வெளியிடப்பட்ட நேரம்: 08:46 (28/05/2017)

கடைசி தொடர்பு:08:46 (28/05/2017)

மாட்டிறைச்சி தடைச் சட்டம்... மக்கள் மனநிலை என்ன?

மாடு

மோடி பிரதமராகப் பதவியேற்று மே 26-ம் தேதியுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்து, 4-ம் ஆண்டு தொடங்கியது. இந்நாளில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெளியிட்ட ஓர் உத்தரவு நாடு முழுக்க பலத்த விவாதங்களை எழுப்பியுள்ளது."மே 26 1960-ம் ஆண்டு, மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனிமேல், பசு ,காளை, எருது, ஒட்டகம் ஆகிய விலங்குகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய முடியாது" என்பதே அந்த உத்தரவு. பி.ஜே.பி தலைவர்கள் தவிர்த்து பெரும்பாலான கட்சித் தலைவர்கள் இந்த உத்தரவைக் கடுமையாக எதிர்க்க, மக்களின் மனநிலை என்பது என்னவாக உள்ளது?

''எல்லா இறைச்சியையும்போல மாட்டிறைச்சியும் ஓர் உணவுதான். அதைத் தடுப்பதில் என்ன நியாயமிருக்கிறது'' என்கிறார் ஜாபர்கான்பேட்டை தமிழரசன். ''பசி... தூக்கம்.. காமம்- இந்த மூணும் மனுஷங்களோட அடிப்படைத் தேவைகள். இதுல யாராவது எட்டிப்பார்க்குறது எந்த அளவுக்குத் தப்பானதோ, அப்படித்தான் சாப்பிடுற உணவுலயும் இருக்கு. நீ இதைத்தான் சாப்பிடணும், இதைத்தான் சாப்பிடக்கூடாதுனு திணிக்கிறதும் தப்புதான்'' என்கிறார் விருகம்பாக்கம் செல்வி. ''மாட்டுக்கறி உணவு இந்த மண்ணின் உணவு. ஒருசாரார், அதைப் புனிதம் என்று நினைத்தால்... அது அந்த மாடுகளுடன் போகட்டும்; அவர்கள் சாப்பிடாமல் இருக்கட்டும். அதற்காக, அதைச் சாப்பிடும் எங்கள்மீது எதற்கு திணிக்க வேண்டும்''' என்கிறார் தமிழச்சி. ''மாட்டை வணங்குறவங்க நாங்க. அதை யாராவது சாப்பிடுறதுக்கு அறுத்தா, எங்க மனசு தாங்குமா'' என்றார். மேற்கு மாம்பழம் அம்புஜம். மைலாப்பூர் ராமகிருஷ்ணன், ''மாட்டை வீட்ல வளத்து, அந்தப் பாலைக் குடிச்சுத்தான் நாம வளர்றோம். பால்கொடுத்த மாட்டையே அறுக்கலாமா'' என்றார். ''மாட்டை அறுக்கிறது அதைத் துன்புறுத்துறதுனு அர்த்தம்னா, அதோட பாலைக் குடிக்கிறதும் தப்புதான். ஏன்னா, மாடு அது ரத்தத்தைத்தானே பாலா கொடுக்குது. அப்போ, நாம மாட்டோட ரத்தத்தைக் குடிக்கிறோம்னு சொல்லலாமா'' என்கிறார் சிந்தன் காட்டமாக. தண்டையார்பேட்டை ராம்குமார், ''குறிப்பிட்ட மக்களுக்கு மாற்று கறிகள் மறுக்கப்பட்டதால் மாட்டுக்கறி உண்ணத் தொடங்கினர். இந்த உணவைத்தான் சாப்பிட வேண்டும் எனச் சொல்வது அறிவியலுக்கு எதிரானது. உணவை ஒட்டி உயர்வு தாழ்வு கூடாது' என்றார் அழுத்தமாக. இப்படிப் பொதுவாக ஆதரவு, எதிர்ப்புக் கருத்துகள் எங்கெங்கும் வேகமெடுக்க, இதன் தாக்கம் சமூக வலைதளங்களிலும் வெளிப்பட்டது. 'மத்திய அரசின் உத்தரவு சரியா... தவறா' என்று 'விகடன்' முகநூல் பக்கத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெட்டிசன்கள் குவித்த கருத்துகளின் துளிகள் இதோ... 

முகநூல்சபீக் ரகுமான்: ''காவிகளுக்குக் கால்நடை வளர்ப்புன்னா என்னான்னே தெரியலை. விவசாயி, மாட்ட வாங்கி வளர்ப்பான்; பால் கறக்கும்வரை பராமரிப்பான்; பின்னாளில் அதை அடிமாடா விற்பான்; பிறகு அந்தக் காசுல இன்னொரு மாட்டை வாங்குவான்; இது ஒரு சுழற்சி...! இதுல மாட்டை அடிமாடா விற்கத் தடைன்னு அச்சானிய உருவிட்டா அந்தச் சுழற்சி நின்னு மாடு வளர்ப்பே இல்லாம போகும்...! அப்புறம் பாலுக்கு பதிலா பால் பவுடரைத்தான் குடிக்கணும்.''

