பாரீஸ் ஒப்பந்தமும்... ட்ரம்ப் அறிவிப்பும் மற்றும் தி. நகர் தீ விபத்தும்! #Analysis #VikatanExclusive | Paris Agreement, Trump Decision and T.Nagar Fire Accident! #Analysis

வெளியிடப்பட்ட நேரம்: 13:48 (01/06/2017)

கடைசி தொடர்பு:15:35 (02/06/2017)

பாரீஸ் ஒப்பந்தமும்... ட்ரம்ப் அறிவிப்பும் மற்றும் தி. நகர் தீ விபத்தும்! #Analysis #VikatanExclusive

தி. நகர், பாரிஸ் ஒப்பந்தம், ட்ரம்ப்

"Make America Great Again" - இது டொனால்ட் ட்ரம்பின் கோஷம். இது, அமெரிக்காவை வலிமைப்படுத்த வேண்டும்... பொருளாதாரத்தைச் சீர்ப்படுத்த வேண்டும் என்பதற்கு அல்ல. இதன் உள்ளே பல்வேறு அடுக்குகள் ஒளிந்திருக்கின்றன... அது, உலகமய மீள்வாசிப்பு, 'அமெரிக்கா அமெரிக்கர்களுக்கு மட்டும்தான்' என்ற இனவாதம் என அந்தக் கோஷம் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. இப்போது அந்தப் பரிமாணத்தில் இன்னொரு வாதமும் இணைந்திருக்கிறது. அது, பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும் என்ற வாதம். இதை முன்வைத்திருப்பவர் டொனால்ட் ட்ரம்ப்.

டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்கா பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினால் என்ன... அமெரிக்கா ஏதாவது செய்துவிட்டுப் போகட்டும் என்று தி.நகர் தீ விபத்துச் செய்திகளைப் படிக்க, பார்க்க.. New Tab-ஐத் திறக்க முனைக்கிறீர்களா...? கொஞ்சம் பொறுங்கள்... மூன்றே மூன்று நிமிடம் மட்டும் ஒதுக்குங்கள். நீங்கள் பார்க்க, படிக்க விரும்பும் தீ விபத்துச் செய்திகளுக்கும், பாரிஸ் ஒப்பந்தத்துக்கும் ஒரு நெருங்கியத் தொடர்பு இருக்கிறது. ஆம், ‘பாரீஸ் ஒப்பந்தம்’ பாரீஸ் குறித்தானது இல்லை... அதிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது அமெரிக்காவின் பிரச்னை மட்டும் அல்ல. அதில், நம் அனைவரது நல்வாழ்வும் அடங்கியிருக்கிறது. 

பாரீஸ் ஒப்பந்தமும்... ட்ரம்பும்:

பாரீஸ் ஒப்பந்தம்2015 ஆம் ஆண்டு, 195 தேசங்களின் பிரதிநிதிகள் பாரீஸில் சந்தித்து... இரவு பகலாக பருவநிலை மாற்றம் குறித்து விவாதித்து ஓர் ஒப்பந்தத்தை வடிவமைத்தார்கள். அந்த ஒப்பந்தத்தின் நோக்கம் ஒவ்வொரு நாடுகளும் கரியமில வாயு வெளியேற்றத்தை (Carbon Emmission) இயன்ற அளவு குறைப்பது. அதாவது வளர்ச்சியின் பெயரால், பொருளாதார முன்னேற்றத்தின் பெயரால், சூழலியலைக் கெடுக்கும் தொழிற்சாலைகளை நெறிமுறைப்படுத்த வேண்டும், அதற்கு ஏற்றாற்போலத் தேசங்கள் தங்கள் கொள்கைகளை வடிவமைக்க வேண்டும் என்பதுதான் திட்டம். சீனாவும், அமெரிக்காவும்தான் உலகத்திலேயே அதிக அளவு கரியமில வாயுவை உமிழும் தேசங்கள். நீண்ட பேச்சுவார்த்தைக்குப்பின் அமெரிக்கா இதற்கு ஒப்புக்கொண்டது.  

எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருந்த சமயத்தில்தான் ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபர் ஆனார். அவர் தொடக்கத்திலிருந்தே பருவநிலை மாற்றம் மீது நம்பிக்கை இல்லாதவர். பருவநிலை மாற்றம் என்பதே சீனாவின் ஏமாற்று யுக்தி. அமெரிக்காவின் பொருளாதாரரீதியாக வீழ்த்த வேண்டும், முன்னேற்றத்தை முடக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பதம் பயன்படுத்தப்படுகிறது. கரியமில வாயுவினால் பூமி சூடாகாது என்றெல்லாம் பிதற்றி வந்தார். இப்படியானச் சூழ்நிலையில், ட்ரம்ப் பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறப் போகிறார் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன. பூமியின் வெப்பம், 2 டிகிரி செல்சியஸ் ஏறுவது சூழலுக்குப் பெருங்கேட்டைக் கொண்டுவரும். பெரும் நிலப்பரப்பு பாலையாக மாறும், சில தீவுகள் கடலில் மூழ்கும். இதனால் கலகம் வெடிக்கும் என்று ஆய்வுகள் எச்சரிக்கும் நிலையில், ட்ரம்ப் அமெரிக்காவை வலிமையான தேசமாக மாற்ற இந்த ஆபத்தான முடிவை எடுக்கத் துணிந்துள்ளார். 

ட்ரம்ப் அறிவிப்பும்... தி.நகர் தீ விபத்தும்:

தீ விபத்து

தி நகர் தீ விபத்து புகைப்படத்தைக்காண இங்கே கிளிக் செய்யவும்

ட்ரம்ப் பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேற முனைவது என்பது ஒரு குறியீடு. இந்தப் பின்னணியில் தி.நகர் தீ விபத்தைக் கொஞ்சம் அணுகுங்கள். ட்ரம்ப் என்ன நினைக்கிறார், சூழலியல் வாதங்கள் எல்லாம் சுத்தப் பேத்தல்... முன்னேற்றத்தைத் தடுக்கும் செயல் என்று நினைக்கிறார். வளர்ச்சிக்கு எந்தச் சட்டமும் தேவையில்லை என்று நம்புகிறார். நம் அரசு பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறாமல் இருக்கலாம். ஆனால், இதே புரிதலில்தானே நமது அரசுகளும் இருக்கின்றன. அந்தக் கடைகளால் லாபம் வருகிறது... வரி வருமானம் வருகிறது என்பது மட்டும்தானே அரசின் புரிதலாக இருக்கிறது. 

அது கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டபோதே தெரியாதா, இவை அனைத்தும் விதிமீறல்களை மீறிக் கட்டப்பட்ட கட்டங்கள் என்று... இத்தனை ஆண்டுகள் செயல்பட்டுக்கொண்டிருந்ததே அப்போதும் அரசுக்குப் புரியவில்லையா... இதனால் என்றேனும் ஒருநாள் பெரும் விபத்து நிகழும் என்று... எல்லாம் ஒரு விபத்து நடந்தபிறகு மட்டும்தான் புரிகிறதா...?

இந்தத் தீ விபத்தினால் அரங்கேறி உள்ள இன்னோர் ஆபத்தையும் விளக்குகிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன். அவர் சொல்கிறார், ''தீக்கு இரையான அந்தக் கட்டடத்தில் இருந்தவை அனேகமானவை பாலிஸ்டர், நைலான் துணி வகைகள். இந்த மாதிரியான செயற்கை நூலிழைகளால் ஆன துணிகள் எரியும்போது, பிளாஸ்டிக் எரிந்தால் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துமோ அதே மாதிரிதான் இருக்கும். டயாக்சின்ஸ் உட்பட பல்வேறு நச்சு வாயுக்கள் வெளியேறும்; அவை, மக்களுக்கு நுரையீரலைப் பாதிக்கும்; பல்வேறு நோய்களைக் கொண்டுவரும். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதுகுறித்து ஆய்வுசெய்து, சூழல் மாசுபாட்டால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்குத் தனியாக வழக்குகள் பதிவுசெய்ய வேண்டும். காவல் துறையில் 'பொருளாதாரக் குற்றப் பிரிவு' என்று தனியாக இருப்பதுபோல், 'சூழல் குற்றப் பிரிவு' ஏற்படுத்தப்படவேண்டும்” என்கிறார். 

நமக்கு வளர்ச்சி வேண்டும்தான், முன்னேற்றம் வேண்டும்தான். ஆனால், அது வளங்குன்றாததாக இருக்க வேண்டும்... நாளை நம் பிள்ளைகளுக்கானதாக, அவர்களின் நலனுக்கானதாக இருக்க வேண்டும்.

"Make America Great America"  என்பது ட்ரம்பின் கோஷமாக இருந்துவிட்டுப் போகட்டும். நம் கோஷம், “Make India Sustainable India”-வாக இருக்கட்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்