Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

தனியார் பால் நிறுவனங்களும்...ராஜேந்திர பாலாஜியின் எச்சரிக்கையும்...பின்னணி என்ன?

ராஜேந்திர பாலாஜி

 "இங்கே எல்லாருக்கும் எல்லா ஊழலும் தெரிஞ்சிருந்தும், அதைக் கண்டும் காணாம வாழப்பழகிட்டாங்க..இதுல நீ ஒருத்தி மட்டும் தான் மாத்தனும் கேட்கனும்,நெனைக்கிற. இந்த ஊரை திருத்தற வேலையெல்லாம் விட்ரு. இது இப்படித்தான் இருக்கும். சகிச்சிக்கிட்டு அப்படியே போயிகிட்டு இருக்க வேண்டியது தான் ". என்று மருந்து கலப்படம் தொடர்பாக 'சாமுராய்' திரைப்படத்தில், வசனம் வரும். அப்படித்தான் பாலில் நடக்கும் கலப்படங்கள் குறித்த தகவல் நமக்குத் தெரிந்தாலும் நேரடியான பாதிப்பை உணராததன் விளைவாக அதற்கு எதிராக நம்மிடமும் அரசிடமும் இருந்து இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. 

இப்படியான சூழலில்தான் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, திடீரென்று தனியார் பால் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை பால்விடுத்துள்ளார். "பாலில் ரசாயனம் கலப்பதை தனியார் நிறுவனங்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும். பால் கெட்டுப் போகாமல் இருக்க பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக தொடர்ந்து புகார் வந்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற முறைகேடுகளை செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்'' என்று தெரிவித்துள்ளார். அமைச்சருடைய இந்த எச்சரிக்கை சரியானதாக இருந்தாலும், அதில் உள்நோக்கம் இல்லாமல் இருக்க வேண்டும் என்கிறார்கள்  சமூக ஆர்வலர்கள். அதுமட்டுமன்றி அமைச்சரின்  இந்தத் திடீர் பேச்சு அனைவரையும் உற்று நோக்கவைத்துள்ளது. அரசுக்கும் தனியார் பால் நிறுவனங்களுக்கும் இடையே என்ன நடக்கிறது? என்றுகேள்வியும் எழுந்துள்ளது. அது குறித்து தெரிந்து கொள்ள...தொடர்ந்து படியுங்கள்!

''ரசாயனம் கலப்பது உண்மைதான்''

ஆவின் நிறுவனத்தில், பணியாற்றி ஓய்வுப் பெற்ற அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, "தனியார் நிறுவனங்கள் லாபத்தையும் நுகர்வோரை ஈர்க்கும் நோக்கத்தையும் மட்டுமே குறிக்கோளாக வைத்து செயல்படுகின்றன. அதில் ஒன்றுதான் பால் கெட்டுப்போகாமல் இருக்க பாலில் ரசாயனம் கலக்கிற செயல். பாலில் ரசாயனம் கலக்கப்படுகிறது என்று அமைச்சர் கூறியது உண்மைதான்.

மிக எளிமையாக எடுத்துக்கொள்வோம். ஆவின் பால் ஏன் விரைவில் கெட்டுப்போகிறது? தனியார் நிறுவனங்களின் பால் இரண்டு நாட்களுக்கும் மேலாக கெட்டுப் போகாமல் இருக்கிறதே... அதற்கான காரணம் என்ன? பாலில், ஹைட்ரஜன் ஃபெராக்ஸைடு கலந்தால் அதனைக் கண்டறிவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அந்த வகையான கலப்படங்களை  தனியார் நிறுவனங்கள் மிக  சாதாரணமாக செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி பால் கெட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காக,பார்லி மற்றும் மரவள்ளிக் கிழங்கு மாவினை பொன்னுசாமிகலந்து விடுகின்றனர். இறந்தவர்களின் உடல் கெட்டுப் போகாமல் இருக்கப் பயன்படுத்தும் கெமிக்கலையும் இதில் பயன்படுத்துகிறார்கள். இப்படி பலவகையிலும் முறைகேடு நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த முறைகேடு காலம்காலமாக நடந்துகொண்டு இருந்தாலும் அதனைத் தடுக்கும் நடவடிக்கை என்பது மிகக்குறைவு" என்றார்.

இதனைத் தொடர்ந்து பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமிடம் பேசியபோது, "தனியார் நிறுவனங்கள் பாலில், கலப்படம் செய்வதாக எங்களுடைய அமைப்பு பலமுறை அரசிடம் புகார் செய்துள்ளது. ஆனால், இந்தப் புகார்கள் குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும், இந்த முறைகேடுகள் களையப்பட வேண்டும் என  நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளோம். ஆனால், இதுவரை அதற்கானத் தீர்வு மட்டும் கிடைக்கவில்லை. தனியார் பால் நிறுவனங்கள் தவறு செய்யவில்லை என்று நான் சொல்லவில்லை. அதற்காக ஒட்டுமொத்த நிறுவனங்களையும் குறைகூறுவது சரியல்ல. அமைச்சரின் இந்தப் பேச்சு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்த நிறுவனங்கள் தவறு செய்கின்றனவோ அந்த நிறுவனங்கள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். 

அமைச்சர் இதற்காகத்தான்  எச்சரிக்கிறாரா? 

இது தொடர்பாக பால்வளத்துறை அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பவரிடம் பேசியபோது, "கடந்த 10 நாள்களாக உணவுத் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும், தனியார் பால் நிறுவன பிரதிநிதிகளுக்கும் இடையே  கூட்டம் நடந்துள்ளதாகச் சொல்கின்றனர். அப்போது அரசிடம் இருந்து தனியார் நிறுவனங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு கிடைக்க வேண்டும் என்றால், கேட்கும் தொகையைக் கொடுக்க வேண்டும் என்று கூறியதாகச் சொல்கின்றனர். அதற்கு சில தனியார் நிறுவனங்கள், தரமானப் பொருள்களைக் கொடுக்கும்போது நாங்கள் ஏன் பணம் கொடுக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பியதாகக் கூறுகின்றனர். இதன் காரணமாகவே, அமைச்சரிடம் இருந்து தனியார் பால் நிறுவனங்களுக்கு எதிரான எச்சரிக்கைகள் வந்து கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்" என்றார்.

இதனிடையே தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், ராஜேந்திர பாலாஜியின் இந்தப் பேச்சு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்,"தனியார் பால் நிறுவனங்களை மிரட்டி அந்த நிறுவனங்களுக்கு தடைபெற்று ஆதாயம் பெறுவதற்கான முயற்சியா? என மக்கள் கேள்வி எழுப்புவதாக" கூறியுள்ளார் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement