வெளியிடப்பட்ட நேரம்: 18:54 (28/05/2017)

கடைசி தொடர்பு:18:54 (28/05/2017)

மாட்டிறைச்சி தடை...! உணவு உரிமையில் தலையிடவா உங்களை பிரதமராக்கினோம் மிஸ்டர் மோடி!?


ன்று காலை. தேநீர் கடை ஒன்றில் இருவர் பேசிக்கொண்டிருந்தனர். நாளிதழில் வந்த செய்தியை மையப்படுத்தி அவர்களின் பேச்சு இருந்தது. 'இறைச்சி, தோல் பொருட்களுக்காக மாடுகளை விற்கத் தடை' என்ற செய்தியைப் படித்து சிலாகித்தார் ஒருவர். 'மாடுகள் துன்புறுத்தப்படுவதை, இது தடுக்கும் தானே' என்றார். இதைக்கேட்டு மற்றொருவர் அமைதியாக பேசத்துவங்கினார்.

'ஆடு, கோழிகளையும் தானே நாம் உணவாக உட்கொள்கிறோம்.  ஆடு, கோழிகளை இறைச்சிக்காக விற்கக் கூடாது' எனக் கூறியிருந்தால் என்ன சொல்லியிருப்போம்? மாடுகளை இறைச்சிக்காக விற்கக்கூடாது என்பது மாட்டிறைச்சியை விரும்பி உண்ணுபவர்களின் உணவு உரிமையில் கை வைப்பது ஆகாதா?' எனத்துவங்கி சில நிமிடம்  அவர் விளக்கமாய் பேச... 'இதன் பின்னால் இத்தனை அரசியல் இருக்கிறதா?' என்றார். இப்போது அவரால் அரசின் உத்தரவை சிலாகிக்க முடியவில்லை. அரசின் மீது கோபப்பட்டார்.

அரசின் மீதான  மக்களின் இந்த கோபம் என்பது மிக ஆபத்தானது. மூன்றாண்டுகளை நிறைவு செய்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பி.ஜே.பி., இப்படியான ஆபத்தில் சிக்கிக் கொண்டுள்ளது.

மாடுகளை இறைச்சிக்காக விற்கக் கூடாது என்பது நாட்டு மக்களின் மீது நடத்தப்பட்ட பன்முனைத்தாக்குதல். உணவு உரிமையில் கை வைப்பதாகும்; லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்; விவசாயிகளை, விவசாயத்தை கடுமையாக பாதிக்கும்; கிராம பொருளாதாரத்தை கேள்விக்குறியாக்கும்; சமூக பதற்றத்தை உருவாக்கும் என மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு ஏராளமான எதிர்வினைகள் கிளம்பியிருக்கின்றன. இவற்றையெல்லாம் தான் நாம் பார்க்கவிருக்கிறோம்.

மாட்டிறைச்சி தடை

உணவு உரிமையில் கை வைக்கலாமா?

'சுதந்திரம் என்பது முழுமையானது. பாதி சுதந்திரம் என்பது இல்லவே இல்லை' என ஒரு கூற்று உண்டு. இதை மத்திய அரசின் இந்த தடையோடு தொடர்பு படுத்திக்கொள்ள முடியும். இதையெல்லாம் சாப்பிடக்கூடாது என மறைமுகமாக அரசு தடுப்பது என்பது நிச்சயம் உணவு உரிமையிலும், தனிநபர் சுதந்திரத்திலும் தலையிடுவது தான். இந்தியாவில் மாட்டிறைச்சியை உணவாக உட்கொள்ளுதல் என்பது காலம் காலமாக இருக்கும் வழக்கம். இஸ்லாமியர்கள், தலித் மக்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் உட்கொள்ளும் உணவாகவே மாட்டிறைச்சி இருந்து வருகிறது. கேரளா போன்ற சில மாநிலங்களில் மாட்டிறைச்சி உட்கொள்ளுதல் என்பது பரவலாக இருந்து வருகிறது.

மாட்டிறைச்சி என்பது தீண்டக்கூடாத உணவு என தள்ளிவைக்காத சமூகம் என்றால், அது இஸ்லாமியர்களும், தலித் மக்களும் தான். அதற்காக மற்ற சமூகத்தில் மாட்டிறைச்சி உணவு உட்கொள்வதில்லை என சொல்லி விட முடியாது. அனைத்து மதங்களிலும் மாட்டிறைச்சியை உட்கொள்ளும் வழக்கம் இருந்து வருகிறது. மாட்டிறைச்சியை விரும்பி உண்பவர்கள் அனைத்து மதத்திலும் இருக்கிறார்கள்.

