வெளியிடப்பட்ட நேரம்: 18:13 (30/05/2017)

கடைசி தொடர்பு:18:22 (30/05/2017)

மிருகவதை தடுப்புச் சட்ட திருத்தம் : தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

 

மிருகவதை தடுப்புச் சட்ட திருத்தம்

'பசு, காளை, எருது, ஒட்டகம் ஆகிய விலங்குகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக்கூடாது' என  மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் உத்தரவு வெளியிட்டது. இந்த உத்தரவுதான் நாடு முழுவதும் சர்ச்சைக்குரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. 

'மிருகவதை தடைச் சட்டம் 1960' -ன் கீழ் திருத்தத்தின்படி இந்தப் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது மத்திய அரசு. இதன்படி, 'இனிமேல் பசு, காளை, எருது, ஒட்டகம் ஆகிய விலங்குகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக்கூடாது' .இந்தத் தடைச் சட்டத்துக்கு எதிராக நாடுமுழுவதும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், 

"இந்தத் தடைச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல...ஒட்டுமொத்த விவசாயிகளுக்குமே எதிரானது. உணவுப்பாதுகாப்பு ஜி.ராமகிருஷ்ணன்சட்டத்தைக் கொண்டு வந்த மத்திய அரசு, அதை அரைகுறையாகவே நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில்,மத்திய அரசின் இந்த உத்தரவு  தனிமனித உணவு உரிமையையே பறிப்பதாக உள்ளது. அதாவது நான் என்ன சாப்பிட வேண்டும்? என்ன சாப்பிடக் கூடாது? என்பதையே மத்திய அரசுதான் தீர்மானிக்கும் என்ற நிலை, ஜனநாயக விரோதமானதாகும்.

பொதுத்துறை நிறுவனங்களையே சந்தைப்படுத்த நினைக்கும் இந்த அரசு, மாடு விற்பனை சந்தைக்கு மட்டும் எதிர்ப்பு, சட்ட திருத்ததின் படி உத்தரவு என்றெல்லாம் நடவடிக்கை எடுப்பது ஏன்? மத்திய அரசின் இந்த நடவடிக்கை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். உழவு மாடுகளைக் குறிப்பிட்ட நாள்வரை பயன்படுத்திவிட்டு அதனை விற்று, கிடைத்த பணத்துடன் கூடுதல் பணத்தைச் சேர்த்து புதிய மாடுகளை வாங்குவதுதான் விவசாயிகளின் வேளாண் நடைமுறை. அப்படியிருக்கும்போது இப்படியொரு தடையைக் கொண்டுவந்துவிட்டால், அவர்களால் எப்படி மாடுகளை விற்க முடியும்? 

விவசாயத் தேவைகளுக்காக மாடுகளை விற்கும் வாங்கும் விவசாயிகளும்கூட, 'இது அடிமாட்டுக்கு இல்லை' என்ற  சான்றிதழை எங்கே, யாரிடம் பெற வேண்டும்? இந்த மாதிரியான  நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றால், இந்தப் பணிகளுக்கென்று ஒரு மாநிலத்தில், ஒரு லட்சம் புதிய ஆட்களையாவது மத்திய அரசு நியமனம் செய்ய வேண்டும்.இப்படியான பல கேள்விகளும் விமர்சனங்களும் உள்ளன. மாடு விற்கும் வாங்கும் சந்தை வணிகம் என்பது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அப்படியிருக்கும்போது, மத்திய அரசின்  இந்தச் சட்டமோ, நோட்டிஃபிகேசனோ செல்லாது. 

பி.ஜே.பி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. மத்திய அரசின் சாதனை என்று அவர்களால் எதையும் சொல்ல முடியவில்லை. அது தொடர்பாக விமர்சனங்கள், கேள்விகள் எழும் என்பதால் மக்களைத் திசைதிருப்பவே இவ்வாறு செய்துள்ளனர். எனவே, மத்திய அரசின் இந்த நடவடிக்கை என்பது சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல... ஒட்டுமொத்த விவசாயிகளுக்குமே எதிரான நடவடிக்கை" என்றார்.

தவறாகப் புரிந்து கொண்டார்கள் ...

தமிழிசை  சவுந்திர ராஜன் பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனோ ''இந்தச் சட்டம் குறித்து தவறாக  எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது'' என்கிறார்.

''மாட்டிறைச்சி உண்ணத் தடை என்று அந்தச் சட்டத்தைத் தவறாகக் கூறுகின்றனர். இது, மிருக வதை தடுப்புச் சட்டத்தில் கொண்டுவந்துள்ள திருத்தம் மட்டுமே. மாட்டுக்கறி சாப்பிடுவதையோ,அந்தந்த மாநிலங்களில் கடைப்பிடிக்கிற சட்டங்களிலோ அல்லது பழக்க வழக்கங்களிலோ இந்தச் சட்டம் தலையிடாது. விவசாயத்துக்கு என வாங்கிவிட்டு முறையற்ற வகையில், கொல்லப்படுவதையும், சுகாதாரமற்ற வகைகளில் மாமிசம் விற்கப்படுவதையும் மட்டுமே இந்தச்சட்டம் தடுக்கிறது. 'மான்களைக் கொல்லக்கூடாது' என்று எவ்வாறு காருண்யம் பார்க்கிறோமோ அதைப்போலத்தான் இதுவும்.

