர கட்-அவுட்கள் பொதுமக்களை வாய்பிளக்க வைத்தன; ஜெயலலிதா கடந்து செல்லும்வரை மணிக்கணக்கில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களால் பொதுமக்கள் எரிச்சல் அடைந்தனர். ஜெயலலிதா கலந்து கொள்ளும் சில மணி நேர கூட்ட மேடைகளுக்கு அருகில் அவருக்காக  லட்சக் கணக்கில் பணத்தைக் கொட்டி கழிப்பறைகள் உருவாக்கப்படுவதும், கூட்டம் முடிந்ததும் அவை இடித்துத் தகர்க்கப்படுவதும் தமிழக மக்களை ஆத்திரமுறச் செய்தன. ஆனால் ஜெயலலிதா இவற்றை எல்லாம் விரும்பினார். அவற்றை ரசித்தார். அது ஒவ்வொன்றுக்கும் சசிகலா சாட்சியாக இருந்தார். ஜெயலலிதாவுக்கு இப்படிப்பட்ட ஆடம்பரங்களை பழக்கிவிடுவதும், அவற்றைச் செய்யத் தூண்டுவதும் சசிகலாதான் என்று பலர் குற்றம் சாட்டினர். அந்தக் குற்றச்சாட்டுகள் எதையும் சசிகலா கண்டுகொள்ளவில்லை. அந்த விமர்சனங்கள் எதற்கும் ஜெயலலிதா பதில் சொல்லவில்லை. இவற்றை எல்லாம் உணர்ந்து கொள்ள ஜெயலலிதாவின் 1991-96 ஆட்சியில் பல சம்பவங்கள் இருக்கின்றன. அதில் கும்பகோணம் மகாமகத்துக்கு அடுத்து நடந்த மதுரை மாநாடு உலகப்பிரச்சித்தம். 

மதுரை மாநாடு : ஆடம்பர அரசியலின் உச்சம்! 

1992 ஜுன் 27,28,29 மதுரையில் அ.தி.மு.க மாநாடு நடக்கும் என்று ஜெயலலிதா அறிவித்தார். அதையடுத்து மதுரை சசிகலா, ஜெயலலிதாஅல்லோலகல்லோலப்படத் தொடங்கியது.  மதுரையில் சர்க்கியூட் ஹவுஸில் ஜெயலலிதா, சசிகலா தங்குவதற்காக தனி அறைகள் உருவாக்கப்பட்டன. அந்த அறைகளின் கட்டமைப்பு, ஒருமுறை அல்ல... இருமுறை அல்ல... 27 முறை மாற்றி அமைக்கப்பட்டது. மதுரை, தேனி, திண்டுக்கல்லில் இருந்த சீஃப் இன்ஜினீயர்கள் எல்லாம் மதுரையில் மாநாடு நடைபெறும் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் குவிக்கப்பட்டனர். ஜெயலலிதா தங்கப்போகும் அறைக்கு ‘ஸ்பார்டெக்ஸ்’ டைல்ஸ்கள் பதிக்கப்பட்டன. தமுக்கத்தில் அமைக்கப்பட்ட மாநாட்டு மேடையின் முகப்பில் மழை பெய்தால் தண்ணீர் உள்ளே வடிந்துவிடாமல் இருக்க, தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக ‘பைபர் ஸ்பான்ஞ்’ கூரைகள் வேயப்பட்டன. மேடையிலும்  டைல்ஸ்கள் பதிக்கப்பட்டன. மேடையில் இருந்து ஜெயலலிதாவின் ரெஸ்ட் ரூம் செல்லும் பாதையில், பாலீஸ் செய்யப்பட்ட கடப்பா கற்கள் பதிக்கப்பட்டன. ஜெயலலிதா தங்கப்போகும் அறைக்கு ரத்தினக் கம்பளங்கள் கொண்டு வரப்பட்டு விரிக்கப்பட்டன அதற்குள்ளேயே மேக்கப்-ரூம், டிரெஸ்ஸிங் ரூம், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த டிஸ்கஷன் ரூம் அமைக்கப்பட்டது. மன்னார்குடியில் இருந்து சமையலுக்கு தனி சமையல்காரர்கள் இறக்கப்பட்டனர். 

 

போஸ்டர்... கட்-அவுட்... நான்கு லாரிப் பூக்கள்!