குறிப்பாக தலித் மற்றும் ஏழை மக்களின் விருப்ப உணவாக மாட்டிறைச்சி இருந்து வருகிறது. அதிக புரோட்டீன் சத்துடன் மிக குறைந்த விலையில் கிடைக்கும் சத்தான உணவு மாட்டிறைச்சி தான். இதை தடுப்பது என்பது, நிச்சயம் அவர்களின் உணவு உரிமையில் கை வைப்பது தான். அனுமதிக்கப்பட்டதை மட்டுமே சாப்பிட வேண்டும் என்ற நோக்கில் ஒரு சட்டத் திருத்தத்தை கொண்டு வருவது என்பது நிச்சயம் சரியல்ல.

மாட்டுச் சந்தை

மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் !

மாட்டிறைச்சி  விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த மறைமுக தடை, மக்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும். ஆடு, கோழி இறைச்சி கடைகளைப்போல, மாட்டிறைச்சி விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் நாடு முழுவதும் மிகுந்திருக்கிறார்கள். தோல் பதனிடும் ஆலை, அறுமனைகளில் பணியாற்றுபவர்கள், சிறிய வியாபாரிகள், மாட்டிறைச்சி உணவு பழக்கத்தை கொண்டவர்கள் என பல்வேறு தரப்பினர் மத்திய அரசின் தடை உத்தரவால் பாதிக்கப்படுவார்கள். இதன் மூலம் நாடு முழுவதும் ஒரு கோடி தொழிலாளர்கள் வேலையிழக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

எனவே மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கக் கூடியதாக அரசின் இந்த சட்டத் திருத்தம் இருக்கும். சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும். இந்த தடையின் மூலம் மிகப்பெரிய தாக்குதலை பி.ஜே.பி. அரசு மக்கள் மீது தொடுக்கிறது. கால்நடை வர்த்தகம் மற்றும் இறைச்சி வியாபாரத்தில் பெரும்பாலும் ஈடுபட்டுள்ளவர்கள் இதர பிற்படுத்தப்பட் டோர், சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களே. அவர்களது தொழிலை முடக்கி அவர்களது பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டதாகவே அரசின் இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.

மாடு மேய்ச்சல்

கேள்விக்குறியாகும் கிராமப் பொருளாதாரம்?

மாட்டிறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த மறைமுகத்தாக்குதல் நேரடியாக பாதிப்பது கிராமப்புற பொருளாதாரத்தை தான். பி.ஜே.பி. அரசின் இந்த அறிவிப்பு, கால்நடை வளர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ள கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைத்து அழிக்கும்; பாரம்பரியமாக நடைபெற்று வரும் கால்நடைச் சந்தைகளை முற்றாக அழித்தொழிக்கும்.

அரசின் இந்த உத்தரவால் மாடுகளை விற்பனை செய்வது என்பது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும். ஒரு விவசாயி இன்னொரு விவசாயிக்கு மாடுகளை விற்க வேண்டும் என்றால், மாட்டை விற்பவரும், மாட்டை வாங்குபவரும், 'தான் ஒரு விவசாயி' என்பதற்கு சான்று கொடுக்க வேண்டும். அது என் மாடு தான் என்பதற்கான ஆதாரத்தை வைத்திருக்க வேண்டும். அந்த மாடுக்கு அடையாளங்களை தெரிவிக்க வேண்டும். மாட்டை விற்ற பின்னர்,  6 மாதம் வரை இந்த ஆவணங்களை எல்லாம் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும்.

இது மட்டுமல்லாமல், கால்நடை மருத்துவரின் சான்று, தேவைப்படும் பட்சத்தில் கலெக்டர் தலைமையிலான குழுவின் ஆணை என இதன் பின்னால் உள்ள சிக்கல் ஏராளம். இவை எல்லாம் மாடுகளை பிரதானமாக கொண்டிருக்கிற கிராமப் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.  ஒருவர் தன் மாட்டை விற்க வேண்டும் என்றால் அதற்கு அரசு அதிகாரியிடன் சான்று கேட்டு காத்திருக்க வேண்டும். அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டும் என்பது நிச்சயம் தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்துவதாகவே இருக்கும்.

மாட்டுச்சந்தை

விவசாயிகளின் நிலை மோசமாகும் !

இந்தியாவில் விவசாயிகளின் நிலைமை தற்போது மிக மோசம். விவசாயத்தின் அடிப்படையாக இருப்பது பசுக்கள் தான். பால் கறப்பது என்பதை கடந்து உழவுக்கு, வண்டிக்கு என மாடுகளின் தேவை விவசாயத்துக்கு அதிகப்படியாகவே இருந்து வருகிறது. இந்த சூழலில்  விவசாயிகள் விவசாயத்தேவைக்கு மாடுகளை வாங்க வேண்டும் என்றால் கூட, ஏகப்பட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது  அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். உச்சகட்டமாக, தகுதியற்ற மாடுகளைக் கூட விற்பனை செய்ய முடியாது என்பது விவசாயிகளுக்கு பெருஞ்சுமையாக இருக்கும்.

