வெளியிடப்பட்ட நேரம்: 21:44 (26/05/2017)

கடைசி தொடர்பு:14:10 (27/05/2017)

நல்ல செய்தி... விரைவில் தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை!

மழை

குடிநீர் இன்றி தாகத்தால் தவிக்கும் தமிழகத்துக்கு இனி ஒரு மழைக்காலம் எப்போது என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

வழக்கத்தை விட குறைவு

தமிழகத்துக்கு தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை என்ற இரண்டு காலங்களில் மழை கிடைக்கும். கடந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவமழையின்போது, 25 செ.மீ பெய்துள்ளது. வழக்கமான அளவைவிட 6 செ.மீ குறைவாகப் பெய்துள்ளது.

 

அதேபோல கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிந்து விட்டது. இது இயல்பான அளவை விட 62 சதவிகிதம் குறைவாகப் பெய்திருக்கிறது. 140 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாறு வழக்கத்தைவிட குறைவாக பெய்திருக்கிறது. 1876-ம் ஆண்டு வழக்கத்தைவிட 63 சதவிகிதம் குறைவாக  பெய்திருக்கிறது.

அதிக வெயில்

இப்படி கடந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை இரண்டும் ஏமாற்றி விட்டது. தமிழகம் முழுவதும் வழக்கத்துக்கு மாறாக அதிக அளவு வெப்பம் பதிவாகி வருகிறது. இயல்பைவிட 5 பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெயில் கொளுத்துகிறது. எனினும், கோடைகாலத்தில் தமிழகத்தில் ஆங்காங்கே ஆறுதல் அளிக்கும் வகையில் மழை பெய்து வருகிறது. மேலும், தென்மேற்குப் பருவமழை காலம் வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. தமிழகத்தில் மழை வேண்டி கோயில்களில் யாகங்கள் நடைபெற்று வருகின்றன.

நம்பிக்கை இருக்கிறது

தமிழகத்தில் இனியாவது மழை இருக்குமா? என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரனிடம் கேட்டோம். "மார்ச் முதல் மே மாதம் வரை கோடைகாலத்தில் 19 செ.மீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால்,  தமிழகத்தில் 11 செ.மீ தான் பெய்திருக்கிறது. வெப்ப சலனம் காரணமாக இன்னும் சில நாள்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கும். கேரளாவில்தான் அதிக அளவு மழை பெய்யும். கேரளாவை ஓட்டி இருக்கும் கோவை, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும். தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால் தமிழகத்தில் ஜூன் மாதம் 4 செ.மீ., ஜூலை 7 செ.மீ, ஆகஸ்ட் 8 செ.மீ, செப்டம்பர் 12 செ.மீ மழை பெய்ய வேண்டும். இதே அளவுக்கு தென்மேற்கு பருவமழை இருக்கும் என்று நம்புகிறோம்" என்றார்.

அக்டோபர் முதல் டிசம்பர் வரை தமிழகத்துக்கு 60 சதவிகிதம் மழை கிடைக்கிறது. இந்தக்  காலத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு அதிக அளவு மழை பெய்தது. தமிழகம் முழுவதும் 152 சதவிகிதம் பெய்தது. இயல்பைவிட அதிகம். ஆனால், அவ்வளவு அதிகமாகப் பெய்தும் நீர் நிலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள், நீர்நிலைகளில் நடைபெற்ற மணல் கொள்ளை ஆகியவற்றின் காரணமாக நீர் நிலைகளில் மழைநீரை சேமிக்க முடியவில்லை. மழையாகப் பொழிந்த அத்தனை நீரும் வங்கக் கடலில் கலந்து வீணானது. 2015 ஆம் ஆண்டைப் போல, இன்னொரு முறை வரும் வடகிழக்குப் பருவமழை காலத்திலாவது இருக்க வேண்டும். இயற்கை என்ன செய்யப்போகிறது? பெய்யென பெய்யுமா? காயவிடுமா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்