வெளியிடப்பட்ட நேரம்: 16:14 (31/05/2017)

கடைசி தொடர்பு:16:14 (31/05/2017)

''திருமுருகனை நினைத்து மனம் கனக்கிறது!'' - கலங்கும் திருமுருகன் காந்தியின் தந்தை

காந்திஈழத் தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்திய 'குற்றத்துக்காக' மே 17 - இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது தமிழகக் காவல்துறை. தமிழர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய இந்தக் கைது நடவடிக்கையில், அடுத்த அதிரடியாக மத்திய அரசுக்கு எதிராக திருமுருகன் ஆர்ப்பாட்டம் செய்ததாக புதியதொரு வழக்கைப் பாய்ச்சியிருப்பது தமிழகத்தையே அதிரவைத்துள்ளது!

இந்த நிலையில், திருமுருகன் காந்தியின் தந்தையும், செயற்பாட்டாளருமான காந்தியிடம் பேசினோம்....

''திருமுருகன் காந்தி மீது புதிதாக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு எந்தப் பிரிவைச் சேர்ந்தது?''

''புதிதாக 2 வழக்குகள் போடப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். ஆனால், அவை எந்தப் பிரிவில் போடப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை. தடையை மீறி ஊர்வலம் போனவர்கள் மீது வேறு என்ன பெரிதாக வழக்குப் போட்டுவிட முடியும்?''

''திருமுருகன் காந்தி, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு பின்னணி என்னவென்று நினைக்கிறீர்கள்?''

''ரேஷன் கடையை விரைவிலேயே மூடப் போகிறார்கள் என்ற உண்மையை 'மே 17' இயக்கம் பரப்புரை செய்ததோடு, அதுகுறித்து தனியாகப் புத்தகம் ஒன்றையும் எழுதி வெளியிட்டது. ஏற்கெனவே, மே 17 இயக்கம், 'மூடப்படும் ரேஷன் கடைகள்' என்று கடந்த வருடம் முகநூலில் செய்தி வெளியிட்டபோது, அதற்கு மறுப்புத் தெரிவித்துப் பேசினார் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன். ஆனால், இப்போது ட்விட்டர் பதிவில் அவர் வெளியிட்டு வருபவை எல்லாம் ரேஷன் கடைகள் மூடப்படுவதைத்தான் எதிரொலிக்கிறது.

அடுத்ததாக, மதுரை அருகேயுள்ள கீழடியில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டு நடத்தாமல் நிறுத்திய மத்திய அரசின் முடிவை எதிர்த்து மே 17 இயக்கம் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றது. தமிழர்களின் தொன்மையான பாரம்பர்யமும், ஆரியப் படையெடுப்பின் உண்மைகளும் வெளியுலகுக்கு ஆதாரபூர்வமாகத் தெரிந்துவிடக்கூடாது என்பதில் மத்திய பி.ஜே.பி அரசு தெளிவாக இருக்கிறது. அந்த வரிசையில், அவர்களது அடுத்தக்கட்ட நடவடிக்கைதான் திருமுருகன் உள்ளிட்டவர்கள் மீதான இந்த கைது நடவடிக்கை.''

''திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பது தமிழகக் காவல்துறை. நீங்கள் மத்திய அரசைக் குற்றம் சாட்டுகிறீர்களே...?''

''தமிழகக் காவல்துறையும், அரசும் இவ்விஷயத்தில் வெறும் பொம்மைகள்தான். இவர்களை இயக்குவது எல்லாமே மத்திய பி.ஜே.பி அரசுதான். கீழடியில் ஆய்வு நடத்தி, 5,296 அரியப் பொருட்களை மீட்டெடுத்திருக்கிறார்கள். இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளில் எங்குமே கிடைக்காத வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டு வரும் அரிய பொருட்கள் அவை. அவற்றில், கடவுள் - மதம் சம்பந்தப்பட்ட எந்தவொரு அடையாளமும் ஒன்றுகூட இல்லை என்பதுதான் கூடுதல் சிறப்பு. ஆரியக் கலாசாரக் கலப்பில்லாத வேறுபட்ட கலாச்சாரம் இங்கு இருந்திருக்கிறது என்பதுதான் உண்மை. தமிழர்களின் இந்த தனித்துவம் மிக்க வரலாற்று உண்மைகள்தான் தற்போதைய மத்திய பி.ஜே.பி அரசுக்கு தாங்கமுடியாத பேரிடியாக இருக்கிறது. இந்த உண்மைகள் எல்லாம் வெளிவந்துவிடக் கூடாது என்பதால்தான், அவசரம் அவசரமாக அந்தத் தொல்லியல் ஆய்வாளரை இடமாற்றம் செய்து, ஆய்வுக்கும் தடை போட்டுவிட்டார்கள். இப்படி... ரேஷன் கடை மூடும் விவகாரம், தொல்லியல் உண்மைகள், உலக வர்த்தக ஒப்பந்தத்தில் மத்திய அரசு செய்துள்ள குளறுபடிகள்.... போன்ற உண்மைகளை வெளிக்கொண்டுவரும் மே 17 இயக்கத்தின் நடவடிக்கைகள் மத்திய அரசுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.  'திருமுருகன் காந்தியின் கைது நடவடிக்கை சரியானதுதான்' என்று பி.ஜே.பி தலைவர்கள் அழுத்தமாகச் சொல்லிவருவதிலிருந்தே பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற உண்மை தெளிவாகத் தெரிகிறதே...''

திருமுருகன் காந்தி

''திருமுருகன் காந்தி, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி சிறையிலிருக்கும் இந்தச் சூழலில், அவரது தந்தையாக உங்களது மனநிலை என்னவாக இருக்கிறது?''

''திருமுருகன் காந்தி மட்டுமல்ல... அவனோடு சேர்ந்து கைதாகியுள்ள அனைத்து தோழர்களையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன். ஜனநாயக நாட்டில், உரிமைக்காகப் போராடுவதும், அந்தப் போராட்டத்தின் போது அடக்குமுறைகளுக்கு ஆளாகுவதும் சகஜமான ஒன்றுதான். நானும் இதுபோன்ற போராட்டங்களில் ஏற்கெனவே பங்கெடுத்து சிறை சென்றவன்தான். சிறுவயதில் இருந்தே திருமுருகன் காந்தியும், என்னை அருகில் இருந்து பார்த்தவன் என்பதால், அவனுக்கும் இந்த உரிமைப் போராட்டங்கள் குறித்தும், நடைமுறையில் அவற்றை எதிர்கொள்ளும்போது ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் தெளிவாகவே தெரியும். தன்னம்பிக்கை மிக்க இளைஞன் அவன்; அதனால், அவனுக்கு நான் ஒன்றும் ஆறுதலோ, தைரியமோ சொல்லத் தேவையில்லை. ஆனால், அதே சமயம், ஒரு தந்தையாக உணர்வுபூர்வமாகப் பார்க்கும்போது, அவன் படும் கஷ்டங்கள் எனக்கு மிகுந்த மனவலியைத் தருகின்றன என்பதுதான் உண்மை. சமூகம் நன்றாக இருக்கவேண்டும் என்றால், போராளிகள் இதுபோன்ற வலிகளைத் தாங்கித்தான் ஆகவேண்டும்''

கண்களில் தளும்பும் கண்ணீரை மீறி லட்சியப் பார்வை தெறிக்கிறது திருமுருகன் காந்தியின் தந்தையிடம்!


டிரெண்டிங் @ விகடன்