வயதான, விவசாயத்துக்கு தகுதியற்ற மாடுகளை கூட விற்க முடியாது என்றால், அந்த மாடுகளை விவசாயிகள் எப்படி பராமரிப்பார்கள். அந்த மாட்டுக்கு தீனி உள்ளிட்ட உணவு தேவைக்கு தினமும் ரூ.200 முதல் ரூ.300 வரை செலவாகும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல், இடு பொருட்களின் விலை உயர்வால், பாசனத்துக்கு நீரின்றி கடுமையான நெருக்கடியில் உள்ள விவசாயிகள், இந்த பராமரிப்பு செலவை எப்படி ஏற்பார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. இது விவசாயத்தை மீண்டும் நெருக்கடிக்குள்ளாக்கும். விவசாயிகளையும் சிக்கலுக்குள்ளாக்கும்.

தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும்?

ஏற்கனவே பசு வதை தடுப்பு என்ற பெயரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தேவையற்ற பதற்றம் உருவாகி வருகிறது. மாட்டிறைச்சியின் பெயரால் அண்மையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.  

உத்தரப்பிரதேசம் தாத்ரியில் மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்று காரணம் கூறி முகமது அக்லாக் என்பவர் அடித்தே கொல்லப்பட்டார். குஜராத் மாநிலம் உனாவில் செத்துப் போன மாட்டின் தோலை உரித்ததற்காக 4 தலித் இளைஞர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். ராஜஸ்தானில் பெஹ்லூகான் என்பவர் பால் வியாபாரத்திற்காக பசுக்களை வாங்கி வரும் போது பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரால் சிலரால் அடித்தே கொல்லப்பட்டார். மேலும் இருவரும் படுகாயப்படுத்தப்பட்டனர்.

இப்படி பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் நடந்த வன்முறைகள் தொடர்ந்து கொண்டே வருகிறது. இந்த சூழலில் அரசு இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டதன் மூலம் வன்முறைகள் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது. மக்களை இப்படி பதற்றமாக வைத்திருத்தல் என்பது மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும். அதைத்தான் விரும்புகிறதா இந்த அரசு?

மாட்டிறைச்சி ஏற்றுமதி

ஏற்றுமதிக்கு ஏன் தடையில்லை?

பசுவதை தடுப்பு, பசு பாதுகாப்பு என முழங்கும் பி.ஜே.பி. ஆட்சியில் தான், மாட்டிறைச்சி ஏற்றுமதி என்பது அதிகரித்துள்ளது. உலகிலேயே மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இரண்டாம் இடம் இந்தியாவுக்கு தான். கிட்டத்தட்ட முதலிடத்தை நோக்கி உயர்ந்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பில் மாட்டிறைச்சி ஏற்றுமதி குறித்து கருத்து ஏதும் சொல்லவில்லை.

பசு பாதுகாப்பு என்ற பெயரில் சாதாரண மக்கள், ஏழை விவசாயிகள், சிறிய வியாபாரிகளை பாதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரும் பி.ஜே.பி., மாட்டிறைச்சி ஏற்றுமதியை அதிகப்படுத்தி வருவதும், மாட்டிறைச்சி ஏற்றுமதி குறித்து பேசாமல் இருப்பதும் மிகப்பெரிய முரண்.

பசு வதை தடுப்பு என்ற பெயரில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கொலை, தாக்குதல் சம்பவங்கள் நடந்த நிலையில், மிக அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் மீது தாக்குதலோ அவர்களுக்கு எதிராக போராட்டமோ... குறைந்த பட்சம் கண்டன குரல்களோ கூட எழவில்லை என்பது தான் நிதர்சனம்.

பி.ஜே.பி.யின் இந்த உத்தரவு என்பது மக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கக் கூடியது. ஒருவர் எந்த உணவை உண்ண வேண்டும் என்று அரசு தீர்மானிப்பது என்பது மிக அநீதியானது. பன்முக கலாச்சாரம் உள்ள நம் நாட்டில் ஒற்றை கலாச்சாரத்தை திணிக்கும் முயற்சியாகவே இதை பார்க்க வேண்டும். கோடிக்கணக்கான இந்திய மக்களின் உணவு உரிமையில் தலையிடுவது என்பது அநீதி. இதை மத்திய அரசே திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்.

தன்னை, தன் உரிமையை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய பதற்றத்திலேயே மக்களை வைத்திருக்கிற அரசாங்கம், என்ன மாதிரியான அரசாங்கமாக இருக்கும்?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்