மைதீன் ரபா: ''சரியா... தவறா என்பதைவிட இனி நிலத்தை உழுவுவதற்கு டிராக்டருக்குப் பதிலாகக் காளை மாடுகளைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று சட்டம் வருமா? இயற்கை உரம் (சாணம்) இடபட்ட விளைபொருட்களுக்கு மட்டும்தான் அனுமதி என்று சட்டம் வருமா? இதெல்லாம் வந்தால் இதனால் பலன் கிடைக்கலாம். இல்லையென்றால், அவற்றை வளர்ப்பவர்களுக்குச் அவை சுமைதானே தவிர, அதனால் ஒரு பயனும் கிடைக்காது.''

சேகர் வீராசாமி: ''இனி, அந்நிய நிறுவனங்கள் மாட்டிறைச்சியை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து விற்பனை செய்யும். இப்படியும் இந்தியாவை விற்கலாமப்பா!''

சிவக்குமார் சென்னியப்பன்: ''தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் அசைவப் பிரியர்கள். ஆனாலும், மாட்டுக்கறிச் சாப்பிட மாட்டார்கள். ஏனென்றால் நவீன இயந்திரங்கள் வருவதற்கு முன்னர் நீர் இறைக்க, நிலத்தை உழுவ, நெற்கதிர் அடிக்க, வண்டி இழுக்க என விவசாயத்துக்கும் போக்குவரத்துக்கும் மனிதர்களின் வாழ்வில் ஓர் அங்கமானது. ஆகையால், அதைத் தெய்வமாக மதித்து அதற்கென பொங்கல்வைத்து வழிபடுகிறோம். உலகத்திலேயே மாட்டைத் தெய்வாக மதித்து வழிபடுவது நாம்தான். இருந்தாலும், ஏழை மக்கள் தங்களின் பொருளாதாரச் சூழ்நிலையால் மாட்டிறைச்சியை உண்கின்றனர்.''

உமர் முக்தார் :

அதாவது இந்தியாவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிப்பதால் 30 டாலருக்கு  அதை ஏற்றுமதி செய்து விட்டு, வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்து அதை நாம் 200டாலருக்கு  வாங்க வேண்டும், இதோ புதிய இந்தியா சாணி போடத்  தொடங்கி விட்டது.

ஷண்முகசுந்தரம் செல்வன்: ''பசுவின் கோமியம், பூச்சிக்கொல்லி. நன்மை தரும் மாடுகளை நமது முன்னோர்கள் திங்கவில்லை.''

ராஜகுமார் கந்தப்பழம்: ''அப்படியே இறைச்சி ஏற்றுமதிக்குத் தடை பண்ணுங்க பார்ப்போம். மாட்டீங்க. ஏன்னா, ஏற்றுமதி செய்யும் மூன்று பெரிய நிறுவனம் பி.ஜே.பி-காரங்களுக்குச் சொந்தமானது அப்பதானே வியாபாரம் செய்யலாம். ஆனா, மற்ற மதத்தினர் சாப்பிடக்கூடாது. போங்கப்பா, நீங்களும் உங்க இறையாண்மை ஆட்சியும்.'' 

 மோடி

ரவிக்குமார் பெருமாள்: ''மாட்டைச் சும்மாவெச்சி காப்பாத்துறது எந்தக் காலத்துலயும் இல்லை... பாட்டன் பூட்டன்லான் இததான் பண்ணாங்க... விபரம் தெரியாம யாரும் பேசக்கூடாது... இது, மீத்தேன்ல இருந்து ஹைட்ரோகார்பன் வந்தமாதிரி.. ஜல்லிக்கட்டுல இருந்து வேற ரூபத்துல யோசிச்சி இருக்காணுங்க கார்ப்பரேட் கைகூலிங்க.'' 

வேல்முருகன்.சே: ''மனிதர்களிடமே சாதி - மதம் அடிப்படையில் நீதி வழங்கும் இந்த நாட்டில் மற்ற உயிரினங்களிடமும் இதை எதிர்பார்பது மிகவும் முட்டாள்தனம். இவர்கள் விலங்குகளிடமும் இதையே செய்கின்றனர். பசு மாடு மட்டும் உயிரு.. மத்த உயிரினங்களெல்லாம்....?''

சேகர்: ''அது சரி, இறைச்சிக்காக மாட்டை விற்கத்தான் கூடாது, ஆடு - கோழி மாதிரி இறைச்சிக்காக வளர்க்கலாம் என்கிறதா புதிய மாட்டுச் சட்டம்? கார்ப்பரேட் நிறுவனங்கள்போல பண்ணைவைத்து வளர்த்து அதைக் கறியாக்கி ஏற்றுமதி செய்வதைப்போல விருப்பப்பட்டவர்கள் இறைச்சிக்காக மாடுகளை வளர்த்துக்கொள்ளளாம் என்கிறதா புதிய சட்டம்?'' அப்படிப் பார்த்தால் இனி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்துதான் நண்பர்கள் மாட்டுக்கறி வாங்கவேண்டும்போல!''

