வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (01/06/2017)

கடைசி தொடர்பு:17:05 (01/06/2017)

'வணிக வளாகங்கள்மீது நடவடிக்கை எடுக்க அரசியல் நிலை சரியில்லை..!' - அரசின் விளக்கம்

சென்னை சில்க்ஸ்

ங்காடித் தெருவின் அவலங்களைத் தடுக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காமல், சென்னை சில்க்ஸ் தீ விபத்துக்குப் பிறகு அரசு இப்போது செத்த பிணத்தைக் கூறாய்வு செய்துகொண்டிருக்கிறது.

தொடரும் அலட்சியம்

தியாகராய நகர் ரங்கநாதன் தெருவிலுள்ள ஒரு பிரபல கடையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. அதேபோல கடந்த ஆண்டு பனகல் பார்க் அருகிலுள்ள ஒரு ஜவுளிக் கடையின் கட்டடம் திடீரென ஆட்டம் கண்டதாகத் தகவல் வெளியானது. இப்படி அவ்வப்போது தி.நகர் பற்றி அதன் விதிமீறல்கள் பற்றி செய்திகள் வந்தாலும் அரசாலும், அதிகாரிகளாலும் நடவடிக்கை  எடுக்கப்படாமல் இருக்கும் அலட்சியம் தொடர் கதையாகவே இருந்து வருகிறது. சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் நடந்த தீ விபத்தின் தாக்கத்தால் தி.நகரின் பாதுகாப்புத் தன்மை குறித்த சாதக, பாதகங்கள் அலசப்படுகின்றன. விவாதங்களுக்கும், அலசல்களுக்கும் ஒரு விபத்து தேவைப்படுகிறதே என்பதுதான் நிதர்சனமான உண்மை.

தியாராய நகரிலுள்ள கட்டடங்களில் தீத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று 3 ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார் தியாகராய நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தைச் சேர்ந்த செயலாளர் கண்ணன் அவரிடம் பேசினோம். " 2014-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தாக்கல் செய்தோம். அதில், தியாகராய நகரிலுள்ள கட்டடங்களில் தீத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா என்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டிருந்தோம். அப்போது தலைமை நீதிபதியாகயிருந்த சஞ்சய் கவுல், தி.நகர் மொத்தமும் ஆய்வு நடத்துவது சாத்தியமில்லை. எந்தெந்தக் கட்டடங்களில் ஆய்வு செய்ய வேண்டும் என்று பட்டியல் கொடுங்கள் என்று கேட்டார். அதன்படி சென்னை சில்க்ஸ், சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட 15 கடைகளில் தீத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறதா என்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம்.

15 கடைகளில் தீத்தடுப்பு நடவடிக்கை இல்லை

எங்கள் மனுவின் படி தீயணைப்புத் துறை சார்பில்  சென்னை சில்க்ஸ் உட்பட 15 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி 15 கடைகளிலும் தீத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரியவந்தது. எனவே, அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டோம். அதற்கு அரசு தரப்பில் ஒரு சில மாதங்களுக்கு முன்பு அளித்தபதிலில், இப்போது தமிழக அரசின் நிலைமை சரியில்லை. பிரச்னை சரியானதும் உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். இதிலிருந்து தெரிந்தே இந்த அரசு தரப்பில் பெரும் தவறை இழைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதற்கு துணை போன அதிகாரிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தி.நகரிலுள்ள வணிகக் கட்டடங்கள் டிரேடர் லைசென்ஸ் வாங்கியிருக்க வேண்டும். ஆனால், எந்த ஒரு கடையும் டிரேடர் லைசென்ஸ் வாங்கவில்லை. எத்தனை கடைகள் டிரேடர் லைசென்ஸ் வாங்கியிருக்கின்றன என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் சென்னை மாநகராட்சியில் கேட்டிருந்தோம். ஆனால், அவர்கள் உரிய பதில் தரவில்லை. டிரேடர் லைசென்ஸ் வாங்க வேண்டும் என்றால், பில்டிங் பிளான் அனுமதி, தீத்தடுப்பு லைசென்ஸ் வாங்க வேண்டும். இதனை யாருமே வாங்கவில்லை. அதிகாரிகள், போலீஸாரைக் கைக்குள் போட்டுக்கொண்டு கடைக்காரர்கள் விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர்.

சென்னை சில்க்ஸ்

அப்பட்டமான விதி மீறல்

சென்னை முழுவதும் எத்தனை விதிமுறை மீறல் கட்டடங்கள் இருக்கின்றன என்று 2007-ம் ஆண்டு சி.எம்.டி.ஏ-வில் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் தி.நகரிலுள்ள கடைகள் பற்றியும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இவ்வளவுக்குப் பிறகும் விதிமுறைகளை மீறித்தான் கட்டடங்கள் கட்டுகின்றனர். மற்ற குற்றங்களுக்குத் தண்டனை இருக்கிறது. ஆனால், கட்டட விதிமுறை மீறலுக்குத் தண்டனை இல்லை. தண்டனை கொடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும். அதே போல பில்டிங் பிளான் அப்ரூவல் மட்டுமே அரசு தரப்பில் கொடுக்கப்படுகிறது. ஆனால், கட்டடத்தின் தரம் குறித்து ஆய்வு செய்வதில்லை.

சி.எம்.டி.ஏ-வில் நில உபயோக மண்டலம் என்ற வரைபடம் இருக்கிறது. அந்த வரைபடத்தின்படி குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வணிக நிலம் இருக்கிறது. ஆனால், அந்த வரைபடத்தில் இருப்பதற்கு மாறாக தி.நகரில் பல இடங்களிலுள்ள வணிகக் கட்டடங்கள் விதிமுறையை மீறிக் கட்டப்பட்டிருக்கின்றன. முதலில் இந்தச் சட்டவிரோத கட்டடங்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்