வெளியிடப்பட்ட நேரம்: 11:55 (29/05/2017)

கடைசி தொடர்பு:13:06 (29/05/2017)

“எல்லாம் சரியாத்தானே நடக்குது!” - பொங்கும் பீஃப் பிரியர்கள், பேலியோகாரர்கள்

பேலியோ

வெயிலோ மழையோ குளிரோ, சென்னை ராயப்பேட்டையில் மதியம் ஆகிவிட்டால் குறுகலான ஜானிஜான்கான் சாலையை நெரிசலாக்கும் அளவுக்கு அப்படியொரு கூட்டம் கூடிவிடும்..! சில மணி நேரத்துக்கு மக்கள் கூட்டம் வருவதும் போவதுமாக அப்படியே இருக்கும். அவர்களில் பெரும்பாலானோர் பீஃப் பிரியர்கள் மட்டுமல்ல, பேலியோ டயட்காரர்களும்தாம்!

இங்கு மட்டுமல்ல... நகரில் பரவலாக எல்லா இடங்களிலும் மாட்டிறைச்சி உணவுப் பிரியர்களின் கூட்டத்தைப் பார்க்கமுடியும். நீண்ட நெடுங்காலமாகவே தலைநகர் சென்னையில், மாட்டிறைச்சி உணவுவகைகளின் விற்பனை நடந்துவருகிறது. தொடக்கத்தில், சென்னையின் பூர்வீகப் பகுதிகளில் மட்டுமே குறிப்பிட்ட நாள்களில் மட்டும் நடந்துவந்த மாட்டிறைச்சி உணவு விற்பனை, இப்போது தென்சென்னையைத் தாண்டி, தென்கோடி சென்னையிலும் மேற்குசென்னைப் பகுதிகளிலும் அமோகமாக நடக்கிறது.

அதிகமாக பிரியாணியாகவும் வறுவலாகவும் விற்கப்படும் மாட்டிறைச்சியை, சுக்கா, கோலா உருண்டையாகவும் சுவைத்து மகிழ்கிறார்கள், பீஃப் பிரியர்கள். எலும்பு சூப்புக்கும் வால்சூப்புக்கும் பீஃப் மெனுவில் தவறாமல் இடம் உண்டு. இன்னும் புதுப்புது பீஃப் வகையறாக்கள், சிறிதும் பெரிதுமான உணவகங்களில் வந்தவண்ணம் உள்ளன. நடைபாதைக் கடைகளிலும் 'நாகரிக'த் தோற்றம்கொண்ட உணவகங்களிலும் ஆட்டு, கோழி இறைச்சியுடன் போட்டிபோடும் அளவுக்கு மாட்டிறைச்சி உணவு விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக கேரள பாணி உணவகங்களில் மற்ற கறியுணவு வகைகளுக்கு இணையான அளவில் பீஃப் வகையறாவும் இடம்பெற்றிருப்பது, எளிதில் கண்டுகொள்ளக்கூடிய யதார்த்தக் காட்சி!

சென்னையின் இறைச்சி உணவுப் பிரியர்களில் கணிசமான அளவினராக இருக்கும் பீஃப் பிரியர்கள், மத்திய அரசின் புதிய உத்தரவால் தங்களின் உணவுரிமை பறிக்கப்பட்டுவிடுமோ எனக் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். காய்கனி, ஆட்டிறைச்சி, கடலுணவு வகைகள் எப்படிக் கையாளப்படுகிறதோ, அதேவிதிகளின்படியே மாட்டிறைச்சியும் கையாளப்படுகிறது. இப்படி இருக்கையில், திடீரென மாட்டிறைச்சியை குறிப்பாக உள்ளூர் மாட்டிறைச்சியை இல்லாமல் ஆக்கும்வகையில் ஏன் மத்திய அரசு உத்தரவிடவேண்டும் எனப் பொங்குகிறார்கள், பீஃப் பிரியர்களும் அந்தத் தொழிலில் உள்ளவர்களும்!

அவர்கள் முன்வைக்கும் விவரங்களும் ஒதுக்கிவிட்டுப் போகக்கூடியவையாக இல்லை. தலைநகர்வாசிகளின் தேவைக்காக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த காளை மாடுகளை வியாபாரிகள் கொண்டுவந்து, பெரம்பூரில் உள்ள மாநகராட்சியின் (மாடு தொட்டி) இறைச்சிக் கூடத்தில், முறையான அனுமதிக்காக நிறுத்துகின்றனர். அங்குள்ள மாநகராட்சியின் கால்நடை மருத்துவர்கள், மாட்டை வெட்டுவதற்கு முன்னர், 'ஆன்டிமார்ட்டம் இன்ஸ்பெக்சன்' எனும் பரிசோதனையைச் செய்வார்கள். அதாவது இறைச்சியாக மாற்றுவதற்கு உகந்தநிலையில் அந்த மாடு இருக்கிறதா, இல்லையா என்பதற்கான சோதனை! அதில் என்ன செய்வார்கள்?

மாடு மந்தமாக, சராசரியான நடமாட்டமின்றி, தரையோடு தரையாகப் படுத்திருந்தால், அதற்குக் காய்ச்சல் இருக்கலாம். கண்ணில் உள்ள ரத்த ஓட்டத்தை வைத்து ரத்தசோகை இருக்கிறதா என்பதை உறுதிசெய்யலாம். சுவாசப் பிரச்னைகள் குறிப்பாக காசநோய் இருந்தாலும் கண்டறிந்துவிடமுடியும். இப்படி தொற்றக்கூடிய வியாதி, முற்றிய வியாதி தாக்கிய குறிப்பிட்ட மாடுகள் தனியாகப் பிரித்துவைக்கப்படும். இதைப் போலவே வெட்டப்பட்ட மாடுகளின் உறுப்புகளைத் தனித்தனியாக எடுத்து, போஸ்ட்மார்ட்டம் எனப்படும் கூறாய்வும் செய்யப்படுகிறது.

கூறாய்வைப் பற்றி கூறுகூறாகச் சொல்லித்தான் ஆகவேண்டுமா என்று கேட்கையில் நம்மை விடமாட்டேன் என்கிறார்கள், பீஃப் பிரியர்கள். “எல்லாமே சட்டப்படியும் விதிப்படியும்தான் நடக்கின்றன. உணவு உரிமை என்பதைத் தாண்டி இதை அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும். மாநகராட்சியால் நடத்தப்படும் மாடுவெட்டுமிடத்தில், சர்வதேச அளவில் பின்பற்றப்படும் முறையின்படிதான் மாடுகள் இறைச்சி ஆக்கப்படுகின்றன. இது முழுக்கமுழுக்க அறிவியல் முறை என்பதால், இதைப் பற்றி யாரும் குறைசொல்வதில்லை” என அழுத்தமாகச் சொல்கிறார்கள், மாட்டிறைச்சிப் பிரியர்கள்.

மாநகராட்சியின் மாடுதொட்டியில் அன்றாடம் சுமார் 110 மாடுகளும் ஞாயிறன்று மட்டும் 300 மாடுகளும் வெட்டப்படுகின்றன; மாட்டுக்கொம்பு, நீண்ட எலும்பு, பற்கள் உட்பட மண்டைப் பகுதி ஆகியவை தவிர்த்த பகுதிகள் இறைச்சி ஆக்கப்படுகின்றன; எலும்புகள் கோழிப்பண்ணைத் தீவனமாக மாற்றப்படுகின்றன; சராசரியாக 200 - 350 கி.கி. எடை கொண்ட மாடுகள் வெட்டப்பட்ட பின்னர் 100 - 150 கிலோவரை இறைச்சியைத் தருகின்றன எனப் புள்ளிவிவரம் சொல்கிறார்கள், இறைச்சி வர்த்தகர்கள்.

