இயற்கையின் எதிரி பிளாஸ்டிக்கை நண்பனாக்கிய இரு இளைஞர்கள்! #SuccessStory

பிளாஸ்டிக்

வாழ்நாளில், உங்கள் எதிரிகளை நண்பர்களாக மாற்றுவது ஒரு வித்தை. இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் எதிரியான பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை, சுற்றுச்சூழலுக்கு உதவும் நண்பனாக மாற்றி இருக்கிறார்கள் இரண்டு இளைஞர்கள். 

அமித் குமாருக்கு வயது 19, வாரணாசிதான் சொந்த ஊர், அப்பா தையல் கலைஞர். பொருளாதார நெருக்கடி வாட்டி வதைக்க, 10 ஆம் வகுப்புக்கு மேல் தொடர்ந்து படிக்க குடும்ப சூழல் ஒத்துழைக்கவில்லை, இந்நிலையில் வாரணாசியில் இருக்கும் தொண்டு நிறுவனத்தின் உதவி அமித் குமாருக்கு கிடைக்கிறது. அமித் குமார், அங்கு தோட்டக்கலை பற்றிய பயிற்சிகளில் ஆர்வமாக பங்கெடுத்து, தொழில்முனையும் அளவுக்கு உயர்கிறார்.

அப்போது சமூகப் பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது என்ற தலைப்பில் பெங்களூரின் ’Ashoka Youth Venturer Program’ எனும் அமைப்பு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுக்கிறார் அமித் குமார். அங்குதான் பெங்களூரு வாழ் தமிழரான சரணை அவர் சந்திக்கிறார். சரணும் பள்ளிப் படிப்பை முடித்தவர், அம்மா வீட்டுவேலை, அப்பா ஐஸ் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். தோட்டக்கலையில் ஆர்வம் கொண்ட சரணையும், அமித் குமாரையும் இணைத்தது பெங்களூரில் நடந்த அந்த நிகழ்வுதான். 

சொந்த ஊரை விட்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பெங்களூரு வந்த இந்த இருஇளைஞர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை தோட்டக்கலை மட்டுமே. தாங்கள் விரும்பும் தோட்டக்கலையில் புதுமைகளை புகுத்த வேண்டும், குறிப்பாக அந்த புதுமை சுற்றுச்சூழலுக்கு தீர்வாக அமைய வேண்டும் என்று விரும்பினார்கள். இதன் விளைவாய் தோன்றியதே இவர்கள் உருவாக்கிய Urban Container Garden. 

பிளாஸ்டிக் 

 நடைமுறையில் பல விதமான செடிகள் வளர்ப்பு முறை இருந்தாலும், இவர்கள் முன்வைக்கும் யோசனை சற்று வித்தியாசமானது. பொதுவாக நம்மில் பலருக்கு, வீட்டில் தோட்டம் அமைக்க வேண்டும் என்கிற ஆசை இருப்பது இயல்புதான். ஆனால் அதற்கான இடவசதிகளோ, போதிய வழிகாட்டுதலோ கிடைப்பதில்லை, தற்போது நகர்புறங்களில் வாழ்பவர்களுக்கு வீட்டில் மணி பிளாண்ட் வளர்ப்பது ஒன்று தான் அருமருந்து. வாடகை வீட்டில் வசிக்கும் பலருக்கு வீட்டுத்தோட்டம் அமைப்பதில் அதிக ஆர்வம் இருந்தாலும், பல காரணங்களால் அது சாத்தியமாவதில்லை.

அமித் குமார்-சரண்

இப்படியான சிக்கல்களுக்கு அமித்-சரண் பின்பற்றியுள்ள தோட்ட அமைப்பு முறை தீர்வைத் தரும். உங்கள் வீட்டு சமையல் அறை, காரிடார், பால்கனி போன்ற எந்த இடத்திலும் நீங்கள் செடிகளை வளர்க்கலாம். இடத்துக்கு ஏற்ப மரபிரேம்களை தயாரித்து அதில் பிளாஸ்டிக் பாட்டில்களை பொருத்தி, பாட்டில்களில் மண்களைக் கொண்டு நிரப்பி, விதைகளை விதைத்து, பராமரித்து செடிகளை வளர்க்க வேண்டியதுதான். பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி, அமித்-சரண்  அமைத்துள்ள இந்த வகை வீட்டுத் தோட்ட அமைப்பு, தற்போது தோட்டக்கலையில் புதிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளதோடு, பலருக்கு வீட்டுத்தோட்டம் அமைக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டியுள்ளது. நம் வீட்டில் அழகாய் பூக்கும் தாவரங்கள் மட்டுமில்லாமல் மூலிகைத் தாவரங்கள், உடல் நலனுக்குக் தேவையான காய்கள், கீரைகள் என அனைத்தையும் நாம் முயற்சி செய்யலாம்.

வீட்டுத்தோட்டக் கலையில், அமித்-சரண் தற்போது பெங்களூரை கலக்கி வருகின்றனர். தோட்டம் அமைப்பதில் ஆர்வம் இருப்பவர்களுக்கு ஆலோசனை வழங்குவதோடு, வீடு தேடிச் சென்று சேவையினை வழங்கி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!