Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய அரசு புகழ்பாடும் தமிழக அரசு! விழா மலர் சர்ச்சை

எடப்பாடி  பழனிசாமி -மோடி

டந்த 2014 மே 26-ல்  இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார் நரேந்திர மோடி. அவர், நாடாளுமன்ற மைய மண்டபத்தைத் தலைவணங்கி முத்தமிட்டு உள்ளே சென்றக் காட்சிகளை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. அதன்பிறகு நாட்டின் நலன்சார்ந்து அவர் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் பச்சை மரத்தில் அடித்த ஆணிபோன்று மக்கள் மனதில் இன்னுமுள்ளது. ஆனால், அவையெல்லாம் நிறைவேற்றப்பட்டதா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்விகள்..? 

பல்வேறு திட்டங்கள்மூலம் பி.ஜே.பி மக்கள் செல்வாக்கைப் பெற்றுவிட்டதா என்பதைவிட, அரசியல் காய் நகர்த்தல்களின் மூலமே அது, பல மாநிலங்களில் தனது செல்வாக்கை நிலைநாட்டி வருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. உத்தரப்பிரதேசம் தொடங்கி தமிழகம்வரை பி.ஜே.பி-யின் அரசியல் யுக்திகள் அனைத்தும் மிகவும் மாறுபட்டவை . 

தமிழகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியல் களம் மிகப்பெரியளவிலான மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வம் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான சசிகலாதான் ராஜினாமா செய்ய நிர்பந்தித்தார் எனப் பேட்டிகொடுத்து அதிர்ச்சியளித்தார். அதன்பிறகு, சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்குச் சிறை, இரட்டை இலைச் சின்னத்தை மீட்கத் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன் கைது எனத் தொடர்ந்த அ.தி.மு.க-வின் அரசியல் கள மாற்றம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்த மாற்றங்களையெல்லாம் பி.ஜே.பி நிகழ்த்தி, அ.தி.மு.க-வை ஆக்கிரமித்துவிட்டது எனப் பல அரசியல் கட்சித் தலைவர்களும் பேசி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, பி.ஜே.பி-யின் ஆடுபுலி ஆட்டம் அ.தி.மு.க என்ற கட்சியில் மட்டுமல்லாது, தமிழக அரசின் நிர்வாக முறையிலும் அரங்கேறத் தொடங்கிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இவ்வாறான விமர்சனங்கள் வருவதற்குக் காரணம், ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு... முதலமைச்சராகப் பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம் மோடிக்கு ஆதரவாகச் செயல்பட்டதே என்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி -வெங்கய்யநாயுடு

பின்னர், பன்னீர்செல்வம் பதவி பறிக்கப்பட்டு அதன்பிறகு பதவியேற்ற எடப்பாடி பழனிசாமியும் மோடிக்கு ஆதரவான நிலைபாட்டிலேயே இருந்து வருவதாகச் சொல்கின்றனர். அதை உறுதிப்படுத்த சில உதாரணங்களையும் அவர்கள் முன்வைக்கிறார்கள். மத்திய அரசுக்கு எதிராக இதுவரை மாநில அரசு எதிர்வினையாற்றாமல் மௌனமாக இருந்துவருவது, மத்திய அரசின் மூன்றாண்டு நிறைவுக்குப் பிரதமர் மோடிக்கு வாழ்த்து என அந்தப் பட்டியல் நீள்கிறது. இவ்வாறானச் சூழலில், மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் மலர் ஒன்றையும் தமிழக அரசு வெளியிடப்போவதாகவும், அதைத் தயாரிப்பதற்கான வேலைகளைத் தமிழ் வளர்ச்சி செய்தித் துறை செய்துவருவதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்துத் தெரிந்துகொள்ள சில அரசு அதிகாரிகளிடம் பேசினோம்.''சாதனை மலரை வெளியிடப் போகிறார்களா என்பது தெரியாது. ஆனால், மத்திய அரசின் திட்டங்கள் குறித்த தகவல்களைச் சேகரிக்க அனைத்து மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்'' என்றனர். 