மேலும், மதம் சார்ந்த பழக்க வழக்கங்கள் காரணமாக இதை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது என்ற வாதத்தையும் வைத்துவருகிறார்கள். அது உண்மையல்ல. இந்து கோயில்களில் மாடு பலியிடப்படுவதையும் இந்தச் சட்டம் தடுக்கிறது. எனவே, அனைவருக்கும் பொதுவானதுதான் இந்தச் சட்டம். ஒரு மாநிலத்தில்,  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சட்ட விதிகள், முத்தரசன் முறைப்படுத்தப்பட்டுள்ள சட்ட விதிகள் எதையும் இந்த சட்டம் தடுக்கவில்லை. முறையற்ற முறையில் விலங்குகள் கொல்லப்படுவதையும், சட்டத்தை மீறி சுகாதாரமற்ற நிலையில், இறைச்சி விற்கப்படுவதையும் மட்டுமே இச்சட்டம் தடை செய்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்" என்று விளக்கம் கொடுக்கிறார் தமிழிசை சவுந்தரராஜன். 

மாநில அரசு மௌனம் காப்பது ஏன்? 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், இது குறித்துப் பேசும்போது,

''  மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவு என்பது விவசாயிகளை வஞ்சிக்கிற செயல். மாட்டிறைச்சியை உணவாக எடுத்துக்கொள்ளக் கூடியவர்களுக்கு எதிரான நடவடிக்கையும் ஆகும். பி.ஜே.பி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து மதரீதியாக மக்களைப் பிளவுப்படுத்தப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் இதைப் பார்க்க வேண்டும். மோடி தலைமையிலான பி.ஜே.பி அரசு தங்களிடமுள்ள அதிகாரத்தை மிகவும் தவறான முறையில் செயல்படுத்தி வருகிறது. இது கடுமையான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். இதுபோன்ற விஷயங்களில், மாநில அரசு மௌனம் காப்பது கவலைக்குரியது. இது குறித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 'அந்த அறிக்கையை முழுமையாகப் பார்க்கவில்லை. படித்துப் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்' என்று கூறுவது மக்களை ஏமாற்றுகிற செயலாகும். எனவே, இவ்விஷயத்தில் மாநில அரசின்  நிலைப்பாடு என்ன  என்பதை முதலமைச்சர்தான் உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவை திரும்பப் பெறவில்லை என்றால், நாட்டு மக்கள் இதை நிராகரிப்பார்கள் என்பது உண்மை" என்றார்.

''புல் பூண்டைத்தான் சாப்பிட வேண்டும்!''

ஈ.வி .கே. எஸ் இளங்கோவன் இது குறித்துப் பேசிய தமிழக காங்கிரஸின்  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், ''‘ மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்தத் தடை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை. இவை ஏழை மக்களையும், விவசாயிகளையும் பாதிக்கக் கூடியவை. தனி மனிதன் என்ன சாப்பிடவேண்டும் என்ன சாப்பிடக் கூடாது என்பதை மத்திய அரசு முடிவு செய்யக் கூடாது. எனவே, இந்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். நிலம் வைத்துள்ள விவசாயிகள், கால்நடைகளையும் வைத்திருப்பது அவசரத்துக்கு அவற்றை விற்று சமாளிப்பதற்காகத்தான். அதற்கே  தடை போட்டால், அது எந்த வகையில் நியாயம்? ஆகும். எனவே, இந்தச் சட்டம் அவர்களைக் கடுமையாகப் பாதிக்கும். இந்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறவில்லை என்றால், மோடி தலைமையிலான அரசு வீழ்வதற்கு இதுவே காரணமாக இருக்கும். அதுமட்டுமன்றி அரசியல் பின்னணியில்தான் இதை  மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 

மதவாத அரசியலை மையமாக வைத்தே மத்திய அரசின் நடவடிக்கை உள்ளது. நான் பீஃபை விரும்பிச் சாப்பிடக் கூடியவன். அப்படி இருக்கும்போது அதைச் சாப்பிடக்கூடாது; இதைச் சாப்பிடக் கூடாது எனச் சட்டம் கொண்டு வந்தால், இனிமேல் புல் பூண்டைத் தவிர வேறு எதுவும் சாப்பிட முடியாது'' என்றார்.

''சிவில் வார் சூழலை உருவாக்கியுள்ளது!''

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இதுகுறித்துப் பேசும்போது, "மத்திய அரசின் இந்த அறிவிப்பு 'சிவில் தொல். திருமாவளவன் வார்' சூழலை உருவாக்கியுள்ளது. இந்த அறிவிப்புக்குப் பிறகு, 'திராவிட நாடு' கோரிக்கைக் குறித்த குரல்கள் கேரளாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன.

மாடு பிடித்துப் போகிற யாரை வேண்டுமானாலும் துன்புறுத்தக் கூடிய நிலையை இந்தச் சட்டம் வழி வகுத்துக் கொடுக்கும். பொதுவாக உழவுக்குப் பயன்படாத மாடுகளை எத்தனை ஆண்டுகளுக்கு வைத்திருக்க முடியும்? அதேபோன்று பால் வற்றிப் போனால், அந்தப் பசு மாடுகளை எத்தனை ஆண்டுகளுக்கு வைத்திருந்து பராமரிக்க முடியும்? இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், உத்தரவிட்டிருப்பது மோசமான நடவடிக்கை. 

கிராமப்புற மாடு வளர்ப்புத் தொழிலையே மிகவும் பாதிக்கக்கூடிய நடவடிக்கை. அதாவது பால் வியாபாரத்தைக் கார்ப்பரேட் மையமாக மாற்ற வேண்டும் என்றும் பால் வளர்ப்புக்கான ஜீவனத்தை கார்ப்பரேட் ஆக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, இந்த உத்தரவை திரும்பப் பெறுகிற வரை அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்