ரசானா: ''கால்நடைகளின் உற்பத்திப் பெருக்கம் என்பது கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும். அந்தக் கால்நடைகளுக்கான உணவு, நீர் ஆகியவற்றின் தேவைகள் அதிகரிக்கும்போது அது மனிதர்களையும் பாதிக்கும். வியாபார நடவடிக்கைகளுக்காகக் கால்நடை வளர்ப்பவர்கள் அந்தக் கால்நடைகளைச் சும்மாவே கட்டிவைத்துத் தீனிபோட விரும்பமாட்டார்கள். அது, அவர்களுக்கு நஷ்டம். இது கால்நடை வளர்ப்புத் தொழிலைப் பாதிப்பதோடு அந்தத் தொழிலை நம்பி ஜீவனம் நடத்தும் மக்களின் வாழ்க்கைக்கு சாவு மணியடிக்கும். பால் வளர்ப்புக்காக என்று வைத்துக்கொண்டாலும்கூட, ஆண் கால்நடைகளை என்ன செய்வது? வயதுபோய் தளர்வடைந்து நிற்கும் கால்நடைகளைப் பராமரிக்கப் பராமரிப்பு இல்லங்கள் தேவைப்படும். அரசு, இதற்கு அதிகமான நிதியைச் செலவிட வேண்டி வரும். ஆக வரவில்லாமல் செலவு செய்ய வேண்டிய நிலை உருவாகும். நாட்டிலுள்ள ஒருதரப்பாரை இந்தச் செய்தி மகிழ்ச்சிப்படுத்தினாலும்கூட அதிகமான தீமைகளே இந்த முடிவினால் ஏற்படும்.''

பசு

சுரேஷ் கிருஷ்ணா: ''ஜல்லிக்கட்டு, எப்படி மாட்டினங்களைக் காக்கிறதோ அதைப்போல மாட்டிறைச்சிக் கூடங்களும் மாட்டினங்களைக் காக்கின்றன. ஒரு விவசாயி, ஒரு பசுவை வளர்க்கிறார்; அது காளைக்கன்றை ஈன்றுகிறது. அதைவைத்து அவர் என்ன செய்வார்? உழவு செய்ய டிராக்டர்கள் வந்துவிட்டன. மாட்டுவண்டிகளை, நவீன வாகனங்கள் குழிதோண்டிப் புதைத்துவிட்டன. ஆக, ஒரே வழி அந்தக் காளைக்கன்றைக் கறிக்காக விற்பதுதான். அப்படிச் செய்யும்போது அவர் நஷ்டத்தில் இருந்து தப்பித்துக்கொள்வார். ஆனால், மாட்டிறைச்சிக்குத் தடைவிதித்தால் அந்த விவசாயி தன் பசுவை 95 சதவிகித பெண் கன்றை மட்டும் ஈன்றும், செயற்கை விந்தணுவை ஊசி மூலம் செலுத்திக் கருத்தரிக்கவைப்பார். அவ்வாறு செய்யும்போது ஒருகட்டத்தில் காளை இனங்கள் முழுவதுமாக அழிந்துவிடும். பிறகு, இதனால்வரை ஊசியை விற்றுவந்த கார்ப்பரேட் கம்பெனிகள் தனிமனிதனுக்கு சினை ஊசியை விற்கமுடியாது எனச் சொல்லும். காளை இனங்கள் இல்லாததால் தானாகவே பசு இனங்களும் அழிந்துவிடும். பிறகு ஒட்டுமொத்த பால் உற்பத்தியும் கார்ப்பரேட்களிடம் சென்றுவிடும்.''

ஆர்.விஸ்வநாதன்: ''உணவு விஷயத்தில் தலையிடுவது, உன்னத அரசியல் அல்ல. தனிமனிதச் சுதந்திரத்தில் தலையிட எந்த அரசுக்கும் உரிமையில்லை. மறக்க வேண்டாம், நாம் மாமிச பட்சினியாகத்தான் பிறந்தோம், தாய்ப்பாலைக் குடித்து.''

மோகன் சவுண்டப்பன்: ''மாடுகளை வெட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலைகளைத் தடை செய்ய வேண்டும். அதைச் செய்யமாட்டார்கள். இது, லோக்கல் சந்தையில் விற்காமல் பெரிய பெரிய அளவில் எற்றுமதி செய்யும் கூடங்களுக்கு மட்டுமே விற்கவைக்க எடுக்கும் மறைமுக நடவடிக்கையாக ஏன் இருக்கக் கூடாது?''

தற்போது  அடுத்தகட்ட விவாதங்கள் தீவிரமடைந்துகொண்டிருக்கின்றன. மத்திய அரசும் தமது உத்தரவில் உறுதியாக நிற்கிறது. ஆனாலும், மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும்போது மட்டுமே ஓர் உத்தரவு போற்றுதலுக்குரியதாக மாறுகிறது. ஏனெனில், ஒவ்வொரு தனிமனிதரின் உரிமையையும் மதித்தலிலேயே உள்ளது தேசத்தின் அழகு.''