ஆனால், இவர்கள் கூறும் இந்தப் புள்ளிவிவரங்களைவிடப் பல மடங்கு மாடுகள், ஆங்காங்கே தனித்தனியாக வெட்டி இறைச்சியாக்கப்படுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த மாதிரியான மாட்டிறைச்சியால் சுகாதாரக்கேடு, நோய்த்தொற்று வந்துவிடக்கூடாது என்பதற்காக, மாநகராட்சியின் மண்டல அளவிலும் வட்ட அளவிலும் புதன்கிழமைதோறும் சோதனை நடத்தப்படவேண்டும். அதாவது, 'மாடுதொட்டியில் மருத்துவரின் அனுமதிபெறாமல் விற்கப்படும் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கையும் எடுக்கவேண்டும்' என்பது அரசின் விதிமுறை. அது எந்த அளவுக்கு நடக்கிறது என்பது கேள்விக்குறிதான் என்றாலும் மாட்டிறைச்சி உண்டதால் பாதிப்பு ஏற்பட்டதற்கான சான்றுகள் இதுவரை பெரிதாக இல்லை என்பதும் உண்மை! 

வழக்கமான பீஃப் பிரியர்களோடு, பேலியோ டயட் எனப்படும் ஆதிமனித உணவுமுறையைக் கடைப்பிடிப்பவர்களும் மாட்டிறைச்சி உண்பதற்கு ஆபத்து வந்துவிட்டது எனக் கடும் கோபத்தோடு பேசுகிறார்கள். 

 

வடிவழகன்காரணம், ''பேலியோ டயட்டில் கட்டாயம் எடுக்கவேண்டிய இறைச்சியில் ஆட்டுக்கறி, கோழிக்கறியைவிட மாட்டிறைச்சியே மலிவாகவும் அதிகப் புரதச்சத்து கொண்டதாகவும் உள்ளது. கால் கிலோ ஆட்டுக்கறி சாப்பிடவேண்டிய ஒருவர் அதற்காக 150 ரூபாய் செலவழிக்கவேண்டும்; ஆனால் அதைவிட மூன்று மடங்கு குறைவாக 40-50 ரூபாய் விலையில் நல்ல மாட்டிறைச்சி கிடைக்கிறது என்பதால், பேலியோ உணவுக்காரர்கள் மாட்டிறைச்சியைத் தேர்ந்தெடுப்பது இயல்புதானே...'' என்கிறார், சென்னை எம்ஜி.ஆர் நகரில் வசிக்கும் பேலியோ டயட்காரரான வடிவழகன். 

''ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், உடல் பருமனாக உள்ளவர்கள் ஏராளமானவர்கள் பேலியோ முறைக்கு மாறிவரும்நிலையில், குறிப்பாக குறைந்த வருவாய்ப் பிரிவினர் இதனால் பயனடைந்துவருகின்றனர். மத்திய அரசின் புதிய அறிவிப்பால் உள்ளூர் மாட்டிறைச்சி கிடைப்பது இனி சாத்தியமில்லாமல் போகும். இறக்குமதி செய்யப்படும் இறைச்சியை மட்டுமே வாங்கும்நிலை ஏற்படும். எளிய மக்களால் அது முடியாதபோது பேலியோ உணவுமுறையை அவர்கள் கைவிடவேண்டிவரும் என்றால், இது யாருக்கான நியாயம்?” என மேலும் வெடிக்கிறார், வடிவழகன்.

அவரைப் போலவே பல தரப்பினரும் நம்மிடம் கேட்பது, இதே கேள்வியைத்தான். இந்த மர்மத்துக்கு விளக்கம் சொல்லுமா மத்திய மோடி அரசு?

 

படங்கள்: ஜெரோம்


டிரெண்டிங் @ விகடன்