மதுரை மாநாட்டில் மாநாடு

தலைநகரின் ஜான்சி ராணி... என்று கலர் போஸ்டர்கள் பளபளத்தன. செங்கோட்டையன், கண்ணப்பன், அழகு திருநாவுக்கரசுதான் மாநாட்டு ஏற்பாடுகளை முன்னின்று செய்தனர். 70 எம்.எம். கான்கிரீட் மேடை அமைக்கப்பட்டது. அதன் முன்பு பிளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்த பிரம்மாண்ட யானை சிலைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. 150 அடி உயரத்துக்கு ஜெயலலிதாவின் கட்-அவுட்கள் தமிழகத்தில் மதுரை மாநாட்டில் அறிமுகமானது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களைவிட அந்த கட்-அவுட்கள் உயரமாக இருந்தன. அதைப் பார்த்து மதுரை அஞ்சியது. 27 ஆம் தேதி தொடங்கிய மாநாட்டுக்கு தனி ஹெலிபேடில் சசிகலாவும் ஜெயலலிதாவும் வந்திறங்கினர். ஜெயலலிதா நேராக நடக்க, சசிகலா தனியாக வேறு ரூட்டில் நடந்து போனார்.  சசிகலாவோடு டி.எஸ்.பி சிவனாண்டி சகஜமாகப் பேசிச் சிரித்துக்கொண்டு, அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். ஹெலிபேட் மைதானத்தில் நின்று கொண்டிருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் ஜெயலலிதா வந்தவுடன் தபதபவென வரிசையாய் அவர் காலில் விழுந்தனர். தொலைவில் இருந்து அந்தக் காட்சியைப் பார்த்தவர்களுக்கு ஒரு மனிதக் கோபுரம் ஸ்லோமோஷனில் சாய்வது போலத் தெரிந்தது. அதன்பிறகுதான் உச்சக்கட்ட அதிர்ச்சி அவர்களுக்கு காத்திருந்தது. ஜெயலலிதாவுக்காக பல லட்சங்களைக் கொட்டி, பார்த்து பார்த்து இழைக்கப்பட்ட அந்த அறையில்... 27 முறை மாற்றி அமைக்கப்பட்ட அந்த அறையில் ஜெயலலிதா தங்க முடியாது என்று மறுத்துவிட்டார். அசோக் ஹோட்டலில் தங்கினார். 28 ஆம் தேதி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஜெயலலிதா கொடியேற்றி வைத்தார். அங்கிருந்து மாநாட்டுப் பந்தலுக்கு ஜெயலலிதா வரும் வழியில் 4 லாரிகளில் கொண்டு வந்து பூக்களைக் கொட்டி இருந்தனர். அது ஜெயலலிதா நடந்துவருவதற்காக கொட்டப்பட்ட பூக்கள் அல்ல... ஜெயலலிதாவின் கார் மிதந்து வருவதற்காக கொட்டப்பட்டவை. முதல்நாள் நிகழ்ச்சியில், முசிறித் தொகுதி எம்.எல்.ஏ பிரின்ஸ் தங்கவேலுவின் திருமணம் உட்பட நான்கு திருமணங்களை மாநாட்டில் ஜெயலலிதா நடத்தி வைத்தார். 

ஜெ.வுக்கு இணையாக சசிகலாவுக்கு மரியாதை!

சசிகலா குடும்பம்

முதல்நாள் மாநாட்டில் மடிப்பாக்கம் வேலாயுதம் வெள்ளி சிம்மாசனத்தை ஜெயலலிதாவுக்கு வழங்கினார். அதில் யாழி வடிவமைக்கப்பட்டு இருந்தது. அதனால், அதற்குத் தனியாக சாந்தி பூஜை செய்த பிறகே ஜெயலலிதா  அதில் அமர்ந்தார். ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் முதல்நாள் யானைப்படை, குதிரைப்படை, தரைப்படை அணிவகுப்பு நடைபெற்றது. அதன்பிறகு, வேல் காவடி, மயில் காவடி, சிலம்பாட்டங்கள் நடைபெற்றன. கவிஞர் இளந்தேவனும், சுதா சேஷய்யனும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சசிகலா ஒவ்வொரு முறை எழுந்து வெளியில் சென்றபோதும், திரும்பி வந்து தன் இருக்கையில் அமர்ந்தபோதும், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள் எழுந்து நின்று வணக்கம் வைத்தனர். சசிகலாவின் குடும்பம் அந்த மாநாட்டில் பிரதானமாக வலம் வந்தது. இவற்றை எல்லாம் மேடையில் இருந்து ஜெயலலிதா அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். அதிகாரிகளும் ஜெயலலிதாவுக்குக் கொடுக்கும் மரியாதையை சசிகலாவுக்கும் கொடுத்தனர்.  மதியம் 2.25 மணிக்கு ஜெயலலிதா மாநாட்டுக்கு வந்தார். அங்கு உண்மையிலேயே கூட்டம் லட்சக்கணக்கில் திரண்டிருந்தது.  ஜெயலலிதா சாதனைகள் பற்றி அமைச்சர்கள் அடுக்கடுக்காக பேசினார்கள்.  பேச வருவதற்கு முன் அமைச்சர் விஸ்வநாதன், வெல்வெட் சூட்கேஸ் ஒன்றை ஜெயலலிதாவிடம் கொடுத்தார். அதை மடியில் வைத்து திறந்து பார்த்த ஜெயலலிதா, அதை உடனே மூடி தனது பாதுகாப்பு அதிகாரியிடம் கொடுத்தார். அது அங்கிருந்து நேராக சசிகலாவின் கைகளுக்குப் போனது. சசிகலாவும் அதைப் பார்த்துவிட்டு ஒரு சீட்டை எழுதி ஜெயலலிதாவுக்கு அனுப்பினார். அதைப் படித்த ஜெயலலிதா சசிகலாவை ஒருமுறை பார்த்துக் கொண்டார். இரண்டறை மணிநேரம் பேசிய ஜெயலலிதா, “ராஜிவ் காந்தியின் ரத்தத்தில் நான் வெற்றி பெறவில்லை என்று பேசினார். 29 ஆம் தேதி அதிகாலையில் 4 மணிக்கு ஜெயலலிதா மாநாட்டை முடித்துவிட்டு சென்னை திரும்பினார். அந்த மாநாடுதான் அடுத்தடுத்த தமிழகத்தில் ஜெயலலிதா-சசிகலா கூட்டணி தமிழகத்தில் நடத்தப்போகும் ஆடம்பரங்களுக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது. 

 

இந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.


டிரெண்டிங் @ விகடன்