தமிழக அரசு

இந்தப் பணியை, மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் (press information bureau) மாநில அரசிடம் கொடுத்துள்ளது. இதுதொடர்பாக, கடந்த 5 ஆம் தேதி அனைத்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டது. அதில், தமிழகத்தில் மத்திய அரசு நிறைவேற்றிவரும் திட்டங்களைப் புகைப்படத்துடன் வெற்றிக் கதைகளாக அனுப்பிவைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஒருவர், ''இதுவரை மத்திய அரசின் சாதனைகளை விளக்குவதற்கு மாநில அரசு அதிகாரிகளை இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுத்தியதில்லை. இதுவே முதல்முறை. மத்திய அரசு நிறைவேற்றி வரும் திட்டங்கள் குறித்து எங்களுக்கு எப்படித் தெரியும்.. நபார்டு வங்கியிலும்,இயற்கை எரிவாயு ஆயில் நிறுவனத்திலும் நடப்பது குறித்து எங்களுக்கு என்ன தெரியும்...மாவட்டங்களிலுள்ள டோல்கேட்களில் இவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதெல்லாம் எங்களுக்கெப்படித் தெரியும்? இப்படிச் சம்பந்தமில்லாமல் இந்த வேலையை மத்திய அரசு கொடுத்துள்ளது. அதை மாநில அரசு ஏற்றுக்கொண்டு செய்யப் பணித்துள்ளது. என்ன நடைமுறையோ? இதற்கான காரணம் என்னவென்பது குறித்து உயர் மட்டத்தில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும். இந்த வேலை கொடுத்த கால அவகாசம் முடிந்துவிட்டது. ஆனால், இன்னும் எந்த அலுவலர்களும் அறிக்கை அனுப்பவில்லை. இதுகுறித்து அனைத்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களும் பொருமிக்கொண்டிருக்கிறார்கள்'' என்றார் மிகுந்த கவலையுடன்.

செய்தி தொடர்புத்துறை சுற்று அறிக்கை

''மத்திய அரசின் சாதனை மலரை, தமிழக அரசு வெளியிட முயற்சி எடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறதே'' என மத்திய பத்திரிகை மைய அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, "சாதனை மலரை வெளியிட வேண்டும் என்ற எந்த அறிவுரையும் கொடுக்கப்படவில்லை. அதாவது மத்திய அரசின் திட்டங்களில் வெற்றிபெற்றத் திட்டங்களை (succsses  stories) வெற்றிக் கதைகளாகத் தயாரித்துத் தருமாறு மாநில அரசுக்கு எங்களுடைய கூடுதல் இயக்குநர் முத்துக்குமார் கடிதம் எழுதியுள்ளார். அதில், கேஸ் மானியத்தில் பயனடைந்தவர்கள், முத்ரா வங்கியின் மூலம் பயனடைந்தவர்கள் போன்றோரின் தகவல்களைச் சேகரித்துக் கொடுக்குமாறு சொல்லியுள்ளார். அந்த விவரங்களை மாநில அரசு அலுவலர்களால் மட்டும்தான் தரமுடியும் என்பதால் இதனைக் கேட்டுள்ளார். அதனைத் தொடர்ந்துதான் செய்தி மக்கள் தொடர்புத் துறை அதிகாரி அனைத்து அலுவலர்களுக்கும் இதை அறிவுறுத்தியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இதுபோன்ற நடைமுறை,கடந்தகால ஆட்சிகளில் பின்பற்றப்படவில்லை என்று சொல்கின்றனர். எனக்கு இந்தத் துறை புதிது என்பதால், இதுபற்றி முழுமையாக எனக்குத் தெரியாது'' என்று முடித்துக்கொண்டார். 

மத்திய அரசுக்கு ஆதரவாக மாநில அரசு களமிறங்கிவிட்டதா என்ற சந்தேகம் தற்போதுதான் வலுக்கத் தொடங்கியுள்ளது .

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close